சு. திரிவேணி
கோயம்புத்தூர்

சுபாஷ் குட்டியோட வீடு ரொம்ப அழகா இருக்கும். வீட்டுக்கு முன்னாடி ரெண்டு பக்கமும் பெரிய வேப்பமரம் நிக்கும். ஒரு குட்டி அணில் தினமும் ஒரு மரத்துல இருந்து இன்னொரு மரத்திற்குத் தாவித் தாவி விளையாடும். கொஞ்ச நேரம் தனியாக விளையாடும்; அப்புறமா அதைவிடப் பெரிய இன்னொரு அணிலைக் கூட்டிட்டு வரும். வேப்ப மரத்தின் கிளை பிரியற இடத்துல வரிசையா மூணு சின்ன ஓட்டை இருக்கும். இந்த ரெண்டு அணிலும் ஒவ்வொரு ஓட்டையா போய் எட்டிப் பார்க்கும்; ஓடிவந்து ஒண்ணா நிற்கும்; திரும்ப தனியா போய் எட்டிப் பார்க்கும்; மறுபடி ஓடி வந்து பக்கத்து பக்கத்துல நின்னுக்கும். சுபாஷிற்கு ரொம்பப் பிடித்த வேடிக்கை இதுதான். தினமும் பார்த்தாலும் சலிக்காது. வேறு எங்கேயும் அதிகமா போகமாட்டான். யாரு கூடயும் அதிகமா பேசவும் மாட்டான்.

சுபாஷ் குட்டி ஏன் மத்த பசங்க கூட அவ்வளவு விளையாடுவது இல்லைன்னு அவங்க அம்மாவுக்கு ஒரே யோசனையா இருந்துச்சு. அன்னிக்கு அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவங்களும் அணில அவனை மாதிரியே வேடிக்கை பார்த்தாங்க. சுபாஷுக்கு சந்தோஷம் தாங்கலை!

“பண்ணும் பிரெட்டும் ரொம்ப க்யூட் மா!” காமிச்சு காமிச்சு கைகொட்டி சிரித்தான். இரண்டு அணில்களுக்கும் அவன் அப்படித்தான் பெயர் வைத்திருந்தான்.

அவங்க அம்மாவுக்கு அவனோட உலகமே அந்த ரெண்டு அணில்தான்னு புரிஞ்சது. ஆனா ஏன்னு புரியல.

மெதுவா பேசிக்கிட்டே கேட்டாங்க, “சுபாஷ் குட்டிக்கு பண்ணும் பிரெட்டும் தான் பிரெண்ட்ஸா? ஜாம் எல்லாம் இல்லையா?”

ஜாம் பக்கத்து வீட்டுப் பையன். அவன் பேரு ஜெரோம். ஆனால் எல்லோரும் “ஜாம்” என்று தான் கூப்பிடுவார்கள். அம்மா கேட்டதும் சுபாஷுக்கு முகம் வாடி போச்சு.

“இல்லமா.. அவங்க எல்லாம் என்னை சேர்த்துக்க மாட்டாங்க. என்னால வேகமா ஓட முடியல. கீழே விழுந்துட்டா என்னைப் பார்த்து சிரிப்பார்கள். ‘நீ வேணாம். போடா ஓரமா’னு திட்டுவாங்க. அதான் நான் யார் கூடயும் விளையாடுவதில்லை. ஆனா என்னோட பண்ணும் பிரடும் என்னோட நல்ல விளையாடும் தெரியுமா. என்ன எதுவுமே சொல்லாது”.

சுபாஷ் அம்மாவுக்கு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. சுபாஷுக்கு காலில் பலம் குறைவு. அவன் ஓடி ஆடி விளையாட, விளையாட அது தானாகவே சரியாகி விடும். ஆனால் சுபாஷ் விளையாடவே போகமாட்டேன் என்று இருப்பது வருத்தமா இருந்துச்சு அவங்களுக்கு. அவன் மனசுல எவ்வளவு வருத்தம் இருக்கு. அதை முதல்ல சரி பண்ணனும்னு முடிவு பண்ணாங்க.

“சுபாஷ்! நாளைக்கு ஸ்கூல் இருக்கா” ன்னு கேட்டாங்க.

“இல்ல மா. காந்தி ஜெயந்தி. லீவு”

அம்மாவுக்கு சந்தோஷமா இருந்தது. நம்ம பையனை சரிப்படுத்த ஒரு ஆள் கிடைச்சுட்டாங்க என்று தோணுச்சு.

“காந்தி யாருன்னு தெரியுமா தம்பி?” ன்னு கேட்டாங்க.

“காந்தித் தாத்தா”

“அவரோட கதை தெரியுமா?”

கதை கேட்க ஆசைப்படாத குழந்தை இருக்குமா?

“அம்மா! அம்மா! ப்ளீஸ் சொல்லுங்க”

“காந்தித் தாத்தா சின்ன வயசுல ரொம்பப் பயந்தாங்கொள்ளியா இருந்தாரு. அவங்க கிட்ட ஒரு அம்மா, உனக்கு எப்பல்லாம் பயமாயிருக்கோ அப்பல்லாம் உன்கூட சாமி இருக்கிறதா நினைச்சுக்கோனு சொல்லி ‘ராமா ராமா’ என்று சொல்ல கத்துக் கொடுத்தாங்க. அவரும், நாம தனியா இல்ல, நம்ம கூட சாமி இருக்குன்னு நினைச்சு நினைச்சு தைரியம் ஆயிட்டாரு.

சரி, தைரியமா இருக்காரேன்னு அவங்க அப்பா தன்னை மாதிரியே வக்கீல் ஆகட்டும்னு படிக்க வச்சாரு”

“அப்புறம்?”

“வக்கீலுக்குப் படித்து முதன்முதலாகக் கோர்ட்டுக்கு வாதாடப் போன காந்திக்குப் பயத்துல கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு. ரொம்பப் பயந்து போய் பேச ஆரம்பிக்காமலேயே ஓடி வந்துவிட்டார். இனிமே கோர்ட் பக்கமே போக கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு”.

“அச்சச்சோ! அவ்வளவு பெரிய பயந்தாங்கொள்ளியா காந்தித்தாத்தா? அப்புறம் அவரை ஏம்மா தேசத்தந்தை என்று சொல்றாங்க? ஆனா அவர் தானே ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை போட்டு ஜெயிச்சது? அது வேற காந்தியா? அப்போ இந்த காந்தி அதுக்கப்புறம் வேலைக்குப் போகலையா? அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணினார்?” என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கினான்.

“பொறு! பொறு! சொல்றேன்… எல்லார் முன்னாடியும் பேச பயந்துக்கிட்டு ஓடி வந்தார் இல்ல, அது இங்கே இல்லை; தென்னாபிரிக்கா!

கொஞ்ச நாள் கழிச்சு தென்னாப்பிரிக்காவில் ட்ரெயின்ல போயிட்டு இருந்த அவரைக் கீழே தள்ளி விட்டார்கள்…”

“ஏன்மா டிக்கெட் வாங்கலையா?”

“இல்ல, டிக்கெட் வச்சிருந்தாரு. இவரு கருப்பா இருக்காருன்னு சொல்லிக் கீழே தள்ளி விட்டுட்டாங்க.”

“கருப்பா இருக்கிறதுக்கும் கீழே தள்ளறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?”

“இருக்குப்பா. அங்க எல்லாம் வெள்ளையா இருக்கிறவங்க சொகுசாய் இருப்பாங்க. கருப்பாய் இருக்கிறவங்களை ரொம்ப மோசமா நடத்துவாங்க. அதான் காந்தியையும் கீழே தள்ளி விட்டுட்டாங்க. அப்புறம் கீழே விழுந்த காந்தி திரும்ப எந்திரிச்சு நான் ஏன் கீழே இறங்கனும்?னு எதிர்த்துக் கேள்வி கேட்டாரு அவரை அடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். மூஞ்சியெல்லாம் காயம்! குப்பை மாதிரி அவரோட திங் செய்யலாம் தூக்கி வீசி இருந்தாங்க.

அங்க ஸ்டேஷன்ல நின்னுகிட்டு இருந்த இந்தியர்கள் எல்லாம் ஓடி வந்து தூக்கி விட்டு மருந்து போட்டுவிட்டாங்க. காந்தியைக் கூட்டிட்டுப் போக வந்தவர் சொன்னாரு, ‘இங்கெல்லாம் இது ரொம்ப சாதாரணம். எங்களுக்குப் பழகிடுச்சு. நீங்க பேசாம இந்தியாவுக்கே போயிடுங்க. கஷ்டப் படாதீங்க’ அப்படின்னாரு”.

“அப்படித்தானே பண்ணனும். இவர்தான் ஏற்கனவே பயந்தாங்கொள்ளி ஆச்சு!”

“இல்லப்பா! இல்ல! காந்தி அன்னைக்கு அப்படிப் பண்ணியிருந்தா யாரோ ஒருத்தர இருந்திருப்பார். நமக்கெல்லாம் அவர் யாரென்று கூட தெரிந்து இருக்காது. நம்ம நாட்டுக்கே தேசத்தந்தையாக ஆக இருக்க மாட்டார்.”

“அப்ப அவர் என்னம்மா பண்ணினாரு?”

“அவர் எந்திரிச்சு முகத்தைத் துடைத்துகிட்டார். என்னை அவன் அடித்து கீழே தள்ளினதுக்கு காரணம் என் பெயரோ, நாடோ, என் குணமோ இல்லை, வெறும் நிறம்!

இப்படி அர்த்தமில்லாத காரணத்தை வைத்துக் கொண்டு எத்தனை பேரை கஷ்டப்படுத்துகிறார்கள்! என்ன ஆனாலும் சரி, எந்தத் தப்பும் செய்யாத அப்பாவிகள் என்னை மாதிரி கஷ்டப்பட விடமாட்டேன்! இவங்களோட இந்த எண்ணத்தை மாற்றியே தீருவேன்.

நிறத்துக்கும் உருவத்துக்கும் மனுஷன் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று புரிய வைப்பேன்னு தெளிவா முடிவெடுத்தார். நிறைய போராட்டம் நடத்தினார். பேச பயந்து ஓடி வந்த அவர், பேசிப் பேசி பெரிய தலைவரானார்”.

“எப்படிமா? அவர்தான் பயப்படுவாரே… அப்புறம் எப்படி?”

“ஆமாப்பா. அவர் பயப்படுவார் தான். ஆனால் எதற்கும் ஒரு முடிவு இருக்குமில்லையா? ஒரு மொட்டு பூவாகிற மாதிரி, பூ காயா ஆகற மாதிரி அவருக்குள்ள இருந்த அறிவு அவருக்கு நம்பிக்கை கொடுத்து தைரியம் ஆகிடுச்சு”

“சூப்பர்மா” கைதட்டினான் சுபாஷ்.

“அவர் மட்டும் இல்ல, என்னோட செல்லக்குட்டியும் மனசு நெனச்ச எதையும் சாதிக்கலாம். நீ நினைச்சா பெரிய ஸ்போர்ட்ஸ்மேனா கூட வரலாம் தெரியுமா?”

சுபாஷ் சிரித்தான்.

“கண்டிப்பா தம்பி. முடியாததுன்னு இந்த உலகத்துல எதுவுமே கிடையாது. நீ மட்டும் மனசுல என்ன பண்ணனும்னு யோசி. தினம் பிராக்டிஸ் பண்ணு. உன்னால கண்டிப்பா முடியும். பேசவே முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்த காந்தித்தாத்தா ஒரு நாள் பெரிய தலைவரான மாதிரி நீயும் ஒருநாள் கண்டிப்பா பெரிய ஆளா வருவ! எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குப்பா.”

யோசனையில் ஆழ்ந்து போனான் சுபாஷ்.

ஐந்து வருடங்கள் கழித்து நேஷனல் கவுன்சில் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசுப் பதக்கத்தை கழுத்தில் வாங்கி சிரிச்சிகிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்த சுபாஷைப் பார்க்க முடியாமல் அவங்க அம்மாவோட கண் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்திருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *