ஓளவையார் புறப்பாடல்களில் உலகியலும் புனைவியலும்

முனைவர் ப.சு. மூவேந்தன்

உதவிப்பேராசிரியர்

தமிழியல்துறை (பணிநிரவல்)

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைநகர்-608002

முன்னுரை

உயர்ந்த இலக்கியத் தன்மைகளைப் பெற்று, உயரிய குறிக்கோள் நோக்கில் உலகப் பொதுமைக் கூறுகளை நோக்கமாகக் கொண்டு படைக்கப் பெறுபவை செவ்விலக்கியங்கள் ஆகும். இத்தகு செவ்வியல் தன்மைகளைப் பெற்றவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

உலகியலில் நிகழும் மனித வாழ்வின் சாரத்தை, புலவன் தன் படைப்பாக்கத் திறனுக்கு ஏற்றவாறு கற்பனை, உணர்ச்சி, வடிவம் தந்து புனைவாக்குகிறான். உலகியற்பண்புகளும், புனைவியலும் சங்கக் கவிதைகளில் கலந்து நிறகின்றன.

நவீன திறனாய்வுக் கொள்கைகளில் யதார்த்தவியல் (realism) குறிப்பிடத்தக்க தாகும். உலகியல் நிகழ்வுகள் யதார்த்தத்தின் பாற்படுகின்றன. அது பொதுவுடைமைச் சிந்தனையின் விளக்கக் கொள்கையியல் என்றும் குறிக்கப் பெறுகிறது. புனைவியலை நோக்க உலக இயல்புகளைக் காட்சிப்படுத்தும் யதார்த்தவியல் சமுதாயத்திற்கு வளம் சேர்ப்பதாக அமைகிறது. சங்கப்புலவர்களில் ஓளவையார் தனித்திறம் மிக்கவராகத் திகழ்வதற்கு உலகியல் நிகழ்வுகளே களம் அமைத்துக் கொடுத்துள்ளன. உலகியல் நிகழ்வுகளைச் செய்யுளாக்க மரபுகளோடு இணைத்துக் கட்டமைக்கும் அவரது பாடற்புனைதிறத்தினைக் காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.

சங்கக் கவிதைச் சிறப்பு

கவிதை என்பது நுண்மையும், ஆழமும், வளப்பமும் உடையதாகத் திகழ வேண்டும். மேலும், சொல்லவந்த பொருளை நேரிடையாக, வெளிப்படையாகச் சொல்லாமல் ஆழ்ந்து நோக்கப் பலபொருள்களைத் தரவேண்டும். எழுத்துக்கு எழுத்து, சொல்லுக்குச் சொல், அடிக்கு அடி என அழகுசெய்யப்பட்ட நுண்ணிய வேலைப்பாடு கொண்டமைந்த சிற்பம் போன்றதாகக் கவிதை அமையவேண்டும். பயிலும்தொறும் புதுப்புதுப் பொருள்களைத் தந்துகொண்டே இருக்கவேண்டும். அதுவே தலைசிறந்த கவிதையின் மதிப்பீடாகும். இவ்வகையில அமைந்தவை சங்கக் கவிதைகளாகும். “ஒவ்வொரு சங்கநூற் கவிதையும் ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்’ போன்றமைத்தல் கண்கூடு” என்பார் ப. மருதநாயகம். (39:2000)

உலகியலும் புனைவியலும்

தொல்காப்பியம் திணைச்செய்யுள் மரபுகளைப் பற்றிப் பேசுகையில் அவை உலகவழக்கும் செய்யுள்வழக்கும் கலந்து படைக்கப்பெறும் என்று கூறுகிறது. நவீனக் கோட்பாட்டாளர்கள் இதனை புனைவியல் (Romanticism) நடப்பியல் (Realism) என்றுரைப்பர். இது தமிழுக்குப் புதியதன்று. நாடகவழக்கும், உலகியல் வழக்கும் பாடலில் பயின்றுவரும் திறத்தினைத் தொல்காப்பியம்,

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்”            (தொல்.பொருள். சூ. 999)

என்று எடுத்துரைக்கிறது. இலக்கிய மரபு என்பதற்குத் தொல்காப்பியர் பயன்படுத்தும் சொல்லாக்கம் புலனெறிவழக்கு என்பதாகும். இதற்கு நச்சினார்க்கினியர் ‘கற்றறிந்தோர் உருவாக்கிப் பின்பற்றிய வழக்கு’ என விளக்கம் தருகின்றார். உலகியல் வழக்கு என்பது திணைச்செய்யுளின் தகுதியுடைய பாடுபொருள்களாக மக்களின் வாழ்க்கை -யையும் நிகழ்ச்சிகளையும் பாடுபொருளாகக் கொண்டமைவதாகும். நாடக வழக்காவது செய்யுளின் அடிப்படைப் பொருளை நயம்படத் தீட்டும் முறையாகும்.

உலகியல் வழக்கு

உலகியல் வழக்கு என்பது வாழ்வில் நிகழ்ந்த ஒன்றைச் சொற்களால் காட்டுவதோ, ஒரு நிகழ்ச்சியை விவரிப்பதோ, ஓர் உண்மை நிகழ்ச்சியை மொழிவதோ மட்டும் அன்று. வாழ்வின் பல்வேறு சூழல்களுக்குப் பொருந்தும் வண்ணம் ஒரு செய்யுளைப் படிக்கும் போது அதன் நிகழ்ச்சிகளை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பாங்கில் இத்தகைய நிகழ்ச்சி இயல்பானது என்றும் இத்தகைய நிகழ்ச்சி வாழ்வில் நிகழ்ந்திருக்கவும் கூடும் என்னும் நிலையில் படைத்துக் காட்டுவது ஆகும்.

உலகியலில் செய்யுளுக்குரிய பொருளில் மிகச் சிறந்தது எதுவோ, விழுமியது எதுவோ, மிகுபுகழ் பெற்றது எதுவோ அதுவே பாடலின் பொருளாகத் தேர்ந்து கொள்ளப்படும். சங்க அகப்பாடல்களில் புனைவியல்நெறி மிகுந்தும், புறப்பாடல்களில் நடப்பியல் நெறி மிகுந்தும் படைக்கப்பெறும்.

புறநானூற்றில் உலகியல்

புறப்பாடல்கள் வீரம் செறிந்த சங்ககால வாழ்வின் விழுமிய வரலாற்றுப் பதிவுகளாக விளங்குகின்றன. புறப்பாடல்களில் போரையும், போரியல் வாழ்வினையும் சார்ந்த நிகழ்ச்சிகளே பொருளாக அமைந்துள்ளன. ஆதலால் அவற்றில் புனைவியலின் தன்மைகள் குறைந்தும், நடப்பியலின் தன்மைகள் மிகுந்தும் காணப்படுவது இயல்பு.  கற்பனைப் புலப்பாட்டுத் திறனைவிட, உலகியல் உற்றுநோக்கலே பெரும்பான்மையாக அமைந்துள்ளது.

ஓளவையார் பாடல்களில் உலகியலும் புனைவியலும்

ஓளவையார் பாடியதாக புறநானூற்றில் முப்பத்துமூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் அதியமானோடு அவர் கொண்டிருந்த நட்பின் நிகழ்வுகளை வெளிப்படுத்துவதாகவும் அதன்அடிப்படையில் எழுந்த உணர்வுநிலைப்பாட்டினைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன. இவ்உணர்வுக் கூறுகள் அனைத்தும் உலகியல் நிகழ்வுகளின் வெளிப்பாடு ஆகும். இப்பாடல்களைத் தானைமறம், இயன்மொழி வாழ்த்து, அரசவாகை, வாள்மங்கலம், கொற்றவள்ளை, விறலியாற்றுப்படை, பரிசில் துறை, கையறுநிலை, உண்டாட்டு, உவகைக்கலுழ்ச்சி, பாண்பாட்டு, வாழ்த்தியல், கடைநிலை என்னும் துறைகளைச் சார்ந்தவையாக  வகுத்துள்ளனர். இப்பாடல்களை,

 • புலமைச்செருக்கின் வெளிப்பாடு
 • புலப்பாட்டு வெளிப்பாடு
 • உணர்வுநிலை வெளிப்பாடு
 • மறஉணர்வு வெளிப்பாடு
 • வஞ்சின வெளிப்பாடு
 • வீர உணர்வு வெளிப்பாடு
 • நட்பின் இழப்பு வெளிப்பாடு
 • நட்பின் உணர்வு வெளிப்பாடு
 • நன்றியுணர்வு வெளிப்பாடு

என்ற நிலைகளில் பொருத்திப் பார்க்கலாம்.

புலமைச்செருக்கின் வெளிப்பாடு

      கல்வியின் காரணமாகத் தறுகண் என்னும் பெருமிதம் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர். உலக வாழ்வில் கற்றவர்கள் தாம் பெற்ற அறிவின் சிறப்பால் உயர்ந்தே நிற்பர். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது உலகியல் வழக்கு. ஔவையார்-அதியமான் அறிமுகப் பகுதி இதுபோன்றதொரு நிலையில் நிகழ்கிறது. அதியமானிடம் பரிசில் பெறுவதற்காகக் காத்திருக்கும் ஓளவையார், அவனது கால நீட்டிப்பினையும், தன்னை வந்து சந்திக்காத அதியனின் செயலையும் அறிந்து, வெகுண்டு வாயிலோனிடம்,

“வாயிலோயே வாயிலோயே

………………………………………….

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன்அறி யலன்கொல்? என்அறியலன் கொல்?”

என்று மனம்நொந்து கூறி, பின்னர்,

“அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே;

……………………………….

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”           (புறம். 206)

என்று தன் புலமைக்கு ஏற்பட்ட இழுக்கின் உணர்வால் அவ்விடத்திலிருந்து அகன்ற நிகழ்வினைப் பாடலாக்கியுள்ளார். புலமைக்கு உரிய மதிப்பினைத் தரஇயலாத அதியனின் செயலைக்கடிவதனையும், புலவர்கள் எந்நிலையிலும் புலமைச்செருக்குடன் திகழ்ந்திட வேண்டும் என்ற கருத்தினையும் இதன்வழி வெளிப்படுத்தப்படுத்தக் காணலாம்..

புலப்பாட்டு வெளிப்பாடு

உலகியல் நிகழ்வுகளை உள்ளவாறே சொன்னால் அது இலக்கிய வடிவம் பெறாது. உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய மூன்றன்கூறும் நுட்பமுறப் படைக்கப் பெற வேண்டும். அப்போதுதான் சிறந்த இலக்கிய வடிவம் பெறும்;. அதியனின் தோற்றத்தை ஓளவையார்,

“கையது வேலே காலன புனைகழல்

மெய்யது விடரே மிடற்றது பசும்புண்

வட்கர் போகிய வளர்இளம் போந்தை

உச்சிக்கொண்ட ஊசிவெண் தோட்டு

வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ

கரிஇரும் பித்தை பொலியச் சூடி

வரிவயம் பொருத வயக்களிறு போல..”       (பா. 100:1-7)

என்று புலப்படுத்துவது குறிக்கத்தக்கது. கையில் கூர்மை பொருந்திய வேல். காலில் வீரக்கழல். போருடன்றதால் நேர்ந்த வியர்வை. கழுத்திலே பசுமையான புண். பனம்பூ மாலையுடன் வெட்சிப்பூவும், வேங்கைப் பூவும் சூடியுள்ளான். இவை வீரனைக் காட்சிப்படுத்தும் சங்க நிகழ்வுகள் ‘வரிப்புலியுடன் போரிட்ட யானை, சண்டை முடிந்ததும் சினம் தணியாது நிற்றலைப் போல’ என்ற உவமைப் புனைவு. இடையே உன்னைச் சினங்கொள்ளச் செய்தவர் பிழைக்க மாட்டார் என்ற குறிப்பு. உன் புதல்வனைக் கண்ட பின்னும் உன் கண்கள் பகைவரை நோக்கிய கண்களைப் போலவே சிவந்தே உள்ளனவே! என போருடற்று மீண்டு வந்த அதியமான் தன் புதல்வனைக் காணவந்த நிகழ்வினை புலப்பாட்டு உணர்வு பொங்கப் புனைவுடன் உவமை கலந்து சிறந்த பாடலாக்கியுள்ளார்.

உணர்வுநிலை வெளிப்பாடு

வஞ்சின உணர்வு வேட்டைச்சமூகத்தின் மரபுவழி எச்சமாகும். சங்க இலக்கியத்தில் வஞ்சினம் கூறும் பாடல்கள் இத்தன்மையினவே. வஞ்சின உணர்வு போர் வீரர்களுக்கு ஆக்கம் தரும் ஒன்றாகப் புலவர்களால் விதந்துரைக்கப்படுகிறது. வஞ்சினப் பாடல்கள் வீரத்தை மிகுவிக்கத் துணை செய்கின்றன.

அதியமான் நட்பினரான ஓளவையார் அவன் கொடைப்பண்பையும் வீரத்தையும் நயம்படப் பாராட்டுகிறார். இது நட்பின் உரிமையாக அமைந்துள்ளது. அதியமானின் வீரத்தையும், மனஉறுதியையும் போர்த் திறத்தினையும் பகைவர்களிடம் பெருமைபட எடுத்துக்கூறும் பகுதி நட்பின் உணர்வு வெளிப்பாடாக அமைந்துள்ளது.

“களம்புகல் ஓம்புமின் தெவ்வீர், போரெதிர்ந்து

எம்முளும் உளனொரு பொருநன் வைகல்

எண்தேர் செய்யுந் தச்சன்

திங்கள் வலித்த காலன் னோனே.”            (புறம். 87)

பகைவர்களே! நீவிர் போர்க்களம் புகுவதைத் தவிர்ப்பீராக! ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாதமாகச் செய்த தேரின் சக்கரத்தைப் போன்ற வலிமையும் போராற்றலும் உள்ள உறுதியுமுடையவன் என் தலைவன். என்று அதியனுக்காகத் தான் உரிமைகொண்டு பேசுவது கருதத்தக்கது.

மறஉணர்வு வெளிப்பாடு

பகைவர்களே! நீவிர் எப்படிப்பட்டவராயினும் அவனோடு போர் செய்தே தீருவோம் என்று மட்டும் கருதாதீர்! அவன் பேராற்றல் படைத்தவன்; ஒளிவீசும் கூரிய நெடுவேல் படை கொண்ட மழவர்க்குத் தலைவன். விளங்குகின்ற நுண்ணிய பூணணிந்த மார்பினை உடையவன். களவேள்வி செய்து நற்போர் செய்யும் முழவு போன்ற தோளை உடையவன். அவன் எம் தலைவன். அவனை வென்றுவிடலாம் என்று சொல்வது உமக்கு எளிது; ஆயின் செய்வது உமக்கு அரிதே! எனவே நீவிர் போர்க்களம் செல்லாதீர்! என்று தடுத்துக் கூறுவதனை,

“யாவீர் ஆயினும் கூழைதார் கொண்டு

யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓங்குதிறல்

ஒளிறு இலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்

கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்

விழவு மேம்பட்ட நற்போர்

முழவுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.”       (பா. 88)

என்னும் பாடலில் காணலாம். இவ்விடத்தில் ஓளவையார் சங்க மூதின்மகளிர் வீர உணர்வினை வெளிப்படுத்தி நிற்கக் காணலாம்.

வஞ்சின வெளிப்பாடு

பகைவரை நோக்கி, அதியமானை நீங்கள் இளையவன்; எளியவன் என்று நினைத்தால் உங்களால் வெற்றிபெற இயலாது. அவன் யானையைக் கவ்வி இழுக்கும் முதலையைப் போன்ற வலிமையுடையவன்.

“போற்றுமின் மறவீர் ! சாற்றுமின் நும்மை

…………………………………………

ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை

…………………………………………

இளையவன் என்று இகழின் பெறல்அரிது ஆடே.”          (பா. 104)

என்று எடுத்துரைக்கின்றார். இதில் அதியனைத் தன் தலைவன் என்று கூறுவதன்வழி அவர் அவன் நாட்டு மக்களில் ஒருவராக நின்று ஒலிப்பதனைக் காண்கிறோம். இவ்விடங்களில் அதியன்மீதான நட்பின் நம்பிக்கையும், அன்பின் ஆழமும் அகலமும் உலகியல் நிகழ்வுகளோடு பொருந்தவருமாறு படைத்துள்ள திறம் வெளிப்படுகிறது.

வீர உணர்வு வெளிப்பாடு

வீரயுக வாழ்வில் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்று உணர்ந்த ஔவையார், உலகியல்புகளை எடுத்துரைத்து அதியனைப் போர்செய்யுமாறு வற்புறுத்துகிறார்.

“மறப்புலி உடலின் மான்கணம் உளவோ?

…………………………………….

பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?

…………….……………….

வழுஇல் வன்கை மழவர் பெரும !

இருநில மண்கொண்டு சிலைக்கும்

பொருநரும் உளரோ நீ களம் புகினே”         (புறம். 90)

வலிமை வாய்ந்த புலியின் முன் மான் கூட்டமானது நிற்கவும் கூடுமோ? மணலிலும் கல்லிலும் பெருமித நடை பயிலும் எருதிற்கு இழுக்கவியலாத துறைதான் உண்டோ? கணைய மரம் போலும் முழந்தாள்வரை நீண்ட கைகளை உடைய வீரர்க்குத் தலைவனே ! நீ களம் புகுந்தால் உனது நாட்டைக் கைக்கொள்ளும் வீரர் தாம் உளரோ! இவற்றில் வீரனுக்கு அறிவுரை கூறிப் போருக்குச் செல்லுமாறு குறிப்பிடும் திறத்தினைக் காணலாம். போரில் ஈடுபடுவது இயல்பான நிகழ்வு. எனினும் உலக நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் போருக்குத் தயார்செய்வது புலவரின் திறத்தால் எழுந்த ஒன்றாதலை அறியலாம்.

நட்பின் இழப்பு வெளிப்பாடு

பல்காலும் நெருங்கிய நட்பினனாக விளங்கிய அதியன் இறந்ததுகண்டு பெருந்துயருற்ற ஓளவையார் தன் இழப்பினைப் பலவாறு பாடி வெளிப்படுத்துகிறார். ஈமத்தீயில், அதியமான் நெடுமான் அஞ்சியின் உயிரற்ற உடல் உள்ளது. அந்த ஈமத்தீ, அவன் உடலைச் சிதைக்காமல் குறையினும் குறைக! இல்லையேல், குறையாமல் விண்ணளவு முட்டச் சென்று நிறையினும் நிறைக! ஆயினும், திங்களைப்போன்ற வெண்கொற்றக்குடை கொண்ட ஞாயிறு போன்ற அஞ்சியின் புகழோ எந்நாளும் அழியாது என்பதனை,

“எறிபுனக் குறவன் குறையல் அன்ன

கரிபுற விறகின் ஈமஒன் அழல்

குறுகினும் குறுகுக குறுகாது சென்று

விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்

திங்கள் அன்ன வெண்குடை

ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே.”              (பா. 231)

என்று பாடிச் சிறப்பிக்கின்றார். இதில் திங்களையும் ஞாயிற்றையும் இணைமுரணாகப் பயன்படுத்திச் செய்யுளைக் கட்டமைக்கும் பாங்கினைக் காணலாம். அதியன் இல்லாத உலகில் வாழ்வது பயனற்றது என்று கருதும் ஓளவையார்.

“இல்லா கியரோ காலைமாலை

அல்லா கியர்யான் வாழும் நாளே”            (பா. 232)

“நோகோ யானே தேய்கமா காலை

…………………………

உலகுபுகத் திறந்த வாயிற்

பலரோடு உண்டன் மரீஇ யோனே.”     (பா. 233)

எனக் குறிப்பிடும் சொற்கள் அவரது அவலஉணர்வுநிலையின் வெளிப்பாடாக உள்ளன.  பிரிவுத்துயரும் அதனால் எழும் அவல உணர்வும் உலகில்; இயல்பானவை. இதற்கு ஆட்படாதவர் எவருமிலர். இந்நிகழ்வினைப் பாடலாக்கிப் படிப்பவர் உள்ளத்திலும் அவ்வுணர்வு தோன்றுமாறு வடித்துள்ள பாடற்றிறம் எண்ணத்தக்கது.

நட்பின் உணர்வு வெளிப்பாடு

ஓளவையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றது நட்பின் பொருட்டே ஆகும். நட்பின் சிறப்பினைத் திருவள்ளுவர் ‘செயற்கரிய யாவுள நட்பு” என்று சிறப்பித்துக் கூறுவார். இவ்விடத்தில் ஓளவையார் அரசியல் அனுபவம் மிக்கவராகக் காட்சி தருவது கருதத் தக்கது.

அதியமானின்பொருட்டு ஔவையார், தொண்டைமான்பால் தூது செல்கிறார். நிகழ இருந்த போரினைத் தவிர்ப்பது அவரது நோக்கம். தொண்டைமான் தன்னுடைய படைக்கலப் பெருமையை விளக்க, ஔவையாரைத் தனது படைக்கலக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்கிறான். நிலைமையை உணர்ந்துகொண்ட புலவர் வெகுண்டு,

“இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து

கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில மாதோ”   (புறம். 95)

என்று கூறுவது நட்பின் உரிமை கருதியே ஆகும். இதில் தொண்டைமானின் படைக்கலப் பெருமையும், அதியமானின் படைக்கல நிலையும் காட்டப்படுகிறது. தமிழர்க்கே உரிய மானஉணர்ச்சி வெளிப்பாடும், மறப்பண்பும் புலவரை நடப்பியல் நிகழ்வாக்கிப் பாட வைக்கின்றது. இப்பாடலின் தன்மை வீரயுக வாழ்க்கையை வெளிப்படுத்தி நிற்கக் காணலாம்.

நன்றியுணர்வு வெளிப்பாடு

பெரியமலைச்சரிவிலே அரியமுயற்சியால் கிடைத்தற்கரிய சிறியஇலைகளைக் கொண்ட இனிய நெல்லிக்கனியை அரியது என்று கருதாமல், அதன் பயன் யாது எனவும் கூறாமல் எனக்கு அளித்த பெருமானே! நீ பால்போன்ற வெள்ளிய பிறை விளங்குகின்ற தலையும் நீலமணி அமைந்த கழுத்தும் கொண்ட இறைவனைப் போல நீயும் நிலைபெற்று வாழ்க! என்று அதியமானை வாழ்த்துகிறார். இது புலவரின் நன்றியுணர்வின் வெளிப்பாடாக அமைகிறது.

“…………………………தொல்நிலைப்

பெருமலை விடகரத்து அருமிசைக் கொண்ட

சிறியிலை நெல்லித் தீம்கனி குறியாது

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.”            (பா. 91)

உலகானுபவமும் படைப்பாக்கமும்

ஒரு கலைப்படைப்பில் புறவய உண்மை மட்டுமே முக்கியமல்ல. அது கலைஞர்மீது ஏற்படுத்துகிற தாக்கமும் முக்கியமானதாகும். குறிப்பிட்ட கலைஞனைப் பொறுத்த அளவில் இந்தப் பண்பு அழகியல் உண்மையாக எதிர்வினைபெற வேண்டும். அப்போதுதான் அது கலைப்படைப்பாக உருப்பெறும். புறவய உண்மையானது அழகியல் உண்மையாக உருப்பெறுகிறபோது அது, அதனைச் சார்ந்ததாக மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்ததாக அமைகிறது. இத்தகு சிறப்புக் கூறுகளைச் சங்க இலக்கியத்தில் இனம்காண முடியும் என்பதற்கு ஓளவையாரின் பாடல்கள் சான்றாக அமைந்துள்ளன.

புறப்பாடல்களில் சங்கச் சமூகத்தில் வாழ்ந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வீரர்களே பொருளாகியுள்ளனர். ஏனைய செவ்வியல் இலக்கியங்களைப் போன்ற புராண, மீவியல்பு மாந்தர்கள் இடம்பெறவது இல்லை. அவர்கள் குறிக்கோள் கொண்ட மாந்தர்களாகவும், கூற்றை முன்னெடுத்துச் சொல்லும் மாந்தர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.

பண்டைத்தமிழர்களின் வீரநிலையை உலகியல் நிகழ்வுகளே காட்டுகின்றன. “இதில் அரசர்களின் புகழ்பாடுவதும், வீரத்தைப் புலவர்கள் கூறுவதும் உண்மை நிலையைக் காட்டுமா? என்ற ஐயம் சிலருக்குத் தோன்றலாம். அரசர்களாயும். புலவர்களாயும் விளங்கிய பூதப்பாண்டியன், நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி ஆகியோர் வெஞ்சினங் கொண்டு பாடிய வஞ்சினப் பாடல்கள் வீரநிலைக்காலப் பண்பாட்டினை விளக்கும் வாயில்களாக உள்ளன. ஏனெனில் மனிதன் சினங்கொள்ளும் போது விலங்கு நிலையை அடைகின்றான். சாதாரண மனிதர்கள் சினங்கொண்டால் எதையும் செய்யத் துணிவார்கள். செய்யத் தகாதன வெகுளியால் செய்தபின் வருந்துவர். ஆனால், இதில் சினங்கொண்டு வஞ்சினம் கூறும்போதும் பழந்தமிழர் உண்மையான மனநிலையை நாம் அறிகிறோம்” (கதிர். மகாதேவன். 127:1980)

சங்கக் கவிதை மரபு தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று. அவற்றில் உலகியல் நிகழ்வுகள் புலவர்தம் படைப்பாற்றலால் செய்யுள் மரபினைப் பெற்றுச் சிறந்துள்ளன. நவீன படைப்பாக்கக் கொள்கைகளில் ஒன்றாகத் திகழும் யதார்த்தவியல், சங்கப் பாடல்களில் உலகியல்புகளாக வெளிப்பட்டுள்ளன.

புறப்பாடல்களில் உலகியலுக்கும், அகப்பாடல்களில் புனைவியலுக்கும் புலவர்கள் முதன்மைதந்து படைத்துள்ளனர். ஓளவையார் படைத்துள்ள புறப்பாடல்கள் தமிழக வரலாற்று ஆவணங்கள் ஆகும். உலகியல் நிகழ்வுகளைத் தம் மன உணர்வுக்கு ஏற்றவாறு பொருளாக்கி, நட்பின் சிறப்பினைத் தமது பாடல்களின்வழி காட்டியுள்ள திறம் எண்ணி வியக்கத்தக்கது.

ஓளவையார் சங்க இலக்கியத்தில் ஆளுமைத்திறன் மிகுந்த படைப்பாளராகத் திகழ்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட உலகியல்புகளே களமாக அமைந்துள்ளன. அதியமான் நெடுமான்அஞ்சியுடன் பெருநட்புப் பூண்டிருந்ததோடு, அவன் காலத்து வீரயுகவாழ்வியல் கூறுகளை வரலாற்றுப் பதிவுகளாக எடுத்துரைத்துள்ள திறம் தமிழர் வீரப்பண்பாட்டிற்குச் சான்றாக அமைந்திருக்கிறது.

கருவிநூல்கள் :

 1. இளம்பூரணர், (உ.ஆ.), தொல்காப்பியம், பொருளதிகாரம், கழக வெளியீடு, சென்னை. 1988
 2. உ.வே.சாமிநாதையர், (ப.ஆ.), புறநானூறு மூலமும் பழைய உரையும், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1967
 3. கதிர். மகாதேவன், பழந்தமிழர் வீரப்பண்பாடு-ஒப்பிலக்கியக் கணிப்பு, ஏரக வெளியீடு, மதுரை, 1980

———-

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஓளவையார் புறப்பாடல்களில் உலகியலும் புனைவியலும்

 1. பேராசிரியருக்கு வணக்கம் செறிவான ஆய்வுக்கட்டுரை.
  தினேஷ் ஆய்வாளர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *