சேக்கிழார் பாடல் நயம் – 70 (மூண்ட)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்
திருநீலகண்டரின் தொழில் தந்த வருவாய் அதிகமாக இருந்தமையால் பெரும் பொருட் செல்வர்களின் கூடாநட்பால் இளமைத் துறையில் எளியரானார்! பொருட் செல்வம், காமத்துடன் சேர்ந்தமையால் அவர் ஒரு பரத்தையுடன் சேர்ந்து வாழலானார். அதனைக் கேள்வியுற்ற அவர் மனைவியார் பரம்பரைக் கற்பொழுக்கம் கற்பித்த மானம் பொறாத நிலையில் கணவருடன் பிணங்கி ஊடல் கொண்டார்! அவர் தம் கணவருக்கு உரிய கடமைகளுடன் , புற வாழ்க்கைத் தொண்டுகளையும் செய்து வந்தார்.
ஆனால் கணவருடன் கூடி இணைந்து வாழும் இல்லறஉறவைப் புறக்கணித்து வாழ்ந்தார். ‘தேன் நிறைந்த தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற பேரழகுடையவர்’ அவர் என்ற தொடரால் அவள் கணவர் அழகிய மனைவியைத் துறந்த இழிநிலையைக் குறிப்பிடுகிறார். இவ்வாறு தவறு செய்த திருநீலகண்டர், மனைவியின் புலவியாகிய ஊடலைத் தீர்த்து அவருடன் கூடி வாழ முயன்றார்!
அதன்பொருட்டு, அவர் தம் மனைவியார் விரும்பும் வண்ணம் வேண்டிய உதவிகளை செய்தார். அவரிடம் பணிவும் பரிவும் கலந்த இனிய சொற்களைக் கூறினார். இனிய இயல்புடைய அவர்தம் களங்கமற்ற முகம், அவரிடம் எவ்வகைக் கோபத்தையும் காட்டாமையால், அவருடைய ஊடல் நீங்கி விட்டதாக நினைத்துக் கொண்டார். மெல்ல அவரை நெருங்கிப் பணிவு கலந்த இனிய சொற்களைக் கூறி, அவரைத் தழுவிக் கொள்ள முயன்றார்! அப்போது அவர் மனைவியார் சரேல் என விலகி, நின்று கொண்டு தம் கணவனாரிடம் ‘’என்னைத் தொடாதீர்!’’ என்றார். ‘’என்னை மீண்டும் நெருங்க முயன்றால். ‘’என்று சினத்துடன் கூறி அவரை இழிவு படுத்தும் எல்லாச் சொற்களையும் வசவாக்கிச் சொல்ல நினைத்தார்! ஆனால் நல்ல சொற்களையே கூறிப் பழகிய அவர் வாயிலிருந்து, ‘’திருநீலகண்டம்’’ என்ற அவர் கணவர் போற்றும் சிவநாமமே வந்தது! ‘’நீங்கள் வழிபடும் திருநீலகண்டத்தின் ஆணையே உங்கள்மேல் இருக்கட்டும்!’’ என்று அவர் கூறினார். சினங்கொண்ட போதும் தீய சொல்லைச் சொல்லாத அவர் ‘திருநீல கண்டம்‘ என்ற சொல்லை மட்டும் கூறிய பண்புநலம் பெற்றுத் திகழ்ந்தார்.
தம் வாழ்முதலாகிய சிவபெருமானின் தியாகத்தை எண்ணி வழிபட்ட ‘திருநீலகண்டம்’ என்ற சொல் அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. சிவபிரானிடத்தே அவர் பக்தி மேலும் மிகுந்தது!
அவர் மனைவி கணவனின் அன்பு கருதி அணிந்து கொண்டிருந்த நகைகள் அனைத்தும் ஒளியிழந்து விட்டன! இதனைச் சேக்கிழார் ‘’பூண் தயங்கு இளமென்சாயல் பொற்கொடி‘’ என்று குறிக்கிறார். அவர் உள்ளம் வருந்திய காரணத்தால் நகைகளும் ஒளி வீசத் தயங்கினவாம்!கணவரின் புறக்கணிப்பு, அவர்தம் இளமை, மென்மை ஆகியவற்றுடன் ஐம்புலன்களும் ஈடுபடும் சாயலும் உடைய பொற்கொடியை ஒளியிழக்கச் செய்து விட்டனவாம்.
‘’மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய‘’ என்பது தொல்காப்பியம்.
‘’சேல்தான் திகழ்வயல் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
வேல்தான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பால்தான் திகழும் பரிசினம் மேவும் படிறு உவவேம்
கால்தான் தொடல் தொடரேல் எம் கைத்தலமே! என்பது திருக்கோவையார்.
‘’எம்மைத்தீண்டுவீராயின் திருநீலகண்டம்‘’ என்ற தொடர், திருநீல கண்டரின் வாழ்முதலாகிய சிவபிரானின் தியாகத்தைப் போற்றிய உயிர்த் தொடராகும். அத்தொடரை ஆணையாக்கிய அம்மையின் வாக்கு அடியாரின் உள்ளத்தை உலுக்கி விட்டது. ஆணை என்பது யாராலும் கடக்கவியலாத சக்தி!
“நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி யுள்க , வினைகெடுதல் ஆணைநமதே“,
“ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே“
முதலிய திருவாக்குக்கள் காண்க. இந்த ஆணையில், ‘’எம்மை‘’ என்ற தன்மைப் பன்மைச் சொல்லின் ஆற்றலைத் திருநீலகண்டர் உணர்ந்து கொண்டார்! எம்மை என்றமையால் உன்னை மட்டுமல்லாது, மற்றைய மாதரையும், என் மனத்தாலும் நினையேன்!‘’ என்ற உறுதியை அவருக்கு உண்டாக்கி விட்டது! நீல கண்டம் என்ற சொல் வேதத்தின் மையத்தில் உள்ளது என்று புறநானூறு கூறுகிறது.
‘’கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே!’’ என்பது அப்பாடல்.இப்பாடலில் இறைவன் திருநாமத்தைக் கூறித் ‘’தீண்டா தீர்!’’ என்ற ஆணை! எச்சிற் பண்டத்தைத் தொட்ட உடம்பால் என் நல்லுடலைத் தீண்டாதீர்!’’ என்று கூறியதால் ‘’மந்திரச் சொல்’’ விளைவித்த மகத்துவத்தை அறிந்து கொள்கிறோம்.