ஜவ்வாதுமலையில் காவல் தெய்வ வழிபாட்டு மரபு

3

ரே.கோவிந்தராஜ்

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

தியாகராசர் கல்லூரி,

மதுரை-09.

கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு கூறாக ஜவ்வாதுமலை அமைந்திருக்கிறது. மலைவாழ் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் முதலானவற்றைத் தன்னகத்தே கொண்டு,  தனித்த பழமையான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு விளங்குகிறது. ஜவ்வாதுமலையில் நடைபெறும் காவல் தெய்வ வழிபாட்டு மரபுகளைக் கள ஆய்வு செய்ததன் அடிபடையில் சில கூறுகளைப் பின்வரும் பகுதிகள் விளக்கப்படுகின்றன. பழங்காலம் தொட்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கைகள் இருந்துள்ளன. மக்களின் பழக்க வழக்கங்கள்,  நம்பிக்கைகள், சடங்குகள் இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. இவற்றை ஆராய்வதில் பல கல்வித்துறைகளின் அறிவு தேவைப்படுகின்றன. அவற்றில், சமூகவியல் (sociology ), மானிடவியல் (Anthropology), உளவியல் (psychology) ஆகிய மூன்றும் மிக இன்றியமைதாவை (காந்தி 2003:5).

 

1.தெய்வ வழிபாட்டு மரபு

வழிபாடு என்பது ஒரு மரபாகும் (Cult). “ஒரு குறிப்பிட்ட விலங்கு, தாவரம், (அல்லது குலக்குறி), இயற்கைபொருள், ஆவி, முன்னோர் முனிவர், தெய்வம் ஆகிய எந்த ஒன்றின் ஆற்றல் மீது கொண்டுள்ள அனைத்துவகையான நம்பிக்கைகளும், சடங்குகளும், வழிபாடு சார்ந்தது” (பக்தவத்சல பாரதி 2002:215). மனித சமுதாயத்தில் தெய்வ வழிபாட்டுமரபு மிகப் பழமையானது. அச்சத்தின் வாயிலாகத் தோன்றிய வழிபாட்டு முறையின் எச்சம் பெரும்பான்மையும் இன்றும் தெய்வ வழிபாட்டு முறையில் பொதிந்திருக்கிறது. மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான ஜவ்வாதுமலையில் வேந்தியப்பன், வேடியப்பன் ஆகிய ஆண் தெய்வ வழிபாட்டு மரபும், திக்கியம்மன், நாச்சியம்மன், காளியம்மன் ஆகிய பெண் தெய்வ வழிபாட்டு மரபும் பெரும் வழக்காக உள்ளது. ஒவ்வொரு மலைக்கிராமத்திலும் அவ்வப்பகுதியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுக் காரண காரிய முறையில் ஒற்றுமைப்படுத்தி மேலே கூறப்பட்ட வழிப்பாட்டு முறைகளில் ஏதேனும் ஒன்று வழக்கில் உள்ளது. அச்சத்தில் வாயிலாகத் தோன்றிய வழிபாட்டு முறை அந்த அச்ச உணர்வின் காரணமாகவே நிலைப்பெற்றிருப்பதை ஜவ்வாதுமலையில் நடைபெறும் வழிபாட்டு முறை எடுத்துக் காட்டுகிறது.

2.தைப்பொங்கல்

தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருவிழா ஜவ்வாதுமலையிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவின் இறுதிநாள்  தெய்வ வழிபாட்டிற்குத் தொடக்கத்தை அமைத்துத் தருகிறது.  தெய்வங்களுக்கு முறைப்படி வழிபாடு நடத்த எண்ணிய ஊர்மக்கள் ஊர்த் தலைவரின் ஆலோசனையின்படி ஒன்றுகூடிக் கலந்து ஆலோசித்துத் திருவிழாவை முடிவு செய்கின்றனர். இத்திருவிழாவுடன் கூடிய வழிபாட்டுமுறை வழக்கமாக தை மாதம் தொடங்கி வைகாசி மாதம் வரை ஒவ்வொரு ஊரிலும் திட்டமிட்டபடி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

 

2.1.தோரணம் கட்டுதல்:

தோரணம் கட்டுதல் என்றால் கொடியேற்றம் என்றும் காப்புக் கட்டுதல் என்றும் பொருள். குறிப்பாகக் காப்புக்கட்டுதல் என்பது திருவிழாவை நடத்துவதற்கு உரிய தொடக்கமாகக் கொள்ளப்படும். திருவிழாவை நடத்துவதற்கு இறைவனிடம் முறைப்படி அனுமதி கேட்டல் என்பதும் இதன் பொருளாகும். ஜவ்வாதுமலையில் ஒவ்வொரு மலைக்கிராமத்திலும் மந்தை என்று சொல்லக்கூடிய பொது இடம் உண்டு. இங்கு சுமார் ஏறக்குறைய ஐம்பது அடி உயரமுள்ள மூங்கில் மரம் நாட்டப்பட்டு இருக்கும். இம்மரத்தில் வழிப்பாட்டுக்குரிய தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட துணியில் பூக்களை இட்டு வணங்க வேண்டிய முறைபடி வணங்கிக் கொடியேற்றுவார்கள் இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

 

2.2.சோறு எடுத்துச் செல்லுதல்

திருவிழா தொடங்கிவிட்டதைத் தம்முடைய உறவுகளுக்கு அறிவித்து அவர்களைத் திருவிழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுப்பதற்காகத் தத்தம் வீடுகளில் உணவு சமைத்து அவ்வுணவை எடுத்துக்கொண்டு உறவினர்களின் ஊர்களுக்குச் செல்கிறார்கள். தாம் எடுத்துச் சென்ற சோற்றை முறைப்படி உறவினர்களுக்குக் கொடுத்து அவர்களைத் திருவிழாவில் கலந்துக்கொள்ள அழைக்கின்றனர். தை மாதம் புன்செய் பயிர்கள் குறிப்பாக மொச்சை, அவரை, துவரை, கிழங்கு வகைகள் தாராளமாகக் கிடைக்கும். ஆதலால் பலாப் பிஞ்சுடன் சேர்த்துக் கூட்டுச் செய்து எடுத்துக் கொண்டு செல்வதும் உண்டு. தாம் செல்லும் உறவினர்களின் இல்லம் எச்சூழ்நிலையிலும் இருக்கலாம். எடுத்துச் செல்லும் உணவு அவர்களின் பசியை ஆற்றுவதுடன் உறவையும் பலப்படுத்துகிறது. கடமைக்காக நடைபெறாமல் உள்ளார்ந்த அன்போடும், அக்கரையோடும் இந்நிகழ்வு பன்னெடுங்காலமாக ஜவ்வாதுமலையில் நடந்தேறிவருகிறது.

2.3.சாமி கீழிரங்குதல்

சாமி கீழிரங்குதல் என்னும் இந்நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெறும். திருவிழா கொண்டாடப்படும் தெய்வத்தின் வழிபாட்டிற்குத் தேவையான ஆடை ஆபரணங்கள் முதலான அனைத்துப் பொருட்களும் ஒரு வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும். இப்பொருள்களை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே எடுப்பர். அப்பொருள்களை எடுத்துச் சுத்தம் செய்து வழிபாட்டிற்காகக் கொண்டுவருவதை, சாமி கீழிரங்குதல் என்று குறிப்பிடுகின்றனர்.

வழிபாட்டிற்குரிய அவ்வீடு தம்பிரான் வீடு எனப்படுகிறது. வழிபாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு எல்லாத் தெய்வங்களையும் அழைக்கும் முகமாகத் தம்பிரான் வீட்டில் கொலு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்நிகழ்ச்சியில் திரளாக மக்கள் பங்குபெறுவார்கள். புரட்டாசியில் நடைபெறும் கொலு வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிறபகுதிகளில் படி அமைப்பினைச் செய்து ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரையும் பூதகணம், அசுரகணம், தேவகணம் என வரிசை முறைப்படி அமைப்பது உண்டு. ஆனால் தம்பிரான் வீட்டில் நடைபெறக்கூடிய கொலு நிகழ்வு ஜவ்வாதுமலையில் கிடைக்கக்கூடிய தானியங்கள், இசைக்கருவிகள், ஆயுதங்கள் முதலானவற்றைக் காட்சிப்படுத்துவதாக அமைகிறது. நிலவியலுக்கு ஏற்றவாறு மக்களின் பண்பாட்டுமுறை மாறுபடுகிறது. கொலு நிகழ்ச்சி முடிவடைந்ததும் தம்பிரான் வீட்டிலிருந்து வழிபாட்டிற்கு உரிய அனைத்துப் பொருட்களும் ஊரின் புறத்தே இருக்கும். காவல் தெய்வக் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் காவல் தெய்வத்திற்குப் பொங்கல் வைப்பதற்காகப் பானைகளையும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருள்களையும் எடுத்துச் செல்வார்கள். இவ்வாறு செல்லும்போது பறையொலியின் இசைக்கேற்ப சேவையாட்டம் நடைபெறும்.

 

2.4.பச்சைபோடுதல்

பச்சைபோடுதல் என்றால் வழிபடும் தெய்வத்திற்கு இயற்கை உணவினைப் படையல் போடுதல் என்று பொருள். கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பொதுமக்கள் தாம் வணங்கும் தெய்வத்திற்கு இலைபோட்டு இனிப்புக் கலந்த மாவு, வாழைக்கனி, அவல், தேன், கிழங்கு முதலான பொருள்களைப் படைத்து வழிபடுவார்கள். மலையில் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருள்கள் இவை என்பதால் இப்பொருள்கள் எவ்விதமான குறைவும் இல்லாமல் காலந்தோறும் அங்கு வாழ்கின்ற மக்களுக்குக்; கிடைக்க வேண்டும் என்பதையும் வழிபடும் தெய்வத்திடம் வேண்டுவதாக அமையும். வழிபாட்டின் பின்பு பச்சைப் படையலிட்ட பொருள்கள் உறவுமுறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இறுதியாக ஊர் தலைவருக்கும் கலை நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த கலைஞர்களுக்கும் சிறப்புச் செய்யப்படும்.

2.5.நாட்டாருக்குச் சிறப்புச் செய்தல்:

ஐவ்வாது மலைப்பகுதியில் பதினெட்டு நாடுகள் இருக்கின்றன. நாடுகள் தற்போது கிராம ஊராட்சிகளாக மாற்றம்பெற்று இருக்கின்றன. புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, தென்மலைநாடு, கானமலைநாடு, முட்டநாடு முதலான நாடுகள் வழக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் கலந்து கொள்வதற்குப் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் நாட்டார் என அழைக்கப்படுகிறார்கள். விழாவை நடத்தும் ஊர்க்காரர்கள் விழாவிற்காகக் கொண்டு வந்த ஆட்டுக்கிடாயை விழாவிற்கு வந்திருக்கும் வேற்று நாட்டவர்களே வெட்டிப் பலிகொடுக்கின்றனர். கிடாய் வெட்டியதற்காக உள்ளுரைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றனர். பின்பு கோயிலை வலம்வந்து வழிபடுகின்றனர்.

2.6.சாமி வலம் வருதலும் கலை நிகழ்ச்சிகளும்:

கோயிலில் எழுந்தருளி இருக்கும் தெய்வம் ஊருக்குள் வலம் வருதல் தன்னைக் காண இயலாத பக்தர்கள் காணும் பொருட்டே ஆகும். காவல் தெய்வம் ஆண்டுக்கொரு முறை ஊருக்குள் வலம் வந்து மக்களுக்கு நன்மை செய்யும் நம்பிக்கையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியையொட்டிப் பொய்க்கால் குதிரை ஆட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், சேவையாட்டம், கோலாட்டம் முதலிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மலைவாழ் மக்களே நிகழ்த்துகின்றனர்.

 

2.7.பூப்பந்தலில் சாமி இளைப்பாறுதல்

விழாவில் பங்கேற்ற தெய்வத்தின் களைப்பைப் போக்கும் பொருட்டு மூங்கிலால் பந்தல் அமைத்துக் கூந்தல் பனையை மேற்புறம் பரப்பிப் பூக்களால் ஆகிய மாலைகளைத் தொங்கவிட்டுத் தெய்வத்தை இளைப்பாற்றுவர். இறுதியாக, தெய்வம் இளைப்பாறிய பின்பு ஊருக்குள் அழைத்து வரப்படும். மக்கள் அனைவரும் தரையில் நீர் ஊற்றித் தூய்மை செய்து அவ்விடத்தில் நெருப்பையிட்டுத் தெய்வத்தை வழிபடுவார்கள். தொடர்ந்து இரவுப் பொழுதில் தெருக்கூத்து நடைபெறும்.

ஜவ்வாதுலையில் நடைபெறும் காவல் தெய்வ வழிபாட்டு முறையிலிருந்து மலைவாழ் மக்களின் ஒற்றுமை, பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம், உணவுமுறை, வழிபாட்டுமுறை, உறவுகளை பேணும் திறம், கலையின் நுட்பம் மரபு மாறாத நிகழ்ச்சிகள், மண்ணிற்கே உரிய சிறப்புகள் முதலானவற்றை அறிய முடிகிறது. இங்கு, கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உற்றுநோக்கி இம்மக்களின் வாழ்வியல் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சான்று நூல்கள்

காந்தி,க. 2003,தமிழரின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

பக்தவத்சல பாரதி, 2002, தமிழர் மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம்.

பக்தவத்சல பாரதி, 2003(1990),  “பண்பாட்டு மானிடவியல்”, மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம்.

பக்தவத்சல பாரதி, 2015 (2006), மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் பதிப்பகம்.

Levi-Strasus Claude, 1955, The Structural Study of Myth, The Journal of Americal Folklore,Vol.68, No 270, pp.428-444.

Levi-Strasus Claude, 1995 (1979), Myth and Meaning, Schocken Books New York, USA.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஜவ்வாதுமலையில் காவல் தெய்வ வழிபாட்டு மரபு

  1. Tamil panpattin echam, inakkulu thanmai malaiyina makkalidam ulllathai ivvayvu velippaduttugirathukirathu
    Arumai

  2. இனவரைவியலுக்கு பழங்குடிகளின் பண்பாட்டு பதிவுகள் இன்றியமையாதது. இதுபோன்ற பதிவுகள் மேலும் தேவைப்படுகின்றன.
    நன்றி
    தசரதன். வே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.