Tag: பேராசிரியர் இ.அண்ணாமலை

  • மூலத் திராவிடம் தமிழ் அல்ல

     

    இ. அண்ணாமலை

    அண்மையில் Royal Society Open Science என்னும் ஆய்விதழில் (மார்ச், 2018) வெளிவந்த  A Bayesian phylogenetic study of the Dravidian language family என்னும் கட்டுரை தமிழுலகில் ஒரு பரவசத்தை உண்டாக்கியிருக்கிறது. திராவிட மொழிகள் ஆய்வில் இந்தக் கட்டுரையின் உண்மையான பங்களிப்பு என்ன என்பதைச் சொல்வது இந்தக் குறிப்பின் நோக்கம். ஆய்விதழாகவும் இப்போது  உருவெடுத்திருக்கும் வல்லமை தன் வாசகர்களுக்குத்  தவறான கருத்துகளத் தரக்கூடாது என்பது இதை எழுதுவதற்கு ஒரு உந்துதல்.

    திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகளாக இருக்கிறது என்பது இந்தக் கட்டுரையின் கண்டுபிடிப்பு. இதைப் புதிய கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. சுவலபில், கிருஷ்ணமூர்த்தி போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் மொழியியல் வழிமுறை (methodology) மூலம் தோராயமாகக் கணித்த காலம்தான் இது. இந்தப் புதிய கட்டுரை மரபணு ஆய்வு வழிமுறை மூலம் இதே வந்திருக்கிறது. இது திராவிட மொழி ஆராய்ச்சிக்கு நல்ல வரவுதான். ஒரு மக்கள் கூட்டத்தில் மக்களின் மரபணுக்களில் வித்தியாசம் இருக்கும். இவர்கள் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் என்றால், இந்த வித்தியாசம் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பெருகுகிறது என்பது மரபணு ஆய்வின் ஒரு கொள்கை. உள்ள வித்தியாசத்தைக் கணிதமுறையைப் பயன்படுத்திச் சுருக்கிகொண்டே போய், அதாவது பொதுவாக மக்களிடம் உள்ள மரபணுக்களைமட்டும் தனிப்படுத்திக்கொண்டே போனால், முந்திய ஒரு காலகட்டத்தில் பொதுவான மரபணுக்கள்மட்டும் இருந்த நிலை வரும். அந்த நிலை அந்த மக்கள் கூட்டம் தோன்றிய காலகட்டம் அல்ல. அதற்கு முன்னால் பொது மரபணுக்களே தொடர்ந்து இருந்துவந்த காலகட்டத்தின் எல்லைக்கோடு அந்த நிலை என்று சொல்ல வேண்டும்.

    மரபணுக்கள் என்னும் அலகுக்குப் பதில் மொழியின் சொற்களை அலகாக எடுத்துக்கொண்டு, மாறிய சொற்களை நீக்கிக்கொண்டே பின்னோக்கிப் போனால், மொழிக் குடும்பம் ஒரு மொழியாக, சொல் வித்தியாசம் இல்லாமல் இருந்த, காலத்தைக் காட்டும் என்பது ஆய்வாளர்களின் அனுமானம். இது சொல் வேறுபாடு இல்லாமல் கடைசியாக இருந்த காலத்தின் எல்லைக்கோடு. மரபணுக்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மாறிக்கொண்டே இருப்பது மரபியல் ஆய்வின் ஒரு கொள்கை. இது சரியானால், இந்த எல்லைக்கோட்டுக்கு முன்னால் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மக்கள் கூட்டம் தனிக்கூட்டமாக உருவாகியிருக்க முடியாது. இந்த மரபணு ஆய்வின் கொள்கையையும் வழிமுறையையும் மொழிக்குடும்பத்துக்கும் பொருத்தி ஆய்வு செய்யும்போது ஆய்வு பின்னோக்கி எடுத்துச் செல்லும் எல்லைக்கோட்டுக்கு முன்னால் மூலமொழி இருந்திருக்க வாய்ப்பில்லை. இதனால திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றம் 4500 ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில் இருந்திருக்கும் என்று முடிவு கட்டுகிறார்கள். மொழியைப் பொறுத்தவரை சொல் மாற்றம் ஏற்பட்ட காலத்துக்கு முன்னால் –அதாவது ஆய்வில் நிறுவப்பட்ட மூலமொழியின் காலத்துக்குமுன்னால் – மொழி இல்லை என்று சொல்ல முடியாது. அதே சமயம், அதை நிருபீக்க மொழியியலில் வழிமுறை எதுவும் இல்லை.

    மரபணு ஆராய்ச்சி வழிமுறையை மொழி ஆராய்ச்சியில் பயன்படுத்துவதில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை இங்கே பேசவில்லை. இங்கே ஒரு முக்கியமான உண்மையை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். எல்லைக்கோட்டில் இருந்ததாகச் சொல்லும் மொழி ஆய்வின் கட்டுமானமே. ஒரு இயற்கையான மொழியின் எல்லாக் கூறுகளும் அதில் இருக்காது. அதாவது, மூல மொழி ஒரு கொள்கை (theoretical construct); மக்கள் வாழ்க்கையில் பேசிய மொழி (natural language) அல்ல. திராவிட மொழிகளைத் தரவாகக் கொண்டு கட்டுமானம் செய்யும் போது நமக்குக் கிடைக்கும் மொழி மூலத் திராவிடம்.

    இந்த ஆய்வின் முடிவைத் தமிழர்கள் புரிந்துகொள்வதில்தான் பெரிய தவறு இருக்கிறது. மூலத் திராவிடம் தமிழ் என்று கொள்வதே இந்தத் தவறு. இது  இதை வல்லமை ஆசிரியரின் குறிப்பில் காணலாம். மேலும், இந்த ஆய்வுக் கட்டுரையில் சமஸ்கிருதம்பற்றி ஒன்றும் இல்லை. இந்தக் கட்டுரை திராவிட மொழிக் குடும்பத்தையும் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தையும் ஒப்பிடவில்லை.

    4500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மொழி,  ஆய்வால் கட்டப்பட்ட மொழி,  மொழியின் ஒரு சிறு கூறே. அதற்கு ஆய்வாளர்கள் தரும் பெயர் மூலத் திராவிடம். இந்த மொழி தமிழ் அல்ல; இன்று வழக்கில் உள்ள எந்தத் திராவிட மொழியும் அல்ல. இதில் சங்கத் தமிழின் சில மொழிக்கூறுகளுக்கு மாறான கூறுகளும் உள்ளன  மூலத் திராவிடத்திலிருந்து காலப்போக்கில் பல கட்டங்களில் மூல மொழியிருந்து புதிய மொழிகள் தோன்றுகின்றன. அவற்றில் தமிழும் ஒன்று; இது 2000 ஆண்டுகளுக்குமுன் தமிழ் என்று பெயரிடப்பட்ட ஒரு மொழி. இந்த மொழி இந்தக் காலத்துக்கு முன்னும் பேசப்பட்டிருக்கலாம். தொடர்ந்து வரும் பேச்சுக்குத் தமிழ் என்று எப்போது பெயரிடப்பட வேண்டும் என்பது மொழியியலாளருக்கு முன்னுள்ள கேள்வி. இந்தக் கேள்விக்கு மேலே சொன்ன ஆய்வுக்கட்டுரையில் தரும் காலம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள். (ஆய்வுக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட, கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).  இந்தத் தமிழில் இன்றைய மலையாளமும் அடங்கும். இந்த ஆராய்ச்சியின்படி, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பேசப்பட்ட மொழியில் துளு, தோடா, கோத்தா ஆகிய மொழிகளும் அடங்கும். தமிழ் என்று தனித்துப் பேசிய மொழியின் காலத்தை எடுத்துக்கொண்டால், இந்த ஆராய்ச்சி காட்டும் 2000 ஆண்டுகள் குறைவான கணிப்பு என்பது புரியும். தமிழின் காலத்தை இந்தக் காலகட்டத்திற்கு முன்னால் நிறுவுவதற்குத் தமிழில் எழுத்துச் சான்றுகளே உள்ளன.

    மேலே சொன்ன துளு முதலான மொழிகளுக்கு முன்னோடியாக இருந்த மொழியும் ஆய்வின் கட்டுமானம்தான். மூலத் திராவிடமும் கட்டுமானம்தான். இதற்குத் தமிழ் என்று பெயர் கொடுப்பது உங்கள் தாத்தா பெயரும் உங்கள் மூதாதையர் ஒருவர் பெயரும் ஒன்று என்று சொல்வது போன்றது; அது மட்டுமல்ல,  தாத்தாவும் அந்த நபரும் ஒருவரே என்று அடையாளம் காண்பதைப் போன்றது.

    இந்தக் கட்டுரையைத் தமிழின் தொன்மையைக் காட்டும் ஒன்றாகக் கொண்டாடுபவர்கள் இது ஒரு பெயர் விளையாட்டு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சுந்தரம் பிள்ளயின் தமிழ்த் தாய்ப் பாட்டில் தமிழிலிருந்து மற்ற திராவிட மொழிகள் பிறந்தன என்று சொன்னது ஒரு கவிதை வெளிப்பாடு. அது ஒரு அரசியல் வெளிப்பாடும்கூட. அது, மேலே சொன்ன கட்டுரை உட்பட, மொழியியல் ஆய்வின் வெளிப்பாடு அல்ல.

    இந்திய-ஆரிய மொழிகளின் மூலமொழியை -மூல இந்திய ஆரியத்தை- இன்றைய இந்திய-ஆரிய மொழிகளை ஒப்பிட்டு வரலாற்று மொழியியல் வழிமுறையைப் பயன்படுத்திக் கட்டுமானம் செய்தால், அது சமஸ்கிருதத்திலிருந்து சில வித்தியாங்களைக் கொண்டிருக்கும் என்று கூறலாம். அப்படிச் செய்யாமல், இந்திய ஆரிய மொழிகள் சமஸ்கிருத்திலிருந்து பிரிந்தன என்று சொல்வதற்கும் அரசியல் காரணம் உண்டு. ஆனால், இதற்குச் சில வரலாற்றுக் காரணங்களும் உண்டு. சமஸ்கிருதம் இந்திய-ஈரானிய மொழிக்குடும்பத்திலிருந்து பிரிந்து தனி மொழியான காலகட்டம் 3500 ஆண்டுகளுக்கு முன்.  அதாவது, மூலத்திராவிடத்தின் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின். போஜ்புரி, மைதிலி, ஒரியா, குஜராத்தி முதலான இந்திய-ஆரிய மொழிகள் (இதில் காஷ்மீரி அடங்காது), திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த பிராஹுயி, குடுஹ், கோண்டி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் பிரிந்த காலத்துக்குப் பிற்பட்டவை. சமஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் பிரிந்தது 3500 ஆண்டுகளுக்குப் பின்னால்தான். அவற்றிலிருந்துதான் இன்றைய இந்திய- ஆரிய மொழிகள் பிரிந்தன. இந்த மொழிகளில் சமஸ்கிருதத்தில் இல்லாத, மூல இந்திய-ஆரியத்தைச் சேர்ந்த சில மொழிக்கூறுகள் உண்டு. சமஸ்கிருதத்தின் சமகாலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் இந்திய-ஆரிய மொழிக்குடும்பம் இருந்ததற்கு ஆதாரமோ, இருந்திருந்தால் அவற்றின் தொடர்ச்சியில் வந்த மொழிகள் இன்று இருப்பதற்குச் சான்றோ, இல்லையாதலால் சமஸ்கிருதமே மூல இந்திய ஆரிய மொழி என்ற கருத்து மொழியியலிலும் நிலைப்பட்டிருக்கிறது. இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ரொமான்ஸ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பிரெஞ்சு, ஸ்பானிஷ் முதலிய மொழிகள் லத்தீனிலிருந்து பிரிந்தவை என்று சொல்வதைப் போல.

    இந்த மொழி நிலைமையைத் திராவிட மொழிக்குடும்பத்துக்குத் தவறாகப் பொருத்துவதால், மூலத்திராவிடம் தமிழே என்ற பிழையான கருத்துப் பிறக்கிறது.

    (ஒரு மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிய என்னுடைய தமிழ் இன்று: கேள்வியும் பதிலும் (அடையாளம் பதிப்பகம்) என்ற நூலைப் படைக்கலாம். இதில் உள்ள கேள்வி பதில்கள் வல்லமையில் முன்னால் வெளிவந்தவை).

     

    Share
  • தமிழால் முடியுமா? – தமிழக அறிவுஜீவிகள் பலரும் எழுப்பும் கேள்வி – 49

    பேராசிரியர் இ. அண்ணாமலை

    தமிழால் முடியுமா என்னும் கேள்வி நவீன காலத்தில் தோன்றியுள்ள கேள்வி. நவீன காலத்திற்கு முன்னால் இந்தக் கேள்வியைத் தமிழர்கள் கேட்டதாகத் தெரியவில்லை. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில்கூட இந்தக் கேள்வி எழவில்லை. காலனிய காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் வேரூன்றியபோதே இந்தக் கேள்வி எழுந்தது. இது பாமரர்களிடம் எழவில்லை; ஆங்கிலம் கற்றவர்களிடம் எழுந்தது. முடியும் என்போர், முடியாது என்போர் என இரண்டு அணிகள் எழுந்தன; எரிந்த கட்சி, எரியாத கட்சி வாதத்திற்கு இன்னும் விடிவில்லை. இந்தக் கேள்வி எது முடியுமா என்று கேட்கிறது என்று வெளிப்படையாகச் தெரியப்படுத்தவில்லை. இது நிச்சயமாகக் காதல் செய்வது பற்றிக் கேட்கவில்லை; இலக்கியம் செய்வது பற்றிக் கேட்கவில்லை; திரைப்படம் எடுப்பது பற்றிக் கேட்கவில்லை; உழவுத்தொழில் செய்வது பற்றிக் கேட்கவில்லை; வணிகம் செய்வது பற்றிக் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பலவேறு துறைகளில் தமிழில் இயங்கமுடியுமா என்று இந்தக் கேள்வி கேட்கவில்லை. இந்தக் தமிழால் நாட்டை ஆட்சி செய்வதைப் பற்றியது; நீதிமன்றங்களில் வழக்காடுவது பற்றியது; கல்லூரிகளில் கல்வி கொடுப்பதைப் பற்றியது. அதாவது, தமிழ் அதிகார மொழியாக, அறிவு மொழியாகச் செயல்பட முடியுமா என்பதே இந்தக் கேள்வியின் சாரம்.

    மொழிக்கென்று உள்ளார்ந்த தனித்திறன் எதுவும் இல்லை. ஒரு மொழி செய்வதை இன்னொரு மொழி அதன் தன்மை வேறுபாட்டால், இலக்கண வேறுபாட்டால் செய்ய முடியாது என்பதில்லை. எந்த மொழியும் எதையும் செய்ய முடியும். இதற்கு வாய்ப்பு வேண்டும். வாய்ப்பைத் தர அந்த மொழியைப் பேசுபவர்கள் விரும்ப வேண்டும்; விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு பலம் வேண்டும். இந்த பலம் ஆட்சி பலம், பண பலம் மட்டுமல்ல; அறிவு பலமும் ஆகும். ஆட்சி பலமும், பண பலமும் பெறுவது வரலாற்றுக் காரணங்களைப் பொறுத்தது; அறிவு பலம் பெறுவது சமூகத்தின் கையில் இருக்கிறது; செய்யவேண்டும் என்ற சமூகத்தின் முனைப்பில் இருக்கிறது. தமிழர்களின் அறிவு பலம் –அறிவியல் பலம், சட்டவியல் பலம், வணிக மேலாண்மை பலம் முதலானவை எல்லாம்- ஆங்கிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பலத்தின் கனம் தமிழர்களின் காலைத் தமிழ் அறிவு உலகில் ஓடவிடாமல் கட்டிப்போடுகிறது; தங்களால் முடியாது என்ற மனநிலையையும் உருவாக்குகிறது. இந்த மனநிலைதான் தமிழ் அறிவுத்துறைகளில் மேலே செல்லாமல் தடுக்கும் கால்கட்டு; தமிழ் மொழி அல்ல. தங்களால் முடியாது என்னும் மனநிலை தமிழால் முடியாது என்னும் சமாதானத்தில் மறைக்கப்படுகிறது.

    அறிவுத் தமிழ் தான்தோன்றி அல்ல. இது அறிவியல் தமிழ் மட்டுமே அல்ல.; அதை விடப் பரந்துபட்டது இந்தத் தமிழ் உருவாவது அறிவுத்துறைகளில் புலமை பெற்றவர்களின் கையில் உள்ளது. தங்கள் புலமையைப் பிற மொழிகளின் வழியே பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தித் தமிழில் எழுத வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் எழுத வேண்டும். பிற அறிவுத்துறைகளைச் சாரந்த புலவர்களுக்கும் தங்கள் துறை அறிவைத் தமிழில் எழுதவேண்டும். இந்த எழுத்தியக்கத்தைத் துவங்க அரசின் தயவுக்குக் காத்திருக்கத் தேவை இல்லை; அரசின் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை மாற்றாமல் செய்ய முடியாது என்று கையைப் பிசையத் தேவை இல்லை.; பழியை மற்றவர்களின் மேல்போடத் தேவை இல்லை.  பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்க இன்றைய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தமிழ்வழியே பல துறை அறிவை வளர்க்க எழுதுவதை, உலகமயமாதலின் விளைவாகத் தோன்றும் பொருளாதார, சமூக, கலாச்சாரக் கேள்விகளுக்குப் பதில் தேடி எழுதுவதை வலைப்பூக்களில், மின்னிதழ்களில், இணையதள விவாதக்குழுக்களில் ஆரம்பிக்கலாம். இங்கும் அரைத்த மாவையே அரைக்கத் தேவை இல்லை. எந்தத் துறையறிவைப் பற்றியும் தமிழில் எழுதினால், தமிழ்த்துறை சார்ந்தவர்களே எழுத வேண்டும் என்னும் நியதி மாற வேண்டும்.

    அறிவுத்தமிழ் எழுதப் தமிழ்ப் புலமை தேவை என்பது தடுக்கும் சுவராக, விலங்காக அமையக் கூடாது. கலப்பற்ற தமிழில்தான் இந்தத் தமிழை எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. குழந்தை நடக்கத் துவங்கும்போது நேராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு முரணானது. புதிய துறையில் ஒரு மொழியின் வளர்ச்சியும் இப்படியே.

    எழுத்தறிவு இயக்கத்தைப் போல, அறிவுத்தமிழ் எழுத்தியக்கமும் தமிழுக்கு அறிவொளி இயக்கமாகப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது தமிழ் அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.

    Share
  • பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் – 48

    இன்றைய எழுத்துத் தமிழும்  பேச்சுத் தமிழும் வேறுவேறு மொழிகளா?

    -இணையக் குழுக்களில்  விவாதிக்கப்படும் கேள்வி

    வல்லமையில் என்  முப்பத்தைந்தாம் கேள்வி-பதிலில்  இன்றைய எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் உள்ள சில இலக்கண வேறுபாடுகளை  எழுதினேன். மேலே உள்ள கேள்வி அந்த மாதிரியான இலக்கண வேறுபாடுகள்  இரண்டு தமிழையும் வேறு மொழிகள்  ஆக்குகின்றனவா என்று கேட்கிறது. அதாவது, வேறுபாடு நடை அல்லது வெளிப்பாட்டு வேறுபாடா, அல்லது மொழி வேறுபாடா என்பதே கேள்வி.

    இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவை. எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்ற பெயர்கள் பெரும்பான்மை வழக்கு பற்றித் தரப்பட்ட பெயர்கள். மேடைப் பேச்சும் எழுத்துத் தமிழில் அடங்கும்; எழுதப்படும் கதைகளின் பாத்திரங்களின் உரையாடல்களும் சிரிப்புத் துணுக்குகளும் பேச்சுத் தமிழில் அடங்கும். எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்னும் வேறுபாடு, மொழி வெளிப்படும் ஊடக வேறுபாட்டைக் காட்டுவது மட்டுமல்ல; அது தமிழை வழங்குவோர்களிடையே உள்ள உறவின் தூரத்தையும் நெருக்கத்தையும் பொறுத்து வேறுபடுவது. இந்த வேறுபாடு மொழியின் இலக்கணத்தில் அல்லாமல் நடையிலும் பிரதிபலிக்கலாம். ஆனால், தமிழில் இலக்கணமும் இந்த வேறுபாட்டைப் பிரதிபலிக்கிறது. ஆகவே, இந்த இலக்கண வேறுபாடு மொழியை இரண்டாக்குகிறதா என்பதே கேள்வி.

    கொச்சைத் தமிழும்  கலப்புத் தமிழும் மட்டுமே  பேச்சுத் தமிழ் அல்ல. எல்லாரும்  பொதுவாகப் பொது இடங்களில்  பேசும் தமிழ் ஒன்று உண்டு. அதுவே எழுத்துத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது. இதைப் போலவே, பண்டிதர்கள், அறிவியல், சட்டம், ஆட்சியை நடைமுறைப்படுத்துவர்கள் எழுதும் தமிழ் மட்டுமே எழுத்துத் தமிழ் அல்ல. சிறப்புத் துறை சாராமல் பொதுக்கல்வி உடையவர்கள் எழுதும் தமிழே இங்கே பேச்சுத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது.

    ஒரு மொழிக் குழுவின் (linguistic community) மொழி வழக்கில் பல்வேறு மொழிகள் இருக்கலாம்; இதைப் பன்மொழியம் (multilingualism) என்பார்கள். ஒருவருடைய மொழி வழக்கில் பல வட்டார மொழிகளும் பல நடைகளும் இருக்கும். இது இயல்பு. இதைப் பன்மொழியம் என்பதில்லை; இதைப் பல்வழக்கியம் எனலாம். தமிழைப் பள்ளிகளில் கற்றவர்களிடம் உள்ள எழுத்து மொழி சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மொழி வழக்கு, இருமொழியியமா, இருவழக்கியமா என்பதே கேள்வி.

    ஒரு மொழி இலக்கணத்தின் கட்டுமானம். இந்த இலக்கணம் மொழியின் கட்டை ஒரு கணித வாய்பாடு போல விளக்கும் வரையறை; மொழிக்குச் சட்டம் போலக் கட்டுப்பாடு விதிக்கும் குற்றக் கையேடு அல்ல. மொழி கலாச்சாரத்தின் கட்டுமானமும்கூட. அதன் கலாச்சாரத்தின் கட்டுமானத்தில் மொழிக்குழுவின் வரலாறும் அரசியலும் பெரும் பங்கு பெறும். தன்னை இனங்காட்டுவதாக வரித்துக்கொண்ட மரபுச் செல்வமும் வரலாற்றில் அடங்கும். மரபுச் செல்வத்தில் இலக்கியமும் தொன்மங்களும் பெரும் இடம் பெறும். எழுத்துத் தமிழை அறியாத தமிழர்களும் அதில் உள்ள இலக்கியம் தங்கள் மரபுச் செல்வம் என்ற உணர்வை உடையவர்கள். எழுத்துத் தமிழை அறிந்தவர்களும் காலந்தோறும் மாறிவரும் தமிழ் இலக்கியத்தின் வழிவருவதே இன்று பேச்சு மொழி கலந்து எழுதப்படும் தமிழ் இலக்கியம் என்று பார்ப்பவர்கள். தமிழகத்தின் பேச்சுத் தமிழுக்கு இலங்கையின் பேச்சுத் தமிழோடும் மலையாளத்தோடும் உள்ள தூரம் ஒப்பிடக் கூடியது என்றாலும், இலங்கைத் தமிழ் தனி மொழி அல்ல என்று தமிழின் மொழிக்குழு நினைப்பதற்கு இரண்டையும் பேசுபவர்கள் இலக்கியத்தை இருவருக்கும் பொதுவான கலாச்சாரப் பாரம்பரியமாகக் கொள்வது முக்கியமான காரணம். இதற்கு மேல் அரசியல் காரணமும் இருக்கிறது. இரண்டையும் வேறாகப் பார்ப்பதை விட ஒன்றாகப் பார்ப்பதில் அரசியல் நன்மை இருக்கிறது. மலையாளத்தைப் பொறுத்தவரை இந்த நன்மை தலைகீழானது. கலாச்சாரக் கட்டுமானம் என்னும் வகையில் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் ஒரு மொழியே. இது சமூக மொழியியலாளர்களின் பார்வை.

    இலக்கண மொழியிலாளரின்  பார்வையில், இரண்டு வழக்குகள் அவற்றைப் பேசுபவர்கள் பயிற்சி இல்லாமலே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் அளவீடு முக்கியமானது. ஒரு வழக்கில் மற்றவருக்குப் புரியாத பகுதி பத்து அல்லது இருபது சதவிகிதத்திற்குள் இருந்தால், அந்த வழக்குகள் ஒரே மொழி என்று சொல்ல அவர்களுக்குத் தடை இல்லை. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் பகுதி இலக்கண ஒற்றுமையாலும் அகராதி ஒற்றுமயாலும் அமையும். ஒரு மொழியைப் புரிந்துகொள்வது என்பது துல்லியமாகக் கணிக்க முடியாத ஒன்று; மேலும் நபருக்கு நபர் அவருடைய பின்னணியைப் பொறுத்து மாறும் ஒன்று. ஒரே மொழி என்றால் பயிற்சி இல்லாமல் புரிந்துகொள்ளக் கூடியது என்ற கருத்துக்கும் ஒரே மொழி எனபது கலாச்சாரத்தால் கட்டப்படுவது என்ற கருத்துக்கும் முரண்பாடு இருந்தால், பின்னைய கருத்தின் முடிவையே மொழிக்குழு ஏற்றுக்கொள்ளும். பேச்சில் இந்தி பேசுபவர்கள் உருதுவையும் உருது பேசுபவர்கள் இந்தியையும் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், அவர்களுக்கு இரண்டும் வேறு மொழிகள். இந்த எண்ணம் எழுத்துமுறை முதலாக அரசியல் ஈறாக உள்ள வரலாற்று விளைவினை ஒட்டி எழுவது. இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் புரிந்துகொள்வதில் அதிகமாகவே இடைவெளி இருந்தாலும் இரண்டும் ஆங்கில மொழியே என்று கருதுவது  வரலாற்றின் பிரதிபலிப்பு.

    நேரடியாக இலக்கண இடைவெளியை  வைத்து ஒரு மொழி, இரு மொழி என்று வேறுபடுத்தலாம் என்பது வரலாற்று மொழியியலாளரின் கொள்கை. அதாவது, இலக்கண மாற்றங்கள் ஒரு அளவிற்கு மேல் அதிகமானால், ஒரு மொழி பிரிந்து இரண்டாகும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. ‘எந்த அளவிற்கு’ என்பதற்குப் புரிதலோடு தொடர்பில்லாத ஒரு துல்லியமான கணக்கு இல்லை. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு அவற்றின் இலக்கண விதிகளுக்கு (அதாவது வாய்பாடுகளுக்கு) இடையே உள்ள வேறுபாடு; அது அளவில் அதிகம்; அதனால் அவை இரு வேறு மொழிகள் என்பது ஒரு வாதம். வேறு சிலர், அது இலக்கண விதிகளின் வேறுபாடு அல்ல; இலக்கண விதிகளை மீறுவதால் வரும் வேறுபாடு என்பார்கள், இவர்கள் இலக்கணத்தைக் காலத்தால் மாறாத சட்டப்பெட்டகமாகப் பார்ப்பவர்கள்; இந்தப் பார்வையில் புதிய விதிகள் தோன்றுவது பேசுபவர்களின் சோம்பேறித்-தனத்தாலோ கெட்ட புத்தியாலோ நடக்கும் செயல்; அதனால் மொழி விவாதத்தில், இது –தமிழ் பேசும் எல்லாரும் செய்யும் செயலாக இருந்தாலும்- ஒரங்கட்ட வேண்டிய செயல் என்று வாதிடுபவர்கள். இது ஒரு கற்பனையான நிலையை மொழி வழக்கில் பார்த்து, தமிழ் ஒன்றா, இரண்டா என்னும் கேள்விக்கே இடம் இல்லாமல் செய்ய முயலும் செயல்.

    பேச்சுத் தமிழுக்கென்று  ஒரு இலக்கணம் உண்டு என்று ஒப்புக்கொள்பவர்களில் சிலர் சில எளிய விதிகளின் மூலம் எழுத்துத் தமிழைப் பேச்சுத் தமிழோடு இணைக்கலாம். இரண்டுக்கும் உள்ள இலக்கண இடைவெளி பொருட்படுத்தத் தக்கது அல்ல என்று வாதிடுவார்கள். ஆனால். இதை மறுக்கும் தரவுகள் உண்டு. தமிழ்க் குழந்தை பேச்சு மொழிக் கலப்பில்லாத எழுத்துத் தமிழைப் பள்ளியில் கற்க நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எழுத்துத் தமிழ்மட்டும் படித்துவிட்டுப் பேச்சுத் தமிழைப் படிக்கும் வெளிநாட்டவருக்கு அதைப் படிக்கத் தனி மொழி படிக்கும் அளவிற்கு நேரம் எடுக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் பேச்சுத் தமிழ் பத்துச் சதவிகித அளவுதான் புரிகிறது. (தமிழர்கள் தமிழை வேகமாகப் பேசுவதும் இதற்கு ஒரு காரணம் என்பார்கள்!). தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள் மேடைப் பேச்சை அமர்ந்து கேட்கிறார்கள் என்றால், அவர்களுடைய புரிதல் நூறு சதவிகிதம் என்று அர்த்தமல்ல. இன்னொரு மொழியில் இசைக் கச்சேரி கேட்பதைப் போல, ஒலியின் இனிமைக்கும் பேச்சாளரின் தமிழ்த் திறனுக்கும் மயங்கி இவர்கள் பேச்சைக் கேட்பதும் உண்மை. இதற்குப் புரிதல் முக்கியமல்ல.

    எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் இடைவெளி  எப்படி இருந்தாலும், பல சமூகக் காரணங்களால் இருபதாம் நூற்றண்டிலிருந்து இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. பேச்சு மொழியின் புதிய தொடரிலக்கணக் கூறுகளும் சொற்பொருளின் கூறுகளும் எழுத்து மொழியில் இடம் பெறுகின்றன. அதில் எழுத்து மொழிக்கே உரிய கூறுகளும் பேச்சு மொழியிலிருந்து வந்துசேர்ந்த கூறுகளும் சேர்ந்து உள்ளன. இதனால் எழுத்து மொழியில் ஒன்றைக் கூற ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்பு முறைகள் உள்ளன. சொல்லின் உள்ளமைப்புக் கூறுகளும் இப்படியே. இரண்டும் அதிகமாக வித்தியாசமாக இருப்பது சொல்லின் ஒலியமைப்பில் மட்டுமே. சொல்லிலக்கணத்தில் காணப்படும் பெரும்பான்மை வேறுபாடுகள் ஒலியமைப்பால் வருவன. இதற்கான சான்றுகளை என்னுடைய Social Dimensions of Modern Tamil என்ற நூலில் (க்ரியா வெளியீடு) காணலாம்.

    மொழிப் பயன்பாட்டிலும் இடைவெளி குறைந்துவருகிறது. மேடைத் தமிழில் நகைச்-சுவைக்கும், வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் கலந்துரையாடலிலும், செய்தித் தாள்களின் செய்தித் தலைப்பிலும், பேட்டிக் கட்டுரையிலும், திரைப்படத்தின் தலைப்பிலும் பாடலிலும் பேச்சுத் தமிழ் இடம் பெறுகிறது. பேச்சில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்து மொழிக் கலைச்சொற்கள் இடம் பெறுகின்றன.

    இயல்பாக நடக்கும் இந்த மாதிரியான  இடைவெளிக் குறைப்பை ஊக்குவிப்பதே தமிழ் ஒன்றா, இரண்டா என்ற கேள்வியின் தேவையைக் குறைக்கும். இடைவெளிக் குறைப்பில் எழுத்து மொழியில் பேச்சு மொழியின் தாக்கமே அதிகப் பங்கு வகிக்கிறது. இதற்கு மாறாக, தூய தமிழ் –அதாவது பழைய தமிழ்- வேண்டும் என்று பின்னோக்கிப் போய்ப் பழைய இலக்கண நூல்கள் சொல்லுவதைப் போல எழுத விரும்புவது இடைவெளியைக் கூட்டும். அப்படி எழுதுவதைப் போல் பேசி இடைவெளியைக் குறைக்கலாம் என்று சொல்வது எந்த மொழி வரலாற்றிலும் காணாத ஒன்று. தமிழை உன் தாயிடம் படிக்காதே, பழங்கால ஆசானிடம் மட்டுமே படி என்று சொல்வதைப் போன்ற நடக்க முடியாத செயல். இது சூடிதார் போடும் மகளைப் புடவைதான் கட்ட வேண்டும் என்று கட்டளையிடும் மனப்பாங்கின் வெளிப்பாடு. இதைச் செய்ய முடிந்தாலும், அது சர்வாதிகாரத்தினால்தான் முடியும். தமிழின் இயல்பான வளர்ச்சிக்குக் கடிவாளம் போடுவது தமிழை –தமிழ் பேசுபவர்களை- அடக்கியாளும் செயல். தமிழ் அதன் வரலாற்றில் என்றும் அடக்கியாளப் பட்டதில்லை; அதனாலேயே தமிழ் வழங்கு மொழியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கிறது.

    Share
  • பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (47)

    கேள்வி:

    மொழிகளில் தோற்றம் பற்றிக்  கணிக்க மொழியியலில் நெறிமுறை இருந்தால், அதைக் கொண்டு தமிழின் தொன்மையைக் கணக்கிட முடியுமா?

    பதில்

    PlosOne என்னும் ஆன்லைன் இதழில் வெளியான Charles Perreault & Sarah Mathew எழுதிய Dating the origin of language using phonemic diversity (http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0035289) என்னும் ஆய்வுக்கட்டுரையையும் இதன் எதிர்வினைகளையும் படித்துப் பார்த்த இராமகி tamilmanram@googlegroups.com –இல் தமிழ் ஒலியன்களின் எண்ணிக்கையை (முருகையன் கூறியதாக அவர் கொண்ட 95) வைத்து, கட்டுரை காட்டும் நெறிப்படி கணக்கிட்டால், தமிழின் தோற்றக் காலம் மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் போகும்போல் தெரிகிறது என்னும் ஐயத்தை எழுப்பி, ந.தெய்வசுந்தரத்தின் கருத்தைக் கேட்டிருந்தார். தெய்வசுந்தரம் தமிழ் ஒலியன்கள் 95 அல்ல; அது முருகையனின் கருத்தும் அல்ல என்று மறுத்துவிட்டு, மேலே சொன்ன கட்டுரையைப் பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டார். என் கருத்து இது.

    மேலே சொன்ன கட்டுரையைப் போன்று இன்னொரு ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் என்ற புகழ்பெற்ற ஆய்விதழில் ஒன்றரை ஆண்டுக்கு முன் (4.15.2011) வெளிவந்தது. அது Quentin Atkinson எழுதிய Phonemic diversity supports serial founder effect model of language expansion from Africa என்னும் கட்டுரை.

    தமிழின் தோற்றம் என்னும்போது தமிழ் மொழியின் தோற்றத்தைக் குறிக்கிறோம். தமிழ் இலக்கியத்தின் தோற்றத்திற்கு எழுத்துச் சான்று இருக்கிறது. உலகில் மொழிக்கு எழுத்து முறை தோன்றியது 5500 ஆண்டுகளுக்கு முன்தான். இதனால் மொழியின் தோற்றத்திற்கு எழுத்துச் சான்று எந்த மொழிக்கும் இதற்கு முன்னால் இருக்க முடியாது. எழுதப்படுவதற்கு முன் ஒரு மொழி பேச்சு வழக்கில் நிச்சயம் இருக்கும்.

    5000 ஆண்டுப் பழமை உள்ள சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்து மொழி தமிழ் என்பதன் சான்று உலகின் தொல்லெழுத்து அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்ளும் வகையில் இன்னும் நிறுவப்படவில்லை. அது ஒரு திராவிட மொழி என்பதற்குப் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தத் திராவிட மொழி தமிழ் என்பதற்குப் போதுமான சான்று இல்லை.

    கல்வெட்டுகளில் தமிழின் முதல் எழுத்துச் சான்று கிடைத்துள்ள கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் பேச்சு மொழியாக இருந்திருக்கும். மொழியின் ஒலியைப் பதிவுசெய்யும் தொழில்நுட்பம் வரும்வரை காற்றோடு போன பேச்சு மொழி எந்த அகச்சான்றையும்  விட்டுப்போக முடியாது. தமிழ் என்று இனங்காணும் நிலையில் உள்ள ஒரு மொழி பேச்சு வழக்கில் இருந்த காலத்தைக் காண்பதற்குத் தமிழுக்கு வெளியே புறச்சான்றைத்தான் தேட வேண்டும்.

    இன்று சில தொல்மானிடவியல் ஆய்வாளர்களும் மரபணுவியல் ஆய்வாளர்களும் சேர்ந்து ஒரு நிலப்பரப்பில் வாழும் பல மொழி பேசும் குழுக்களின் மொழி அமைப்பிலும் மரபணு அமைப்பிலும் காணும் ஒப்புமை ஒரு குழுவில் இல்லாமல் போகும்போது, குழுவின் மரபணு அமைப்பை வைத்து, அந்தக் குழுவின் மொழி காலத்தால் முந்தியதா, பிந்தியதா என்று ஆராயத் துவங்கி-யிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி துவக்கநிலையில் இருக்கிறது. (http://www.mpg.de/19395/Language_genetics)  திராவிடமொழி பேசுபவர்களையும் ஆரிய மொழி பேசுபவர்களையும் பற்றி இத்தகைய ஆராய்ச்சி இனிமேல்தான் நடைபெற வேண்டும். இது மொழியியலாளர்கள் மட்டும் செய்யக்கூடிய ஆராய்ச்சி அல்ல. மரபணு ஆராய்ச்சிதான் இதன் அடிப்படை. இந்த ஆராய்ச்சி நடந்தாலும், அது மூலத்= திராவிடமொழியின் காலத்தைக் காட்டலாமே தவிர, தமிழின் காலத்தைக் காட்டாது.

    மொழியிலாளர்கள் போன நூற்றாண்டில் மொழியின் அகச்சான்றை வைத்து, ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகளில் ஒவ்வொன்றும் எக்காலத்தில் மூல மொழியிலிருந்து பிரிந்து தனிப் பேச்சு மொழி ஆனது என்று கணிக்க ஒரு நெறிமுறையை உருவாக்கினார்கள். அதற்குச் சொல்வழிக் காலவரிசை (glottochronology) அல்லது சொல் புள்ளீயியல் (lexical statistics) என்று பெயர். இந்த ஆய்வு நெறியின் கருதுகோள் இது: மொழியில் பிரதிப் பெயர்கள், எண்ணுச் சொற்கள், உறவுச் சொற்கள் போன்ற சில வகைச் சொற்கள் பிற மொழிகளிலிருந்து  கடனாகப் பெறப் படுவதில்லை; அவை ஒரு மொழியின் இயல்பான வளர்ச்சிப் போக்கில் மறைந்தால், மறையும் காலவிகிதம் ஒரு வாய்பாட்டிற்குள் அடங்கும். இந்த வாய்பாட்டால் கண்டுபிடிக்கும் கால விகிதத்தை ஒரே மொழிக் குடும்பத்தின் மற்ற மொழிகளின் கால விகிதத்தோடு ஒப்பிட்டு ஒரு மொழி தனிமொழி ஆன காலத்தைக் கணிக்கலாம். 1970-இல் கமில் சுவலபில் போட்ட கணக்குப்படி, தமிழ் கி.மு. நான்காம் – மூன்றாம் நூற்றாண்டிற்கு இடையில் தனி மொழியானது. அதாவது, மூலத்திராவிட மொழியிலிருந்து காலப்- போக்கில் பிரிந்துவந்த மொழிகளிலிருந்து தமிழ் தன்னை வேறுபடுத்திக்-கொண்டது. மேலே சொன்ன தமிழ் ஆவணச் சான்றின்படி இது தவறான கணக்கு என்பது புரியும்.

    இது போன்ற முரண்களாலும், கடன் வாங்காத சொல்வகையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒப்பிடப் பயன்படுத்தும் அடிப்படைச் சொற்கள் குறைந்துகொண்டு போனதாலும் பேச்சுமொழியின் காலத்தைக் கணிக்கும் இந்த மொழியியல் முறை புறந்தள்ளப்பட்டது.

    முதலில் சொன்ன கட்டுரைகளில் மொழியின் காலத்தைக் கணிக்க மொழிக் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த ஆய்வுகளைச் செய்தவர்கள் மொழியியலாளர்கள் அல்ல என்றாலும். இந்த ஆய்வு முறை சொற்களுக்குப் பதிலாக ஒலியன்களின் எண்ணிக்கையை வைத்து மொழியின் காலத்தைக் கணக்கிடுகிறது. இந்த ஆய்வின் நோக்கம் மனித மொழி தோன்றிய காலத்தைக் கண்டறிவது. ஒரு மொழியின் ஒலியன்களின் எண்ணிக்கை மிக மெதுவாகவே, மிகப் பெரிய கால இடைவெளியிலேயே, விரியும் என்பது இந்த ஆய்வின் கருதுகோள். இன்றைய ஆப்பிரிக்க மொழிகளில் ஒலியன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; குறைந்த ஒலியன்களோடு பிறந்த மனித மொழி இந்த அளவு எண்ணிக்கையில் அதிகரிக்கப் பத்தாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகும்; அதிகரிப்பைக் கணிக்க ஒரு வாய்பாட்டை உருவாக்கலாம்; அதை வைத்து மொழியின் தோற்றதக் காலத்தைக் கணக்கிடலாம் என்று இந்தக் கட்டுரைகள் காட்ட முயல்கின்றன.

    அதே நேரத்தில், இன்றைய மனிதனின் முன்னோடிகள், 100000 – 70000 ஆண்டுகளுக்கு முன்னால், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வெளியேறி உலகில் பரவியபோது புதிய சூழலில் அவர்களுடைய சில மரபணுக்கள் மறைவது போல, மொழியின் பரவலில் ஒலியன்கள் மறைகின்றன என்றும் இந்தக்  கட்டுரைகள் கருதுகின்றன. எனவே, ஆப்பிரிக்க மொழிகளின் ஒலியன்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக ஒலியன்கள் உள்ள மொழிகள் காலத்தால் பிற்பட்டவை என்பது இந்த ஆய்வின் மற்றொரு கருதுகோள். ஒரு மொழியின் ஒலியன் எண்ணிக்கைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மேலே சொன்ன ஒலியன் தோன்றும், மறையும் விதி சரியானது என்பது இந்தக் கட்டுரைகளின் வாதம். இது மரபணுவின் தோற்றம், மறைவு விதி போன்ற ஒன்றை ஒலியன்களுக்கு ஏற்றிப் பார்க்கின்ற ஆய்வு முறை. ஒலியன்களின் தோற்றம், மறைவு பற்றிய இந்த வாதத்தை மொழியிய-லாளர்கள் பொதுவாக ஒத்துக்கொள்வதில்லை.. இந்த ஆய்வு முறையின் குறைகளைக் காட்டும் பல கட்டுரைகளை Language Typology என்னும் ஆய்விதழ் (Issue 15, 2011) வெளியிட்டிருக்கிறது.

    தமிழின் ஒலியன்களின் எண்ணிக்கை உலக மொழிகளின் சராசரி (40) எண்ணிக்கையை விட பெரிதும் வித்தியாசமானது அல்ல. இந்த எண்ணிக்கையை வைத்துத் தமிழ் காலத்தால் பிந்தியது என்று சொல்ல முடியாது.

    குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய மனிதர்களின் முன்னோர்கள் உலகில் பரவினார்கள் என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து உலகில் பரவிய இந்த முன்னோர்கள் –இவர்கள் இன்றைய மனிதர்களின் மூளைக்கு அடிப்டையான மூளை வளர்ச்சி பெற்றவர்கள்- இந்தியக் கண்டத்திற்குப் பரவிய காலத்தைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன. சிலர் இது 50000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்கிறார்கள்; சிலர் 70000 ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். (http://news.nationalgeographic.com/news/2005/11/1114_051114_india.html). இந்த முன்னோடிகள் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய காலத்திற்கு முன்னரே மனிதனின் மொழி தோன்றிவிட்டது. ஆனால், இந்தியக் கண்டத்திற்கு வந்தவர்கள் என்ன மொழி அல்லது மொழிகள் பேசினார்கள் என்று தெரியாது.

    அவர்கள் பேசிய மொழியை, எந்தவித ஆதாரமும் இல்லாமல், வரலாற்றுக் காலத் தமிழுக்கு ஒத்த மொழி என்று எடுத்துக்கொண்டாலும்கூட தமிழின் தொன்மையின் மேல் எல்லை 70000-50000 ஆண்டுகள். ஆனால், தமிழ் என்று இன்று நாம் சொல்லும் மொழிக்கு ஒத்த மொழி இந்தக் கால கட்டத்திற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலேயே தோன்றியிருக்கும்.

    பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (46)

    Share
  • பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (46)

     

    தமிழில் சந்தி விதிகளை ஒரு சில தமிழ் அறிஞர்களை விட்டு யாரும் பின்பற்றுவதாகவும், தெரிந்து பேசுவதாகவும், அவை பற்றி உறுதியான கொள்கைகளை கொண்டிருப்பவர்களாகவும் தெரியவில்லை. புணர்ச்சிகளில் வல்லினம் மிகுமா மிகாதா என்பது என் கணிப்பில் 99.99% எழுதும் தமிழர்களுக்கு தெரியாது. இந்த அளவு வழக்கிறந்துவிட்ட நியதிகளை தொடர்ந்து பேசுவது நியாயமா?

    வன்பாக்கம் விஜயராகவன்

    பதில்

    ஒரு சொல் உருபுகள் சேர்ந்து அமையும்போது அடுத்தடுத்துச் சாதாரணமாக வராத ஒலிகள் வந்தால்  அவற்றை மாற்றிச் சொல்லொலி அமைப்பைச் சரிப்படுத்துவது  சந்தி. இது உச்சரிப்பையும் எளிமையாக்குகிறது. மாற்றத்தில், ஒரு ஒலியை மற்றொன்றாக்குதல், புதிய ஒலியைத் தோற்றுவித்தல், உள்ள ஒலியை நீக்குதல் ஆகிய மூன்றும் அடங்கும். இந்த மாற்றங்கள் எழுத்திலும் பிரதிபலிக்கும். இது அகச்சந்தி. ஒரு தொடரில் அடுத்தடுத்து வரும் இரண்டு சொற்களிடையேயும் இந்த மாற்றங்கள் நிகழும். இது புறச்சந்தி.

    அகச்சந்தி சொல்லை ஒருமைப்படுத்துகிறது. இது பெரும்பாலான மொழிகளில்  உள்ளது. தமிழிலும் துவக்க காலத்திலிருந்து இன்று  வரை உள்ளது. தமிழ் பேசும், எழுதும் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்: ஆள் + கள் = ஆட்கள், பணம் + காரன் = பணக்காரன், அம்மா + ஐ = அம்மாவை, வீடு + க்கு = வீட்டுக்கு, கல் + த்த் + ஆன் = கற்றான், ஆள் + ந்த் + ஆன் = ஆண்டான். சொல்லாக்கத்தில் உருபுகள் சேரும்போது அவற்றை இணைக்கும் உருபு (சாரியை) தோன்றுவது இக்காலத் தமிழில் குறைந்துவருகிறது. அது + அன் + ஐ = அதனை, வீடு + இன் + க்கு = வீட்டிற்கு, வா + ந்த் + அன் + அன் = வந்தனன் முதலிய சொற்களுக்குப் பதில் அதை, வீட்டுக்கு, வந்தான் முதலிய சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இது + அன் + க்கு = இதற்கு என்னும் சொல்லைப் பேச்சில் போல் இதுக்கு என்று எழுதுவதில்லை.

    டி. கே. சிதம்பரநாத முதலியார்  அகச்சந்தியைப் பிரித்து எழுதலாம் (எ-டு கல்த்தான்) என்று சொன்ன யோசனை எடுபடவில்லை. சொல்லின் ஒலியமைப்பு முறைமைக்கு இது முரணாக இருப்பதே இதற்குக் காரணம்.

    தொகைச் சொற்கள்  தனிச் சொல்லுக்கும் தொடருக்கும்  இடையில் உள்ள அமைப்பு. இவற்றிலும் எல்லாச் சந்தியும் உண்டு. இவை விட்டிசை (pause) இல்லாத ஒரு சொல் தன்மையுடையன என்று சொல்லச் சந்தி உதவுகிறது.

    புறச்சந்தி சில மொழிகளிலேயே  உள்ளது. அவற்றுள் தமிழும்  ஒன்று. இக்காலத் தமிழில்  பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பது இதில்தான். ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட செய்யுளில் மிகுதியான புறச்சந்தி உண்டு. இப்போது தமிழைச் சிறப்புப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களும் சந்தி பிரித்த, அதாவது சந்தி இல்லாத, பதிப்புகளையே படிக்கிறார்கள். புறச்சந்திக்குச் சில காரணங்கள் உண்டு. உயிர்கள் அடுத்தடுத்து வருவதைத் தடுப்பது அவற்றில் ஒன்று. (எ-டு) பார்த்தது + இல்லை = பார்த்ததில்லை, பார்த்த + இடத்தில் = பார்த்தவிடத்தில், இலக்கண + ஆசிரியர் = இலக்கணவாசிரியர். மெய்யை அடுத்து வரும் உயிர் மெய்யின்மீது ஏறி நிற்க வேண்டும் என்பது இன்னொரு காரணம். எ-டு ஊரில் + இல்லை = ஊரிலில்லை; நேரம் + ஆகாது = நேரமாகாது. ஒரு சொல்லில் அடுத்தடுத்து வராத மெய்யெழுத்துகள் சொற்சேர்க்கையால் அடுத்தடுத்து வரும்போது ஒரு மெய்யை மாற்றும் தேவை பிறிதொரு காரணம். (எ-டு) காலம் + கடத்தினான் = காலங்கடத்தினான், காலம் + தாழ்த்தினான் = காலந்தாழ்த்தினான், முதல் + சொல் = முதற்சொல். இக்காலத் தமிழில் இந்தச் சந்தி வழக்கு பெரிதும் குறைந்துவிட்டது. இந்த மாற்றம் தமிழ் வகுப்புகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    புறச்சந்தியில்  உயிரில் முடியும் சொல்லுக்குப்பின் வல்லெழுத்தில் துவங்கும்  சொல் வரும்போது அந்த வல்லெழுத்து  மிகுந்து முதல் சொல்லோடு சேர்ந்து ஒற்று மிகுதல் இலக்கண ஆசிரியர்கள் வலியுறுத்தும் சந்தி. தொடரில் சொற்களிடையே இலக்கண உறவைக் காட்டுவதற்காக இது விதிக்கப்படவில்லை என்றாலும், அது இந்தச் சந்தியின் ஒரு பயன். காலைப் பார், காலை பார் என்னும் தொடர்களில் முதலாவதில் காலை இரண்டாம் வேற்றுமை உருபு ஏற்ற பெயர்; இரண்டாவதில் காலை வினையடை. காலைச் சாப்பாடு இல்லை, காலை சாப்பாடு இல்லை என்னும் தொடர்களில் முதலதில் காலை பெயருக்கு அடையாகும் பெயர்; இரண்டாவதில் காலை வினையடை. முன்னுள்ள சொல்லில் வல்லெழுத்து இரட்டித்து நிற்கும்போது பின்னுள்ள சொல்லின் முதல் வல்லெழுத்து மிகுவது ஓசையமைதிக்காக. எ-டு எனக்குக் கொடு, எடுத்துக் கொடு, (வந்து கொடு என்பதில் மிகுவதில்லை), பாட்டுப் பாடு (வீடு பார் என்பதில் மிகுவதில்லை), நேற்றுப் பார்த்தேன், நாளைக்குப் பார்ப்பேன் (நாளை பார், இன்று பார் என்பதில் மிகுவதில்லை). முன்னுள்ள சொல் உயிரில் முடிந்து பின்னுள்ள சொல் வல்லெழுத்தில் துவங்கினால், வேகமாகப் பேசும்போது இடைவெளி போய் வல்லெழுத்து மென்மையாகும் வாய்ப்பைத் தடுப்பதற்கும் ஒட்டு இரட்டிக்கும் சந்தி பயன்படுகிறது. காகம் என்னும் சொல்லின் நடுவில் உள்ள ககரம் முதலிலுள்ள ககரத்தை விட வன்மை இழந்து ஒலிப்பதைப் போல, தலைக்கனம் என்னும் தொகைச்சொல்லில் கனம் என்னும் சொல்லில் உள்ள ககரம், ஒற்று இரட்டிக்காவிட்டால் உரசொலியாக ஒலிக்கும். இப்படிச் சில காரணங்கள் இருந்தாலும், செயவென் எச்சத்திற்குப் பிறகு, சுட்டுப்பெயரடைக்குப் பிறகு என்று பல இலக்கண வடிவங்களுக்குப் பிறகு ஒற்று இரட்டிப்பதற்குக் காரணம் இல்லை.

    சுட்டுப் பெயரெச்சத்திற்குப் பின் மிகும் ஒற்று மற்றப் பெயரெச்சத்தின் பின் மிகுவதில்லை. ஒற்று எங்கு இரட்டிக்கும் என்று சொல்ல முடியுமே தவிர ஏன் இரட்டிக்கும் என்று மொழியின் பொது இயல்பு சார்ந்த காரணம் சொல்ல முடியாது.

    அச்சும் அதோடு  நிறுத்தக்குறிகளும் வந்த பிறகு தமிழில் சந்தி  பற்றி மறுபார்வை ஏற்படுகிறது. நிறுத்தக்குறி சில வகை  விட்டிசையைச் சுட்டுகிறது. விட்டிசை உள்ள இடத்தில் சந்தியை விடுவது இயல்பாகிறது. தொடரில் உள்ள சொற்கள் பிரிந்து விட்டிசையோடு உச்சரிக்கப்படுவதால், இரு உயிர்களின் தொடர் வரவு, மெய்யேறாமல் உயிர் வருவது, சொல்லில் இல்லாத மெய்மயக்கத்தைத் தடுப்பது முதலனாவற்றைச் செய்யும் சந்தி விதிகளை இக்காலத்தில் பயன்படுத்துவதில்லை.  பார்த்த இடத்தில், இலக்கண ஆசிரியர், ஊரில் இல்லை, நேரம் ஆகாது, காலம் கடத்தினான், முதல் சொல் முதலியனவும், நான் வெளியே போக, தம்பி தூங்கிவிட்டான்; கடைக்குப் போக, பணம் என்னிடம் இல்லை; விலையைக் கேட்டு, பொருளைப் பார்த்து, பணத்தைக் கொடு முதலியனவும் சந்தி இல்லாமல் எழுதப்படுகின்றன. சந்தி இன்று ஒரு தொடரையோ சொல்லையோ ஒலிக்கும் முறையைப் பிரதிபலிக்கிறது. எழுத்தில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலியவற்றைப் பேச்சில்  சுருதி ஓசை (intonation) காட்டும்போது சந்தி தேவையற்றதாகி விடுகிறது. இது ஒற்று இரட்டிக்கும் சந்திக்கும் பொருந்தும்.

    தனி எழுத்தை ஒலிக்கும்  முறையையும் சந்தி பிரதிபலிக்கிறது. தோசை என்ற சொல்லின் முதல்  மெய் ஒலிப்புடன் (voiced) இருப்பதாலும், சாம்பார் என்ற சொல்லின் முதல் மெய் உரசலுடன் (fricative) இருப்பதாலும், சுட்டுப் பெயரடைக்குப் பின் இவை ஒற்று மிகாமல் இந்த தோசை, இந்த சாம்பார் என்று எழுதுவதே இன்று பெருகிவரும் வழக்கு. இரண்டு பெயர் சேர்ந்து வரும் தொகையிலும் இப்படியே: நெய் தோசை, கத்தரிக்காய் சாம்பார்

    தமிழ்ச் சமூகத்தில் வாசிப்பு பரவலாகும் மாற்றம்  ஏற்பட்டபோது வாசித்துப் பொருள் விளங்கிக்கொளவதற்குத் துணையாகச் சொற்களைச் சந்தியால் சிதைக்காமல், அவை தனித்து நிற்கும்போது கொள்ளும் வடிவத்திலேயே, தொடரிலும் தொகையிலும் எழுதும் மரபு பெருகியது. சளிப் பிடித்தது, சொன்னாற்போல, பற்பொடி என்று சந்தியோடு எழுதும் வழக்கை விட சளி பிடித்தது, சொன்னால்போல, பல்பொடி என்று சந்தி இல்லாமல் எழுதும் வழக்கு பெருகியுள்ளது. சொற்களைச் சந்தியால் சேர்த்து நீளமாக எழுதுவதைத் தவிர்க்கும் விருப்பமும் சந்தியைக் குறைக்கிறது.

    சமூகத்திலும் மொழியிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சந்தி உபயோகத்தை மாற்றியுள்ளன. இக்கால எழுத்து வழக்குக்குப் புதிய சந்தி விதிகள்  எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவை எழுதப்படாமல், இன்றைய வழக்கிற்குத் தொடர்பில்லாத பழைய சந்தி விதிகளைப் பள்ளிகள் வலியுறுத்துவதால் மக்களிடையே குழப்பம் இருக்கிறது. சிலர் அகச்சந்தியும் இல்லாமல் சொல்லைப் பிரித்து வீட்டில் இருந்து வந்துகொண்டு இருக்கிறான் என்று எழுதுவதையும் பார்க்கிறோம். குழப்பத்தைப் போக்க, மக்களின் வழக்கை ஒட்டிய புதிய சந்தி விதிகள் இக்காலத் தமிழுக்கு வேண்டும்.

    Share
  • பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (45)

     

    தமிழில் பேசும்பொழுது ஆங்கில ஒலிப்பு வேண்டும் என்பது இல்லை. தமிழ் முறைக்கு முரண் எனில் கூடாது. அதுவும் நம் மொழியை, மொழி மரபுகளைக் கெடுத்துக்கொண்டு வேற்று மொழி ஒலிப்புகளைத் தமிழில் காட்டத் தேவை இல்லை. நெகிழ்ச்சி எனில் ஏன் இந்த நெகிழ்ச்சியை filosofi என்று எழுதுவதில் காட்டக் கூடாது? தமிழில் எழுதும்பொழுது மட்டும் ஏன் அத்தனை விதிமீறல்?

    — செ. இரா. செல்வக்குமார்

    பதில்

    தமிழில் பேசும்போதோ எழுதும்போதோ  ஆங்கில ஒலிகளை அப்படியே கொண்டுவர வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. நான் முந்திய பதில்  ஒன்றில் கூறியது போல, ஒரு சொல்லைப் பேசுவதைப் போலவே  எழுதுவதும், அதன் மூல மொழியின் உச்சரிப்பைப் போலவே எழுதுவதும் எந்த மொழியிலும் இல்லை. தேவையும் இல்லை.

    ஒரு மொழியின் மரபு அதை இறுகப் பிடித்துவைத்திருக்கும் சட்டகம்  அல்ல; காலப்போக்கில் மாறாத ஒன்றும் அல்ல. கலப்புத் திருமணம் இன்று மரபிலிருந்து மாறிவரும் ஒரு வழக்கு, அதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இருந்தாலும். இதைப் போன்றுதான் தமிழ் மொழியின் மரபும் மாறிவருகிறது. மரபு மாற்றம் எல்லா மொழியிலும் நிகழும் ஒன்று. ஆங்கிலம் ஏற்றுக்கொண்ட அதன் மொழி மரபு மாற்றங்களைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம்.

    ஒரு மொழிச் சமூகத்தின் (linguistic community) பார்வையில், எது மரபு, எவை ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் என்பவையே கவனிக்க வேண்டிய கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும்போதுதான் வழக்கு என்னும் கருத்து முன்னுக்கு வருகிறது. வழக்கு என்பதன் அர்த்தத்தை விளங்கிக்கொளவதற்கு முன் மரபு என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தால் முதன்மையானது மட்டும் மரபு அல்ல; ஒரு காலத்து மரபு அடுத்த காலத்தில் மாறிப் புதிதாக ஏற்படுத்தும் வழக்கும் மரபு ஆகும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித் தமிழும் ஒரு மரபே. அதை மறுப்பதும், மறப்பதும் மொழி வளர்ந்த பாதையை மூடுவதாகும். இலக்கணத்தின் வேலை மொழியின் விதிகளை வரையறுப்பது அல்ல; அது வழக்கில் உள்ள விதிகளை வெளிப்படுத்துவது; புதிய மரபுக்கு வழி வகுப்பது. புதிய மரபில் பண்டைப் பழமையையோ அண்மைப் பழமையையோ முற்றிலும் அழித்துவிட முடியாது.

    தமிழின் புதிய மரபு என்பது என்ன, அதை எப்படி இனம்காண்பது என்பவை பற்றிய விவாதம் தமிழ் மொழியின் வரலாற்றில் இக்காலத்தில் நிகழ்வது; நிகழ வேண்டியது; தமிழைப் பற்றிப் பலவிதமான கருத்தாக்கங்களைக் கொண்டவர்கள் கலந்துகொள்ள வேண்டியது. ஒரு மொழியைப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் எழுத்தில் தவறு செய்வதும், மாற்றம் செய்வதும் இயல்பு. இரண்டையும் பிரித்தறிவது இந்த விவாதத்தின் முதல் அவசியம். தவறு (error) ஒருவரால் திரும்பத் திரும்பச் செய்யப்படாதது; அவரே திரும்பப் பார்க்கும்போது திருத்திக்கொள்ளக் கூடியது; அதன் நிகழ்வு தனி மனிதரைச் சார்ந்தது. புதுவரவு (innovation) மாறி மாறி வராமல் ஒரு நிலையாக (consistent) வருவது; பலரிடம் பொதுவாக இருப்பது; மொழிச் சமூகத்தைச் சேர்ந்தது; பொதுவிதியில் அடங்குவது. பொதுவிதி புதிய விதியாக இருக்கும். மரபுவிதியிலிருந்து வித்தியாசப்படுவதெல்லாம் தவறு ஆகாது.

    சில உதாரணங்கள். ஒருத்தன் : ஒருவன் :: ஒருத்தி என்னும் இணைகளில் காலியாக இருக்கும் இடத்தில் ஒருவள் என்னும் சொல்லை அமைப்பது தவறு ஆகாது; புதுவரவு ஆகும். ஆட்டுக்குட்டி, பன்றிக்குட்டி என்னும் வரிசையில் மாட்டுக்குட்டி என்னும் சொல்லை அமைப்பது இன்றைய வழக்கில் தவறு ஆகும். அடுத்த தலைமுறையில் புறனடை பொதுவிதியில் சேர்ந்து பிழையாகக் கருதப்படாமல் புதுவரவு ஆகலாம். அப்பா தம்முடைய பங்கை விற்றுவிட்டார் என்னும் வாக்கியத்தை அப்பா தன்னுடைய / அவருடைய பங்கை விற்றுவிட்டார் என்று எழுதும் இரண்டு வழக்குகளும் புதுவரவில் அடங்கும். தற்சுட்டுப் பெயரில் மரியாதைப் பன்மை இல்லை; தற்சுட்டுப் பெயர் சுட்டுப்பெயரோடு மருவிவரும் என்பவை புதிய விதிகள். அவர் சொன்னவற்றை, அவர் சொன்னவைகளை என்று மருவி எழுதுவதும் பேச்சில் உள்ளதைப் போல அவர் சொன்னதையெல்லாம் என்று எழுதுவதும் தவறு என்பதிலிருந்து புதுவரவு என்னும் தகுதியை நோக்கி நகர்கிறது எனலாம். சுவரில் என்பதை சுவற்றில் என்று எழுதுவது சுவறு என்னும் ஒரு புதுச் சொல்வடிவம் சுவர் என்னும் சொல்வடிவத்தை நீக்கும்வரை தவறு என்று கருதப்படும். அநாதை / அனாதை, அந்நியன் / அன்னியன், இயக்குநர் / இயக்குனர்  என்பதுபோல் அநியாயம் / அனியாயம் என்று பேச்சைப் பிரதிபலிக்கும் வழக்கு வந்தால், அது தவறு ஆகாமல் புதுவரவு ஆகலாம்; அல்லது நியாயம் என்னும் சொல்லோடு உள்ள தொடர்பைப் போற்றித் தவறாகவே கருதப்படலாம். இந்த உதாரணங்களிலிருந்து, மரபிலக்கணத்தில் விதி இல்லை என்பதாலேயே ஒரு வழக்கு தவறு ஆகாது என்பது விளங்கும். இக்காலத் தமிழின் இயல்பை விவரிக்கப் புதிய இலக்கண விதிகளின் தேவையும் விளங்கும்.

    இலக்கியத்திற்கு இலக்கணம் என்பது போல், வழக்கிற்கு இலக்கணம். முன்னெழுதிய இலக்கணத்தின்படி வழக்கு இருக்க வேண்டும் என்பது இரண்டிற்கும் உள்ள உறவைத் தலைகீழாகப் பார்ப்பதாகும்.

    மரபு இலக்கண விதிகளிலிருந்து  மாறவே கூடாது என்று பிடித்துக்கொள்வதைப்  போன்றதே நேர்மாறாக அந்த விதிகளை மீற வேண்டும் என்பதற்காகவே விடுவதும். இரண்டையும் மொழி கண்டுகொள்ளாது. மொழி சார்ந்த கருத்தாக்கங்களுக்கு மொழி மாற்றத்தில் பங்கு இருந்தாலும், மொழியின் பரிணாம மாற்றங்களையும், சமூகத் தேவைகளுக்கு ஈடுகொடுத்து ஏற்படும் மாற்றங்களையும் தடுத்து நிறுத்தும் வலிமை கருத்தாக்கங்களுக்கு இல்லை. செய்யுளின் யாப்பு, அழகியல் மரபுகளை முறிக்க வேண்டும் என்பதற்காகவே புதுக்கவிதை தோன்றவில்லை. நிலப்பிரபுத்துவச் சமூக வாழக்கையிலிருந்து மாறிய தழிழ்ச் சமூகத்தின் வாழ்வின் அசைவுகளையும் தேவைகளையும் மதிப்பீடுகளையும் வெளியிடுவதற்குத் தேவை இருந்ததாலேயே புதிய கவிதை மரபு தோன்றியது. தமிழுக்குப் புதிய இலக்கணமும் இந்த மாதிரியான காலத் தேவையின் விளைவே.

    சுப்பிரமணியன், பாரதிதாசன், ரசம், புத்திரன் என்று எழுதுவதை முறையே ஸுப்ரமண்யன், பாரதிதாஸன், ரஸம், புத்ரன் என்று எழுதுவது தமிழை எழுதும் முறையின் மரபை முறிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதுவதாகும்; சமூகத்தின், மொழியின் தேவையை நிறைவேற்ற எழுதுவது அல்ல. தமிழ்ச் சகரத்திற்கு வருமிடத்தைப் பொறுத்து ஸகர ஒலி உண்டு. அந்த இடங்களில் ஸகரத்தை எழுதுவது தமிழின் எந்தத் தேவையையும் நிறைவு செய்யவில்லை. தமிழில் வழங்கும் புதுவரவுச் சொற்களில் /ph, b/ என்னும் ஒலிகளையும் /ப/ ஆக எழுதுவது -பேதம் என்று எழுதுவதைப்போல- மரபைப் பின்பற்றி எழுதுவதே. இரசம் என்று எழுதுவது மரபைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது. இதைத் தவிர, தமிழின் எந்தத் தேவையையும் இகரம் நிறைவு செய்யவில்லை.

    ஒரு சொல்லை உச்சரிப்பது  போல் எழுதுவது, பொது இலக்கண விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, மொழிக்குத் தேவை இல்லாத நேரத்திலும் பின்பற்ற வேண்டிய கொள்கை அல்ல. எழுத்து மரபு பேச்சு மரபின் அசலான நகலாக இருப்பது மொழிகளில் அபூர்வம். மொழியில் நிகழ்ந்த மாற்றத்தால் உச்சரிப்பு மாறினால், மாறிய உச்சரிப்பை எழுத்தில் பிரதிபலிக்க வேண்டிய தேவை எல்லா மாற்றங்களுக்கும் பொருந்தாது. இன்றைய தமிழில், றகரம் ரகரமாக உச்சரிக்கப்படுகிறது. ஆயினும், மரபைப் பின்பற்றி றகரத்தை எழுதுவது வேறு இலக்கண விதிகளின் எளிமைக்குத் தேவை. ஒலிப்பில் ஒன்றினாலும், றகரம் தன் வல்லொலித் தன்மையை இழக்கவில்லை. றகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்து வன்மையாக ஒலிக்கும், பிற வல்லெழுத்துக்குப்பின் வரும் வல்லெழுத்துக்களைப் போல. கற்பு என்னும் சொல்லில் /பு/, வேட்பு என்னும் சொல்லில் உள்ள /பு/ போலவே ஒலிக்கும். ரகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்துகள் மெலிந்து ஒலிக்கும் (எ-டு) சார்பு. றகரத்தை ரகரமாக எழுதினால் கற்பு என்ற சொல்லை கர்ப்பு என்று எழுத வேண்டியிருக்கும். சொல்லின் இடையில் வரும்போது தவிர மற்ற இடங்களில் வருமிடத்தை வைத்து எழுத்துக் கூட்டலில் றகரத்தையும் ரகரத்தையும், அவற்றின் உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும், சரியாக எழுத முடியும். சொல்லின் இடையில் றகரம் தனித்து வருபோது ரகரத்திலிருந்து பிரித்து எழுதுவதில் உள்ள இடர்ப்பாடு, சொல்லின் இடையில் மெய்யோடு வரும்போது எழுத்துக் கூட்டலில் செய்ய வேண்டிய திருத்தங்களால் வரும் இடர்ப்பாடுகளை விடச் சிறியது. றகரத்தால் கிடைக்கும் மற்றொரு இலக்கண எளிமை இது. வேற்றுமை வடிவில் சொல்லின் இறுதியில் றகரம் இரட்டிக்கும்; ரகரம் இரட்டிக்காது. (எ-டு) ஆற்றில், ஊரில். ஆரு என்று எழுதினால் இந்தச் சந்தி விதி சொல்லைத் தெரிந்து செய்யும் விதியாகிச் சிக்கலான விதியாகிவிடும். ஆரில் என்று இந்த ஏழாம் வேற்றுமை வடிவத்தை எழுதினால் அது ஆற்று மணல் என்னும் ஆறாம் வேற்றுமை வடிவத்தில் சிக்கலைத் தோற்றுவிக்கும், பேச்சு மொழியில் இது ஆத்து(மணல்) என்றே உச்சரிக்கப்படுகிறது. ஆரு(மணல்) என்று எழுதினால் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஒன்றாமையை உருவாக்குகிறோம். சந்தி ஒலியின் அடிப்படையில் நிகழும்; அது சொல்லின் அடிப்படையில் நிகழ்வது அபூர்வம். ஆறு என்ற எண்ணுப்பெயர் ஆறில் என்று சேரும்; நதி என்னும் பொருளுடைய ஆறு என்ற சொல் ஆற்றில் என்று சேரும். இந்த விதிவிலக்கை றகர ஈற்றுச் சொற்கள் எல்லாவற்றுக்கும் நீட்டினால், சந்தி இலக்கணம் சிக்கலாகிவிடும். இதனால் றகர, ரகரத்தை வேறுபடுத்தி எழுதும் சொல்வடிவச் சிக்கலை இலக்கணம் அனுமதிக்கிறது, றகரத்தின் உச்சரிப்பு ரகரத்தின் உச்சரிப்போடு ஒன்றிப்போனாலும். இலக்கணத்தின் பகுதிகள் தங்களுக்கிடையே ஒரு சமன்பாட்டைக் காக்கின்றன.

    மேலே சொன்ன விபரங்கள்  ஒரு குறிப்பிட்ட இலக்கண மாற்றத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் இலக்கணத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்துச் செய்யும் செயல் என்பதைப் புலப்படுத்தும். இந்தப் பண்பு  பெரும்பான்மையோரின் வழக்கில் காணப்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும். பழைய இலக்கண விதிகளிலிருந்து விலகுபவர்கள் புதிய விதிகளின்படி மொழியை வழங்குவார்கள். பெரும்பான்மையினோரின வழக்கை இயக்கும் புது விதி எதுவும் இல்லையென்றால், அந்த வழக்கு தற்செயல் நிகழ்வு (random occurrence) என்றால், அது இலக்கணத் தகுதி பெறுவது கேள்விக்குரியது.

    பெரும்பான்மை வழக்கைக் கணிப்பதில் ஒரு சிக்கல்  இருக்கிறது. இது வெறும் எண்ணிக்கையைப்  பொறுத்த விஷயம் மட்டுமல்ல. இணையத்தில் வழங்கும் தமிழ் தமிழின் பல வகைகளில் ஒன்று மட்டுமே. கணினியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டும் வழங்கும் வகை. அதில் எழுதுபவர்கள் தாங்கள் எழுதியதைப் பெரும்பாலும் திருப்பிப் படித்துப்பார்த்து, பிழை என்று தங்களுக்குத் தோன்றுவதைக்கூடத் திருத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில்லை. இணையத்தில் உள்ள பல விவாதங்கள் இதற்கு நல்ல உதாரணம். ஒரு மொழியின் இலக்கணம் பெரும்பான்மை என்னும் மிருகபலத்தினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால், பெரும்பான்மை வழக்கு இலக்கணத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. அவற்றில் சிலவோ பலவோ இலக்கணத்தில் இடம்பெற்றுப் புதிய இலக்கணத்திற்கு வழிவகுக்கும்.

    வாழும் மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. தமிழ் வாழும் மொழி. இதனால் அதன் இலக்கணம் மாறிக்கொண்டேயிருக்கிறது. மாற்றத்துக்கு அணைபோடும்  இலக்கண விதிகள், தரமானது என்று சொல்லப்படும் ஒரு மொழி வழக்கை மட்டுமே முன்னிறுத்தி, மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மக்களிடமிருந்து தூரப்படுத்துகின்றன. மொழியைத் தரப்படுத்தும் முயற்சியும் இயல்பான ஒன்றுதான்; எல்லாச் சமூகமும் மேற்கொள்ளும் செயல்தான். அது மொழியின் மேல் அதிகாரம் உள்ளவர்கள் செய்வது. அவர்கள் மக்களின் வழக்கு அனைத்தையும் பிழை வழக்கு என்று புறந்தள்ளிவிட்டால், வீட்டு மொழிக்கும் பள்ளி மொழிக்கும் தூரம் அதிகமாகிவிடும். தூரம் அதிகமானால், தமிழர்கள் தமிழைத் தூர இருந்து வணங்கலாம்; ஆனால் தயக்கமின்றி வழங்குவது குறையும். நமக்குத் தமிழோடு உள்ள உறவு பிள்ளையாருக்கு முன்னால் உக்கிபோடும் உறவாக இருக்கக் கூடாது!

    முந்தைய கேள்வியும், பதிலும்

     

    Share