‘6’ படத்திற்காக ஒத்திகை பார்த்த நடிகர்கள் – திரைச்செய்தி

0

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு படப்பிடிப்புக்குத் தயாராவதில் உள்ள சங்கடங்கள், அதிகப்படியான இதர செலவுகளைச் சமாளிப்பதற்கு மிகச் சிறந்த வழி, எடுக்க வேண்டிய காட்சிகளை முன்கூட்டியே திட்டமிடுவதும், அந்தக் காட்சிகளில் நடிப்பவர்களுக்கு ஒத்திகை நடத்துவதும்தான்!

ஹாலிவுட்டில் இதுதான் நடைமுறை.  அந்த முறையை இங்கே ஐம்பதுகளிலேயே நமது திரையுலக முன்னோடிகள் பயன்படுத்தினாலும், காலப்போக்கில் இந்த முறை அருகிவிட்டது. இப்போது கமல்ஹாஸன் மீண்டும் தனது படங்களுக்கு ஒத்திகைப் பார்ப்பதை வழக்கமாக ஆரம்பித்துள்ளார்.

அந்த பட்டியலில் இப்போது நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் வி.இசட். துரை ஆகியோர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்!

தங்களின் புதிய படமான ‘6’ (உண்மையில் இந்தப் படத்துக்குத் தலைப்பே கிடையாது. 6 மெழுகுவர்த்திகளை குறிக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு six Candles Symbol தான் இந்தப் படத்துக்கு தலைப்பு) படத்துக்காக இந்த ஒத்திகையை சென்னையில் நடத்தினர்.  படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், நகரியில் நடக்கவிருக்கும் முக்கியமான படப்பிடிப்புக்காகத்தான் இந்த 10 நாட்கள் ஒத்திகை நடந்தது.

இதில் கதாநாயகன் ஷாம், நாயகி பூனம் கவுர், படத்தில் முக்கிய வேடத்தில் வரும் ஒரு குழந்தை உள்பட அனைவரும் பங்கேற்று ஒத்திகை பார்த்தனர்.

ஏன் இந்த ஒத்திகை? இதற்கான அவசியம் என்ன? படத்தின் ஹீரோ ஷாம் இப்படிக் கூறுகிறார்:

“ஹீரோ ஹீரோயினுக்கிடையிலான காட்சிகள் மட்டுமென்றால் பரவாயில்லை. ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு சிறு குழந்தையும் பயணப்பட வேண்டிய படம் இது.  அந்தக் குழந்தையின் உணர்வுகளை சரியாக காட்ட வேண்டும்.  உள்வாங்கி நாங்களும் நடிக்க வேண்டும்.  இதில் சிறு தவறு நேர்ந்தாலும் படம் சரியான பலனைத் தராமல் போகும் அபாயம் உள்ளது.  எனவே, வெளிநாடுகளில் செய்வது போல, படப்பிடிப்புக்கு முந்தைய ஒத்திகைக்கான ’வொர்க் ஷாப்’ ஒன்றை இந்தப் படத்துக்காக நடத்தினோம்.  உண்மையிலேயே மிகவும பயனுள்ளதாக இருந்தது.  இனி ஷாட் போகும்போது, ஒளிப்பதிவாளரின் வேலை மட்டும்தான் பாக்கி.  செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாக நாங்கள் இருப்பதால் குறைந்தபட்ச நேரத்தில் குறித்த தேதிக்குள் வேலை முடிந்துவிடும்!” என்றார் ஷாம்.

ஒத்திகை அனுபவம் குறித்து நாயகி பூனம் கவுர் கூறுகையில், “ரிகர்சல் பார்த்துவிட்டு ஷூட்டிங் போவது இதுதான் எனக்கு முதல் அனுபவம்.  உண்மையிலேயே இது வேறு உலகத்தைக் காட்டுவதாக இருந்தது.  ஷூட்டிங்கில் எப்படிப்பட்ட கடினமான காட்சியாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் நடிக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது!” என்றார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் படமாகும் ‘6’ படத்தை வி. இஸட். துரை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார்.

6 வருடம், 6 மாதம், 6 வாரம், 6 நாட்கள், 6 மணி நேரம், 6 நிமிடம், 6 நொடிகளில் நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்காக 25 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார் ஷாம்.  அதுவும் ஏதோ கண்மூடித்தனமாக அல்ல.  ஒரு தனி மருத்துவக் குழுவின் உதவியுடன் படிப்படியாக தன் எடையைக் குறைத்துள்ளார்!

உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரு திரைப்படம் ஒரு பெயருக்குப் பதிலாக, ஒரு குறியிட்டை தலைப்பாகக் கொண்டு வரும் படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.