நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84
நாங்குநேரி வாசஸ்ரீ
84. பேதைமை
குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
பேதைமைங்கது என்னன்னு கேட்டா நமக்கு நல்லது செய்யுதத விட்டுப்போட்டு தீம தருதத ஏத்துக்கிடதுதான்.
குறள் 832:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்
பேதைமையிலெல்லாம் பெரிய பேதைமை னு சொல்லப்படுதது தன்னால ஏலாத தனக்கு நன்ம தராத காரியத்த ஆசப்பட்டு செய்யுதது தான்.
குறள் 833:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
வெக்கப்பட வேண்டிய நேரத்துல வெக்கங்கெட்டு அலையுததும், தேடிப் பெற வேண்டியதுல நாட்டமில்லாம இருக்கதும், நேசம் காட்ட வேண்டிய எடத்துல நேசமில்லாமயும் , காக்க வேண்டியத காவாம இருக்கதும் புத்திகெட்ட பேதைங்களோட கொணம்.
குறள் 834:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்
படிச்சுப்போட்டு தான் படிச்சத உணந்து பொறத்தியாருக்கு எடுத்துச்சொல்லி இருக்கவங்க தங்க வாழ்க்கையில அத கடைபிடிக்காம உட்டாகன்னா அவுகளப் போல கூறுகெட்ட பேதையர் இருக்க முடியாது.
குறள் 835:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
புத்திகெட்டவன் தன்னோட ஒரு பொறப்புலயே அடுத்தடுத்து ஏழு பொறப்புலயும் பொறந்து அனுவிக்குத அளவு நரக வேதனய அனுவிப்பான்.
குறள் 836:
பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
நேர்மையான பாத தெரியாத கூறுகெட்டவன் தொடங்கின காரியத்த முடிக்க ஏலாம காரியத்தையும் கெடுத்து தானும் கெட்டு அழிவான்.
குறள் 837:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
புத்திகெட்டவன்கிட்ட பணம் குவிஞ்சிச்சின்னா அத அயல் மனுசங்க சுருட்டிக்கிட்டுப் போவாகளே தவித்து அவன்கிட்ட பாசமா இருக்க சொந்தபந்தம் பசியால தான் வாடும்.
குறள் 838:
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
நல்லதுகெட்டது தெரியாத பேதைகிட்ட பொருள் கெடச்சிச்சின்னா அது கோட்டிக்காரன் கள் குடிச்சு மயங்குதது கணக்கா ஆவும்.
குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
புத்திகெட்ட பேதைகிட்ட வச்சிருக்க சேக்க ரொம்ப இனிமை. ஏம்னு கேட்டா அவுககிட்டேந்து பிரிஞ்சு போகுத நேரம் வெசனப்பட வேண்டியதில்ல.
குறள் 840:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
படிச்ச புத்திசாலி பெரிய மனுசங்க இருக்க சபையில கூறுகெட்ட பேதை நொழையுதது ஒருத்தன் கழுவாத கால படுக்க மேல வச்சது கணக்கா ஆவும்.