படக்கவிதைப் போட்டி 217-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி
எழிலாய்க் குந்தியிருக்கும் நந்தியைப் பாங்காய்ப் படமெடுத்து வந்தவர் கீதா மதிவாணன். படக்கவிதைப் போட்டி 217க்கு இதனைத் தெரிவுசெய்து தந்தவர் சாந்தி மாரியப்பன். மாதர்கள் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. (குறள்: 527) என்று காக்கையைப் போற்றினார் பொய்யில் புலவர்.
உறவுபேணுவதில் உயர்ந்த காக்கை இங்கே நந்திக்குத் துணையாய் அமர்ந்து அதனைச் சிந்துபாடி மகிழ்விக்கின்றதோ?
கவிஞர்களை அழைத்து அவர்தம் கருத்துக்களைக் கேட்டறிவோம்!
*****
பறந்துவந்த களைப்பு ஒருபுறமிருப்பினும் நந்தியின் நீண்ட வாழ்க்கையின் இரகசியம் அறியும் ஆவலில் அருகமர்ந்திருக்கும் காகத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார் முனைவர் ம. இராமச்சந்திரன்.
காலமும் கரைத்துத் தான் பார்த்தது
கடந்து நிற்கும் சிலையும்
மறைந்து நிற்கும் வரலாறும்!
மனிதச் சிந்தனைக்கு எட்டாத அறிவில்
சற்று முயற்சிக்கத் துணியும் பறவை
ஏதேனும் உணர்ந்து விட்ட துணிவில்
பறந்த களைப்பு காற்றோடு போனாலும்
வரலாற்றுத் தடத்தில் தன் சிந்தை
விலக மனமற்று அமர்ந்திருக்கும் அது!
மன்னனின் ஆசையில் முகிழ்த்த சிலை
அவன் மறைந்தும் தான் வாழும்
மகத்துவத்தை உலகுக்குக் காட்டும் விந்தை!
நீண்ட வாழ்தலின் ரகசியம் கேட்டு
ஒரு பறவையின் நீண்ட நிற்றல்
வெற்றிகிட்டும் என்ற நப்பாசையில்!
*****
”கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, காற்றும் வெயிலும் காக்கை குருவியின் எச்சமும் பட்டு அவதியுறும் இக்கற்சிலை உணர்த்துவது, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்பதே!” என்று வாழ்க்கைத் தத்துவத்தை நவில்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
இன்றே நன்று…
காலக் கறையான் அரிப்புக்குக்
கோவில் சிலையும்
விதிவிலக்கல்ல..!
கும்பிடும் சிலையும்
கைவிடப்படுகிறது
ஊனம் உடலில் வந்துவிட்டால்,
கருவறைப் பாதுகாப்பிலிருந்து
வெளியேற்றப்பட்டு
கடும் வெயில்
காற்றுமழைப் பாதிப்பிலும்
காக்கை குருவி எச்ச
அவமதிப்பிலும் அவதிப்படுகிறது..!
கற்றுக்கொள் மனிதா
நிரந்தரமல்ல எதுவும்,
நடப்பு வாழ்வில்
கிடைப்பதை வைத்து
நன்றாய்ச் செய்,
அதுவும்
இன்றே செய்…!
*****
”பலரின் குறைதீர்த்த ஈசனின் வாகனம் இன்று கண்கூசும் வெயிலில் காய்வதுகண்ட காகம் மனம்வருந்தி, ”உன் துயர்தீர்க்கும் நபர்தேடிச் செல்வேன்; அவர் காதுகளில் உன் துன்பம் சொல்வேன்!” என்றெண்ணிக் கரைவதாய் உரைக்கிறார் திரு. சுந்தர்.
தூதுவனின் தூதுவன்!
ஈசனின் வாகனமாம்
காலனின் தோழனாம்
இன்புற்றோரின் யாசகங்களை
மகேசனின் செவிமடிக்குக்
கொண்டு சேர்க்கும் தூதுவனே!
நந்தி கேசவனே!
குறைதீர்க்கும் மகேஸ்வரனே…!
