செல்வக் களஞ்சியங்கள்

1

-ராமலக்ஷ்மி

ramalakshmiண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயதுக் காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலாகாலமாய்த் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான். பெண்கள் எத்தனை சாதித்துக் காட்டி என்ன போயிற்று? இன்றைக்கும் கருவறைக்கே வேண்டாத விருந்தாளியாகத்தான் இருக்கிறாள் என்பதுதான் வேதனை தோய்ந்த உண்மை.

எல்லோருக்கும் தெரிந்த, எத்தனயோ பேரால் வேறு வேறு வார்த்தைகளால் அடிக்கடி சொல்லப்பட்டவைதானே எனத் தோன்றலாம். கள்ளிப்பால் கதைகளும், கருவிலேயே பெண்சிசுக்களின் உயிர்த் துடிப்பைச் சிதைக்கத் துணியும் அவலங்களும் தொடரும் வேதனையாகவே இருக்க, மக்கள் மனத்தில் மாற்றங்கள் வாராதா எனும் ஆதங்கத்தின் விளைவே இந்தப் பகிர்வு.

பிறக்கப் போகும் குழந்தை ‘ஆரோக்கியமாக வளர்கிறதா’ என்றறியக் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்கேன் கருவி, ஏனோ நம் நாட்டில் இப்படிப் பால் பாகுபாட்டினைத் தெரிந்துகொண்டு, பெண் என்றால் கருவிலேயே கலைத்துவிடும் மாபாவத்துக்குத் துணை போய்க்கொண்டிருக்கிறது.

2010 ஜூன் இரண்டாவது வாரம் பெங்களூர் மருத்துவமனை ஒன்றில் இப்படி சட்டத்துக்குப் புறம்பாக, கருவில் வளருவது பெண்ணா, பையனா எனக் கண்டறிந்து சொல்கிறார்கள் எனத் தெரிய வந்து, ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்ய வைத்துள்ளார்கள் அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத் துறை ஏற்பாடு செய்த ஐவர் அணி. மருத்துவரும் தன் தவறு காமிராவில் பதிவாகிக்கொண்டிருப்பது தெரியாமல் ரூ.14000 வாங்கிக்கொண்டு ஐந்து நிமிடங்களில் அறிந்து சொல்லி விட்டார், வயிற்றில் இருப்பது பெண் சிசுதான் என.

வந்திருப்பது யாரெனத் தெரியவர, மின்னலெனத் தப்பித்துத் தலைமறைவாகி விட்டார். உடந்தையாய் இருந்து மாட்டிக்கொண்ட அட்டெண்டர் பெண்மணி மூலமாக, சராசரியாக ஒரு நாளுக்குப் பத்துப் பேராவது இந்தச் சோதனையைச் செய்துகொள்ள வந்தபடி இருந்தது தெரிய வந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த மருத்துவமனையெங்கும் இச்சோதனை சட்டப்படி குற்றம் எனும் வாசகம் நிரம்பிய போஸ்டர்களால் நிரம்பி இருந்திருக்கின்றது.

தொடர்ந்து அரசு மேற்கொண்ட திடீர் சோதனைகளின் முடிவாக பல மருத்துவமனைகளில் இது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருப்பது தெரியவர, அபராதம் விதிக்கப்பட்டதோடு, இக்கருவியையே கைப்பற்றி விட்டுள்ளது அரசு. இந்த அவலம், இந்தியாவின் எல்லா இடங்களிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

றுமைக் கோட்டிலுள்ளவர்கள், படிப்பறிவில்லாதவர்கள்தான் அறியாமையால் இப்படிச் செய்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. என்ன குழந்தையெனத் தெரிந்து, அதன் துடிப்பை நிறுத்திடப் பல ஆயிரம் செலவிடத் துடிக்கும் வசதியானவரும்தான் இதில் அடக்கம். மெத்தப் படித்த மருத்துவர்களும் உடந்தை என்பது தலைகுனிவுக்குரிய விஷயம். ஆனால் மருத்துவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

‘எந்தக் குழந்தையானால் என்ன? தாயும் சேயும் நலமாய் வந்தால் போதும்’ எனச் சொல்லியபடியே பிரசவ வார்டில் புது வரவுக்குக் காத்திருக்கும் சுற்றங்களும் கூட, பிறந்தது பெண் எனத் தெரிவிக்கப்படும் வேளையில் ‘பெண்ணா’ என இழுப்பதையும், அதுவே ஆண் குழந்தையெனும் போது ‘ஆகா’ என ஆனந்தத்தில் துள்ளுவதையும் இன்றளவிலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆரம்ப வரவேற்பே இப்படி அலுப்பும் சலிப்புமாய் இருக்குமானால் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு சமுதாயத்தில் மாற்ற முடியாத ஒன்றாகவே போய்விடும். கருவில் அழித்திடும் அளவுக்கு இறங்கி விடாத மக்களும், கருத்தினில் பெண் குழந்தைகளைக் கொண்டாட ஆரம்பித்தால்தான் ஒரு அலையாய் இந்த எண்ணம் சமுதாயத்தில் பரவும்.

மருத்துவக் காரணங்களுக்கான பரிந்துரைகள் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு கருவைச் சுமக்கும் தாய், குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக ஒருபோதும் இச்செயலுக்குத் துணை போகக் கூடாது. தானும் ஒரு பெண் என்பதைச் சுமப்பவளும் சரி, தூண்டும் பிற குடும்பத்துப் பெண்களும் சரி மறக்கக் கூடாது. கருவில் இருப்பது இன்னோர் உயிர், அதை மாய்க்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்பதை உணர வேண்டும். ஆணா, பெண்ணா என்பது பிறக்கும்போது தெரிய வந்தால் போதும் என்பதில் கருவுற்ற பெண்கள் பிடிவாதம் காட்ட வேண்டும். நம் நாட்டின் குடும்ப அமைப்பில் இதற்காகக் கூடப் போராட வேண்டிய சூழலில் பெண்கள் தவிப்பது, ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே வெட்கக் கேடு.

ஆண்களும், தன்னைச் சுமந்து ஆளாக்கியவள் பெண்ணாயிருக்க, தன் தேவைகளை நிறைவேற்றக் கரம் பிடித்தவள் பெண்ணாயிருக்க, ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாக இருப்பதும் வளர்ப்பதும் சிரமம் என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும். கருவறைக்குள் குடிவருவது குடும்பத்தின் குலசாமி குலதெய்வமாகத்தான் இருக்க முடியுமே தவிர, எந்த வேண்டாத விருந்தாளிகவும் இருக்க முடியாது. கோவிலில் கடவுள் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் ‘கர்ப்பக் கிரகம்’ என்றழைப்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், கர்ப்பத்தின் புனிதத்தை. தாய்மையின் மேன்மையை. தன் பெற்றோரோ, சுற்றமோ வற்புறுத்தினாலும் மனைவிக்குக் கணவன் துணை நின்றால் சுற்றம் தானாக வாயடைத்துப் போகும்.

‘வளர்க்கும் சிரமம் எங்களுக்கு’ என வாதம் செய்பவரும் இருக்கிறார்கள். ஆண் குழந்தை என்றால் உங்கள் சிரமங்கள் பஞ்சாகிப் பறந்து விடுமா? மாறிவரும் இக்காலத்தில் நமது எந்தக் கணிப்புகளும் உண்மையாக இருக்கப் போவதேயில்லை. பெற்றவரைக் கடைசி வரை வைத்துத் தாங்கும் மகள்களும் உள்ளனர். வயதான காலத்தில் தவிக்கவிட்டு, பிரிந்து சென்று விடும் மகன்களும் உள்ளனர். பல இடங்களில் மகன்களுடனே வாழ்ந்தாலும் கூட மனத்தால் தனிமைப்பட்டுப் போய், ஆதரவாய்த் தோள் சாய மகள்களின் தோள் தேடும் பெற்றோரும் உள்ளனர். இது போல் மனப்பாரம் இறக்கி வைக்க மகள்கள் இல்லாது போனார்களே என எண்ணி ஏங்கும் தம்பதியரும் உள்ளனர்.

இவையெல்லாம் இங்கு பட்டியலிடக் காரணம் எந்த அடிப்படையில் பெண் குழந்தைகள் வெறுக்கப்படுகிறார்களோ அது தவறு என்று சொல்லத்தான். படிப்பு முதல் திருமணம் வரை இந்தக் காலத்தில் ஆண் பெண் இருவருக்குமே எல்லாவிதச் செலவுகளும் ஒரே மாதிரியாகி விட்டனவே. மேலும் பொருளாதார அடிப்படையில் பிள்ளை வளர்ப்பினைப் பாகுபடுத்திப் பார்ப்பதே கேவலமான ஒரு சிந்தனையாகும்.

உண்மையில், எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன, பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம். குழந்தைகளே வாழ்வின் பொக்கிஷங்கள், அவர்களை வளர்க்கும் அனுபவம் இறைவன் தந்த பேரானந்தம், சந்திக்கும் சிரமங்கள் இன்பம் தரும் சவால்கள் என்கிற உணர்வும் புரிதலும் வந்துவிட்டால் சின்னக் கண்ணன் ஆனாலும், செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள்தாம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செல்வக் களஞ்சியங்கள்

  1. “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” என்ற குறளில்
    தம்மை விட தம் மக்கள் அறிவுடையவர்களாக
    இருப்பது தான் இந்த உலகிற்கே சிறப்பு என்கிறார்
    வள்ளுவர். குழந்தையைப் பெற்று அவற்றின் அறிவை
    மேம்படுத்தும் செயலைச் செய்ய வேண்டுமே அன்றி
    நம் அறிவைத் தாழ்த்துவது போல ஒரு செயலை,
    அதுவும் எந்த விலங்கினமும் செய்யாத ஒரு செயலை,
    மனிதன் செய்வது மனித சமுதாயமே வெட்கித் தலை
    குனிய வேண்டிய நிலைக்கு உள்ளாகிறது. கண் குருடு,
    காது செவிடு, வாய் ஊமை என்ற நிலையிலும் சாதனை
    படைத்த பெண் ஹெலன் கெல்லர். அந்த சாதனையை
    முறியடிக்க ஒரு ஆண் இன்னமும் பிறக்கவில்லை
    என்பதே உண்மை.
    இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.