கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 15

-மேகலா இராமமூர்த்தி

சீதையின் பேரழகைக் கண்டு திகைத்த சூர்ப்பனகை, தவ வேடத்தில் காட்டுக்கு வந்திருக்கும் இராமன் இப்பெண்ணை உடன் அழைத்துவந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இவளும் என்னைப்போல் இடையில் வந்தவளாகத்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தாள்.

எனவே இராமனைத் தெருட்டும் பொருட்டு, ”வீரனே! இவள் மாயங்கள் செய்யவல்ல அரக்கியாவாள்; இஃது இவளுடைய உண்மைத் தோற்றமும் அன்று; இவளை உன்னிடமிருந்து விலக்குவாய்!” என்றாள்.

சூர்ப்பனகையின் மொழிகள் அனைத்தும் அவள் தன்னை மனத்தில் வைத்துச் சொன்ன மொழிகளாகவே இருக்கின்றன. தான்செய்த மாய வேலைகளையெல்லாம் சீதையின்மேல் ஏற்றிக்கூறி எப்படியாவது சீதையை இராமனிடமிருந்து பிரித்துவிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்கின்றாள் அவள்.

அதைக் கேட்ட இராமன் அப்போதும் தன் கேலிப் பேச்சை நிறுத்தாமல், “பெண்ணே! உன்னுடைய அறிவு ஒளிமிக்கது; உன்னை யாரும் வஞ்சித்து ஏமாற்றிவிட முடியாது; நீ சொன்னதுபோல் இவள் அரக்கிதான்!” என்று சீதையைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிக்கின்றான். இராமனின் அபத்தச் செயலின் உச்சம் என்றே இதனைக் குறிப்பிடலாம்.

ஒள்ளிதுஉன் உணர்வு மின்னே
உன்னைஆர் ஒளிக்கும் ஈட்டார்
தெள்ளிய நலத்தினால் உன்
சிந்தனை தெரிந்தது அம்மா
கள்ளவல் அரக்கி போலாம்
இவளும்நீ காண்டி என்னா
வெள்ளிய முறுவல் முத்தம்
வெளிப்பட வீரன் நக்கான்.
(கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2892)

இராமனின் எள்ளலை அப்போதும் உணராத சூர்ப்பனகை, அதனை உண்மையென்று நம்பி, சீதையைப் பார்த்து, ”எங்கள் இருவருக்கிடையில் நீ வந்ததேன் அரக்கப் பெண்ணே?” என்று அவளிடம் வெகுண்டுரைக்க, அதைக்கேட்ட சீதை அச்சம்கொண்டு இராமனின் அருகணைந்தாள்.

அரக்கியோடு தான் நிகழ்த்திவரும் விளையாட்டுப் பேச்சு வினையாகிவருவதை அப்போது உணர்ந்த இராமன், அரக்கர்களோடு விளையாட்டாக ஏதேனும் செயலைச் செய்தாலுங்கூடத் தீமையே விளையும் என்று தெளிந்தவனாய்ச் சூர்ப்பனகையோடு நடத்திவந்த உரையாட்டை நிறுத்திவிட்டு, ”பெண்ணே! இங்கிருந்து விரைவில் சென்றுவிடு! உன் செயல்கள் குறித்து என் இளவல் அறிந்தானாகில் உனக்குக் கேடு நேரும்!” என எச்சரித்துவிட்டுச் சீதையோடு பன்னசாலைக்குள் புகுந்தான்.

”இந்த அழகி உடனிருக்கும்வரை இவனை அடைய வாய்ப்பில்லை” என்று மனத்துள் எண்ணியபடி, இராமன்மீது கொண்ட தீராக் காமத்தோடு, அங்கிருந்து அகன்றாள் சூர்ப்பனகை.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இயல்புகொண்ட காமநோய், அந்திமாலையில் சூர்ப்பனகையை அதிகமாய் வாட்டத் தொடங்கியது. மன்மதன் கணை அவள் நெஞ்சைத் தொட்டது; காமத் தீயோ அவள் உடலைச் சுட்டது. அத் தீயையை அவிக்கச் சுனையில் மூழ்கினாள்; சுனையும் சூடேறிக் கொதித்தது. இவ்வாறு மாலையும் அதைத் தொடர்ந்துவந்த இரவின் வரவும் அவளை வாட்டியெடுத்தன. ஒருவழியாக இருள்நீங்கிப் பொழுது புலர்ந்தது.

சூர்ப்பனகையின் மனத்தில் ஒரு திட்டம் உதயமானது. இராமனோடு இருக்கின்ற அழகியைக் கடத்தி ஒளித்துவைத்துவிட்டு, அவள் உருவைத் தான் எடுத்தால் மட்டுமே இராமனின் அன்புக்குப் பாத்திரமாக முடியும்; எனவே அவளை எப்படியாவது அங்கிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும் என்பதே அத்திட்டம்!

திருமகள் மந்திரத்தைச் செபித்து விரும்பும் வடிவெடுக்கும் ஆற்றலைச் சூர்ப்பனகை பெற்றிருந்ததால் சீதையைப் போல் உருமாறத் திட்டம் தீட்டினாள். அதனைச் செயற்படுத்த விரும்பி, இராமனும் சீதையும் வதிந்த பன்னசாலைக்கு விரைந்தாள். அப்போது இராமன் காலைநேரச் சந்தியா வந்தனங்களைச் செலுத்துவதற்காகக் கோதாவரி நதிக் கரையில் அமர்ந்திருந்தான்.

”ஆகா! இந்த அழகியைக் கடத்த இதுவே தக்க சமயம்” என்று முடிவுகட்டிப் பன்னச்சாலையில் இருந்த சீதையைக் கைப்பற்றுவதற்காக அவளைத் தொடர்ந்து சென்றாள் சூர்ப்பனகை. அப்போது அருகில் இருந்த கனிகள் நிறைந்த பழச்சோலையில் சீதைக்குக் காவலாய் மறைவாய் நின்றிருந்த இலக்குவனை அவள் கவனிக்கவில்லை. விரைந்து சீதையைப் பற்ற சூர்ப்பனகை செல்வதுகண்ட இலக்குவன், ”நில்லடி!” என்று அவளை அதட்டிவிட்டு அவள் கூந்தலைப் பற்றினான். அவள் பெண்ணென்பதால் அவள்மீது தன் வில்லைச் செலுத்திக் கொல்லவில்லை.

அப்போது இலக்குவனையும் சீதையோடு சேர்த்துத் தூக்கிச் செல்ல எத்தனித்தாள் சூர்ப்பனகை. அவளின் அம்முயற்சி வெற்றிபெறாவகையில் அவளைக் கீழே தள்ளி, ”கொடுந்தொழில் புரியாதே” என்று சீறிய இலக்குவன், அவளின் மூக்கையும் காதுகளையும் முலைக்காம்புகளையும் அறுத்தெறிந்த பின்பே அவளை விட்டான்.

ஊக்கித் தாங்கி விண் படர்வென்
என்று உருத்து எழுவாளை
நூக்கி நொய்தினில் வெய்து
இழையேல் என நுவலா
மூக்கும் காதும் வெம் முரண்
முலைக் கண்களும் முறையால்
போக்கி போக்கிய சினத்தொடும்
புரி குழல் விட்டான்.
(கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2922)

வால்மீகி இராமாயணம், இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கும் காதுகளும் மட்டுமே கொய்தான் எனக் கூறுகின்றது.

”இலக்குவன் சூர்ப்பனகையின் உறுப்புகளை அறுத்தது முறையான செயலா? பெண்ணொருத்தியை இவ்வாறு தண்டிப்பது சரிதானா?” எனச் சூர்ப்பனகை தண்டிக்கப்பட்ட விதம் குறித்த விமர்சனங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

அவைகுறித்து நாமும் சிந்திக்கவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

சூர்ப்பனகை இராமனிடம் காம எண்ணத்தோடு பேசத்தொடங்கியபோதே அவன் அப்பேச்சை வளரவொட்டாமல் தடுத்துத் தனக்கு மணமான விவரத்தையும், தன் மனைவி தன்னுடன் இருக்கும் தகவலையும் அவளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு கம்பராமாயணத்தில் காட்சி அமைக்கப்படவில்லை. மாறாக, இராமனோ வேடிக்கை என்ற பெயரில் தொடர்ந்து சூர்ப்பனகையின் காம இச்சையைத் தூண்டிவிடும் வேலையையே செய்கின்றான்.

ஆசையின் வசப்படும்போது நல்லவர்களே மோசமானவர்களாக மாற வாய்ப்புண்டு. இந்தச் சூர்ப்பனகையோ இயல்பிலேயே மோசமானவளாகத்தான் வால்மீகி, கம்பர் இருவர் படைப்புக்களிலும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றாள். அவ்வாறிருக்க, இராமன் அவளிடம் நிகழ்த்திய வேடிக்கைப் பேச்சு விபரீதத்தில் முடிந்ததில் வியப்பில்லை.

ஆக, இந்த விபரீதத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ இராமனே முதன்மைக் காரணமாகின்றான். எனவே அவனை நாம் குற்றவாளியாகவே கருதவேண்டியிருக்கின்றது. அடுத்து, சீதையிடம் காழ்ப்புக்கொண்ட சூர்ப்பனகை, அவளிடம் தன் கைவரிசையைக் காட்டவந்தபோது இலக்குவன் அவளைத் தண்டிக்கின்றான். அவன் அவளைத் தண்டித்தது குற்றமில்லை; ஏனெனில் அவள் செய்ய நினைத்த செயல் தண்டனைக்குரியதே. எனினும் அத்தண்டனை சூர்ப்பனகையை உறுப்பறை செய்வதாக இல்லாமல் அவளை எச்சரித்து விரட்டுவதாக அமைந்திருக்கலாம்!

சூர்ப்பனகை இராமன் சந்திப்பு, அதைத் தொடர்ந்து நிகழ்ந்தவை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, உயர்ந்த மனிதர்களாக அடையாளப்படுத்தப்படுபவர்களுங்கூடக் குற்றமில்லாப் புனிதர்களாக இருப்பதில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது.

இனி, அடுத்து நிகழ்ந்தவற்றைக் காண்போம்!

உறுப்புகளை இழந்த சூர்ப்பனகை வலியால் துடித்துக் கதறுகின்றாள்; தம் உறவினர்களையெல்லாம் பேர்சொல்லிக் கூவியழைத்து அரற்றுகின்றாள்.

”இராவணனே! நீ சிவபிரான் தம் பெருமை பொருந்திய கையை நீட்டி அளித்த ’சந்திரகாசம்’ எனும் வாளைப் பெற்றவன்; வாயுதேவனையும், வருணனையும், அக்கினி தேவனையும், காலதேவனாம் எமனையும், வானத்தையும், நவகோள்களையும் உனக்கு ஏவல் செய்வித்தாய்! அத்தகு பேராற்றல்கொண்ட நீ, ஈண்டு மானுடர் இருவர்க்கு எதிரிடும் ஆற்றலற்றுப் போனாயோ?” என்று புலம்புகின்றாள்.

காற்றினையும் புனலினையும் கனலினையும்
கடுங் காலக்
கூற்றினையும் விண்ணினையும் கோளினையும்
பணி கொண்டற்கு
ஆற்றினைநீ ஈண்டு இருவர்
மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ உன்வலத்தை சிவன்
தடக்கை வாள்கொண்டாய்.
(கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2932)

இராவணன் சிவனிடம் சந்திரகாசம் எனும் வாளைப் பெற்றமைக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுவதுண்டு. ஒருமுறை இராவணன் தன் ஆற்றலால் செருக்கடைந்து கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முனைந்தபோது, சிவனார் தம் திருவடிப் பெருவிரலால் மலையை அழுத்தினார். அதனால் இராவணன் மலையடியில் நசுக்குண்டு கதறினான். பின்பு சிவனாருக்கு விருப்பமான சாமவேதம் பாடி அவர் மனத்தை இளகச் செய்தான். அவரும் அவனை மன்னித்து விடுவித்ததோடு, நீண்ட வாழ்நாளையும், சந்திரகாசம் எனும் வாளையும் அவனுக்கு அளித்தார்.

சூர்ப்பனகை இவ்வாறு புலம்பிக்கொண்டிருந்தபோது கோதாவரிக் கரையில் தன்னுடைய நாட்கடன்களை முடித்துவிட்டுப் பன்னசாலை நோக்கி வந்துகொண்டிருந்தான் இராமன்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *