இராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றுப் படுகையில் நுண்கற்காலத் தடயங்கள்

       முனைவர் ஆ.ராஜா

        அருங்காட்சியகக் காப்பாளர்

        அருங்காட்சியகத் துறை

        தமிழ்ப் பல்கலைக்கழகம்

        தஞ்சாவூர்

———————————————

மனிதனின் ஆரம்பகால வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை நிற்பது தொல்லியலாகும். தமிழக வரலாற்றை பல அறிஞர்கள் ஆய்வு செய்தும் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் பல மேற்கொண்டதன் வாயிலாகவும் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகளைக் கொண்டு வரலாற்றை எழுதியும் மீள் உருவாக்குமும் செய்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான இராமாநாதபுரம் மாவட்டத்தில் கள ஆய்வுகள் மேற்கொண்டதன் வாயிலாக கண்டறியப்பட்ட நுண்கற்காலக் கருவிகளைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

இராமநாதபுரம் வட்டாரப் பகுதியில் இதற்கு முன்னர் பல தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொண்டபோது பெரும்பான்மையாக இரும்புக்காலம், வரலாற்றுத் தொடக்க காலம் மற்றும் இடைக்காலச் சான்றுகளே அதிகம் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கா.இராசன், வேதாச்சலம், எஸ்.சாந்தலிங்கம், பா.ஜெயக்குமார், ந.அதியமான், வீ.செல்வகுமார், ஆ.ராஜா, பா.பாலமுருகன் போன்ற பல தொல்லியல் ஆய்வாளர்களால் வைகை ஆற்றுப் படுகையின் இரு புறங்களிலும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் மூலம் மேற்குறிப்பிட்ட காலங்களின் பண்பாட்டுத் தடயங்கள் கண்டறியப்பட்டு வெளியிட்டுள்ளன. இருப்பினும் மேற்சுட்டிய பண்பாடுகளுக்கு முன் வரக்கூடிய பழங்கற்காலம் மற்றும் நுண்கற்காலச் தொல்லியல் சான்றுகள் இப்பகுதியில் பெருமளவில் கண்டறியப்படவில்லை என்ற தாக்கம் இருந்தது. வீ.செல்வகுமார் அவர்கள் சில இடங்களில் மட்டும் நுண்கற்கால எச்சங்களைக் கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றுப் படுகையில் தொடர் மேற்பரப்பாய்வுகள் செய்ததன் வாயிலாகப் பல நுண்கற்கால தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டு, நுண்கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இப்புதியக் கண்டுபிடிப்பானது அப்பகுதியின் வரலாற்றைப் பின்நோக்கி எடுத்துச் செல்வதற்கு வலுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

முன்னாய்வும் ஒப்பாய்வும்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தேரிருவேலி என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் 1999-2000ஆம் ஆண்டுகளில் அகழாய்வினை மேற்கொண்டனர். இவ்வகழாய்வில் இரும்புக்காலப் பண்பாட்டுத் தடயங்கள் கிடைக்கின்ற மண்ணடுக்கிற்குக் கீழ் வருகின்ற மண்ணடுக்கில் குவார்ட்ஸ் வகை நுண்கற்காலக் கருவிகள் மற்றும் செதில் கண்டறியப்பட்டுள்ளன.1 இதைத் தொடர்ந்து இம்மாவட்டப் பகுதியில் மண்டபச்சாலை, கமுதி, நீராவி, தமிழ்ப்பாடி, திருச்சுழி, காரேந்தல், மேலேந்தல், நாகுடி, மறையூர், சாத்திச்சேரி, புத்தூர், நெல்மடியூர், செய்யமங்கலம் மற்றும் காஞ்சிரங்கம் ஆகிய இடங்களில் வீ.செல்வகுமார் நுண்கற்காலக் கருவிகள் மற்றும் செதில்களை கண்டறிந்துள்ளார். இக்கருவிகள் வண்டல் மண் மற்றும் செம்மண் படிவுகளிலும் அல்லது செம்மண் படிவுகளுக்குக் கீழ் காணப்படுகிற சரளைக்கல் படிவுகளில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.2

