கலிகாலத்தில் நல்லவர்கள்!

Model Beautiful Woman People Portrait Fashion

நிர்மலா ராகவன், மலேசியா

நலம்…நலமறிய ஆவல் – 163

மகிழ்ச்சி அடைவதே தவறு என்பதுபோல் நடந்துகொண்டுவிட்டு, பிறகு தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளக் கூறுவது: `இந்தக் கலிகாலத்தில் நல்லவர்கள்தாம் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’

`இன்னா செய்தார்க்கும்..’ என்று திருவள்ளுவர் எக்காலத்திலோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால், இன்று நமக்குத் தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்தால், நாம் ஏமாளி என்று நினைத்து இன்னும் எல்லை மீறுகிறார்கள். தேவையற்ற துன்பங்களை அனுபவிப்பதற்கு நல்லவர்களாக இருந்து என்ன பயன் என்ற விரக்தி ஏற்பட்டுவிடுகிறது.

எதிர்ப்பா, மௌனமா?

`நல்லவனாக இருக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால் அது எப்படி முடியும்?’ என்று கேட்பவர்களுக்கு:

பிறர் நமக்குத் தீமை இழைத்தால் அதை பொறுத்துப்போவானேன்! அப்படிப்பட்டவர்களுக்குப் பயந்து நடந்தால், நமது சக்தி அவர்களுக்குப் போய்விடுகிறது. நாம் எதிர்த்தால் அவர்கள்தாம் சக்தியை இழந்துவிடுகிறார்கள்.

கோபத்தை மௌனத்தால் வெல்லலாம் என்கிறார்கள். சில சமயங்களில் இம்முறை பலனளிக்கலாம். ஆனால், அவசியம் என்னும்போது கோபத்தை வெளிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

அளவுக்கு அதிகமாக பொறுமைகாப்போர் நாளடைவில் பலகீனம் அடைந்துவிடுவதுண்டு. இவர்களில் சிலருக்கு எதிலும் பிடிப்பற்றுப் போய்விடக்கூடும்.

பிறரோ, எதிர்த்துச் சண்டைபோடத் தைரியம் இல்லாது, பின்புறம் போய் முதுகில் குத்தும் முறையைக் கையாள ஆரம்பிக்கிறார்கள்.

கதை

புதிய மணப்பெண்ணான பாலம்மா கிராமப்புறத்திலிருந்து வந்தவள். புக்ககத்தினரோ நாகரீகமான நகரைச் சேர்ந்தவர்கள். அவளுக்கு அவர்கள் வாழ்க்கைமுறை புரியவில்லை.

எனினும், `பெரியவர்கள் சொல்வதையெல்லாம் சற்றும் யோசியாது, அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்’ என்ற முறையில் வளர்க்கப்பட்டிருந்ததால், எல்லாரையும் அனுசரித்துப்போனாள்.

திருமணமாகிப்போன அவளுடைய நாத்தனார்கள் பிறந்தகத்திற்கு வந்தபோதெல்லாம் பெற்றோரிடம் துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து, தான் எதையோ இழந்துவிட்டதைப்போல ஒரு வெறுமை உண்டாயிற்று.

பாலம்மாவுக்கும் சிறிது தைரியம் வந்தது. ஆனாலும், `மூத்தவர்களை எதிர்ப்பதா!’ என்று தோன்றிப்போக, அவர்களுக்குப் பின்னால் அவதூறாகப் பேச ஆரம்பித்தாள்.

குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தது நற்குணமாக இருக்கலாம். ஆனால், அவளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காது, `அசடு’ என்று அவர்கள் ஓயாது பழித்தபின்னரும் பொறுத்துப்போனது பாலம்மாவின் தவறு.

தன்னை மாற்றிக்கொள்ள முடியாது, `என் வாழ்க்கையை இப்படியே, பிறர் சொல்வதைக் கேட்டே, கழித்துவிடுகிறேன்!’ என்று கண்டவரிடமெல்லாம் சொல்லிப்பார்த்தாள். அதில் நிறைவில்லை.

தன்னைப்போல் இல்லாத, பிற கலாசாரங்களிலிருந்து வந்தவர்களுடன் பாலம்மா தன் அவலத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தால், ஒருக்கால் தீர்வு கிடைத்திருக்கும்.

நல்லவனாக நடி

`என்னை நல்லவர், திறமைசாலி என்று பிறர் பாராட்ட வேண்டும்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டவர்போல் நடப்பது போலித்தனம். குறுகிய காலத்தில் பதவியும், அத்துடன் பெரும்பொருளையும் அடைய முனைகிறவர்கள் செய்யும் உத்தி இது. நினைத்ததை அடைந்தவுடன் நல்ல குணமும், முன்பு காட்டிய சுறுசுறுப்பும் எங்கோ காணாமல் போய்விடும்!

பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பி நடப்பவர்கள் பெரும்புகழை வாங்கலாம். ஆனால், மனோதிடமோ, நற்பண்போ இல்லாவிட்டால் வாழ்வில் எதிர்ப்படும் இடர்களைக் கடக்க இயலுமா?

பிறர் படும் துயர்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் தம்மைப்பற்றி சற்று மறக்கலாம். `எனக்குப் பிறரது நலனில் மிகுந்த அக்கறை!’ என்று காட்டிக்கொள்ளும் முயற்சி இது.

நாம் பேசுவதால் மட்டும் பிறரது கஷ்டங்கள் குறைந்துவிடுமா? அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று யோசித்து, காரியத்தில் இறங்கினாலாவது பயனுண்டு.

எல்லாருக்கும் நம்மைப் பிடிக்கப்போவதில்லை. நம்மைப் புரிந்துகொள்ளவும் முடியாது. (நமக்கே நம்மைப் புரிகிறதா என்பது வேறு விஷயம்).

பார்ப்பவர்கள் அனைவரையும் கவரவேண்டும்; குறைந்த பட்சம் அவர்களது ஆமோதிப்பையாவது பெறவேண்டும் என்றெண்ணியே நடந்தால், சக்தி விரயமாக, சலிப்புதான் மிஞ்சும். நம் எல்லையை நிர்ணயிக்கும் உரிமையை பிறருக்கு எதற்காக வழங்கவேண்டும்?

சில சமயம், குடும்பத்தினரே, `இவன் வித்தியாசமாக இருக்கிறானே, கஷ்டப்படப்போகிறானே! என்ற கரிசனத்துடன், ஒருவர் தேர்ந்தெடுத்த பாதையைக் குறைகூறினாலும், `நான் செல்வது நல்வழியில்தான்!’ என்று உறுதியுடன் நடந்தால், அவரையொத்த பிறரது நட்பு கிடைக்கும். அவர்கள் பக்கபலமாக அமைவார்கள்.  

யார் நல்லவர்கள்?

பிறரது துன்பத்தை தாமே அனுபவிப்பதுபோல் உணர்ந்து, அதைக் குறைக்கத் தம்மால் இயன்றதைச் செய்பவர்கள்.

நம்மை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால், ஏமாற்றாமல் அதைச் செய்பவர்கள். இத்தகையவர்களுக்குப் பிறரது கண்காணிப்பு அவசியமில்லை.

கதை

ஈவலின், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்தவள். கணவரைவிட்டு, பிழைப்பைத் தேடி மலேசியா வந்திருந்தாள். (ஆங்கிலம் தெரிந்திருப்பதால், அந்நாட்டு பணிப்பெண்களுக்குக் கூடுதலான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது).

கணவன், மனைவி, இரண்டு வயதுக் குழந்தை ஆகியோர் மட்டும் கொண்ட சிறிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்தது. வீட்டு வேலையைச் சுத்தமாகச் செய்ததால், கவலையின்றி, எல்லா பொறுப்புகளையும் அவளிடமே விட்டது குழந்தை ஏமியின் (Aemi) தாய் செய்த தவறு. `என் குழந்தைக்கு என்னைத் தெரியாது! எல்லாவற்றையும் என் `மெய்ட்’ பார்த்துக்கொள்கிறாள். நான் தனியாக வெளிநாட்டுப் பயணம் செய்யச் சௌகரியமாக இருக்கிறது!’ என்று பெருமை பேசும் ரகம் அவள்.

மூன்று வயதான ஏமி நோஞ்சானாக இருந்தாள். அதிகமாகப் பேசவில்லை. எதிரிலேயே இருந்த விளையாட்டு மைதானத்தில் தினமுமே அவள் சோர்ந்திருப்பதைப் பார்த்த நான், “ஏமி என்ன சாப்பிட்டாள்?” என்று ஒருநாள் விசாரித்தேன்.

“ஜூஸ்!”

“எப்போது?” என்று துருவினேன்.

“அவள் தூங்குவதற்குமுன்”.

“எப்போது தூங்கினாள்?” என்று கேட்க, ஐந்துமணி நேரத்திற்குமுன் என்று தெரிந்தது.

சிறு வயதிலிருந்து என்னைத் தினமும் பார்த்திருந்தும், பதினைந்து வயது ஏமி, “யார் இது?” என்று என்னைக் காட்டி என் பேத்தியிடம் விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

நான்கு வயதுக்குள் மனித மூளையில் 80% வளர்ந்துவிடுகிறது. அது நல்லபடியாக வளர சத்தான ஆகாரமும், தகுந்த ஓய்வும் வேண்டாமா?

ஏமி ஐந்து மணிநேரம் தூங்கினாள் என்றால், அது களைப்பால். `பசிக்கிறது’ என்று சொல்லி அழக்கூடத் தெரியாது இருந்ததால், ஈவலின் அடித்து, மிரட்டி இருப்பாள் என்று தோன்றியது.

இந்த இரண்டு பெண்களில் யாரை நோவது?

யார் நல்லவள், யார் கெட்டவள்?

தன் கடமையில் சற்றும் பொறுப்பின்றி, `விடுமுறைக்கு என் கணவரைப்போய் பார்த்துவிட்டு வந்தேன். பாஸ் (Boss) எனக்காக விமான டிக்கெட் வாங்கினார்!’ என்று பெருமை பேசிய ஈவலினா, அல்லது குழந்தை எப்படியோ வளர்ந்தால் சரி என்று விட்டேற்றியாக இருந்த அந்தத் தாயா?

Pic courtesy: https://www.maxpixel.net/Model-Beautiful-Woman-People-Portrait-Fashion-2303383

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *