செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(323)

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.

– திருக்குறள் – 275 (கூடாவொழுக்கம்)

புதுக் கவிதையில்...

பிறர் தம்மைப்
பெரிதும் மதித்திடவேண்டி
பற்றை விட்டுவிட்டோம் எனப்
பொய் சொல்வோரது
மறைந்த ஒழுக்கம்,
இனிது போலத் தோன்றினும்
அப்போது,
என்செய்தோம் என்பதறியாதவர்கள்
பின்னர் வருந்தும் வகையில்
பலதுன்பம் வந்திடுமே…!

குறும்பாவில்...

தற்காலிகமாய் இன்பம்பெற பெருமைக்காய்ப்
பற்றறுத்தோமெனப் பேசும் பொய்யொழுக்கம் கொண்டோர்க்குப்
பின்னர் வந்திடும் வருந்தும்நிலையே…!

மரபுக் கவிதையில்...

தம்மைப் பிறரெலாம் மதித்திடவே
தாமே பற்றெலாம் விட்டதாக
இம்மியும் மெய்யிலாப் பொய்பேசி
இன்பம் பெற்றிடும் பொய்யொழுக்கம்
செம்மை தராதவர் வாழ்வினிலே,
சேர்த்துத் துன்பம் பெற்றிடவே
தம்மைத் தாமே நொந்துகொள்ளும்
தன்மைப் பின்னர் பெறுவாரே…!

லிமரைக்கூ..

பிறர்மதிக்கப் பேசுவர் பொய்யே,
பற்றறுத்ததாய்ப் பொய்வாழ்வில் பெறுமின்பம் நிலையாதே
பின்பெறுவர் துன்பமென்பது மெய்யே…!

கிராமிய பாணியில்...

வேண்டாம் வேண்டாம் தீயொழுக்கம்
வேதன தந்திடும் தீயொழுக்கம்,
வேணும் வேணும் நல்லொழுக்கம்..

அடுத்தவன் நம்ம மதிக்கணுண்ணு
ஆசயெல்லாம் உட்டாச்சிண்ணு பொய்பேசி
நல்லவன்போல நடிக்கிறவனுக்கு
அந்த இன்பம் அப்போதைக்குத்தான்,
அதிகநாள் நெலைக்காது..

பின்னால
ஏன் வருதுண்ணு தெரியாமலே
அவனுக்கு
எல்லாத் துன்பமும் சேந்துவருமே..

அதால
வேண்டாம் வேண்டாம் தீயொழுக்கம்
வேதன தந்திடும் தீயொழுக்கம்,
வேணும் வேணும் நல்லொழுக்கம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *