தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

1

பகுதி -7  : ‘அருகாமை’  – பெருகாமை வேண்டும்

பேரா. பெஞ்சமின் லெபோ

இரவு ஏ.பி. நாகராசனின் ‘திருவிளையாடல்’ பார்த்ததின் விளைவோ என்னவோ, நெற்றியும் திருநீறுமாக வெற்றி வேலும் கையுமாக மயில் மேல் கோலமுடன் கனவில் வந்தார் பாலமுருகன்.

“அப்பா, உச்சி மேல் நீ வைத்துக் கொண்டாடும் உன் தமிழ் உணர்ச்சியை மெச்சினோம்! என்ன வரம் வேண்டுமோ கேள்:” என்றார்.
“வந்தெனக்கு வரமருளும் முருகனே, திருமால் மருகனே !கந்தனே, கடம்பா ! சரவண பவனே! (சாப்பாட்டுக் கடையைச் சொல்லலைங்கோ!)

கனிமொழியின் கடவுளே! (‘நம்ம’  அக்காவைச் சொல்லலைங்கோ!) இனியும் இப்படித் தமிழ் தமிழ் என உருகாமை வேண்டும்”  என்றவுடன்முருகனின் புருவங்கள் ஒருமாதிரித் திருகி வளைந்தன. உடனே நான் சமாளித்துக் கொண்டு கே.பி.எஸ் பாணியில்
“அப்படி உருகத்தான் வேண்டும் என்றால் ‘அருகாமை’,’ எந்தன்’, ‘உந்தன்’ …போன்றவை பெருகாமை வேண்டும், பெருமானே திருவருள் புரிவாய்”  என்றேன்!

“யப்பா, யப்பா, எத்தனை பேர் எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் நம்ம மக்கள் எதன் மீதோ பொழிந்த மழையாகத்தான் இருப்பார்கள்.அதனால்தான்,  சம்பவாமி யுகே யுகே என்ற மாதிரி,  அவ்வப் போது உன்னை மாதிரி வேலையற்ற சிலரை உருவாக்கி உலவ விடுகிறேன்.அவர்கள் திருந்திவிட்டால், திருத்திக்கொண்டால், உன்னைப் போன்றவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடுமே! நீ உன் பணியைச் செய் ” என உரைக்க அடியேன்,
“ஐயா, கந்தையா! வரமையா தருமையா … ” எனத் தருமியின் பாணியில் நான் இழுக்க

“வரமாவது மரமாவது, ஆளை விடுமையா.., வள்ளி காத்திருப்பாள்” என்று சொல்லி விட்டு அவசரம் அவசரமாய் மயில் ஏறிப் பறந்து விட்டார்

மலங்க மலங்க விழித்தபடி எழுந்தேன். இன்று வியாழன் : கட்டுரை அனுப்ப வேண்டுமே.. என்ற கவலைக்கு விடை கிடைத்து விட்டது ‘அருகாமை’  பற்றி  எழுது என முருகனே கட்டளை இட்டது போல் தோன்றியது.

இந்த ‘அருகாமை’ பற்றி இணைய தளத்தில் பலரும் எழுதித் தள்ளித் தீர்த்து விட்டார்கள். அப்படியும் ‘அருகாமை’ அருகிப் போனதாகத் தெரியவில்லை. கூகிள் கணக்குப் படி (ஏற்கனவே கூகிள் கணக்கு பற்றிக் குறிப்பிட்டதை இத்தொடரின் பார்வையாளர்கள் அறிவர்)

1 01 000 பேர்கள்,  ‘அருகாமையை’ விடாப் பிடியாகப் பிடித்திருப்பது தெரிகிறது.  அவர்களுள் உங்களில் சிலரும் இருக்கக் கூடும். எனவேதான் (முருகன் திரு உளப்படி) இந்த ‘அருகாமை’ கட்டுரை.

இச் சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறார்கள்?

‘நெருப்பு என்பது சுடுமெனத் தெரிந்தாலும் கூதிர்காலங்களில் அதன் அருகாமை தேவையாகத்தான் இருக்கிறது’.
https://mail.google.com/mail/?shva=1#inbox/132b3f99c7f8de85

இங்கே இது ‘அண்மை’, ‘நெருக்கம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது போலவே மிகப் பலரும் இச் சொல்லை, ‘அருகில்’,
‘அண்மை’, ‘நெருக்கம்’ என்ற பொருளில் பயன்படுத்தி வருகின்றனர்.

2 ‘பிரான்சின் உயர்நீதிமன்றத்திற்கு அருகாமையில் மகிந்தாவை கூட்டில் அடைக்கும் பாரிய போராட்டம் -மக்களே வருக’
by manithann on Mon Dec 20, 2010 8:48 am http://www.eegarai.net/t49371-topic#455919

இதனை மறுபடி படித்துப் பாருங்கள்  : ‘பிரான்சின் உயர்நீதிமன்றத்திற்கு அருகில்  மகிந்தாவை கூட்டில்’அடைக்கப் போகிறார்கள் என்ற பொருள் வரவில்லையாஇத்தகைய வாக்கிய அமைப்புப் பிழைகளைப் பிறகு பார்ப்போம். இங்கும் ‘அருகில்’ என்ற பொருளில்தான் இச்சொல் பயன்பட்டிருக்கிறது. இக்காலத்தில்  கவிஞர் என்ற ‘பட்டப்’ பெயருடன் உலா வரும் பலரும் இச் சொல்லை ‘அருகில்’ என்ற பொருளில்தான் பயன்படுத்தி வருகிறார்கள் :

அருகாமையில் நீயிருந்தால்
அகிலம் கூட
சிறிதாகிறது! (
http://padaipali.wordpress.com/2011/08/01/).

நாவல் ஆசிரியர்களும் கட்டுரை எழுதுபவர்களும் அப்படியே! இவர்களைப் படிப்பவர்களும் இதுதான் சரி என்று (தவறாக) எண்ணி அப்படியே எழுதி வர நாளடைவில் தமிழ் இதனை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை வேறு.

இப்படித்தான் சொல்லைப் புரிந்துகொள்ளாமல் சொல்லுக்கு உரிய பொருளை அறிந்துகொள்ளாமல் தவறாகப் பயன்படுத்துதலை ‘இந்திய ஆங்கிலத்தில்’ காணலாம். (குறுக்குச் சால்  ஓட்டுவதற்கு  மன்னிக்க!). : ‘mistake’ என்ற ஆங்கிலச்சொல் நம்மவர்களிடம் படும் பாடு இருக்கிறதே!

“நான் சொல்றேன்னு கோச்சுக்காத ; என்னய தப்பா நெனச்சுக்காத ; தப்பா  எடுத்துக்காத …” அடிகடி நம்மவர் பயன்படுத்தும் சொற்றொடர்கள் ;  – இதனை அப்படியே ஆங்கிலப்படுத்தி, ‘mistake’ = தப்பு’ , don’t take’ = எடுத்துக்காத (தப்பா  எடுத்துக்காத) ‘…do not mistake me‘ எனப்  பேசுகின்றனர் , எழுதுகின்றனர் .

தவறாக எண்ணாதே என்பதை  ‘Queen’s English’ இல் சொல்லவேண்டும் என்றால், ‘do not misunderstandஎன்று சொல்லவேண்டும். ‘mistake’,  (me) ) object  ஒன்றுடன் வருமானால் அதன்  பொருள் : உள்ள  ஒன்றை வேறொன்றாக (ப் பிறழ) உணர்தல் என்பதாகும்.
காண்க :http://dictionary.reference.com/browse/mistake
verb (used with object)

3.to regard or identify wrongly as something or someone else: I mistook him for the mayor. ; last night when she stepped in the garden,  she mistook the cord for a snake!

4.to understand, interpret, or evaluate wrongly; misunderstand; misinterpret. இப்படி  ‘Queen’s English’  -ஐ நாம் கொலை செய்வதைக் காணப் பொறுக்காமல்தான், “இந்தா உனக்கென இந்தியன் இங்கிலீஷ், பிடித்துக்கொள்  ‘ என்று கழட்டிவிட்டான் போலும் ஆங்கிலேயன். நாமும் இப்படியே தமிழ்க் கொலை புரிந்துகொண்டிருந்தால் வெகு விரைவாகவே ‘தமிழிலாத் தமிழ்’ உருவாகும்,  ‘தமிங்கிலம்’  போல!

அது போகட்டும், நம் ‘அருகாமைக்கு’ அருகில் வருவோம். இணைய  தளத்தில்,

‘ஒரு வேர்ச் சொல்லுடன் ‘ஆமை’
என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.
காட்டு:

பணிவு + ஆமை = பணியாமை
கனிவு + ஆமை = கனியாமை
செய் + ஆமை = செய்யாமை

அதே நெறியில் பார்த்தால்
அருகு + ஆமை = அருகாமை

என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால் online lexicon இல் கூட proximity என்றே அருகாமைக்குப் பொருள் சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா?’
http://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/a8ce03d255ffd1bd?pli=1

என எழுதி இருந்தார்…தவறான காட்டுக்குச் சிறப்பான எடுத்துக்காட்டு!

‘ஆமை’ என்றொரு உரிச் சொல்லோ இடைச் சொல்லோ இல்லை.
‘பணியாமையை’ இப்படிப் பிரிக்க வேண்டும் : பணியும்+ஆ+ மை
இதில் பணியும் பகுதி ; பிற இரண்டும் விகுதிகள் ; ஆ – எதிமறை வினையெச்ச விகுதி ; மை – பண்பு விகுதி.

பணியும் ; இதற்கு எதிர்மறைச் சொல் பணியா ;

கனியும் ; இதற்கு எதிர்மறைச் சொல் கனியா

செய்யும் ; இதற்கு எதிர்மறைச் சொல் செய்யா.

பணியா, கனியா, செய்யா…என்பன வினை முற்றுகள்  (வினை முடிவு பெற்றவை) : மாடுகள் பணியா , தேங்காய்கள் கனியா, கோள்கள் தீங்கு செய்யா). பணியா, கனியா, செய்யா…என்பன (பள்ளியில் உங்களை அச்சுறுத்திய அதே ) ஈ.கெ.எ.ம.பெ.எ (ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்) ஆகவும் வரும் அவற்றைப் பின் தொடர்வன பெயர்ச் சொற்களாக இருந்தால் : பணியாக் கழுதை , கனியாத் தக்காளி, (சொன்னதைச்) செய்யாத் தோழன்.
பெயர்ச்  சொற்கள் தொடராமல் இவற்றோடு ‘மை’ விகுதியைச் சேர்த்தால் தொழில் பெயர்கள் கிடைக்கும் :

பணியா+மை> பணியாமை

கனியா+மை> கனியாமை

செய்யா+மை> செய்யாமை.

இந்தப் புரிதலில் ‘அருகாமை’யைப் பார்ப்போம் :
அருகு = குறுகு, குறை  (தூரம் குறைகிறது என்ற அடிப்படையில் நெருங்குதல் என்ற பொருள் வந்திருக்கக்கூடும் )
இதன் எதிர்மறை என்ன? ‘அருகா ‘ . (=குறுகா , குறையா , நெருங்கா )
இவற்றோடு ‘மை’ விகுதியைச் சேர்த்தால்,

அருகா+மை= குறுகா+மை, குறையா +மை, நெருங்கா+மை
அருகாமை = குறுகாமை, குறையாமை, நெருங்காமை …
பார்த்தீர்களா, அருகாமை என்பதற்கு உண்மைப் பொருள் என்ன என்று !

பின் எப்படி ‘அருகில்’ ‘நெருக்கத்தில்’ என்ற பொருளில் ‘அருகாமை’ என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும்? தர்க்கப்படியும் இலக்கணப் படியும் இது தவறல்லவா! (கணித இயல் போலவே, தமிழ் இலக்கணம் முழுக்க முழுக்கத்  தர்க்கஇயல் படியே அமைந்துள்ளது)  நீங்கள்  சொல்ல வரும் கருத்துக்கு நேர் மாறான பொருளில் அச் சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை  இனியேனும் உணர்ந்தால் சரிதான்!

ஆம்பூர் பெ.மணியரசன் என்பவர், அருகண்மை,பெ.- மிக நெருங்கிய என்னும் பொருளுடையதாகும். அண்மை – ஊர் தொலைவிலில்லை என்று குறிப்பதாகும்-அருகண்மையில்தானிருக்கிறது என்று விடை வந்தால் மிகமிக நெருங்கிய பக்கத்தில்தான் உள்ளது என்பதே அதன் பொருள்’.
(http://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/a8ce03d255ffd1bd?pli=1)
என்றொரு கருத்தை முன் வைக்கிறார்.

அருகு  என்பதும்  அண்மை என்பதும் ஒரே பொருள் குறித்த இரு சொற்கள். ஒரு பொருள் குறித்த இரு சொற்கள் அடுத்தடுத்து வரும் வழக்கம் தமிழில் இல்லை. அப்படி வர நேர்ந்தால் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகைப்  பெயராக வரலாம் : சாரைப் பாம்பு ஆனால் அப்படி வரும் போது ஒன்று பொதுப் பெயராகவும் (பாம்பு) மற்றது சிறப்புப் பெயராகவும் (சாரை) வரும். அவர் கூறும் ‘அருகண்மை’ இப்படி வரவில்லை! மேலும் அருகண்மை என்ற சொல் இலக்கிய வழக்கிலோ உலகியல் வழக்கிலோ இல்லை ஆகவே அவர் கருத்தை ஏற்பதற்கு இல்லை.

முத்தாய்ப்பாகத்  தமிழ்ப் பேரறிஞர் முனைவர் தமிழண்ணல் கருத்தைக் கூறி
இந்த ‘அருகாமைக்கு’ இறுதி(யாக)’ முடிவு’கட்டுவோம் :

‘எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற
நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை ‘அருகில்’ வந்ததென்று தெரியவில்லை… இனிமேல் நம் அருகில் இந்த ‘ஆமை’ வராமல் காக்க வேண்டும்.

பேரறிஞர் பேச்சையாவது கேட்டு நடப்போமா?

பி.கு.:
‘அருகாமை’ பற்றிப் பேசும்போதே எந்தன், உந்தன் போன்ற மொந்தம் பழங்களையும்
ஒரு கை பார்க்க நினைத்தேன் , முடியவில்லை.  அடுத்த பகுதியில் அவற்றை ஒருவழியாக்கி  விடுவோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

  1. நன்னடை முயற்சிக்குப் பாராட்டுகள். எனக்கு என் பணி நினைவு ஒன்று உள்ளத்தில் ஊஞ்சலாடுகிறது. அதனைத் தெரிவிக்க விழைகிறேன். நான் மதுரையில் தமிழ் வளர்ச்சி உதவிஇயக்குநராகப் பணியாற்றிய பொழுது அலுவலகத்தின் முன் புறச் சுவரைக் கரும்பலகையாக ஆக்கி நாள்தோறும் 1. தமிழ் பறறிய மேற்கோள், 2. கலைச்சொல் விளக்கம், 3. தமிழ் வாழ்த்து, 4. இலக்கணக் குறிப்பு என எழுதி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அலுவலகம் இருந்த மாவட்ட ஆட்சியகத்தில் பணியாற்றுநர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் முதலமாடியில் உள்ள என் அலுவலகத்திற்கு வந்து படித்து விட்டுப் போவார்கள். ஒரு முறை பின்வருமாறு எழுதி முடித்து இருந்தேன். இனிமேல் யாராவது மதுரைக்கு அருகாமையில் மாறுதல் வேண்டும் என்று கேட்டு அவர்களை வெளியூருக்கு மாற்றியிருந்தால் நீங்கள் வேண்டியவாறுதானே மதுரைக்கு அருகாமையில் – தொலைவில் – மாறுதல் தந்தோம் எனறு சொல்லிவிடுங்கள். — இதனை மாவட்ட ஆட்சியரும் பிற அலுவலர்களும் மீண்டும் மீண்டும் வந்து படித்துவிட்டுப் போனார்கள். இப்படி நாம் தவறாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் சொல்லாட்சிகள் மிகுதியாக உள்ளன. அவற்றைப் பேரா.பெஞ்சமின் லெபோ தொடருவார் என எதிர் நோக்குகின்றேன். வல்லமைக்கும் பாராட்டுகள்.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.