குறளின் கதிர்களாய்…(260)

–செண்பக ஜெகதீசன்
பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
கழகத்துக் காலை புகின்.
–திருக்குறள் –937(சூது)
புதுக் கவிதையில்…
அறம் பொருள் இன்பங்களுக்காகக்
அளிக்கப்பட்ட காலம்,
அரசாள்பவனுக்கு
அற்ப சூதாடு களத்தில் கழிந்தால்,
அது
காலம்காலமாய் தொடர்ந்துவரும்
செல்வத்தையும்
சொந்தமான நற்பண்புகளையும்
இல்லாமல் போக்கிவிடும்…!
குறும்பாவில்…
சூதாடுகளத்தில் அரசனுக்கான நற்காலம்
கழிந்தாலது வழிவழிவந்த செல்வத்தையும்
நற்பண்புகளையும் கெடுத்தழிக்கும்…!
மரபுக் கவிதையில்…
அறம்பொரு ளதனுடன் இன்பமென
அரசன் துய்த்திடும் காலத்திலவன்,
பொறுப்பது கொஞ்சமும் இல்லாமலே
பொல்லாச் சூதின் களம்சென்றே
அறமிலாச் சூததில் கழித்தாலே,
அதுவே யவன்தன் பரம்பரையின்
திறமையால் வளர்த்தநற் பண்புடனே
திரண்ட பொருளையும் கெடுத்திடுமே…!
லிமரைக்கூ…
பொழுதுபோக்கினால் சூதாடும் களத்தில்,
புவியரசனுக்கு அதனாலே வந்திடும் கேடு
பண்போடு செல்வ வளத்தில்…!
கிராமிய பாணியில்…
வேண்டாம் வேண்டாம் சூதாட்டம்
வாழ்க்கையக் கெடுக்கும் சூதாட்டம்..
நல்லதெல்லாம் அனுபவிக்கிற நேரத்தில
அத மறந்து
பொல்லாச் சூதுல போய்க்கழிச்சா,
பெரிய ராசாவுக்கும் அது
பரம்பரயா வந்த நல்லகொணத்தையும்
சேத்துவச்ச செல்வத்தயும்
சேந்தப்புல அழிச்சிடுமே..
அதால
வேண்டாம் வேண்டாம் சூதாட்டம்
வாழ்க்கையக் கெடுக்கும் சூதாட்டம்…!