கற்சிலைக்கும் கேட்கும் திறனுண்டு
இப்பூவுலகில் பரவிக்கிடக்கும்
மாந்தர் கூட்டமே!
உன் மனக்குறைகளையும், பேராசைகளையும்
குறைவில்லாமல் கொட்டிவிடு
மனநோய்க்கு வேறு சிறந்த மருந்தில்லை
(கடவுள்)நம்பிக்கையைத் தவிர
என்ற சான்றோரின் சிந்தனைக்கு
உன் சிற்பமும் ஒரு சான்றுதானே?
முயலாமை என்னும் ஆற்றைக்
கடக்காமல்
முயற்சி என்னும் கடலில் நீந்த முடியாது
என்பதறியா மடவர் தான்
குறுக்கு வழியில் யாசகம் செய்வாரோ?
அவர்கள் பெற்ற யோகத்தின் சாபம் தான்
உன் சிதலடைந்த சிற்பமோ?
பலரின் குறைதீர்த்த உன் நிலமை
இன்று படுமோசமோ?
எனக்கும் செவியுண்டு பேசும் திறனுண்டு
பறக்கும் சிறகுண்டு அதுவல்லாத்
தன்னலமில்லா மனமுண்டு!
நீ படும்துயரினை
எவரொரருவர் தீர்ப்பாரோ
அவர் செவிகளுக்கு
நான் சென்றுரைக்கிறேன்…..!
*****
காகத்தையும் காளையையும் மையமாய் வைத்துத் தம் கற்பனைச் சிறகுகளை அற்புதமாய் விரித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு உரித்தாகின்றது.
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…
ஒரு பறவையின் பெருந்தன்மை…
ஈசனுக்கு அடியானே.. உனை இதயம் கவர
வடித்த சிற்பி இன்றில்லை.. இருந்திருந்தால்..
அவன் இதயமே நின்று போயிருக்கும்..
பொலிவிழந்த உன் நிலை கண்டு..!!
தமிழன் ஓர் அடிமுட்டாள்.. தான்
வாழ்ந்த வரலாற்றை பாதுகாக்கத் தெரியவில்லை..
வெள்ளையனால் வீழ்ந்ததைப் போற்றிக் காக்கிறான்..
பூம்புகாரைப் போற்றவில்லை.. கீழடியைக் காக்கவில்லை..!!
கயவர் கூட்டத்தாலும்.. கால வெள்ளத்தாலும்..
மறைந்த திரவியங்கள் ஏராளம்.. ஏராளம்..!
இருக்கின்ற சிலவற்றையேனும் பேணாமல் தனது
வரலாறு அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறான்..!!
நல்லதை விட்டுவிட்டு நாகரிகமென்ற பெயரில்
நரகத்திற்கு ஒப்பான பண்பாடுகளில் திளைக்கிறான்..
தாய்மொழி கற்றுத்தராததை வேற்று மொழிகள்
தந்திடுமென நம்பி ஏமாந்து போகிறான்..!!
நந்தியே..! சிதிலமடைந்த உன்னைத் தமிழன்
நட்டாற்றில் விட்டுவிட்டதாய் நீ எண்ணிவிடாதே..
நானிருக்கிறேன்.. வானவில்லின் வண்ணங்களைக் கொணர்ந்து
என் சிறகுத்தூரிகையால் உன்னை மெருகேற்றுகிறேன்..!!
தன் வரலாற்றை ஆவணப்படுத்தாது அலட்சியமாய் விட்ட தமிழன் தன் கலைகளையும் புரக்காது விட்டான். விளைவு? அரிய கலைப்படைப்பான நந்தி காப்பின்றி வெட்டவெளியில் வாடிக்கிடக்கின்றது. ”கவலாதே நண்பா! உனக்கு என் சிறகுத் தூரிகையால் வண்ணந்தீட்டி மகிழ்விப்பேன்!” என்று அதன் காதோரம் கிசுகிசுக்கும் காகத்தை நயமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
வாய்ப்பு தந்த வல்லமைக்கும்..
வாசித்த அனைவருக்கும்..
வாழ்த்திய நடுவர் அவர்கட்கும்..
நன்றிகள் பலப்பல.