தீராத விளையாட்டு…..
ராதா விஸ்வநாதன்
அம்மன் கோவில் வாசல்
நிற்கிறார்கள் வரிசையில்
பிள்ளை வரத்திற்காக…
தொட்டிலில் தவழும் கிருஷ்ணனை
கோவில் மரத்தில் கட்டினால்
கிட்டிடும் குழந்தை பாக்கியம்
நம்பிக்கைதான் வாழ்க்கை
நாளை இருப்போம் எனும்
நம்பிக்கையில் தான் சுழல்கிறது பூமி
தொட்டில் கிருஷ்ணன்
தொங்குகிறான் விற்கும் பெண்ணின்
துவண்ட கைகளில்….
எத்தனை தொட்டில் கட்டினாளோ
இப்பெண் இப்படி வரம் பெற
காலைச் சுற்றும் பாலகன் ஒருவன்
இடுப்பில் ஒரு பெண் குழந்தை
இன்னொன்று காத்திருக்கிறது
வெளி உலகை எட்டிப் பார்க்க…
வேண்டும் என்போர் ஒரு பக்கம்
வேண்டாம் என்போர் மறுபக்கம்
இதுவே அவனது தீராத விளையாட்டு