படக்கவிதைப் போட்டி 222-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
நித்தி ஆனந்த் எடுத்த இந்த வண்ணப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 222க்கு வழங்கியிருக்கின்றார் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!
மழலையரில்லா உலகம் மலர்களில்லா இயற்கைபோன்று எழில்குன்றித் தோன்றும். புவியை அழகாக்கும் இப்புத்தம் புதுமலர்களைப் பாட வல்லமைமிகு கவிகளை வாழ்த்தி வரவேற்கின்றேன்!
*****
வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளைகளின் விளையாட்டைத் தடுக்கவேண்டாம் என்று பெரியோருக்கு நல்லுரை நவில்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
பிள்ளை விளையாட்டு…
வெள்ளை உள்ளம் கொண்டதாலே
வேறு பாடுகள் பார்ப்பதில்லை,
பிள்ளை யாக இருக்கும்வரை
பேதம் எதுவும் வருவதில்லை,
கள்ளம் மனதில் இல்லாததால்
கவலை வீணே கொள்வதில்லை,
தள்ளி நிற்பீர் பெரியோரே
தடுக்க வேண்டாம் விளையாட்டையே…!
அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
வருங்காலத் தூண்கள்!
வீடு நிறைய இடம் இருந்தும்
ஓடி ஆடி விளையாட மறந்த
புதிய தலைமுறை!
உலகை வெல்லும்
அத்தனை திறமை இருந்தும்
உள்ளங்கையில் ஒளிந்திருக்கும் கைப்பேசியின் கைதியாய் இவர்கள்!
சற்றே இடைவெளி விட்டு
அகலும் விழிகள் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அடிமை ஆகும்!
நீண்ட நேரம் மின்சாரம் இன்றி
செயல் இழந்த கைப்பேசி
இவர்களை வீதிக்கு அழைத்து வந்ததோ விளையாட?
செய்வது அறியா ஆழ்ந்த சிந்தனையில்
அடுத்த உட்புற விளையாட்டைத்
தேடும் புதிய தலைமுறை!
இவர்கள் வருங்காலத் தூண்கள்!?
அங்கையில் அடங்கும் கைப்பேசி விளையாட்டிலும், தொலைக்காட்சியிலும் தொலைந்துபோய்விட்ட இன்றைய மழலையர், மின்சாரம் இல்லாவிட்டால் மட்டுமே தெருவில் இறங்கி விளையாடுகின்றார்கள் என்ற வருந்தத்தக்க உண்மையைப் பொருந்தவே பதிவு செய்திருக்கும் இக் கவிதையின் ஆசிரியர் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.