2ஜி அலைக்கற்றை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்து தீர்ப்பு – செய்திகள்

புது தில்லி:  03 நவம்பர் 11. 2ஜி அலைக்கற்றை வழக்கில், தி.மு.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றம் ஜாமீன் மறுத்து தீர்ப்பளித்தது.  இதனால் கடந்த ஐந்து மாதங்களாக தில்லி திகார் சிறையில் இருக்கும் குற்றம் சுமத்தப்பட்டவர்களான கனிமொழி மற்றும் இதர ஏழு பேர்களின் சிறைவாசம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நீதிமன்றத்திற்கு வந்த சிறப்பு நீதிபதி ஓ. பி. சைனி ஜாமீன் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டது கனிமொழி, சரத் குமார், கரின் மொரானி, ஆஸிஃப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அடுத்த கட்ட விசாரணை நவம்பர் மாதம் 11 அன்று தொடங்கும் என்றும் நீதிபதி அறிவித்தார்.  இதில் சிலருக்கு ஜாமீன் வழங்குவதை சி.பி.ஐ. எதிர்க்கவில்லை.  இருந்தபோதும் நீதிபதி அனைவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளார்.  மேலும் ஜாமீன் வழங்காமைக்கு ஐந்து காரணங்களையும் அவர் அறிவித்தார்.  குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் சாட்சிகளை கலைப்பதற்கும், சாட்சிகளை மிரட்டவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுவதன் மூலம் சாட்சிகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் தங்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெண் என்பதற்காக கனிமொழி மீது எவ்வித பாரபட்சமும் காட்டப்படாததால் அவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  பொருளாதாரக் குற்றங்கள் சுமத்தபட்டிருக்கும் இவர்கள் அரசின் பணத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்தியதால் இவர்களுக்கு ஜாமீன் மறுக்கபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தனது கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக நீதிபதி சைனி ”உணர்ச்சி வேகத்திலும் கோபத்தினாலும் கூட ஒரு கொலை நடந்து விடலாம்.  ஆனால் பொருளாதாரக் குற்றம் என்பது பொறுமையாக கணக்கிட்டு, திறமையாக திட்டமிட்டு செயல்பட்டு, சமூகம் பற்றிய கவலை இல்லாமல், லாபம் ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு செய்யப்படுவது” என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணையையும் மேற்கோள் கட்டினார்.

தீர்ப்பு குறித்து கனிமொழி தரப்பு வழக்கறிஞர் திரு. ராம் ஜெத்மலானி பேசிய போது : “சிறப்பு நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று.  கீழ் நிலை நீதி மன்றங்கள் எல்லா விஷயங்களிலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என எதிபார்க்கின்றன.  என் கருத்தில் நீதித் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  உச்ச நீதிமன்றம் அதை சரி செய்யும் என நம்புகிறேன்.” என்றார்.  மேலும் ஜாமீன் குறித்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “2ஜி அலைக்கற்றை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்து தீர்ப்பு – செய்திகள்

  1. இந்த செய்தியையும், ஊடக பூடகங்களையும் படித்த பின், ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ தொடரில் சட்டரீதியான விளக்கம் தர விழைந்தேன். வாசகர்களுக்கு ஆர்வமின்மை இருக்குமோ என்ற ஐயம் தலை தூக்க, அதை நிறுத்தினேன். சட்டமும், நீதியும், நிர்வாகமும், அரசியலும் நன்கு அறிந்தவர்கள் சிலர்.’ஸீ.பி.ஐ எதிர்க்காத போது நீதிபதி ஜாமீன் கொடுத்திருக்கவேண்டும் என்று பேசுவது வியப்பை தருகிறது. கனிமொழி, சரத் குமார், கரின் மொரானி, ஆஸிஃப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோர் அனாவசியமாக இன்னல் படவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நீதிபதி சிந்தித்து செயல்படவேண்டாமே என்று குறிப்பால் உணர்த்துவது தான் எனக்கு புரியவில்லை. ஒரு கற்பனை: ராமசாமி கிருஷ்ணசாமியை கொன்றுவிட்டான். பொலிட்டிக்கல் பிரஷ்ஷரு. கபர்தார் காவல்துறை எஃப்.ஐ.ஆர். போடாமல் போக்குக் காண்பிக்கிறார்கள். ராமசாமி தப்பத்தான் வேண்டும் என வாதாடலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *