எட்டுக் கோணல் பண்டிதன் – 9

தி. இரா. மீனா
அத்தியாயம் பன்னிரண்டு
உடல், வாக்கு, உள்ளச் செயல்களில் முற்றிலும் பற்றற்று, தன்னிலை நிற்றலை ஜனகர் அஷ்டவக்கிரருக்குக் கூறுவது இந்த அத்தியாயமாகும்.
1. முதலில் உடல் செயல்களிலும், பின்பு வாக்கை வளர்ப்பதிலும், அதன்பின் நினைப்பிலும் வெறுப்புற்றதனால் நான் இவ்வாறே நிலைத்துள்ளேன்.
2. சப்தாதி விஷயங்களில் மகிழ்ச்சியில்லாததாலும், ஆத்மாவின் காண முடியாத தன்மையாலும் மகிழ்வும் துயரமுமின்றி இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.
3. விபரீதத் தோற்றம் முதலியவற்றால் மனம் சிதறும் போது சமாதி முயற்சி என்னும் நியதியை உணர்ந்து இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.
4. தள்ளுவதும் கொள்ளுவதும் இல்லாதது போல மகிழ்வதும் துன்பமடைவதும் இல்லாததால் நான் இவ்வாறே நிலைத்துள்ளேன்.
5. ஆச்ரமம், ஆச்ரமமின்மை, தியானம், அகப்பற்று ஒழித்தல் ஆகியவற்றால் வரும் மாறுபாடு கருதி இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.
6. செயல் முனைவு எவ்வாறு அறியாமையாலோ அது போலத்தான் அதைத் துறத்தலும் என்ற உண்மையை நன்குணர்ந்து இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.
7. நினைக்க முடியாததை நினைக்க எண்ணினால் அது நினைவு வடிவமே என்பதால் இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.
8. இவ்வாறு எவர் செய்கிறாரோ அவர் கிருத கிருத்யன். இவ்வாறு தன்னை எவர் சார்வரோ அவர் கிருத கிருத்யன் ஆவார். [செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவன்]
அத்தியாயம் பதிமூன்று
இயல்பாகிய சொரூப நிலையில் எந்த மாறுபாடும் இல்லாமல் ஜனகர் தன் அனுபவத்தை அஷ்டவக்கிரருக்கு உரைப்பது இந்த அத்தியாயமாகும்.
1. ஒன்றுமில்லாததில் உள்ள தன்னிலையின்பம் கோவணம் மட்டும் உடையவனுக்கு இல்லாமையால் தள்ளுவதும், கொள்ளுவதும் இல்லாமல் இன்பமாக இருக்கிறேன்.
2. சில நேரம் உடல் வருந்துகிறது; சில நேரம் நாவு வருந்துகிறது. சில நேரம் மனம் துன்பமடைகிறது. ஆதலால் இவற்றை நீக்கி விடுதலை நிலையில் சுகமாக இருக்கிறேன்.
3. உண்மையில் நான் எதையும் செய்பவன் இல்லை என்பதை உணர்ந்து எப்போது எதைச் செய்ய முடிகிறதோ அதைச் செய்து இன்பமாக இருக்கிறேன்.
4. உடல் பொருந்திய யோகிக்கே கருமம், கரும நீக்கம், பந்தம் முதலான பாவனைகள். யோகமும், வியோகமும் எனக்கில்லாததால் இன்பமாக இருக்கின்றேன்.
5. இருப்பது, நடப்பது, படுப்பது ஆகியவற்றால் எனக்கெதுவும் ஆவதும் போவதுமில்லை. ஆதலால் நின்றும் நடந்தும் படுத்தும் இன்பமாக இருக்கின்றேன்.
6. தூங்குவதால் நான் இழப்பது ஒன்றுமில்லை. முயற்சி செய்வதால் அடைவது ஒன்றுமில்லை. ஆதலால் அழிவும் உயர்வும் இல்லாமல் இன்பமாக இருக்கிறேன்.
7. விஷயங்களில் சுகம் முதலியவற்றிற்குக் குறித்த வடிவம் இன்மையைப் பலமுறை கண்டதால் நல்லது, தீமையானது இரண்டையும் நீக்கி இன்பமாக இருக்கின்றேன்.
அத்தியாயம் பதினான்கு
நினைப்பற்று இருப்பது இயல்பாகி அதனால் ஆசையின்றி, உள்ளுணர்வில் நிலைபெற்றுச் சுதந்திரமாக உலவும் ஞானியின் போக்கை யாராலும் அறிய முடியாது என்று ஜனகர் உரைப்பதாகும்.
1. தப்பித் தவறி விஷயத்தை நினைத்தாலும் இயற்கையில் யார் நினைவற்றவரோ, அவர் தூக்கத்தில் விழிப்பு கண்டவரைப் போல சம்சாரச் சுழற்சியற்றவர்.
2. ஆசையற்றுப் போனதால் எனக்குச் செல்வமோ, நட்போ, பகையோ, நூலோ, அறிவோ எங்குள்ளது?
3. பரமாத்மாவும் ஈசனுமாகிய புருஷனை அறிந்த பின்பு பந்த விடுதலையிலும் ஆசையற்றுப் போனதால் முக்திச் சிந்தனை எனக்கில்லை.
4. உள்ளே மாறுபாடுகள் ஒழிந்து வெளியே சுதந்திரமாக உலவுகிற ஞானியின் நிலையை அத்தகையவர்களே அறிவார்கள்.
[தொடரும்]