மீ.விசுவநாதன்

 

ஆயிரங் கோடி அருமைக் கவிகளைத்

தாயெனும் சாரதை தந்தவள் – தூயவள்

வாயிலே தாம்பூல மங்கலம் கொண்டவள்;

சேயிவன் வாக்கிலே தேன்.

 

 

ஆவெனக் காட்டிட அற்புதத் தீந்தமிழ்ப்

பூமலர்ப் பாட்டினை புத்தியில் தூமழை

போலவே கொட்டுவாள் ; பொன்னெனும் நெஞ்சிலே

காலமாய் வாழுவாள் காத்து.

 

காத்திடச் செய்திடாள்; கண்ணிலே கண்டவள்

தோத்திரம் செய்திடத் துன்பமே போக்குவாள்;

மாத்திரைப் போதிலே மாமன ஆழியின்

ஆத்திரம் நீக்கிடும் அன்பு.

 

 

அன்பொளி காட்டியே அத்துணை பேர்க்குமே

இன்முகங் கொண்டவள் ஏற்றமே பண்ணுவாள் ;

தன்னுடைப் பிள்ளைகள் தப்பினை விட்டிட

முன்னமே காத்திடும் முத்து.

 

 

முத்தவள், பக்தரின் மூலவள், ஏழ்மையை

மொத்தமாய்த் தீர்ப்பவள்; மூர்த்தனை நித்தமே

பித்தென எண்ணிடப் பேரொளி யோகியாய்

சத்தென ஆக்கிடும் தாய்.

 

 

தாயெனக் கூப்பிடத் தன்னுயிர் வேருடன்

தாவியே வந்தருள் தந்திடும் – வாவியில்

தாமரைப் பூக்களாய்த் தன்னெழில் காட்டியே

காமனை ஓட்டுவாள் காண்.

 

 

காண்கிற அத்தனை காட்சியும் மாயையாய்க்

காண்எனக் கற்றிடக் காதலால் கூறுவாள் ;

பேணுவாள், செல்லமாய்ப் பித்தனே என்றெனை

மாணுவாள் புண்ணிய மாது.

 

 

மாதவ ஞானியர் மண்ணிலே தோன்றிட

மாதவள் சாரதை மாண்புதான் காரணம் ;

நாதமோ வேதமோ நாவிலே நித்தமும்

நூதனம் செய்குவாள் நூறு.

 

 

நூறென வேண்டிட நூபுரம் காட்டுவாள்

ஆறெனத் துங்கையை அன்பினால் ஏற்றவள்;

ஊர்சிருங் கேரியில் ஓமென வாழ்பவள்

பேரவள் வாணிநம் பேறு.

 

 

பேரவள் சொல்லப் பெரும்பிணி நீங்கிடும்;

சீரவள் செல்வமா சீர்த்தியை, நேர்மையை

நெஞ்சிலே வைத்திட நித்திய சோதியாம்

அஞ்செழுத் தாகிடும் ஆ.

(ஆ — ஆத்மா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *