இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது!

1

-சுரேஜமீ

இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! – திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.

‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மஸ்கட் தமிழர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையல்ல.

எழுந்து போக மனமில்லாமல், இன்னும் கொஞ்சம் தொடராதா என்ற கேள்விதான் நிகழ்ச்சியின் வெற்றி.

மஸ்கட் மக்களுக்கு இசைக்கவி அண்ணா அவர்கள் பாரதி யார்? எனும் நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பரிச்சயம் ஆகி இருந்தாலும், இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கும், மக்களுக்குமான உறவு இன்னும் பலப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

பாரதி யார்? எனும் நாடகத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மஸ்கட் மீண்டு வரவில்லை என்பதை, ஒவ்வொரு தமிழரும் அவருடனான உரையாடல்களில் நன்றியோடு பகிர்ந்து கொண்டனர்.

‘இலக்கியமும் திரையிசையும்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருக்குறள் பாசறை அமைப்பு, ‘வாழும் பாரதி’ எனும் விருதினை ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு அளித்து தனது அன்பை அவருக்குக் காணிக்கையாக்கியது.

தாய்த் தமிழகத்தில், அன்னாரை ‘வாழும் பாரதி’ எனத் தமிழ்ச் சான்றோர்கள் கொண்டாடினாலும், அதையே விருதாக வழங்கி,

 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்டது தமிழ்நாடு! எனும்

பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விருதை திருக்குறள் பாசறை வழங்கியது மிகவும் பொருத்தமே!

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான மக்கள் முன்னிலையில்,

திருவாளர் குமார் மகாதேவன், இயக்குனர், ஓமான் சபூர்ஜி கம்பெனி அவர்கள்

‘வாழும் பாரதி’ என்ற விருதையும், பத்திரத்தையும்

ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சி அமைப்பாளர் மற்றும் திருக்குறள் பாசறை நிறுவனர் கவி. சுரேஜமீ அவர்கள் முன்னிலையில், பாரதி யார்? எனும் நாடகத்தில் மஸ்கட்டிலிருந்து தங்கள் பங்களிப்பைச் செய்த அனைத்து நடிகர், நடிகையர், குழந்தைகள் சேர்ந்திருக்க, அன்னாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நிகழ்வும் இனிதே நிறைவேற, இன்பக் கனவுகளுடனும், இனி எப்போது வருவார் எனும் கேள்வியுடனும், மஸ்கட் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த திருவாளர் சுரேஷ் மற்றும் சேகர் மற்றும் நிகழ்ச்சியின் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணித்த அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் திருக்குறள் பாசறை தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு,

ஐயா இசைக்கவி ரமணன் அவர்கள் இன்னும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறது!

– சுரேஜமீ
12.1.2019

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *