குறளின் கதிர்களாய்…(261)

செண்பக ஜெகதீசன்…

ஈன்றாள் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

-திருக்குறள் -922(கள்ளுண்ணாமை)

புதுக் கவிதையில்…

எது செய்தாலும்
மகிழும் தாய்முன்னே
கள்ளுண்டு களித்தல்
இனிதல்ல,
பெருந் துன்பமாகும்..
இந்நிலையில்
குற்றமற்ற சான்றோர்முன்
கள்ளுண்ணல்
பெருங் கொடுமையன்றோ…!

குறும்பாவில்…

எதற்கும் மகிழும் தாய்முன்னே
கள்ளுண்ணலே பெருந்துன்பமாயிருக்கையில்,
சான்றோர்முன் குடிப்பது பெருங்குற்றமாம்…!

மரபுக் கவிதையில்…

பிள்ளை வந்தே எதுசெய்யினும்
பெரிதும் விரும்பும் தாய்முன்பிலும்
கள்ளைக் குடித்துக் களித்தாடுதல்
காணச் சகிக்கா பெருந்துன்பமே,
எள்ளின் அளவும் குறையில்லா
ஏற்ற மிக்க சான்றோர்முன்
கள்ளின் போதையில் போய்நிற்றல்
கொடுமை மிக்கக் குற்றமதே…!

லிமரைக்கூ..

விரும்புவாள் தாய், எதுசெய்யினும் பிள்ளை,
அவள்முன் குடித்தாடும் பெருந்துன்பத்திலும் கொடுமை
சான்றோர்முன் குடித்தாடினால் கள்ளை…!

கிராமிய பாணியில்…

குடிக்காதே குடிக்காதே
குடியயே கெடுக்கும்
கள்ளைக் குடிக்காதே..

புள்ள தப்பு செஞ்சாலும்
பெருசா எடுக்காத தாய்முன்னே
கள்ளக் குடிச்சி போய்நின்னா
கொஞ்ச மில்ல துன்பமதே..

அதவிட பெருங்கொடும,
குத்தங்கொறயே இல்லாத
நல்லவுங்க முன்னாலபோயி
குடிச்சிட்டு நின்னு ஆடுறதே..

அதால
குடிக்காதே குடிக்காதே
குடியயே கெடுக்கும்
கள்ளைக் குடிக்காதே…!

 

Leave a Reply

Your email address will not be published.