நுண்கற்காலப் பண்பாட்டின் நிலவியல் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை இதற்குமுன்பு இம்மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர் வட்டங்களில் வீ.செல்வகுமார் கண்டறிந்த நுண்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களை ஒத்துள்ளன. அதாவது நுண்கற்காலப் பண்பாட்டுக் கருவிகள் செம்மண் படிவுகளிலும், வண்டல் மண்படிவுகளிலும், தேரிப்படிவுகளிலும் காணப்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பாய்வுகளில் தெற்குத்தரவை என்ற ஊரில் காணப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் மூன்று மீட்டர் ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆழத்தில் நுண்கற்காலக் குவார்ட்ஸ் செதில்கள் மற்றும் செர்ட்குவார்ட்ஸ் வகை செதில்கள் பரவலாகக் காணப்படுவதை அடையாளம் காண முடிந்தது.

பொதுவாக நுண்கற்காலத்தைச் சார்ந்த கருவிகள், செதில்கள், துகள்கள் மற்றும் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட மூலக்கற்கள் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கிடைக்கின்றன. மேற்குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்த கருவிகள் வண்டல் மண் படிவுகளிலும், செம்மண் படிவுகளிலும், செம்மண்ணுடன்கூடிய செம்பாறங்கற் படிவுகளிலும் (Laterite) அதிகளவில் கிடைக்கின்றன.3 ஆனால் புதுக்கோட்டை பகுதியிலுள்ள நுண்கற்காலத் தொல்லியல் இடங்கள் செம்மண்ணுடன்கூடிய சரளைக்கல் படிவுகளிலும், வெப்பத்தின் தன்மை அதிகம் காணப்பட்டதால் நிலப்பரப்பில் எற்பட்ட வேதியியல் மாற்றங்களால் மாற்றம் பெற்ற செம்பாறங்கற் படிவுகளிலும், ஆலங்குடி பகுதியில் வண்டல் மண் படுவுகளிலும்4 அதிகளவில் கிடைத்துள்ளன.

(இராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றுப் படுகையில் கண்டறியப்பட்ட நுண்கற்கால இடங்களைக் காட்டும் படம்)

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 2009 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் இரும்பு செறிவுள்ள சரளைக்கற்கள் (Like Ferricrete) செம்மண்ணுடன் கலந்து காணப்படுகிற மண்ணடுக்கில் நுண்கற்காலச் செதில்கள், கூர்முனைக்கருவிகள், துளையிடும் கருவிகள், சுரண்டிகள், பிறைவடிவக்கருவிகள், அம்புமுனைக்கருவிகள் மற்றும் மூலக்கற்கள் காணப்பட்டன.5 இதேபோன்று நாகபட்டினம் மாவட்டத்தில் இரும்புக்கல் போன்ற சரளைக்கற் படிவுகளில் நுண்கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.6 மேலும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் மத்திய காவேரிப் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் நூண்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன. இவற்றில் காவேரி ஆற்றுக் கரையோரங்களின் இரு புறங்களிலும் கண்டறியப்பட்ட நுண்கற்காலப் பண்பாட்டிடங்களில் வெள்ளை நிற குவார்ட்ஸ் வகை கற்களால் உருவாக்கப்பட்ட கருவிகள் அதிகளவில் கிடைத்துள்ளன. இதேபோன்று இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ள நுண்கற்காலப் பண்பாட்டுக் கருவிகள் வண்டல் மண் படிவுகளிலும், செம்மண்படிவுகளிலும், செம்மண் தேரிகளிலும் வேலைப்பாடுகளுடன் கூடிய நுண்கற்காலக் கருவிகள் காணப்படுகின்றன. இவ்விடங்கள் நுண்கற்கால மக்களின் தாயமாக இருந்திருக்க வேண்டும்.7

வைகை ஆற்றுப் படுகையில் கண்டறியப்பட்ட  நுண்கற்கால இடங்கள்

இராமநாதபுரம் வட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டதில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடனை ஆகிய வட்டங்களிலுள்ள செலுவை, அம்மன்கோயில், தெற்குத்தரவை, பிரப்புகளூர், களரி, வண்ணாங்குண்டு, பழையனக்கோட்டை, தெற்குத்தரவை, சிறுவயல், தென்னவனூர், தேவிப்பட்டினம், பழஞ்சிறை, கோனேரி8 போன்ற ஊர்களில் நுண்கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இடங்களில் கண்டறியப்பட்ட நுண்கற்காலக் கருவிகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

நுண்கற்கருவிகள்

          நுண்கற்கால மக்கள் பளிங்கு கல்லில் இருந்தும், புகைபடிந்த பளிங்குக் கல்லில் இருந்தும் குவார்ட்ஸ் வகைக் கற்களிலிருந்தும் கருவிகளை உருவாக்கியுள்ளனர். மேற்குறிப்பிட்ட மூலக்கற்கலில் இருந்து கூர்முனைக்கருவிகள் (Points), துளையிடும் கருவிகள் (Borers), செதுக்குக்கருவிகள் (Burins), கிழிப்பான்கள் (Blades), பிறைவடிவக்கருவிகள் (Lunates) மற்றும் சுரண்டுக்கருவிகள் (Scrapers) போன்ற கருவிகளை நுண்கற்கால மக்கள் உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர். மேலும், மூலக்கற்கள் 12, நுண்கற்கருவிகள் 17, முழுமையடைந்த செதில்கள் 56, மருவேலைப்பாடு செய்யப்பட்ட செதில்கள் 24 போன்றவைகள் கள ஆய்வின் வாயிலாகக் கண்டறியப்பட்டுள்ளன.

நுண்கற்கால மக்களின் நுட்பம்

நுண்கற்காலத் தொல்லியல் இடங்களில் கிடைத்த நுண்கற்கருவிகள் மற்றும் செதில்களை ஒப்புநோக்கும்போது அவை புதுக்கோட்டை பகுதிகளில் கிடைக்கின்ற கருவிகளை ஒத்தவையாகக் காணப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி அகழாய்வில் கிடைத்த கூர்முனைக் கருவிகள் மற்றும் அம்புமுனைக் கருவிகளைப்போல் இராமநாதபுரம் பகுதியில் தெற்குத்தரவை, கோனேரி, அம்மன்கோயில் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கருவிகளும் ஒத்தவையாகக் காணப்படுகின்றன.

இக்காலத்திய மனிதர்கள் நுண்திறனுடன் கருவிகளை நேர்த்தியாகவும் செம்மையாகவும் உருவாக்கியுள்ளனர். நாடோடிகளாகத் திரிந்த இவர்கள் தங்களின் உணவுத் தேவைகளுக்குப் பல இடங்களுக்கு நடந்து சென்று உணவை சேகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கருவிகள் உருவாக்குவதற்கு தேவையான மூலக்கற்களைக் கிடைக்குமிடத்திலேயே சேகரித்து, இவர்கள் செல்லும் இடத்திற்கு எடுத்துச் சென்று கருவிகளை உருவாக்க முற்படுகின்றனர். அவ்வாறாக இராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றுப் படுகைப் பகுதிகளில் கிடைத்த கருவிகளைச் செய்வதற்கு அருகாமையிலுள்ள சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் கிடைக்கும் மூலக்கற்களைக் கொண்டு கருவிகள் உருவாக்கிப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் இராமநாதபுரம் மாவட்டம் கடலோரப் பகுதிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் இங்கு கருவிகள் உருவாக்குவதற்கு மூலக்கூறுகள் கிடைப்பதில் சிக்கல்கள் நிறைந்துள்ளன. இங்கு கிடைத்த நுண்கால எச்சங்களை உற்றுநோக்கும்போது மூலக்கற்களில் இருந்து உடைக்கும்போது அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய குமிழ்கள் உருவாகியிருப்பதை மூலக்கற்களிலும் செதில்களிலும் காணமுடிகிறது. அதேபோன்று மூலக்கற்களிலிருந்து வெளிவரும் செதில்களை மறுவேலைப்பாடு செய்து பல சிறிய கருவிகள் பலவற்றையும் உருவாக்கியுள்ளனர். இத்தகைய கூறுகளையுடைய செதில்களை களரி, அரசனூர், சிறுவயல், தெற்குத்தரவை, கோனேரி, தென்னவனூர், பழஞ்சிறை ஆகிய இடங்களில் சேகரிப்பட்ட கருவிகளின் வாயிலாக அறியமுடிகிறது.

அதேபோன்று கருவிகளை உருவாக்கும்பொழுது அம்புமுனைக்கருவிகள், கூர்முனைக்கருவிகள், பிறைவடிவக்கருவிகள் போன்றவற்றை நுண்கற்கால மக்கள் நுணுக்கமான நுட்பத்திறனுடன் மூலக்கற்களிலிருந்து ஒரு முழுமையான கருவியை உருவாக்கியுள்ளனர். கருவியை மூலக்கற்களில் இருந்து உருவாக்கும்பொழுது மூலக்கற்களில் இருந்து வெளிவரும் செதில்கள் வாயிலாகச் சிறிய கருவிகளையும் உருவாக்கியுள்ளார்கள். இதற்கு உதாரணமாகப் பழயனக்கோட்டை, பிரபுக்களூர், தெற்குத்தரவை ஆகிய இடங்களில் கிடைத்த கருவிகளைக் குறிப்பிடலாம்.

நிறைவுரை

இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட நுண்கற்கால எச்சங்களில் கருவிகள் உருவாக்கும்பொழுது மூலக்கற்களில் இருந்து வெளிவரும் பயன்பாடற்ற செதில்களாக 73.35%, மறுவேலைப்பாடு செய்யப்பட்ட செதில்கள் 12.70%, கருவிகள் 9.01%, மூலக்கற்கள் 4.91% ஆகும். இப்பகுதியிலிருந்த நுண்கற்கால மக்கள் குவார்ட்ஸ் வகை கற்களையே அதிகம் பயன்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள் கிடைப்பதைப் போன்று இராமநாதபுரம் மாவடத்திலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாய்வின் மூலம் இப்பகுதியில் சுமார் 15000ஆண்டுகளுக்கு முன்பே நுண்கற்கால மக்களின் செயல்பாடுகள் இருந்திருக்கிறது என்பதைக் கிடைத்தச் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது. இவர்கள் பழங்கற்கால மக்களைக்காட்டிலும் மேம்பட்ட கருவிகளை உருவாக்கும் திறம் பெற்றவர்களாக இருந்துள்ளனர். கரடுமுரடான கற்களைத் தவிர்த்து சிறுகற்களைத் தேர்வு செய்து கருவிகளை உருவாக்கும் நுட்பத்தைப் பெற்றிருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

——————————————

சான்றெண் விளக்கம்

  1. தி.ஸ்ரீதர், தேரிருவேலி அகழாய்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தரமணி, சென்னை, 2005.
  2. வீ.செல்வகுமார், பிள்ளையார்பட்டி அகழாய்வுகள், ஆவணம் இதழ்-22, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2011, பக்.116-117.
  3. ஆ.ராஜா, புதுக்கோட்டை பகுதியில் நுண்கற்காலப் பண்பாட்டிடங்கள், ஆவணம் இதழ் -22, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2011, பக்.185-186.
  4. ஆ.ராஜா, ஆலங்குடி வட்டாரத்தில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள், மரபுத் தமிழ் (தமிழ் மரபுகளை ஆவணப்படுத்துதல் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை), சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை, ஜெர்மனி, 2016 பக்.78-82.
  5. வீ.செல்வகுமார், தென் தமிழகத்தில் புதிய நுண்கற்கால இடங்கள், ஆவணம் இதழ்-21, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2010, பக்.155-157.
  6. வீ.செல்வகுமார், பிள்ளையார்பட்டி அகழாய்வு 2011, இதழ்-22, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2011, பக்.164-166.
  7. இந்திய விவரச்சுவடி, இராமநாதபுரம் மாவட்டம், தமிழநாடு அரசு வெளியீடு, ப.73
  8. Raja, Cultural contours of History and Archaeology, vol.I, Krishna Naik.K, Siva Nagi Reddy (Eds), B.R. publishing Delhi, 2015, pp.43-45.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றுப் படுகையில் நுண்கற்காலத் தடயங்கள்

Leave a Reply

Your email address will not be published.