இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில் சங்க இலக்கியத் தாக்கம் – ஒரு திறனாய்வு

0

-முனைவர் கல்பனா சேக்கிழார்
உதவிப்பேராசிரியர், இவ்வாய்வேட்டின் திறனாய்வாளர்
தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

திறனாய்வுக்கான ஆய்வேட்டின் தலைப்பு:
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில்   சங்க இலக்கியத் தாக்கம் 

ஆய்வாளர்: கோ. வாசுகி,
தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பெற்ற  ஆய்வேடு இது.

*****
சங்க இலக்கியங்கள் முன்வைக்கும் அகம் புறம் மரபுகளின் தாக்கம் இல்லாமல் பிற்கால இலக்கியங்கள் தோன்றவில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில்  இலக்கிய வடிவங்களில் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் உள்ளடக்கத்தில் பெரும் மாறுதல்கள் நிகழவில்லை என்றே கூறலாம். பாரதியுடன் தொடங்கும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலகட்ட  இலக்கியங்களிலும் அகம் புறம் மரபின் தாக்கம் தொடர்வதை அவதானிக்கலாம். அரசியல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் சமூகக் காரணங்களால் மனித வாழ்வு மாற்றம் அடைந்தாலும், அன்பு, அறம், மறம், ஈகை முதலிய பண்பாட்டுக் கூறுகளில் பழங்கால வாழ்வியல் தாக்கம் இடம் பெற்றுள்ளது என்பதைக் ஆய்வுக் கருதுகோளாகக்  கொண்டு ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாய்வேடு ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

  1. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் அகச்செய்திகள்
  2. பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் அக இலக்கியத் தாக்கம்
  3. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் புறச்செய்திகள்
  4. பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் புற இலக்கியத் தாக்கம்
  5. பாரதி, பாரதிதாசன் கவிதைகளும் சங்க இலக்கியங்களும் – ஒப்பீடு

முதல் இயலில் அகத்திணை ஒழுகலாறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. களவு, கற்பு குறித்தும் களவுக்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒழுக்கம் குறித்தும், இயற்கைப்புணர்ச்சி, வரைவுகடாதல், தோழியிற் புணர்வு, பாங்கொடு தழால் எனத் தொல்காப்பியர் பகுத்துள்ளவற்றைச் சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பட்டுள்ள திறம், களவுக்காலத்தில் மேற்கொள்ளப்படும் குறியிடங்கள், இற்செறிப்பு, அலர், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, அறத்தொடு நிற்றல், உடன்போக்கு போன்ற நிகழ்வுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. கற்பிற்குப் பிறகான வாழ்க்கை முறை, வினையினை நோக்கமாகக் கொண்டு தலைவன் செயல்பட்டுள்ளதையும், பெண் இல்லத்தைப் பேணி பாதுகாப்பவளுமாக எவ்வாறு விளங்கினர் என்பது சங்க இலக்கியப் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இயலில் சங்க இலக்கியங்களில் காணப்படும் கைக்கிளைக் காதல், அன்பின் ஐந்திணைக் காதல், பெருந்திணைக் காதல் ஆகியவை குறித்துப் பாரதி, பாரதிதாசன் பாடியுள்ளனர் என்பதும், காதலின் வலிமையை, மேன்மையை, இவ்வுலக இயக்கமாக இருப்பதை இருவருமே எடுத்துக்காட்டியுள்ளனர் என்பதும்  ஆராயப்பட்டுள்ளது. களவுக் குறித்த பாடல்கள் இருவர் படைப்புகளிலும் காணப்படுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதியார் பழைய மரபுப்படி காதலர்கள் ஊழின் வலியாகச் சந்திப்பதாகப் பாடுவதையும், திராவிட இயக்கக் கோட்பாட்டை உள்வாங்கிய பாரதிதாசன், ஈர்ப்பினால் இருவரும் இணையும் சூழல் உருவாவதும் ஆராயப்பட்டுள்ளது. தோழன், தோழியர் காதலருக்கு உதவுவது பற்றியும் அலர், இற்செறிப்பு ஆகியவற்றையும் பாரதி, பாரதிதாசன் பாடியுள்ளது விளக்கப்பட்டுள்ளது. சங்க அக இலக்கியக் கூறுகள் பாரதி, பாரதிதாசனின் பாடல்களில் காணப்படும் நிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் வரையறுத்துள்ள புறத்திணை விதிகள் சங்க இலக்கியங்கள் கூறும் புற வாழ்வியல், போர் சார்ந்த வாழ்க்கை முறையியல், போரில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள், அது சார்ந்த நம்பிக்கைகள், அரசன், அரசாட்சிமுறை, நாட்டிற்காக மக்களின் கடமை உணர்வு, பெண்களின் கடமைகள் போன்றவை குறித்து மூன்றாவது இயலில் ஆராயப்பட்டுள்ளது.

நான்காம் இயலில் சுதந்திரப்போராட்ட காலத்தில் வாழ்ந்த பாரதி பாரதிதாசன் பாடல்களில் புறம் சார்ந்த பாடல்களின் தாக்கம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது குறித்து  விவாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பாடல்கள் அடிமைப்பட்டுக்கிடக்கும் நாட்டு மக்களின் உள்ளத்தில் வீர எழுச்சியை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளன என்பதும் திணை அடிப்படையில் போர் நிகழவில்லை என்றாலும் மண்ணாசை, எல்லைப் பிரச்சனை, தாய்நாட்டு உரிமை, அரசியல், சமூகப் பொருளாதாரக் காரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போர் ஏற்பட்டாலும் திணை அடிப்படையில் பொருந்தி வருவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

சங்க கால மன்னர்கள் வஞ்சின மொழியினைக் கூறியுள்ளது போலவே பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியை பாரதத் தாயாக உருவகித்து வஞ்சினம் கூறியதும், பாண்டியன் பரிசில் கண்ணுக்கினியாள், அன்னம் வஞ்சினம் பேசியதும் கூறப்பட்டுள்ளது. போர் அறங்கள் குறித்தும் காந்தியடிகள் மேற்கொண்ட அறவழிப் போராட்டம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. முடியாட்சி முறையை வெறுத்து மக்களாட்சி முறையை இருவரும் முன் வைக்கின்றனர். வீறு கொண்ட இளைய சமூகம் நாட்டிற்குத் தேவையென வற்புறுத்துகின்றனர். போருக்கு வழியனுப்புபவர்களாக மட்டும் பெண்கள் இல்லாமல் பங்கேற்பவர்களாகவும் படைத்துக்காட்டுகின்றனர் அச்சம், மடம், நாண் தவிர்த்த புதுமைப் பெண்களே நாட்டிற்குத் தேவையெனப் பாடுகின்றனர் என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்தாம் இயலில் சங்க இலக்கியத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் அடிப்படையாக வைத்து, பாடல்கள் புனைந்தது போலவே பாரதியாரும் பாரதிதாசனும் காதல் குறித்த பாடல்களைப் பாடும் பொழுதும் பாடியுள்ளனர் என்பது விளக்கப்பட்டுள்ளது. சாதி, சமயம், உயர்வு, தாழ்வு போன்றவை சங்க இலக்கயத்தில் காணப்படவில்லை அதுபோலவே பாரதி பாரதிதாசன் பாடல்களிலும் இவற்றின் தாக்கம் காணப்படவில்லை. சங்க காலக் காதல் இயல்பான ஒன்றாக இருந்தாலும், தற்காலத்தில்  அவ்வாறு பார்ப்பதில்லை என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றனர். சங்க கால வீர வாழ்க்கை போன்று தற்காலத்திலும் இளைஞர்கள் வீர வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதைப் பாடுகின்றனர். சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட கொடை குறித்தும் இருவர் பாடல்களிலும் காணப்படுகின்றது என்பவை குறித்து விளக்கயுரைக்கப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் சமூக, அரசியல், பொருளாதார நிலைகள் சங்க காலத்தில் இருந்து வேறுபட்டிருந்தாலும், அகம், புறம் சார்ந்த பாடல்களைப் புனையும்பொழுது சமகால நிலையினை உட்செறித்தும், மரபினை உள்வாங்கியும் ஆக்கப்பட்டுள்ளதை இவ்வாய்வேட்டின் மூலம் அறியமுடிகின்றது. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த சூழலில் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஊட்டவேண்டிய நிலையிருந்தாலும் மரபு வழுவாமல் அவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வதில் பாரதியார், பாரதிதாசன் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். ஆனாலும் பெண் குறித்து, தொல் சமூகம் முன்வைக்கும் விதிகளில் இருந்து வேறுபட்டுப் புதுமைப் பெண்களே நவீன சூழலுக்குத் தேவை என்பதை முன்வைக்கின்றனர்.

பெண்ணுக்கான வெளி இல்லத்தோடு முடிவடைவதில் இருவரும் விருப்பம் கொண்டிலர். சமூக வெளியிலும் பெண் மதிப்புமிக்கவளாக விளங்கவேண்டிய தேவையுள்ளதை இருவரும் தங்களது படைப்பின் வழி வெளிப்படுத்தியுள்ளதை இவ்வாய்வு எடுத்துக்காட்டியுள்ளது. சங்க இலக்கியம் முன்வைக்கும் அகம், புறம் சார் மதிப்பீடுகளோடு, இருபதாம் நூற்றாண்டு பாரதியார், பாரதிதாசன் பாடல்களோடு ஒப்பிட்டு  நிகழ்த்தப்பட்டுள்ள இவ்வாய்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றியுள்ள இலக்கியங்களில்  தொல்சீர் மரபின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்யத் துணைசெய்யும்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *