நிர்மலா ராகவன்

அச்சம் என்பது மடமைதான்

‘உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று சிலரைப் பாராட்டுகிறோம். ‘இவர்களுக்கெல்லாம் பயம் என்பதே கிடையாதா!’ என்ற பிரமிப்பு எழுகிறது.

ஏன் இல்லாமல்?

பழக்கமில்லாத ஒரு காரியத்தில் இறங்க நேரிட்டால் எவருக்கும் அச்சம் எழத்தான் செய்யும். அதற்காக எதுவும் செய்யத் துணிவில்லாமல் சும்மா இருக்கமாட்டார்கள் இப்படிப்பட்டவர்கள்.

பயம் என்பதும் ஓர் உணர்வுதான். எந்த மனிதருக்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது.

“அச்சமும் தைரியமும் சகோதரர்கள்” (பழமொழி).

எதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று புரிந்துவிட்டால், அநாவசியமாக எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியதில்லை.

அச்சத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தைரியமும், அதன் விளைவாக தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. பயந்துகொண்டே இருந்தால், மகிழ்ச்சி ஏது! அனுதினமும் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

எதற்குப் பயப்படலாம்?

பயமே கூடாது என்றும் சொல்லிவிட முடியாது. `தீய பழக்கங்களில் ஈடுபட பயம்’ என்பது சரி.

சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் துணிவதும் முட்டாள்தனம்.

உலகமே ஒரு சின்ன நோய்க்கிருமியால் ஆடிப்போயிருக்கிற தற்போதைய நிலையில், `வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதாவது!’ என்று பலர் கோலாலம்பூரில் உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கப் போயிருக்கிறார்கள். பதினைந்து கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவாம். ஆக, `உணவுப்பொருட்கள் வாங்க காசில்லை’ என்ற ரகமில்லை.

இவர்களது இந்த `துணிச்சலான’ செய்கையால் பலருக்கும் நோய் பரவக்கூடும். அதற்கான தண்டனை: தலா 1,000 ரிங்கிட் (20,000 ரூபாய்) அபராதம்.

‘என்னமோ தொற்று நோயாம். பரவுகிறதாம். அதற்காக வீட்டிலேயே அடைந்து கிடக்க யாரால் முடியும்!’ என்ற அலுப்புடன் 286 பேர், இரவு விடுதிகளுக்குப் போய் உல்லாசமாக இருக்க முடிவு செய்தார்கள். சுயநலமாக நடந்ததால், தண்டனை.  அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தால், அரசாங்கத்திற்கு லாபம்.

குழந்தை மாதிரி

‘சிறுவர்களுடனேயே பழக நேர்வதால் பெரும்பாலான ஆசிரியைகள் குழந்தைத்தன்மை மாறாது இருக்கிறார்கள்!’ என்று ஒரு தோழி என்னிடம் கூறிச் சிரித்தாள்.

வயதில் பெரியவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சி, அவர்கள் சொன்னபடி நடக்கலாம்.

ஆனால், எத்தனை வயதானாலும், உயர் அதிகாரிகளைக் கண்டு பயந்து நடந்தால் என்ன ஆகும்?

கதை

எங்கள் பள்ளியில், ஈராண்டுகள் தலைமை ஆசிரியை இருக்கவில்லை. அந்த இடம் மூத்த உதவியாளராக இருந்த நபீசாவின் கையில். அதிகாரத் திமிருடன் எல்லாரையும் ஆட்டிவைத்தாள், உணர்வு ரீதியாக வதைத்தாள்.

தனக்கு மேலே வேறு ஒருவர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு, பயம் எழுந்தது நபீசாவுக்கு.

“இப்போது வரவிருக்கும் தலைமை ஆசிரியை புலிமாதிரி!” என்று அச்சுறுத்திவிட்டு, “எனக்கும்தான் உத்தியோக உயர்வு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது,” என்று நம்பத்தகுந்த சில அப்பாவிகளிடம் நைச்சியமாகக் கூறினாள்.

அவர்களும் பரிதாபப்பட்டு, எல்லா ஆசிரியர்களையும் அழைத்து, “நபீசா இங்கேயே தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறோம். ‘எஸ்’ என்று எழுதுங்கள்,” என்றுவிட்டு, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள்.

எல்லாரும் பயந்து, அதன்படி எழுதிக் கொடுத்தார்கள்.

ஒருத்தி மட்டும் `நோ’ என்று பெரிதாக எழுதினாள்.

எரிச்சலுடன், “அவள்தான் நம்மைப் படாதபாடு படுத்துகிறாளே! எதற்காக ஒத்துக்கொண்டீர்கள்?” என்று சிலரைக் கேட்டாள் அவள். (யார் என்று புரிகிறதா?)

“நாளைக்கே அவள் உயர்பதவி ஏற்று, இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!” என்ற பதில் கிடைத்தது.

“ஒரு கரடியை அது இருப்பதைவிடப் பெரிதாகக் காட்டுகிறது அச்சம்,” என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நல்லவேளையாக, நபீசாவின் திட்டம் பலிக்கவில்லை. அவளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள்.

அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே, `உன்னைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம். உன் அதிகாரத்தை எங்களிடம் காட்டலாம் என்று நினைக்காதே,” என்று மிரட்ட, அவள் அடங்கிப் போனாளாம்.

நம்மை அச்சுறுத்த நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காவிட்டால் அந்த பயம் அவர்களையே போய்ச் சேர்ந்துவிடும்.

எங்கள் பள்ளியில் பயத்தால் எல்லாரும் பணிந்துபோனார்கள் – என்னைத் தவிர. அதனால் மேலும் குறுகிப்போனார்கள்.

சிறப்பான வாழ்க்கை தற்செயலாக அமைவதில்லை. நம் கனவுகளை நனவாக்க நாம் மாறுவதைப் பொறுத்தே அது அமைகிறது. வீண் பயம், கனவுகளைத் தகர்த்துவிடும்.

கதை

அரசாங்கத்தின் ஓராண்டுக் கால மேற்பயிற்சி அது – விடுமுறைக் காலங்களுடன்.

முழுமையாகக் கலந்துகொண்டவர்களுக்கு மாத வருமானத்தைத் தவிர கூடுதலான போனஸ் பணமும் உண்டு, ஆனால் விடுமுறையின்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்களை முதலிலேயே முடித்துக் கொடுத்துவிட வேண்டும்.

அதன்படி நடந்து, ‘வெளிநாடு போகப்போகிறேன்,’ என்று எழுதியும் கொடுத்தேன்.

‘வெளிநாடு போனவர்களுக்குப் பணம் கிடைக்காது,’ என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவாவி முரட்டுத்தனமாக அறிவித்தார்.

நான் தனிமையில் அவரைச் சந்தித்து, “விதிப்படி, நான் எல்லாம் முறையாகச் செய்திருக்கிறேனே!” என்று விவாதித்தேன்.

உடலை இறுக்கிக்கொண்டு, “நான் இந்த விதிகளை எழுதவில்லை,” என்றார் நவாவி.

பயிற்சி முடிவடையும் தறுவாயில், மேலிடத்திலிருந்து ஒருவர் வந்து அதில் கலந்துகொண்ட 450 பேருக்கு உரை நிகழ்த்தினார்.

“உங்களுக்கு எதிலாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,” என்றார்.

நான் சும்மா இருப்பேனா? என் வழக்கைச் சொன்னேன்.

“இதுபற்றி பிறகு பேசலாம்,” என்று சமாளிக்கப் பார்த்தார்.

“இல்லை. எனக்கு இப்போதே தெரியவேண்டும்,” என்றேன், பிடிவாதமாக. “நான் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேன். பணத்துக்காகக் கேட்கவில்லை. என்னைத் தண்டிப்பதுபோல் பணம் கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?”

அவர் பயந்தார். “நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் தவற்றுக்கு மன்னியுங்கள்,” என்று பின்வாங்கினார். “நீங்கள் என்னிடம் சொன்னதை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுங்கள்,” என்று சமரசத்துக்கு வந்தார்.

ஒரு கேலிப் புன்னகையுடன், நான் மேடையைவிட்டு இறங்குமுன், நவாவி அடைத்த குரலில், “எனக்கு முதலிலேயே தெரியாது,” என்றார்.

அவரது மன்னிப்பை ஏற்கும் வண்ணமாக, நான் தலையை ஒருமுறை லேசாக மேலும் கீழும் ஆட்டிவிட்டு நடந்தேன்.

அன்று நான் கதாநாயகியாக உயர்ந்துவிட்டது பிறகுதான் புரிந்தது. நான் பழகியிராத சில பெண்கள், “உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்,” என்று உறவாடினர்!

என் நிலையிலிருந்த சிலர், “என்ன எழுதவேண்டும்? சொல்லிக் கொடுங்கள்,” என்று என்னைப் பிடித்துக்கொள்ள, `தைரியம் என்ற குணம் ஏன் இவ்வளவு அரிதாகிவிட்டது?’ என்ற அலுப்புதான் ஏற்பட்டது.

நான் ஒரு பள்ளியிலிருந்து மாற்றல் கேட்டுப் போகையில், “ஐயோ! எங்களுக்காகச் சண்டை போடுகிறவர் நீங்கள் மட்டும்தான். நீங்களும் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது!” என்று ஆசிரியை ஒருத்தி அரற்ற, “Fight your own battles (உங்கள் சண்டைகளை நீங்களே போடுங்கள்),” என்றேன் எரிச்சலுடன்.

எதற்கெடுத்தாலும் சண்டை போடவேண்டும் என்று எனக்கு மட்டும் ஆசையா?

சண்டை போடுவதால் நிறைய சக்தி விரயமாகிறது. சில சமயம் பலனளிக்கக்கூடும். விரோதிகளும் பெருகுவர்.

அதனால் என்ன? உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்தோம் என்ற திருப்தி நிலைக்குமே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *