அண்ணாகண்ணன்

அகமொழிகளைத் தொடர்ந்து, என் யோசனைகள், தீர்வுகள், புத்தாக்கச் சிந்தனைகள் சிலவற்றை அகவழி என்ற பெயரில் எழுதி வந்தேன். இவற்றை முறையாகத் தொகுக்கவில்லை. எனினும் இப்படியான யோசனைகள் இதுவரை முப்பதாவது வந்திருக்கும் என்ற நிலையில் இனி எழுதும் யோசனைகளை அகவழி 31 என்ற எண்ணிலிருந்து தொடங்குகிறேன். நீங்கள் தீர்வு காண விரும்பும் சிக்கல்களை எனக்குத் தனி மடலாக (annakannan@gmail.com) அனுப்புங்கள். தனிப்பட்ட யோசனை தேவை எனில், பொதுவில் பகிர வேண்டாம் என்ற குறிப்புடன் உங்கள் சிக்கலை அனுப்புங்கள். அதைத் தீர்க்க, எனக்கு ஏதும் யோசனை தோன்றினால் சொல்வேன்.

========================

அகவழி 31

பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுடன் பேசி, சமரசம் கண்டு, எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி கூறியுள்ளார். இவர்களைச் சமாதானப்படுத்த, ஒரு யோசனை.

எடுக்கப்படும் நிலத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகத் தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள தென்னை, மாட்டுக் கொட்டகை உள்பட ஒவ்வொன்றும் மதிப்பினைக் கணக்கிட்டு இந்தத் தொகை கணக்கிடப்படும் என்றும் அறிவித்துள்ளது. தொகை வேண்டாம் என்பவர்களுக்கு, அவர்களின் நிலத்துக்கான சந்தை மதிப்புக்கு ஈடாக, வேறு இடத்தில் மாற்று இடம் வழங்கலாம். தமிழகம் முழுவதும் அரசு வசம் உள்ள நிலங்களை ஓர் இணையத்தளத்தில் பட்டியலிட்டு, இவற்றிலிருந்து தேர்ந்தெடுங்கள் என்று கூறலாம். விவசாயி தேர்ந்தெடுக்கும் நிலத்துக்கான பத்திரப் பதிவு இலவசம் என்று கூறலாம். அங்கே விவசாயம் செய்ய விரும்பினால், முதல் ஓராண்டுக்கு அதற்கான விதைகள், நாற்றுகள், மரக் கன்றுகள் இலவசம் என்று அறிவிக்கலாம். மேலும், விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து, சிறப்பு வசதிகளை ஏற்படுத்தலாம். இதன் மூலம், பாதிக்கப்படும் விவசாயிகள் உரிய மாற்று இடத்தைப் பெற்று, தம் தொழிலைத் தொடரலாம். மக்கள் நலத் திட்டங்களையும் தடையின்றி நிறைவேற்றலாம். (அகவழி 31)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *