-மேகலா இராமமூர்த்தி 

தோழியின் இனிய இதயத்தை எண்ணி உளம்நெகிழ்ந்தவண்ணம் தலைவனும் தலைவியும் தம் பயணத்தைத் தொடரலாயினர். நடக்க நடக்க நீண்டுகொண்டே சென்றது சுரவழி. பகல்கழிந்து அந்திமாலையும் வந்து சேர்ந்தது! அப்போதும் தலைவனின் ஊர்நோக்கிய நெடும்பயணத்தை நிறுத்தாது, தலைவனும் தலைவியும் சென்றுகொண்டிருந்தனர். வழியில் எதிர்ப்பட்ட ஊரை அவர்கள் கவனித்திலர். ஆனால் அவ்வூரினர் களைத்துவரும் இவ்விளையோரைக் கவனித்துவிட்டனர். இவர்கள் உடன்போக்கு நிகழ்த்தும் காதலர்கள் என்பதையும் கணித்துவிட்டனர்.

நில்லாது சென்றுகொண்டிருந்த தலைவன் தலைவியைப் பார்த்து,

”சிறியபிடி போன்றவளுக்குத் துணைவ! பகலவன் வானைவிட்டு அகலும்நேரம் நெருங்கிவிட்டது. வணிகக்கூட்டம் வந்திருக்கின்றது என்றெண்ணி, பகைப்புலத்தில் கொள்ளும் பகைபோல், வளையணிந்த நெடுவேலேந்தி அவ்வணிகரின் பொருள்களைக் களவாடும் ஆவலில் எம் காவற்காடுவரைவந்து வணிகரைக் காணாது வறிதே பெயரும் ஆறலை கள்வர் முழக்கும் தண்ணுமையெனும் வாத்திய ஒலியைக் கேளுங்கள்! நீவிர் இருவரும் பயணம் மேற்கொள்வதை இவ்வேளையில் தவிர்த்தலே நலம்” என்று நவின்றனர்.

பாலைநிலத்திற் செல்லும் வணிகர்கூட்டத்தை எதிர்த்து, அவரது பொருளைக் கைக்கொள்ளல் ஆறலை கள்வரின் இயல்பு. ஆறலைகள்வர் தண்ணுமை ஒலியைக் கேள் என்று தலைவனுக்கு இடைச்சுர மக்கள் சொன்னதன் நோக்கம், அக்கள்வரால் இக்காதலருக்கு ஏதம்வரும் என்பதை உணர்த்தவே.

எல்லும் எல்லின்று பாடுங்  கேளாய்
செல்லா  தீமோ  சிறுபிடி  துணையே
வேற்றுமுனை  வெம்மையிற்  சாத்துவந்  திறுத்தென
வளையணி  நெடுவேல்  ஏந்தி
மிளைவந்து  பெயரும்  தண்ணுமைக்  குரலே.  (குறுந்: 390 – உறையூர் முதுகொற்றனார்)

அம்மக்களின் விருப்பப்படியே அன்றிரவை அவ்வூரில் கழித்துவிட்டு மறுநாள்காலை தம் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர் காதலர்கள்.

thalaivan thalaiviதலைவனுடன் செல்லும் பயணமாதலால் கல்லும் முள்ளுங்கூடத் தலைவியின் கால்களுக்கு மெத்தையாகவே இருந்தன. சிறிதுதூரம் சென்றதும் கண்ணிற்பட்ட நெல்லிமரத்திலிருந்து காய்களைப் பறித்துத்தின்ற தலைவி, அருகிருந்த சுனையின் அழுக்குநீரைக்கூட அமுதமாய் எண்ணிப் பருகினாள். நாவினித்தது! உடனே, நெல்லியைத் தின்னச்சொன்ன அருமைத்தோழியின் நினைவுவந்ததால் நெஞ்சினித்தது. இத்தகு உத்தமத் தோழியைப் பெற்றநான் பேறுபெற்றவள் என நினைந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

அவள் கண்ணீரைத் துடைத்த தலைவன் அவளை அன்பொடு நோக்கி, “கண்ணே! தம் வழிபடுதெய்வத்தை நேரிற்கண்ட மக்கள் எப்படி உளம் மகிழ்வரோ அவ்வாறு உனையடைந்ததால் நான் மகிழ்கின்றேன். நம் நடைப்பயணத்தால் நீ களைக்கலாகாது; ஆதலால் நிழல்காணுந்தோறும் இளைப்பாறு! மணல் காணுந்தோறும் வண்டலிழைத்து (சிற்றில்கட்டி) விளையாடு! அவசரம் ஏதுமில்லை” என்றான்.

இதனிடையே, தலைவியின் தமர்க்குத் தலைவி ஆடவன் ஒருவனோடு உடன்போக்கு மேற்கொண்ட விவரம் தெரியவர, அவர்கள் அடைந்த துயருக்கோர் அளவில்லை. தலைவியின் நல்வாழ்வை எண்ணியே நாளுங்கவலும் தம்மிடங்கூடச் சொல்லாமல் தன் வாழ்வைத் தானே முடிவுசெய்துவிட்ட அருமை மகளையெண்ணி நற்றாயும் செவிலித்தாயும் வெகுளியும் வேதனையும் அடைந்தனர்.

தோழியும் இதற்கு உடந்தையோ என்று ஐயுற்ற அவர்கள், அம்மடந்தையிடம் இதுகுறித்து விசாரிக்கலாயினர்.

அவளோ, “அயல்மணத்தைத் தலைவிக்கு நீங்கள் நிகழ்த்தவிரும்பும் இத்தருணத்தில், உம்மிடம் தன் காதலைச் சொன்னால் அதனை நீங்கள் ஏற்பீர்களோ… மாட்டீர்களோ என்றஞ்சி அவ்வஞ்சி தான்விரும்பிய காதலனோடு சென்றிருக்கலாம்” என்று பட்டும்படாமலும் பதில்சொல்லித் தனக்கும் தலைவியின் உடன்போக்குக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று காட்டிக்கொண்டாள்.

தலைவியின் பிரிவால் அருமணி யிழந்த நாகம்போல அலமரலுற்றனர் தாயர் இருவரும். மகளின் எதிர்காலத்தை எண்ணியெண்ணி, பெற்றவளான நற்றாயும் பாலூட்டி வளர்த்த செவிலித்தாயும் புலம்பலாயினர்.

”பாலுமுண்ணாது, தனக்கினிய பந்தையும் விரும்பாது, மகளிர் கூட்டத்துடன் இடைவிடாது விளையாடுவதிலேயே நாட்டம்கொண்டிருந்த தலைவி, உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய உயர்ந்த கொம்புடைய ஆண் யானை, வேனிற் தன்மையுடைய, மலையின் வெப்பம் மிகுந்த அடிவாரத்தில், மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கின்ற, மூங்கில்கள் உலர்ந்த, செல்லுதற்கரிய இடத்திலே, தலைவனோடு செல்லுதல் எளிது என நினைத்தாளோ?” என்று தலைவியின் மென்தன்மைக்கு வன்மைமிகு பாலைவழிப் பயணம் எப்படிப் பொருந்தும் என வருந்தினாள் நற்றாய்.

பாலும்  உண்ணாள்  பந்துடன்  மேவாள்
விளையாடு  ஆயமொடு  அயர்வோ  ளினியே
எளிதென  உணர்ந்தனள்  கொல்லோ  முளிசினை
ஓமை  குத்திய  உயர்கோட்டு  ஒருத்தல்
வேனிற்  குன்றத்து  வெவ்வரைக்  கவாஅன்
மழைமுழங்கு  கடுங்குரல்  ஓர்க்கும்
கழைதிரங்  காரிடை  அவனொடு  செலவே.  (குறுந்: 396 – கயமனார்)

பெற்றவளைத் தொடர்ந்து வளர்த்தவளான செவிலித்தாய் தன் மனவருத்தத்தை வெளிப்படுத்தலானாள்…

”கையிலேந்திய செம்பொன்னாலாகிய பாத்திரத்திலுள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும் மிகுதி என்று கூறி உண்ணாத, திரட்சியமைந்த குறிய வளையணிந்த, தளிர்போன்ற மென்மையையுடைய என்மகள், நிழல் அடங்கி அற்றுப் போன, நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்திலே வீரக்கழலணிந்த தலைவன் தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று, நீர்வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மை கொண்ட கலங்கல் நீரை ’தவ்’வென்னும் ஓசைபடக் குடிக்கும் வலிமையை எங்ஙனம் பெற்றாள்?” என்று சொல்லித் துயருற்றாள் செவிலித்தாய்.

நிழலான்  றவிந்த  நீரில் ஆரிடைக்
கழலோன்  காப்பக்  கடுகுபு  போகி
அறுசுனை  மருங்கின்  மறுகுபு  வெந்த
வெவ்வெங்  கலுழி  தவ்வெனக்  குடிக்கிய
யாங்கு  வல்லுநள்கொல்  தானே  ஏந்திய
செம்பொற்  புனைகலத்து  அம்பொரிக்  கலந்த
பாலும்  பலவென  உண்ணாள்
கோலமை  குறுந்தொடித்  தளிரன்  னோளே. (குறுந்: 356 – கயமனார்)

இப்பாடலில் ‘செம்பொற் புனைகலத்து ஏந்தியபால்’ என்பது தலைவியின் தாய்வீட்டுச் செல்வநிலையை உணர்த்தி நிற்கின்றது. இத்துணை வளமையாய் வாழ்ந்தவள் வறண்டநிலத்தைக் கடக்கும் துன்பத்துக்கு ஆளாக நேர்ந்ததே என்பது செவிலியின் வேதனை. இவ்வாறு மாற்றி மாற்றித் தாயர் இருவரும் தம் மகளின் உடன்போக்கினைக் கடிந்தும், அவள் பிரிவினால் மனமொடிந்தும் புலம்பிக்கொண்டே இருந்தனர்.

ஒருவாறு சற்றே சமாதானமடைந்த செவிலி, ”நம்மைப் பிரிந்து, ஒளிபொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, மடப்பத்தையும் மாமையையும் உடைய நம் மகள் சென்ற பாலைநிலம், கதிரவன் காயாது மரத்தின் நிழல் பொருந்தியதாய்,  மலையிடத்தேயுள்ள சிறிய வழியின்கண் மணல்மிகப் பரவப்பெற்று குளிர்ந்த மழை பெய்ததாகுக” என்று தலைவிசென்ற சுரவழி அவளுக்கு இடரளிக்காது இதமளிக்க வேண்டும் என்று கரங்குவித்து இறைதொழுதாள்!

inside-the-forestஞாயிறு  காயாது  மரநிழற்  பட்டு
மலைமுதற்  சிறுநெறி  மணன்மிகத்  தாஅய்த்
தண்மழை  தலையின்  றாக  நந்நீத்துச்
சுடர்வாய்  நெடுவேற்  காளையொடு
மடமா  அரிவை  போகிய  சுரனே.     (குறுந்: 378 – கயமனார்)

தலைவி சென்றபாதை அவளுக்கு இனிதாய் இருக்கவேண்டும் என்று செவிலித்தாய் வேண்டுவதை ஐங்குறுநூற்றுப் பாடலொன்றிலும் நாம் காணவியலும்.

மள்ளர்  கொட்டின்  மஞ்ஞை  யாலும்
உயர்நெடுங்
 குன்றம்  படுமழை  தலைஇச்
சுரநனி
 யினிய  வாகுக  தில்ல
அறநெறி
 யிதுவெனத்  தெளிந்தவென்
பிறைநுதற்
 குறுமகள்  போகிய  சுரனே’’     (ஐங். 371)

தம் பிள்ளைகள் இன்னாதன செய்தாலும் அவர்களுக்கு இனியவே நினைப்பது தாயர்க்கே வாய்த்த தனிக்குணம் போலும்!

ஆனால், நற்றாயின் மனம் மகளைப் பிரிந்த துயரிலிருந்து சிறிதும் விடுபடவில்லை. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பித்துப்பிடித்தவள்போல் அமர்ந்திருப்பதைக் கண்ட செவிலிக்கு மனம் பதறியது. ஒருமுடிவுக்கு வந்தவளாய் நற்றாயின் கண்ணீரைத் துடைத்தவள், ”கவலாதே தோழி! சுரவழி சென்ற தலைவியின் கரம்பற்றி அழைத்துவந்து, விரைவில் ஒப்படைக்கிறேன் உன்னிடம்!” என்று சூளுரைத்துப் புறப்பட்டாள் தலைவியைத் தேடி! 

[தொடரும்]

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *