தமிழக விளையாட்டுகள்

0

முனைவர் த. ஆதித்தன்,
இணைப் பேராசிரியர்,
அரியகையெழுத்துச் சுவடித் துறை,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,
தஞ்சாவூர் – 613010.

கலைகளைப் பல்வேறு வகைகளாகப் பகுத்தறிந்துள்ளனர் நம் முன்னோர். அவற்றினுள் விளையாட்டுக் கலை வாழ்வோடு பிணைந்த ஒன்றாகும். “அந்தந்த நாட்டின் இயற்கை அமைப்பு, சுற்றுப்புறச் சூழல், மக்களின் சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், சமயங்கள் முதலியவற்றின் தன்மைக்கேற்ப கலைகள் வளர்ச்சி பெறும்” என்று மயிலை. சீனி. வேங்கடசாமி (தமிழர் வளர்த்த அழகு கலைகள்) அவர்கள் குறிப்பிடுகிறார். அவ்வாறே விளையாட்டுகளும் மக்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப தனித்தன்மைகளுடன் திகழ்கின்றன. அவ்விளையாட்டுக் கலையானது தமிழக நிலப்பரப்பினுள் தொடக்கக் காலம் முதல் இன்று வரை எவ்வாறெல்லாம் வழங்கப்பட்டு வருகின்றன என்பதைக் குறித்ததாக இக்கட்டுரை அமைகிறது.

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தபோது பல சவால்கள் அவன் முன் இருந்தன. அவை அவனுக்கு ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், இயற்கையை எதிர் கொள்ளவும் அவனுக்குக் கற்றுத்தந்தது. தொடக்கத்தில் தற்பாதுகாப்புக்காக ஓடவும், சாடவும், தாண்டவும், நீந்தவும் செய்வதன் சமூகவளர்ச்சியில் நிலையான வாழ்க்கைக்கு வந்த போது அவற்றினைத் தன் ஆற்றலின் அடையாளமாகவும், விளையாட்டாகவும் மாற்றியிருக்க வேண்டும். இவ்விளையாட்டுகளின் தோற்றம் குறித்து, “வீரத்தை வளர்க்க, பயத்தைவிரட்ட, நம்பிக்கையை ஊட்ட, நண்பர்களைப் பெருக்க, பொழுது போக்கை வரவேற்க, முரண்பாட்டை உணர்ந்த, வாழ்க்கையினையும், தொழிலினையும் எதிரொலிக்க, போலச் செய்ய எனப் பல நிலைகளில் விளையாட்டுகள் தோன்றலாயின” என்கிறார். சு. சிவசாமிசுந்தரி (சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்)

மனித சமூகம் சிந்திக்கும் ஆற்றலாலும் உழைப்பாலும் தன்னை தகவமைத்துக் கொண்ட  உயர்த்திக் கொண்ட பெருமையுடையது. தொடக்கக் காலத்தில் தமது உழைப்பு – தொழில் சார்ந்ததாக விளையாட்டுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் சமுதாய வளர்ச்சிப் படிநிலையில் விளையாட்டுகள் தனித்தன்மை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

மிகத் தொன்மையான பதிவுகளாக நமக்குக் கிடைக்கக் கூடிய சங்க இலக்கியங்களில் இவ்விளையாட்டுகள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதனை, “பண்டைய தமிழகத்தில்  சங்க காலத்தில் – ஆடவரும் பெண்டிரும் விளையாட்டுகளில் மிகுதியாக ஈடுபட்டிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ‘விளை’ என்ற சொல் பொருள் பொதிந்தது. ‘விளைக’, ‘பொலிக’ என பரிபாடல் (10-86) குறிப்பிடுகிறது. ‘விளைக’, என்பது வாழ்த்துவதாகும். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி 260 ஆம் பாடலுக்கு வரைந்த உரையில்  “விளைக, பொலிக ஒரு வழக்கு என்பாரும் உளர்” எனக் குறிப்பிடுவதிலிருந்து நல்லதே ஆகுக என வாழ்த்துவது விளைதலாகும் என்று  தெரியலாம். எனவே ‘விளை’ என்ற வேர்ச்சொல் நல்லதான இன்பம் பயப்பது என்று பொருள்படும். ‘விளையாட்டாய மொடு ஓரையாடாது’ (நற்றிணை – 68), ‘விளையாட்டு ஆயமொடு’ வெண்மணல் அழுத்தி (நற்றிணை – 172) என்னும் வரிகளிலிருந்து விளையாட்டின் கூட்டுத்தன்மை அஃதாவது பலர் கூடிப் பங்கு பெறும் தன்மை புலனாகிறது. பண்டைத் தமிழகத்தில் சிறார்க்கென்றும், ஆடவர்க்கென்றும், பெண்டிர்க்கென்றும், இருபாவார்க்கென்றும், இருபாவார்க்கென்றும் பலவகை விளையாட்டுக்கள் இருந்தன. அவை நாநிலப் பாகுபாட்டை ஒட்டி அமைந்ததனையும் காணலாம். குறிஞ்சியில் கிளி ஓட்டுதலும் முல்லை, மருதத்தில் ஏறு தழுவுதலும் நெய்தலில் அலவன் ஆட்டலும் எடுத்துக்காட்டுகள்.” என்பதன் (பதிப்புரை, சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்) மூலம் அறியலாம்.

சு.சிவகாமிசுந்தரி அவர்கள் சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம் என்னும் தமது ஆய்வு நூலில் ‘37’ வகையான விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். அவை,

  1. அசதியாடல் – Pleasing talk and cutting jokes with One another
  2. அம்புலி அழைத்தல் – Pleading with the moon to come down to earth and Play with the child
  1. அலவன் ஆட்டல் – Taking crabs in the hand and waving on either side
  2. உலாவல் – A pleasurable walk
  3. ஊசல் – Playing on the swing
  4. எண்ணி விளையாடல் – To play by counting a large number of things seen at a place
  1. எதிரொலி கேட்டல் – To play by shouting and thon hearing the echo
  2. ஏறு கோள் – Tanning the bull
  3. கண் பதைத்து ஒளித்தாடல் – Playing hide and seek
  4. கவண் – Playing with a catapult – like object called ‘kalanku’
  5. கழங்கு – Playing with ball – like object called Kalamka
  6. குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும் – Spending time by riding horse and elephant
  1. குரவை (கூத்து)  – To perform a kind of dance called karavai
  2. குறும்பு விளையாட்டுகள் – To play by doing mischievous things for fun
  3. சாம விளையாட்டு – To play by corning suitable names for each other.
  4. சிறு சோறு ஆக்கல் – To play by imitating cooking
  5. சிறுதேர் – To play by pulling Chariot like cart
  6. சிறு பறை – To play by beating the drum
  7. சிற்றில் செய்தல் – To play by building houses in sand
  8. சுண்ண விளையாட்டு – To play by throwing scented powder called Cunnam on other
  1. சூது  – Gambling
  2. செடி கொடி வளர்ப்பு – Spending time on nursing flower plants
  3. நீர் விளையாட்டு – Water sports
  4. பந்து – Ball game
  5. பறவைகளைக் காணலும் அவற்றின் செயல்கள் போல் செய்தலும் – Watching birds and their activities and imitating than
  1. பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்  – To Spend time in rearing pet birds and animals.
  1. பறவை விலங்குகளுடன் விளையாடல்  – To play with pet birds and animals
  1. பாவை விளையாட்டு – To play with dolls known as pavai
  2. பிசி – நொடி விளையாட்டு – To play puzzle games and story telling
  3. புள் ஓட்டல் – To scare away birds
  4. மணற் குவியலில் மறைத்தாடல் – To play hiding an object into the heap of sand and seek it
  1. மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும்   –To play plucking flowers and weaving them into garlands.
  1. மல் – Wrestling
  2. வட்டு – To play with marble – like object called vattu.
  3. வள்ளை – To play UL (halling)the grains and singing
  4. வில் விளையாட்டு – To play with bow and arrow
  5. வேட்டை – Hunting for pleasure

தொ. இரா. நஞ்சுண்டன் அவர்கள் காப்பியங்களில் விளையாட்டுகள் என்னும் நூலில் இதே போன்று 34 விளையாட்டுகளை அட்டவணைப்படுத்தியுள்ளார். அதில் மேல்குறிப்பிட்டுள்ளவற்றில் இல்லாத பத்து விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவை

  1. அம்மானை – Playing and singing with ball-like objects, called ‘ammanai’.
  2. இடுதேளிடல்-Having fun by throwing scorpion-like object on somebody
  3. உகிரால் பற்பல உருவம் கிள்ளல்-To play by making various designs with leaves etc. Using nails
  4. கருவுற்ற பெண்போல் நடித்து விளையாடல்-To Play by imitating a pregnant lady
  5. கள்வர் – காப்பவர் – மறிகள் என நடித்து விளையாடல்-Playing by acting like thieves, guards and sheep
  6. சம்மங்கோரை கொண்டு விளையாடல்-To imitate a sword-game by using a kind of grass called ‘campu’
  7. சிவம்பம்- To play with a staff called ‘cilampam’
  8. செண்டாடல் –Playing polo-like game called ‘centu’
  9. பட்டம் –Kite – flying
  10. படகு விளையாட்டு –Boating Sports

சங்க இலக்கிய விளையாட்டுகளுள் அசதியாடல், அம்புலி அழைத்தல், அலவன் ஆட்டல், உலாவல், ஊசல், எண்ணி விளையாடல், சுண்ண விளையாட்டு, சூது, நீர்விளையாட்டு, பந்து, பறவைகளைக் காணலும் அவற்றின் செயல்கள் போல் செய்தலும், பறவை, விலங்குகளுடன் விளையாடல் என்றும் பன்னிரெண்டு விளையாட்டுகளும் இருபாலாரும் விளையாடும் விளையாட்டுகளாம். அதே போன்று, ஏறுகோள், குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும், குறும்பு விளையாட்டுகள், சாமவிளையாட்டு, சிறுதேர், சிறுபறை, மல், வில் விளையாட்டு, வட்டு, வேட்டை முதலானவை ஆண்பாலாருக்கும், எதிரொலி கேட்டல், கண்பதைத்து ஒளிந்தாடல், கவண், கழங்கு, குரவை, சிறுசோறு, சிற்றில் செய்தல், செடி – கொடி வளர்ப்பு, பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும், பாவை விளையாட்டு, பிசி – நொடி விளையாட்டு, புள் ஓட்டல், மணற் குவியலில் மறைத்தாடல், மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும், வள்ளை முதலானவை பெண்பாலாருக்கு உரியனவாகக் குறிப்பிடப்படுகிறது.

இதே போன்று இன்றளவிலும் நம்மவர்கள் விளையாடும் விளையாட்டுகளை ஆண்களுக்கு உரியன, பெண்களுக்கு உரியன, இருபாலருக்கும் உரியன என்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு, பெரியவர்களுக்கான விளையாட்டுகள் என்றும் பகுத்தறியலாம்.

தமிழ் நாட்டு விளையாட்டுகளுள் இன்று சிறார்களால் மிகுதியாக விளையாடப்படும் விளையாட்டுகளான கோலி, கில்லி (கிட்டிப்புள்) அல்லது சில்லாங்குச்சு, எறிபந்து, காயா பழமா, பம்பரம், கிளித்தட்டு, சடுகுடு(கபடி), பூக்குதிரை, பாய்ச்சல் குதிரை ஆகியன உள்ளன.

கோலி

கண்ணாடியாலும் கல்லாலும் ஆன சிற்றுருண்டைகளை விரல்களால் சுண்டியும், உருட்டியும், எறிந்தும் ஆடும் ஆட்டம் கோலி ஆட்டம் எனப்படும்.

கில்லி

கில்லி ஆட்டத்திற்குக் கிட்டிப்புள், சில்லாங்குச்சு ஆகிய பெயர்களும் உள்ளன. சிறு குச்சு ஒன்றை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டமாக இது அமைகிறது

எறிபந்து

பந்தினை ஒருவர் மேல் ஒருவர் எறிந்தாடும் ஆட்டமாகும்.

காயா பழமா?

நீர் நிலைகளில் நின்று கொண்டு காயா பழமா? என்று கேட்டு தண்ணீரில் விரலால் சுண்டி ஓசை எழுப்பி ஆடும் ஆட்டமாகும்.

பம்பரங்களை ஆடவிட்டு ஆடும் பம்பர ஆட்டம் ஓயாக்கட்டை, உடைந்த கட்டை, பம்பர குத்து, இருவட்டக் குத்து, தலையாரி என்றும் முறைகளில் விரும்பிய வகையில் ஆடப்படுகிறது.

கிளித்தட்டு

நீள் நாற்கோண வரப்புக் கோடுகள் அமைக்கப்பட்டு அவற்றின் குறுக்கே விளையாடுபவரின் எண்ணிக்கையைப் பொறுத்து குறுக்காகத் தட்டுக் கோடுகள் அமைத்து விளையாடுவர். இரு அணியாகப் பிரிந்து ஒரு அணியின் தட்டுள். இறங்குவர் மறு அணியினர் மறிப்பர். பிடி கொடாமல் தப்பிப்பதற்குப் பயிற்சியாக அமையும் இவ்விளையாட்டு.

சடுகுடு (கபடி)

தமிழர் விளையாட்டுகளுள் முதன்மையான ஒன்றாக சடுகுடு திகழ்கிறது. ஏறு தழுவுதலுக்கு (ஜல்லிகட்டு) தயாராவதற்கு முன் மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இதனை சிலர் குறிப்பிடுகின்றனர். கை + பிடி = கபடி என்று இதற்கு பெயர் வந்திருக்க வேண்டும் என்பாரும் உளர். இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் போட்டியாக இது திகழ்கிறது.

பூக்குதிரை

ஒரு பூவின் பெயரைச் சொல்லி ஒருவர் மேல் ஒருவர் குதிரையேறி விளையாடுவது பூக்குதிரை.

பாய்ச்சல் குதிரை

ஒருவர் கீழே அமர்ந்தும், பின் குனிந்தும் தன் உயரத்தைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டே இருப்பார். வரிசையாக தாண்டுபவர்கள் எந்நிலையிலேனும் தாண்ட முடியாது நின்றால் அவர் குனிந்து நிற்க, பிறர் அவ்வாறே தாண்டி விளையாடுவது பாய்ச்சல் குதிரை.

அதே போன்று பெண்களால் ஆடப்படுவனவற்றுள் கழங்கு, பாடல் ஆட்டம், பாண்டி, கண்ணாம்பொத்தி போன்றவை சிறப்பிடம் பெறுவனவாகும்.

கழங்கு

பெண்கள் விளையாடும் விளையாட்டுகளுள் கழங்கு சிறப்பிடம் பெற்றுள்ளது.  பெண்கள் சிறு கற்களைக் கைகளால்  தட்டிப்பிடிக்கும் விளையாட்டாக இது அமைகிறது.  கழங்கு வீட்டினுள்ளும் வீட்டு முற்றத்திலும் விளையாடப்படும்.  இவ்விளையாட்டானது பயன்படுத்தப்படும் சிறு கற்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.  அவை மூன்றாங்கல், ஐந்தாங்கல், ஏழாங்கல், பல நாலொருகல், பன்னிருகல், பலகல், பதினாறாங்கல் என்பனவாகும். தட்டாங்கல் என பொதுவாகவும் அழைப்பதுண்டு.

பாடல் ஆட்டம்

சிறுமியர் இருவராகவோ, இரு அணியினராகவோ நின்று கொண்டு புதிர்பாடல்கள் பாடி ஆடும் ஆட்டம் பாடல் ஆட்டம் எனப்படும்.

உதாரணமாக ஆடும் – ஓநாயும் ஆட்டம்.

இதில் வரிசையாக ஒருவர் இடுப்பை மற்றவர் பிடித்தபடி நிற்பார்கள்.   இவர்கள் ஆடுகள், ஒருவர் மட்டும் சுற்றிவந்து வரிசையில் இருந்தது பிரிபவரைப் பிடிக்க முயல்வார்.  அவர் ஓநாய். கீழ் உள்ளது போல், தங்களின் உள்ளம் போல் பாடிக்கொண்டே ஆடுவர்.

ஓநாய்:என்னாட்டைக் காணோமே
ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ
ஓநாய்: அடுப்பு மேல ஏறுவேன்
ஆடு: துடுப்பைக்கொண்டு சாத்துவேன்
ஓநாய்: நெல்லைக் கொறிப்பேன்
ஆடு: பல்லை உடைப்பேன்
ஓநாடு: வடி தண்ணியைக் கொட்டுவேன்
ஆடு:வழிச்சு வழிச்சு நக்கிக்கோ
ஓநாய்:கோட்டை மேலே ஏறுவேன்
ஆடு: கொள்ளிக் கொண்டு சாத்துவேன்
ஓநாய்:என்னாட்டைக் காணோமே?
ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ.

இவ்வாறு கேள்வி-பதில் வடிவில் தொடரும். குழந்தைகள் கேள்விகளுக்குச் சட்டென்று(உடனடியாக) பதிலளிக்கும் பழக்கத்தை இவை போன்ற விளையாட்டுகள் உருவாக்கும்.  சிறுவர், சிறுமியர் இருபாலரும் இத்தகைய பாடல் ஆட்டத்தை ஆடுவர்.

கண்ணாம்பொத்தி

ஒருவர் கண்களைப் பொத்தி கொண்டிருக்கும்போது மற்ற சிறார்கள் ஓடி ஒளிவர்.  பின்னர் கண்களைப் பொத்திக்கொண்ட சிறுவர் ஓடிப்போய் அங்கும் இங்கும் பார்த்து ஒளிந்து கொண்டிருக்கும் சிறுவர்களுள் ஒருவரைத் தொடமுயல்வார்.  முதலாவது தொடப்பட்ட சிறுவர் அடுத்த முறை கண்களைப் பொத்த ஆட்டம் தொடரும்.

குலைகுலையாய் முந்திரிக்காய்

சிறார் பலரும் வட்டமாய் உள்நோக்கி உட்கார்ந்திருப்பர்.  ஒருவர் திரிபோல முறுக்கிய துணியொன்றைக் கையில் வைத்துக்கொண்டு ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’  என்று கூறியபடி சிறாரைச் சுற்றி வலமாக ஓடிவரும்போது யாருக்கும் தெரியாமல் கையில் உள்ள திரியை ஒருவர் பின்னே வைத்து விடுவார்.  வைக்கப்பட்ட திரியின் நேரே உள்ளவர் உடனே கண்டு எடுக்காவிடின் சுற்றி வருபவர்  அருகில் வரும்போது அவர் முதுகில் திரியால் மெதுவாகத் தட்டி எழுப்பிவிடுவார்.  ஓடிவந்தவர் அங்கு அமர்ந்துவிடுவார். எழும்பியவர் திரியுடன் ஓடிவர வேண்டும்.  இவ்விளையாட்டிற்குத் திரித்திரி பந்தம் என்ற பெயரும் உண்டு.

நொண்டி

கட்டமாகவோ, சதுரமாகவோ கீறப்பட்ட கோட்டினுள் அணியாக நிற்பர்.  ஒருகாலை மடக்கி நொண்டி செல்பவர் ஒருவரையோ, பலரையோ தொட்டு வெளியேற்றவேண்டும்.

கும்மி

சிறுமியர் கைகளைக் குவித்து தட்டி ஓசையெழுப்பி பாடலோடு ஆடும் ஆட்டம் கும்மியாகும்.  இதற்கென தனியாகப் பாடல்கள் உள்ளன.

தாயம்

தாயம் மிகத்தொன்மையான விளையாட்டுகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.  தமிழில் கிடைக்கப்பெற்றுள்ள முதல் நூலான தொல்காப்பியத்திலும் இது குறித்தக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.  இது பலவகைப்படும்.  நாயும், புலியும், பரமபதமம், குறுக்குக் கட்டத்தாயம் போன்றவையும் இதன் வழிவந்தவையே என்பர்.

இதே போன்ற விளையாட்டுகள் மட்டுமல்லாமல் ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், களரி போன்ற வீர விளையாட்டுகளும் தொன்மையான காலந்தொட்டே தமிழர்களால் விளையாடப்பட்டு வருகின்றன.

ஏறுதழுவுதல்

காளைகளை அடக்கும் வீரவிளையாட்டாக இது திகழ்கிறது.  தொன்மையான இலக்கியங்கள் பலவற்றிலும் இது தொடர்பான செய்திகள் காணப்படுகின்றன. இன்றைய ஜல்லிக்கட்டு இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆநிரைகளை அடக்குதல், காளைகளை அடக்கும் முன் குரவைக்கூத்து நிகழ்த்துதல் போன்ற தகவல்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்டாலும் இவ்விளையாட்டு குறித்த விரிவான தகவல்கள் அவற்றில் இடம்பெறவில்லை.  இருப்பினும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்ற ஒன்றாக இதனைக் கருதுகின்றனர்.

சிலம்பம்

இது தமிழர்களின் தற்பாதுகாப்புக்கலை.  வீரவிளையாட்டாகவும் திகழ்கிறது.  கம்பு சுற்றுதல் என்றும் கூறுவதுண்டு. இதில் கம்பு சுற்றும் முறை, கால் மற்றும் உடல் அசைவுகள் முதன்மை இடம் பெறுகின்றன.  கலிங்கத்துப் பரணியில் “வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே” என்று வரும் இடத்தில் தண்டு எனக்குறிப்பிடுவது சிலம்பக்கம்பினையே என்பர். கம்புசூத்திரம், குறுந்தடி சிலம்பம் என்றும் சுவடிகள் சிலம்பப்பயிற்சி தொடர்பானவை என்றும் கூறுகின்றனர்.

களரி

களரிக் கலையும் பழந்தமிழகத்தில் தோன்றிய வீரவிளையாட்டுகளுள் ஒன்றாகும். இது வடக்கன்களரி,  தெக்கன் களரி என இரு வகைப்படும்.  தமிழகத்தின் தென்பகுதியிலும் இன்றைய கேரளாவான சேரநாட்டிலும் இக்கலை வடிவம் இன்றும் சிறப்புடன் திகழ்கின்றது.  வாள், கத்தி, மான்கொம்பு, சுருள்வாழ், மழு, கோடாலி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டமாகும்.

இதே போன்ற எண்ணிடலங்காத விளையாட்டுகளுக்கு உரிமையுடையவர்களாக நம்மவர்கள் திகழ்கின்றனர்.  நமது இயற்கைச் சூழல், பண்பாடு போன்றவற்றிற்கு ஏற்ப இவ்விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.

இவ்விளையாட்டுகளைக் குறித்து நுணுகி ஆய்வுகள் மேற்கொண்டால் தமிழக மக்கள் எத்தகைய விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து ஆடிவந்தனர் என்பது வெளிப்படும்.  மேலும் தொன்மையான விளையாட்டுகள் பலவும் எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்று ஆடப்படுகின்றன என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *