சேக்கிழார் பாடல் நயம் – 100 (மறைத்தவன்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
மறைத்தவன் புகுந்த போதே மனமங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கண் கூடி வாளினால் எறிய லுற்றான்
நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் ‘’தத்தா நமர்’’எனத் தடுத்து வீழ்ந்தார்!
பொருள்
மறைத்தவன் உள்ளே புகுந்த போதே,அங்கே மனம் வைத்துப் பார்த்திருந்த வனாகிய தத்தன் மிக விரைவில் அவ்விடத்திற் கூடி வாளினாலே அவனை வெட்ட முற்பட்டான்; மிகவும் இரத்தம் பெருகுதலால் விழுகின்ற வராகிய நாயனார், தாம் தரையில் வீழ்கின்ற அந்த அளவுக்குள் தமது நீண்ட கையினால் “தத்தா! நமரேகாண்“ என்று சொல்லி அவன் செய்கையைத் தடுத்து வீழ்ந்தார்.
விளக்கம்
முத்தநாதன் அரண்மனை வாயிலில் காவலர்களால் தடுக்கப்பெற்றான். சிவனடியார் வேடத்தை நோக்கிப் பலரும் வழிவிட்டனர். எல்லாத் தடைகளையும் கடந்து உள்ளே சென்ற முத்தநாதனை அந்தப்புர வாயிலில் நின்ற அணுக்கத் தொண்டனாகிய தத்தன் என்பவன் தடுத்து நிறுத்தினான்.
‘’அந்தப்புரத்தினுள் சமயமறிந்து அனுமதி பெற்று அதன்பின் செல்ல வேண்டும், இப்போது எங்கள் இறைவனாகிய அரசன், அரசியுடன் படுத்து உறங்கும் நேரம் இது!’’ என்று அவனைத் தடுத்தான்.
தத்தன் தடுத்தபோதே விரைவாக அவனிடம், ‘’நீயும் இங்கேயே நில்! யான் அரசர்க்கு உறுதிப்பொருளைக் கூறப் போகிறேன்’’, (இறுதிப் பொருள் என்பது தொனிப்பொருள்!) என்று கூறி அவனையும் கடந்து அந்தப்புரத்தினுள்ள முத்தநாதன் சென்றான்! அங்கே பொன்னாலான கட்டிலில் படுக்கைமேல் அனைவரையும் காக்கும் அரசராகிய நாயனார் துயின்று கொண்டிருந்தார்; அவரருகே நறுமணம் கமழும்கூந்தலையுடைய அரசமாதேவி இருப்பதைக் கண்டான்! கண்டபின்னும் முத்தநாதன் சிறிதும் கூசாமல் நெருங்கிச் சென்றான். அப்போது, ‘யாரோபடுக்கை யறையினுள் நுழைகிறார்கள்’ என்பதைப் பயிர்ப்பினால் அறிந்து கொண்ட அரசியார் துணுக்குற்று விரைவாக அமளியிலிருந்து இறங்கினார். வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்து உறங்கிய அரசரைத் துயிலுணர்த்தி எழுப்பினார்!
அருகேசென்ற முத்தநாதனைக் கண்ட அரசர், “இவர் நம் சிவபிரானின் தொண்டரல்லவா?’’ என்று எண்ணிக் கரங்குவித்த படியே இறங்கி, விரைந்து முத்தநாதன் எதிரே நின்று தம் கொள்கையின்படி மிகப்பணிந்து வணங்கினார். அப்போது ‘’ஆகமநூல் கொண்டு வந்தேன்! இதனை உமக்கு உரைக்கும்போது நாமிருவரும் வேறிடத்தில் தனித்து இருக்க வேண்டும்.’’ என்றவுடன் ‘’நீங்கள் சிரமப்படவேண்டாம்; இங்கேயே எனக்குஉறுதியைக் கூறுக!‘’ என்று அரசியாரை அப்புறப் படுத்திய பின் முத்தநாதனை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினார். தானும் தரையில் அமர்ந்து மிகவும் போற்றி, வீழ்ந்துவணங்கி அவ்வாறே தலைதாழ்த்தி, ‘’இனி அந்தநூலை எனக்கு உரைத்தருள வேண்டும்’’ என்றார்.
அரசன் கீழே அமர்ந்துவணங்கிய போது, மேலேஅமர்ந்திருந்த முத்தநாதன் தன் மடியில் அப்புத்தகக் கட்டினை வைத்து, மெல்லப் பிரிப்பவன்போல, அவர் மிகப் பணிந்து வணங்கும்போதே, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தான் எண்ணிக்கொண்டு வந்த கொல்லும் செயலைச்செய்து விட்டான்! அரசர் அடியாரின் மெய்யான தவ வேடமே உறுதிப்பொருள்!’’ என்று கூறி குத்தப்பட்ட போதும் குத்தியவனைத் தொழுதார்! அவ்வகையில் தம் கொள்கையில் தவறாது நின்று வென்றார்!
மறைத்தவன்புகுந்தபோதே மனம்அங்கு வைத்த தத்தன் என்ற தொடரில் மறைத்தவன் என்ற சொல், மறைகளிற் சொல்லிய தவத்திருவேடம் தாங்கியவன் என்றும், தவவேடத்திற்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டவன் என்றும், “நின்றிடு நீயும்“ என்றும் தன்னையும் மறுத்துப் புகுந்தவன் எனவும் பலவாறு பொருள்பட அமைத்த அழகு நினைக்கத் தக்கது!
இவையே. தத்தன் மனம் அங்கு வைக்கக் காரணமாயின. அங்கு மனம் வைத்த என மாற்றுக. மனம் வைத்தல் – அதுவே கருத்தாக மனத்துட் கொள்ளுதல். “பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணை“ என்பது திருத்தொண்டத்தொகை.
இறைப்பொழுது , என்பது கணப்பொழுது – நொடி – மாத்திரையைக் குறிக்கும். . இது தனது காவற் கடமை செய்வதில் தத்தனுக் கிருந்த தீவிரத்தை உணர்த்துகின்றது.
நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார் என்ற தொடர், முத்தநாதன் பத்திரம் வாங்கிச்செய்த செயலால் நாயனாரது திருமேனியினின்றும் நிறையக் குருதி சோர்ந்து, அதனால், அவர் வீழ்கின்றாராக.என்பதைக் குறித்தது. குருதி – செம்புண்ணீர். சோர – சோர்தலால்; குருதி சோர்தல் – இரத்தம் வடிதல். உடலினின்றும் இரத்தம் பெருக வெளிவருவது மிக்க அயர்ச்சிக்கும், இறுதியில் இறப்புக்கும் காரணமாம் என்பது உடல் நூற்றுணிபு. Death due to Hemorrage and loss of blood என்பர் நவீன மருத்துவர். இரத்தம் உயிர் நிலைப்பதற்கு ஆதரவாம்; அதன் கழிவு உயிர் போதற்குக் காரணமாம் என்பர். இரத்தத்தை Life blood என்ற ஆங்கில வழக்கும் காண்க.
வீழ்கின்றார் – உபதேசங் கேட்கத் தாம் இருநிலத்திருந்தவர் அவ்வாறிருக்க மாட்டாதவராகிக், குருதி சோர்தலால் தரையிலே வீழ்வாராயினவர். நிகழ்கால வினையாலணையும் பெயர். வீழ்கின்றாராகிய நாயனார் (தடுத்து) வீழ்ந்தார் என்ற வினைமுற்றுக்கொண்டு முடிந்தது. வீழத் தொடங்கிய அவர் வீழ்தலாகிய அச்செயல் முற்றுமுன், தத்தனைக் கையால் தடுத்துவிட்டு அதன் பின் வீழ்ந்தார். வீழ்தலின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் தடுக்கும் சொல்லும் செயலும் நிகழ்ந்தன. குருதி சோர வீழ்கின்ற அந்நிலையினும் அவரது மனம், மொழி, மெய்என்ற முக்கரணங்களினுடைய, நினைக்கவுமரிய, உண்மை நிலையினை இவை காட்டியவாறு கண்டுகொள்க.
நீண்ட கை – கை நீண்டிருத்தல், அரசுச் செல்வமுணர்த்தும் உறுப்பிலக்கணமெனவும், அது வள்ளற்றன்மை குறிக்கும் எனவும் கூறுவர். ஆஜானுபாகு – என்பது வடநூல் வழக்கு. பெருங் கொடையாளியைப்பற்றிப் பேசுவோர் “அவனுக்குக் கை நீளம்“ என்று கூறுவதும் ஒரு பழமொழி யாயிற்று.நீண்டகை என்பது இங்குக் குறைவறக் கொடுத்து வந்தகொடையிற் சிறந்த கை என்க. இங்கு நாயனார் திருவேடத்தாரின் குறிப்பின்படி தம் உயிரினையே ஒப்புக் கொடுத்ததுமன்றி, அவ்வஞ்சகனுக்குப் உயிர்ப் பிச்சையுங் கொடுத்தலின் இவரது மிக்க வள்ளற்றன்மையின் மிக்கது முண்டோ? அதுபற்றி நீண்டகை என இங்குச் சிறப்பித்தவாறு.
தத்தா! நமர் – “தத்தனே! நீ இவரை வேற்றவர் என்று கருதி வாளினால் எறியலுற்றாய். அற்றன்று. இவர் நம்மவரே“ என்று வாக்கினாற் கூறினார். ஆதலின் நீ உன் செயலினைத் தவிர்தி என்பது குறிப்பு. அதனைக் கையினாற் செய்து முடித்தார் என்க. என – வாக்கினாற் சொல்லிக் கையாற்றடுத்து என்று கூட்டுக.
தத்தா நமர் – நமர் – நம்மவர் என்றது நமர் என நின்றது. இது பழஞ் சாசன வெட்டுக்களிற் கண்ட தொடர். இராசராசச் சோழர் எடுத்த தஞ்சை இராசராசேச்சரத்திருக்கோயிலில் அமைத்த நாயன்மார் படிமங்கள் பலவற்றில் இந்நாயனார் திருவுருவமும் ஒன்றாம். இதனில் “தத்தா நமரே காண் என்ற மெய்ப்பொருள் நாயனார்“ என்று பெயர் பொறித்துள்ளார். இச்சொற்றொடரை வகைநூலாரும் “தத்தா நமரே! எனச் சொல்லி“ என்று எடுத்தாண்டுள்ளார். இதனையே ஆசிரியர் இங்குத் தலைப்பெய்து வைத்தனர்.சரித்திரத்தின் முந்தைய தரவுகளை ஆசிரியர் போற்றும் அரியமுறை காண்க. நாயனார் இங்குச் செய்த அரிய செயல் “கொல்லாமை“, “எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமை“, “அஹிம்சை“ என்ற பொது அறத்தின் பாற்படும் என்று ஆராய்ச்சி செய்வாருமுண்டு. வேதங்களில் விதித்த “தர்மம் சர“, “அஹிம்சா பரமோ தர்ம:“ என்ற அறங்கள் வேறு; இங்கே குறித்தவை சாமானிய உலக நீதியாகிய பசு தருமங்கள். “கொல்லாவிரதம்“,
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்துவிடல்“
“கொல்லாவிரதம்“, முதலியனவாக நமது பெரியோர்கள் விதித்தனவும். “ஒரு கன்னத்தில் ஒருவன் அடித்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு“ முதலியனவாகப் பிறநாடுகளிலும் பிறரும் உரைத்த உபதேசங்களும் இவ்வாறே வேறாவன.
இங்கு நாயனார் “தத்தா! நமர்“ எனத் தடுத்ததின் கொள்கை வேறு. இவைகள் ஒன்றாக மயங்கி உணரற் பாலனவல்ல. இங்கு நாயனார் செயலுக்கு அடிப்படையாய் நின்றது “திருவேடமே மெய்ப்பொருள்“ என்றும், “திருவேடத்தார் கருத்தறிந்து ஏவல் செய்தல்“ என்றும், கொண்ட கொள்கையைக் காத்தலாகிய பதி தருமம். இந்நாயனார்பால் முன்எதிர்த்துப் போர்செய்த இந்த முத்தநாதன் தனதுயானை முதலிய சேனைகளைப் “பன்முறை இழந்து தோற்றுப் பரிபவப்பட்டுப் போனான்“ என்பதையும், அந்தப் போர்களில் எத்தனை பேர் உயிர் துறந்தனர் என்பதனையும் இங்கு நினைவு கூர்ந்தால் நாயனார் கொண்ட அறத்தின் உண்மைநிலை புலப்படும். திருவேடந்தாங்காது வந்திருப்பின் முத்தநாதன் நிலை எவ்வாறிருந்திருக்கும் என்பதைச் சிந்திப்பின் இவற்றின் வேறுபாடு நன்கு புலனாகும்.
சாமானிய உலக நீதிகளின் மேம்பட்டு, உலகிறந்தசிவபுவனத்திற் சஞ்சரித்து, வெளிப்பார்வைக்கு மட்டும் உலகர்போல, உண்டுடுத்து, அரசர் முதல் ஆள்வரை பல நிலைகளிலும் வாழ்ந்து, உலகை வாழ்வித்த எந்தம் பெருமக்களின் வாழ்க்கை நிலையினை உலக நீதிகளான அற விதிகளைக் கொண்டு அளத்தல் நம்மை உண்மை நெறியினின்றும் வழுக்கி விடுவதனோடு அபசாரத்திற்கும் இடம் தரும்.
இப்பாடலில் ‘’தான் நினைந்த அப்பரிசே செய்தான்‘’ என்ற தொடர், ‘’கொன்றான்’’ என்பது போன்ற தீய, மனம் நடுங்கும் சொற்களைச் சிறந்த நூலாசிரியர்கள் கூறார் என்பதைக் காட்டியது