லண்டனில் மூடப்பட்ட டாஸ்மாக்! – செய்திகள்
லண்டன், 10 அக்டோபர் 2011.
பூனே நகரைத் தலைமையிடமாகக் கொண்ட TASMAC குழுமத்தால் லண்டனில் நடத்தப்பட்டு வந்த TASMAC London School of Business என்ற கல்லூரி 10 அக்டோபர் 2011 அன்று மூடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது. முதல் பருவத்தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கல்லூரி அனுப்பிய ஒரு கடிதத்தில் “டாஸ்மாக் லண்டன் தனது அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துகிறது. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளைச் சாராதவர்கள் ஆவர். இந்த மாணவர்கள் இங்கிலாந்தில் படிப்பதற்கு இவர்களுக்கு விசா அவசியமான ஒன்று. இங்கிலாந்து தலைமைவகிக்கும் யுனைடெட் கிங்டம் அமைப்பின் எல்லைகள் கட்டுப்பாட்டுத்துறை (The United Kingdom Borders Agency (UKBA)) திடீரென பல விசா விதிமுறைகளை மாற்றியதன் விளைவாக தொடர்ந்து கல்லூரியை நடத்த இயலாத நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது TASMAC குழுமம்.
இதற்கு முன் ஏப்ரல் 2011-ல் விசா விதிமுறைகளை மற்றிய UKBA தற்போது மீண்டும் விதிமுறைகளை மற்றியிருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. படிப்புக் கட்டணம் முழுவதுமாக செலுத்திய பின்னரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்னமும் படிப்பை முடிக்கவில்லை. மேலும் கல்லூரியில் பணிபுரிந்த ஊழியர்களும் திடீரென வேலையிழந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கான MBA படிப்பிற்கான முழுத் தொகையும் செலுத்தியுள்ளனர் மாணவர்கள். இவர்களின் விசா பற்றிய தற்போதைய நிலை மட்டுமல்ல இந்த மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.