எட்டுக் கோணல் பண்டிதன் – 10

0

தி. இரா. மீனா

                 அத்தியாயம் பதினைந்து

ஞானமயப் பரம்பொருள் நீ; எல்லாம் நீயொருவனே. விகற்பமும் ,நினைப்பும் இல்லாமல் சுகமாக இரு என்று  அஷ்டவக்கிரர் ஜனகருக்கு உபதேசிப்பது இந்த அத்தியாயமாகும்.

1. ஸத்வபுத்தி உண்மை உபதேசத்தால் கிருதார்த்தனாகிறான். மற்றவன் ஆயுள் முழுவதும் தேடி மயங்குகிறான்.

2. விஷயச் சுவையறுதலே வீடு; விஷயச் சுவையே பந்தம்; ஞானம் இவ்வளவே. இஷ்டப்படி செய்து  கொள்.

3. இந்த உண்மையறிவு வாய் ஜாலமுடையவனும், மேதாவியும், முயற்சி மிகுந்தவனுமான ஒருவனை ஊமையையும் சோம்பேறியையும் போலாக்குவதால் போக விருப்பினர் இதை விலக்குவார்கள்.

4. உடல் நீயில்லை; உடலுனக்கில்லை; புசிப்பவனும், புரிபவனும் நீயில்லை. நீ ஞான மயமானவன். என்றும் சாட்சி தேவையற்றவன். சுகமாக வாழ்வாய்.

5. விருப்பும், வெறுப்பும் மனித இயல்புகள். உனக்கோ என்றும் மனமில்லை. திரிபும், விகற்பமுமற்ற ஞான ஆத்மாவே நீ சுகமாக வாழ்வாய்.

6. படைப்பனைத்திலும் தன்னையும், தன்னிடம் படைப்பனைத்தையும் கண்டு நான் எனது என்பதற்று சுகமாக இருப்பாய்.

7. கடலில் அலைகள் போல எதனிடம் இந்த உலகம் இலகுமோ அதுவே நீ. ஐயமில்லை. ஞான வடிவே. தாபமில்லாமல் இரு.

8. அன்பனே! நம்பு, நம்பு. இங்கே நீ மயங்காதே. மாயைக்கு அப்பாலான ஆத்மாவே, ஞான மயமாம் இறைவனே நீ.

9. குணங்கள் சூழும் உடலே நிற்கிறது. வருகிறது. போகிறது. ஆத்மாவே போவதும் வருவதுமில்லை. அதைப்பற்றி ஏன் வருந்துகிறாய்?

10. உடல் பிரளய முடிவு மட்டும் இருக்கட்டும்; இன்றே இன்றே போகட்டும். ஞானமாம் வடிவாம் உனக்கு அதனால் ஆக்கமேது அழிவேது?

11. வரையறையற்ற பெருங்கடலாகிய உன்னிடம் உலகத் திரை இயல்பாகவே உதிக்கட்டும் அல்லது அடங்கட்டும். அதனால் உனக்குக் கூடுதல், குறைதல் இல்லை.

12. அன்பனே! ஞானமே உன் வடிவமாகும். இந்த உலகம் உன்னிலும் வேறில்லை. ஆதலால் யாருக்கு எவ்வாறு எங்கே ஏற்பதும், விடுவதுமாம்?

13. அழிவில்லாமல் அமைதியாக இருக்கின்ற ஒரே ஞானவானாகிய உன்னிடம் பிறப்பெங்கே? வினையெங்கே? அகந்தைதானெங்கே?

14. எதை நீ கண்டாலும் ஒருவனாகிய நீயே அங்கிருக்கிறாய். பொன்னாலான மேகலை, தோள்வளை, சிலம்பும் பொன்னிலிருந்து வேறாகுமோ?

15. இது நான்,  இது நானல்ல என்னும் மாறுபாட்டை முழுவதும் ஒழித்து அனைத்தும் ஆத்மாவே எனத் துணிந்து நினைப்பற்றுச் சுகமாக இருப்பாய்.

16. உன்னை உணராததால்தான் அகிலம் உண்டாகிறது. உண்மையில் நீ ஒருவனே இருக்கிறாய். உனக்கு அயலாக சம்சாரியோ சம்சாரமற்றவனோ ஒருவனுமி்ல்லை.

17. இந்த உலகமும் மயக்கமே தவிர வேறில்லை என்று துணிந்து வேதனையற்று ஆன்ம விளக்கமாக மட்டுமிருப்பவன் எதுவுமில்லாதது போல அமைதியாக இருப்பான்.

18. பவசாகரத்தின் கண் ஒருவனே இருந்தான், இருக்கிறான், இருப்பான். உனக்கு பந்தமுமில்லை, முக்தியுமில்லை. செயல் முடித்தவனாகச் சுகமாக இருப்பாய்.

19. ஞான மயமானவனே! சங்கற்பம், விகற்பங்களால் சித்தம் குழம்பாதே. ஆனந்த வடிவமாகிய தன்னிடம் ஒய்வுற்று சுகமாக இருப்பாய்.

20. எங்கும் எந்தக் காலத்திலும் தியானத்தை ஒழிப்பாய். சித்தத்தில் ஒன்றையும் வைத்துக் கொள்ளாதே. நீ விடுபட்டவனாக ஆத்மாவாகவே இருக்கிறாய். நினைப்பினால் ஆவது என்ன?

                      அத்தியாயம் பதினாறு

எல்லாவற்றையும் மறந்தால் ஆத்மானந்தம் கிடைக்கும் என்றும் விருப்பு வெறுப்பற்று நான் என்பது இல்லாமலிருக்க வேண்டும் என்று ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசிப்பது இந்த அத்தியாயமாகும்.

1. பற்பல நூல்களை பலமுறை சொன்னாலும், கேட்டாலும் அனைத்தையும் மறந்தாலன்றித் தன்னிலை இன்பம் உனக்கில்லை.

2. போகத்தையோ சமாதியையோ நீ சார்ந்திரு. ஆயினும் அன்பனே! ஆசைகளற்ற உள்ளமே அளவில்லாத மகிழ்ச்சியை உனக்குத் தரும்.

3. விஷயங்களில் உழலுவதால் அனைவரும் துன்பப்படுகின்றனர். இதை யாரும் உணர்வதில்லை. புண்ணியவானொருவன் இந்த உபதேசத்தாலேயே பேரின்பம் பெறுவான்.

4. கண்ணை இமைத்துத் திறப்பதற்கும் எவனொருவன் வருந்துவானோ சோம்பலில் தலைசிறந்தவனாகிய அவனுக்கே இன்பம். வேறு எவர்க்குமில்லை.

5. அறம் பொருள் இன்பம் வீடு பற்றி இது செய்தோம் இது செய்யவில்லை என்னும் இரட்டைகளில் இருந்து மனம் விடுபட்டால் அதுவே ஆசையற்ற நிலையாம்.

6. விஷயத்தை வெறுப்பவன் விரக்தன்; விஷயத்தில் உழல்பவன் காமி். ஏற்றுக் கொள்வதும் விலக்கித் தள்ளுவதும்  இல்லாதவன் விரக்தனுமில்லை. காமியுமில்லை.

7. விசாரணையற்ற  நிலையைத் தலமாகக் கொண்டு சம்சாரப் புதரின் முளையாகிய ஆசை உள்ளவரையில் மட்டுமே ஏற்றுக் கொள்வதும், விலக்கித் தள்ளுவதும் இருக்கும்.

8. தொடங்குவதால் ஆசையும், விலக்குவதால் வெறுப்புமே உண்டாகுமென் பதால் அறிஞன் இரட்டைகளற்றுக் குழந்தை போல இருப்பான்.

9. துன்பத்தைத் தொலைக்கும் ஆசையால் அவாவுடையவன் உலகியலைத் துறக்க விரும்புகிறான். அவா ஒழிந்து விடுதலையடைந்தவன் உலகிலி ருந்தும் துன்பமடைய மாட்டான்.

10. யாருக்கு முக்தியில் விருப்பமுள்ளதோ, எனது உடல் என்ற விருப்பம் உள்ளதோ அவன் துன்பத்தையே அனுபவிப்பான். அவனால் ஞானியாகவோ, யோகியாகவோ முடியாது.

11. சிவனே அல்லது ஹரியே அல்லது பிரம்மனே உனக்கு உபதேசம் செய்பவனாக இருந்தாலும் எல்லாவற்றையும் மறந்தாலன்றி நீ சுகமடைய முடியாது.

கிருதார்த்தன் – ஞானி

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *