பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் – ஓர் ஆய்வு

0
கு.பூங்கொடி, முனைவர் பட்ட ஆய்வர், 
யோகமும் மனித மாண்பும் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை                            

முனைவர் பெ. சுந்தரமூர்த்தி, நெறியாளர், 
யோகமும் மனித மாண்பும் துறை, விஷன்ஸ்கை ஆராய்ச்சி மையம் ஆழியாறு, பொள்ளாச்சி

சுருக்கம்

மாணவப் பருவம் என்பது கற்கும் பருவம். கல்வி என்பது அறிவையும் மற்றும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ள வழி செய்கிறது. மாணவர்கள் தம்மை செம்மைபடுத்திக் கொள்ள ஏற்ற இடமாகக் கல்விக் கூடம் அமைகிறது. மாணவர்களுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். பிற செல்வங்கள் அத்தகைய சிறப்புக்குரியவை ஆகாது. இதையே வள்ளுவ பெருந்தகை

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்றை யவை. (குறள் 400) எனப் பகர்கிறார்.

      இன்றைய மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கமும், நற்பண்புகளும், நன்னெறிகளும் கூடிய ஆளுமைத்திறனே தேசத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும். தற்போதைய கல்வி முறையில் யோகப்பயிற்சிகள் பள்ளியிலே கற்றுத் தருவதன் மூலம் மாணவர்களின் உடலும், மனமும் மேம்பட்டு, ஒருமுகப்பட்டு, சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும். கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாணவ சமுதாயத்தின் தனிநபர் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றமாக மிளிரும்.

கலைச் சொற்கள் : காயம், கல்பம், அலைச்சூழல், உயிர்வளம்

முன்னுரை

மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம், சிந்தனைக்கு ஏற்றபடி சிறகடித்து, வாழ்வை வளமாக்கும்; பருவம். உலக அரங்கில் இந்தியா நல்லரசாக மாற இன்றைய இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். எனவேதான் நமது அன்புக்குரிய டாக்டர் அப்துல்காலம் அவர்கள் “கனவு காணுங்கள்” என்கிறார்.

கல்விக்கூடம்  மாணவர்களைச் செதுக்கும் கலைக்கூடம். வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் கற்றுக் கொள்ளாமல், கல்வியுடன் கூடிய ஒழுக்க நெறிகள், ஆளுமைப் பண்புகள், தனித்திறன் மேம்படுத்துதல் ஆகியன மாணவ முன்னேற்றத்திற்கு அவசியமாகின்றன.  ஆசிரியர்கள் மாணவர்களிடம்  உயர்வு தாழ்வு பாராமல் வாழ்வியல் விழுமியங்களை  உணர்த்துகிறார்கள்.

மாணவர்களுக்கு ஒரே மாதிரி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிப் பருவ இறுதியில் நடக்கும் தேர்வில் பெரும்பாலோர் வெற்றி பெறுகின்றனர். சில பேர் குறைவான மதிப்பெண் பெறுவதும், ஒரு சிலர் தோல்வியைத் தழுவியதையும் பார்க்கிறோம். இதன் அடிப்படையை ஆராய்ந்தால் தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடு, மன ஒருமைப்பாடு இன்மை, நினைவாற்றல்  திறன் குறைபாடு  ஆகியவற்றில் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம்.

எதுவாயினும் அதற்கான தீர்வைக் கண்டாக வேண்டும். அதைப் போக்க யோகப் பயிற்சிகள் உதவியாக இருக்குமா? என ஆராயப்படுதல் வேண்டும்.

வேதாத்திரி மகரிஷியின் யோகப் பயிற்சிகள்

யோகம் என்பது உடலோடு மனம் இணையவும், மனதோடு உயிர் இணையவும், சமுதாயத்திற்கும், இயற்கைக்கும் இனிமை காக்கவும் வேண்டும். இதற்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் எளியமுறை யோகப் பயிற்சிகள் உறுதுணையாக இருக்கின்றன. உடலுக்கு உடற்பயிற்சியும், மனதிற்கு அகத்தவப்பயிற்சியும் உயிருக்குக் காயகல்பப் பயிற்சியும் கற்றுத் தரப்படுகின்றன.

உடல் நலம் காக்க எளிய முறை உடற்பயிற்சி

தினந்தோறும் எளியமுறை உடற்பயிற்சியைச் செய்வதால், உடலில் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அனைத்து உறுப்புகளும் நலம் பெறுகின்றன.

இப்பயிற்சியில் மொத்தம் 9 நிலைகள் உள்ளன. அவை

 1. கைப்பயிற்சி
 2. கால்பயிற்சி
 3. நரம்பு தசை நார் மூச்சுப் பயிற்சி
 4. கண்பயிற்சி
 5. கபாலபதி
 6. மகராசனம்
 7. உடம்பைத் தேய்த்து விடுதல்
 8. அக்குபிரஷர்
 9. உடம்பைத் தளர்த்துதல் – ஓய்வு தரும் பயிற்சி ஆகியன ஆகும்.

பயன்கள்

 1. உடலின் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், காந்த ஓட்டம் மற்றும் உயிரோட்டம் ஆகியன சீர்படுத்தப்படுகின்றன.
 2. நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது.
 3. முடிவெடுக்கும் திறன் மற்றும் மன ஒருமைப்பாடு அதிகரிக்கின்றன.
 4. உடல் நலம் மற்றும் மனம் நலம் மேம்படுகிறது.

மன வளம் காக்கும் அகத்தவப் பயிற்சிகள்

தவத்தின் போது புலன்களின் இயக்கம் குறைந்து விடுவதாலும், எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும், உயிர் ஆற்றலின் செலவு தவிர்க்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

மன அலைச்சூழலானது நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது அவையாவன.

 1. பீட்டா
 2. ஆல்பா
 3. தீட்டா
 4. டெல்டா

இதில் பீட்டா அலையானது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் மனம் ஒருவிதப் பதற்றத்துடன் காணப்படும். பெரும்பாலான நேரங்களில் மனம் இந்த நிலையில் இருக்கும். அகத்தவப் பயிற்சியால் மனம் படிப்படியாகக் குறைந்து ஆல்பா நிலைக்கு வரும். இந்த நிலையில் மனம் அமைதியாகச் செயல்படும். மாணவர்கள் அகத்தவப் பயிற்சியை மேற்கொண்டு மனதை அமைதி நிலையில் இருத்தி பாடங்களைப் படித்தால் நன்றாக மனதில் பதிவு ஆவதோடு,  தேவைப்படும் போது எளிதில் நினைவுக்கு கொண்டு வந்து பயன்படுத்த முடியும்.

பயன்கள்

 1. நினைவாற்றல் மேம்படுகிறது
 2. மன நிறைவு மற்றும் தன்னம்பிக்கை கிட்டுகின்றன.

உயிர்வளம் காக்கும் காயகல்பப்பயிற்சி

“காயம்” என்பது உடல். “கல்பம்” என்பது உறுதி.இப்பயிற்சியைத் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது 40 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின் மனித குலத்திற்கு அளித்துள்ளார். உயிரின் வளமே மன நலம் ஆகும். இப்பயிற்சியில் உயிர்சக்தியின் வளத்தை அதிகரிக்கிறோம். இதனால் உடல், மனம் பாதிப்புகள் நீங்கி உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் விளங்கும்.

பயன்கள்

 1. மாணவ ஒழுக்கத்திற்கு உறுதுணையாக உள்ளது.
 2. முதுமையைத் தள்ளிப் போடலாம்.
 3. படிப்பில் கவனம் மேலோங்கும்.

ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வி

 “உயிர்களுக்குத் துன்பம் தரா உயர்ந்த செயல் ஒழுக்கமாகும்”.கல்வியில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும்; கற்பிக்கப்படல் வேண்டும். அன்பும், பண்பும் மாணவர்கள் மனதில் உள்ளுணர்வாக வெளிப்பட வேண்டும்.

ஒழுக்கமும் ஈகையும்

ஒழுக்கமும் ஈகையும் உளத்தில் கொண்டால்

உயர்ந்துகொண் டேஇருக்கும் அறிவுச் செல்வம்.

அழுக்காறு அவாவெகுளி, வன்சொல் இன்றி

அன்பூறும்; பண்பாட்டின் எடுத்துக் காட்டாய்

வழுக்காத பேரறிவில் வாழ்க்கை செய்ய,

வளர்த்தறிவை இறைநிலையோ டிணைப்ப தற்குப்

பழுக்கும்வாறு எண்ணம்சொல் செயல்க ளெல்லாம்

பழிச்சுமையை நீக்கும்அருள் ஆற்ற லாகும்.

ஞானக் களஞ்சியம் -1 பா.எண்-457  ப.எண்-168

முடிவுரை

ஒவ்வொரு மாணவரும் தமது உடலை, மனதை மற்றும் உயிரை உயர்த்தும் பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்டு தன்னுடைய கல்வித்திறனை மேம்படுத்தி சமுதாய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். கல்வியினால் வாழ்வில் வளம் துய்த்து நாட்டிற்கும், வீட்டிற்கும் தொண்டாற்றும் கடமையுணர்வை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். வருங்கால சந்ததியினர் வளமுடனும், நலமுடனும் வாழ இப்பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும்.

துணை நூல்களும், வலைதளங்களும்

 1. தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி, எளியமுறை உடற்பயிற்சி, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரி பதிப்பகம் , 6 ஆம் பதிப்பு 2006
 2. வேதாத்திரி மகரிஷி, காயகல்பம், முதல் பதிப்பு ,வேதாத்திரி பதிப்பகம் , 2005.
 3. வேதாத்திரி மகரிஷி, குணநலப் பேறும் சமுதாய நலனும் ,ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் 6 ஆம் பதிப்பு, ஆகஸ்டு 2005
 4. வேதாத்திரி மகரிஷி, உடல், உயிர், மனம் தொகுப்பு, ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் ,வேதாத்திரி பதிப்பகம் 3 ஆம் பதிப்பு.
 5. வேதாத்திரி மகரிஷி, ஞானக்களஞ்சியம் பகுதி-1 ,, வேதாத்திரி பதிப்பகம் ,1991.
 6. www.vethathiri.edu.in

 

____________________________________________________________________________________________

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வேதாத்திரி மகரிஷியின்  யோகப்பயிற்சிகள் எவ்வாறு உதவும் என்பதை விளக்குவதாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்கு மனதளவில் ஏற்படக்கூடிய சிக்கல்களை விளக்கி வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் அவற்றைப் போக்க எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை கட்டுரையாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். சான்றாதாரங்கள் அடிப்படையிலும் விவாதங்களின் அடிப்படையிலும் ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு உரிய தன்மையோடு இல்லாமல் பொதுக்கட்டுரையாகவே இக்கட்டுரை உள்ளது. கள ஆய்வின் வழியாக மாணவர்களின் சிக்கல்களைப் பதிவுசெய்து சிக்கல்களைப் போக்கக்கூடிய வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லி அதன் முடிவுகளை ஆய்வு முடிவாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுமாயின் சிறந்த ஆய்வுக்கட்டுரையாகத் திகழும். 

____________________________________________________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *