இலக்கியம்தொடர்கள்நெல்லைத் தமிழில் திருக்குறள்

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

-நாங்குநேரி வாசஸ்ரீ

 

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

57. வெருவந்த செய்யாமை

குறள் 561:

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து

செஞ்ச தப்ப நியாய வழில கவனிச்சு பாத்து திரும்ப அவன் அந்த தப்ப செய்யாம இருக்கதுக்கு ஏத்தா மாதிரி தண்டன கொடுக்கவனே ராசா.

குறள் 562:

கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்

நெறைய நாள் செல்வாக்கோட இருக்கணும்னு நெனைக்கவங்க கண்டிக்கத் தொடங்குதப்போ கடுமையா தொடங்கிட்டு பொறவு வரம்பு மீறாம தண்டன கொடுக்கணும்.

குறள் 563:

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

மக்கள் பயப்படுதமாரி இருக்க  கொடுமக்கார ராசா நடத்துத ஆட்சி வெரசலா அழிஞ்சு போவும்.

குறள் 564:

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

நம்ம ராசா கொடுமக்காரன்னு மக்கள் சொல்லுததக் கேட்டு இருக்க ராசாவோட ஆட்சிக்காலம் கொறஞ்சு அவன் கெட்டழியுவான்.

குறள் 565:

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து

கடுகடுனு மொகத்த வச்சிக்கிட்டு யாராலயும் சுளுவா பாக்கமுடியாதவனா இருக்கவன் கிட்ட குவிஞ்சு கெடக்க சொத்து பேய் கணக்கா பாக்குததுக்கு பயப்படுத்தும்.

குறள் 566:

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்

கடுமையா பேசி, தயவு தாட்சண்யமே இல்லாம இருக்கவன் கிட்ட உள்ள செல்வம் நிக்காம அழிஞ்சு போவும்.

குறள் 567:

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்

கடுஞ்சொல்லும் வரம்பு மீறின தண்டனையும் ஒரு ராசாவோட பகைய செயிக்க ஒதவுத ஆயுதத்த தேச்சி மொண்ணையாக்குத அரம் கணக்கா ஆவும்.

குறள் 568:

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு

மந்திரி , மத்த கூட்டாளிங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசாம கோவப்பட்டு சீறுதவனோட செல்வம் சுருங்கிப் போவும்.

குறள் 569:

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

முன்னாலயே யோசிச்சு தேவைப்படுத பாதுகாப்பு செய்யாத ராசா போர் வந்திச்சுன்னா பயந்து வெரசலா அழிவான்

குறள் 570:

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை

கொடுமக்கார ராச்சியம் நல்லதப் படிக்காதவுகள தனக்கு பக்கத் தொணையா வச்சிக்கிடும். அது கணக்கா பூமிக்கு பாரம் வேற ஒண்ணுமில்ல.

(அடுத்தாப்லயும் வரும்….)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க