படக்கவிதைப் போட்டி 192-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. பார்க்கவ் கேசவனின் இந்நிழற்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். பார்க்கவுக்கும், சாந்திக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!
எதிர்காலம் குறித்த கவலையும், அத்தனைக்கும் ஆசைப்படும் கட்டுப்பாடற்ற உள்ளமும் இன்மையே இக்கனிமழலை நிம்மதியாய்க் கண்வளர்வதன் இரகசியமாய் இருக்குமோ?
நம் கவிஞர்கள் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள் தம் பாட்டில் எனக் கேட்டு வருவோம்!
*****
”அள்ளக் குறையாத செல்வமில்லை; உள்ளத்தில் சூதில்லை வாதுமில்லை; வெள்ளந்தி மனமன்றி வேறொன்றில்லை. அதனால் அல்லவோ உறங்குகிறேன் கவலையற்று!” என்று நுவலும் பச்சிளங் குழந்தையைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.
பச்சிளங் குழந்தையின் பால் மனது…
எள்ளளவும் அச்சமில்லை.. எனக்கு
எதிரியென்று எவருமில்லை..
அள்ள அள்ளக் குறையாத..
அளவற்ற செல்வமில்லை..
உள்ளத்தில் சூது வாது..
உள்ளநிலை எனக்கில்லை..
நல்லது நடக்க வேண்டும்.. என்றெப்போதும்
நான் ஏங்கவில்லை..
அடுத்தவர் வாழ்வு போன்று..
வாழுமெண்ணம் எனக்கில்லை..
அடுத்தவேளை உணவைப்பற்றி..
ஒருபோதும் நான் நினைத்ததில்லை..
கடுகடுத்த முகம் இல்லை..
சிடுசிடுத்த மொழி இல்லை..
எனக்கே வேண்டு மென்று..
எதையும்நான் கொள்வதில்லை..
முதன்மையாய் இருக்க வேண்டும்..
என்ற எண்ணம் எனக்கில்லை..
வெள்ளந்தி மனதைத் தவிர..
வேறொன்றும் என்னிட மில்லை..
ஆதலால் நிம்மதியாய் உறங்குகின்றேன்..
எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை..
*****
”உண்மையை மறைத்து உலகத்தோர் செய்யும் உருப்படாதவைகளைக் கண்ணால் காணாது நீ நிம்மதியாய்க் கண்ணுறங்கு பிள்ளாய்!” என்று குழந்தையிடம் கூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
கண்ணுறங்கு…
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுநீ யுறங்கு
காணவேண்டாம் காசினியோர் செயலை யெல்லாம்,
உண்மைதனை மறைத்துவைத்தே மண்ணில் மாந்தர்
உருப்படாத தவறையெல்லாம் செய்கின் றாரே,
பண்பதனை மறந்தேதான் பற்பல குற்றம்
பயமிலாமல் செய்தேதான் அழிகின் றாரே,
கண்ணதிலே நீயுமதைக் காண வேண்டாம்
கண்ணுறங்கு கண்ணுறங்கு பிள்ளைநீ யுறங்கு…!
*****
வெள்ளை மனங்கொண்ட மழலையைப் போற்றிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கும் பாவலர்க்கு என் பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
உறங்கிடு என் செல்லமே!
உறங்கிடு என் செல்லமே!
கனவு காணுங்கள் எனக் கலாம் அவர்கள் சொன்னதைக் கேட்டு
கண்கள் மூடிக் கனவுகள் காண உறங்கிடு என் செல்லமே!
கல்வி என்னும் பெயரில் கழுதைகளாய்ப் புத்தக மூட்டை சுமந்து
வளைந்த முதுகுகளோடு வலம் வரும் பிள்ளைகள் இங்கே
விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
காலுன்றும் காலம் வரும் முன்னே நெஞ்சில் காதல் வேரூன்ற…
கிடைக்காத காதலுக்கு இவர் உயிரை இழந்து விடும் விடலைப் பூக்கள் இங்கே!
விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
வேலை கிடைக்காமல் பசி போக்கும் பாதி வயிற்றுக் கஞ்சிக்காக
அன்னாடம் காச்சிகளாய்ப் பெருகிவரும் பட்டதாரிக் கூட்டம் இங்கே
விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
விட்டுக்கொடுக்க மனம் பிடிக்காமல்
விவாகரத்து வாங்கித் திசை மாறிச் செல்லும் உறவுகள் இங்கே
விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
வழி நடத்தத் தெரியாத தலைவர்களைத் தவறாய்த் தேர்ந்தெடுக்க
விழி பிதுங்க அவதிப்படும் மாந்தர்கள் இங்கே
விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
அன்பாய் ஆதரவாய் இருந்த பெற்றோர்கள் ஆசிரமங்களில் அடைக்கலம் தேடப்
பெற்றோரை விட்டுச் செல்லும் பிள்ளைகள் நிறைய இங்கே
விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
இந்தியாவின் வருங்காலத் தூண் நீ அத்தனையும் மாற்றி எழுதும் காலம் வரும்
அப்போது விழித்திடு வீறுகொண்டு எழுந்திடு அதுவரை
விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
கல்வி எனும் பெயரால் கழுதைபோல் பொதிசுமக்கும் பள்ளிப் பிள்ளைகள், கஞ்சிக்கு என்செய்வது என்று அஞ்சிவாழும் இளையோர் கூட்டம், விட்டுக்கொடுத்து வாழும் சகிப்புத்தன்மையின்றி வெட்டிக்கொண்டு செல்லும் இணையர் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டத்தைச் சந்திக்கும் மானுடத்தைத் தன் கவிதையில் சிறப்பாய்க் கவனப்படுத்தியிருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்றறிவித்துப் பாராட்டுகின்றேன்.
எனது கவிதையை
சிறந்த கவிதையாய் தேர்ந்தெடுத்ததற்கு
மிக்க நன்றி