இந்த வார வல்லமையாளர் (300) – ‘கின்னரக் கலைஞர்’ சீர்காழி இராமு

0

இந்த வார வல்லமையாளர் எனக் ‘கின்னரக் கலைஞர்’ சீகாழி ராமுவை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கின்னரம் என்பது தமிழரின் மிகப் பழைய நரம்பிசைக் கருவி. தமிழ்நாட்டில் இக்கருவியை வில்லகம் (violin’s bow) கொண்டு மீட்டும் தமிழிசை மரபு அழிந்தொழிந்தது. கின்னரத்தின் இன்றைய பெயர் ‘கொட்டாங்கச்சி வயலின்’. இந்த அரிய கலையைக் கற்று, தமிழ்நாட்டில் மேடைகளிலும், பிளாட்பாரங்களிலும் இசைத்த சீர்காழி ராமு அண்மையில் மறைந்துவிட்டார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது கின்னர வாசிப்புகள் தேடப்பெற்று காணொளிகளும், கேட்பொலிகளும் (ஆடியோ) இணையத்தில் வலையேற வேண்டும். அவரது 8 மக்களிடமோ, நண்பரிடமோ ராமுவின் கின்னர இசைப் பதிவுகள் கட்டாயமாய் இருக்கும். 10 பேராவது ஒவ்வொரு பழைய முழவு, துளை, நரம்பு, கஞ்சம் என்னும் சங்கீதக் கருவிகளைக் கற்று வாசிக்கும் திறன் பெறவேண்டும். சீகாழி தமிழிசையின் தலைமை ஸ்தானம். சம்பந்தர் பிறந்த ஊர். கர்நாடக மூவருக்கும் முன்பிருந்த தமிழிசை மூவர்களும் வாழ்ந்த ஊர். அவர்களில் மூத்தவர் 16ஆம் நூற்றாண்டினர் ஆகிய முத்துத்தாண்டவர் என்னும் இசைவேளாளர். அவர்தான் தில்லைக் கூத்தபிரானை முதன்முதலில் கீர்த்தனை என்னும் வடிவை அமைத்துப் பாடித் தொழுதவர் (ஆதாரம்: மு. அருணாசலம், திருச்சிற்றம்பலம் (மயிலாடுதுறை) எழுதிய நூல்கள்). ராமு என்ற இசைவாணரின் எளிய வாழ்வினைப் பற்றி அவரது நண்பர் எழுதிய ‘தீக்கதிர்’ கட்டுரையை முழுமையாகத் தருகிறேன். பலரும் அறிந்துகொள்ள வேண்டியவர், குடும்பத்தாருக்கும் உதவலாம். கின்னரத்தை ராவணஹஸ்தம் என்றும் அழைப்பதுண்டு. ராவணன் கின்னரம் தன் நரம்பால் செய்து மீட்டியதைத் தேவாரம் பாடும். கின்னரம் வாசிக்கும் இராவணனைக் காளமேகப் புலவர் பூசணிக்கும், சிவலிங்கத்துக்குமான சிலேடை  வெண்பாவில்
அழகுறப் பாடியுள்ளார் [1].

ஜோயப் போர் (Dr. Joep Bor) போன்ற இசையியல் அறிஞர்கள் நரம்பிசைக் கருவிகளைத தேய்த்து வாசிக்கும் வில்நாண் உடைய ‘வில்லகம்’ பற்றி இன்னும் சரியாக ஆராயவில்லை என்றே தோன்றுகிறது. அவர் போன்றவர்கள் இந்த வில்லகக்கருவி கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் முன் கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் தமிழகத்தின் சிவாலயங்களில் – குடைவரைகள், கட்டுமானக் கோவில்கள் இன்னும் பார்க்கவில்லை. திருச்சி டாக்டர் இரா. கலைக்கோவன், அவரது மாணவி அர. அகிலா எழுதிய கட்டுரைகளில் சிரட்டைக் கின்னரி கொண்ட சிற்பங்களைப் பற்றி நிறைய 20 ஆண்டு முன்னரே எழுதியுள்ளனர். நடேசப் பெருமானின் கீழே கின்னரம் வாசிக்கும் சிவ கணங்கள் உள்ள முக்கியக் குடைவரையாக திருமலைப்புரம் என்னும் 7-ஆம் நூற்றாண்டின் பாண்டியர் குடைவரையைக் குறிப்பிடலாம். 8-ஆம் நூற்றாண்டிலே காஞ்சிபுரத்தில் இராஜசிம்மேசுவரம் என்னும் முதல் கற்றளியில் உள்ள கின்னரம் வாசிக்கும் பூத கணங்கள் இரண்டு இடங்களில் இருப்பது சிறப்பு. சோழர் காலப் படைப்புகள் என்று பார்த்தால் சுமார் 30 சிரட்டைக் கின்னரங்கள் தேறும் எனலாம். திருமலாபுரம், காஞ்சியில் உள்ள மூன்றுமே வில்லால் மீட்டும் சிரட்டைக் கின்னரி தான். சிரட்டை என்பது கொட்டாங்கச்சி. இதற்கு பதிலாகக் கச்சம் என்ற ‘நட்சத்திர ஆமை’ ஓட்டையும் பயன்படுத்தல் உண்டு. அந்தவகை நரப்பிசைக் கருவி கச்சபி என்றும், சரஸ்வதி கையில் உள்ளது இந்தக் கச்சக் கின்னரி என்றும் இந்திய சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன. பிற்காலத்தில் எல்லாவகை வீணைகளும் இந்தக் கின்னரத்தின்றும் பிறந்ததே. கூர்மவீணை என்றும், கூர்மி என்றும் குறிப்பிடும் ஆமையாழ் தோன்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரபாப்/ரெபெக் என்ற பெயரில் இந்தியாவில் இருந்து பரவிற்று. இதே போல, தும்புரு யாழ் என்பதும் பரவியது. ரபாப்/ரெபெக் மத்திய கிழக்கில் இருந்து இத்தாலி சென்று ஐரோப்பாவின் வயலினாக உருவெடுத்தது. பாலுஸ்வாமி தீட்சிதரும், தஞ்சை நால்வரில் வடிவேலுவும் திரும்பவும் கர்னாடக சங்கீதத்திற்கு வயலினை பிரிட்டிஷார் காலத்தில் மீளறிமுகம் செய்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியும், சரஸ்வதி வீணையைவிடச் சிறிதானதாகவும் இருப்பதால் கச்சேரிகளில் வயலின் சிலமாற்றங்களுடன் இடம்பெறலாயிற்று.

சிரட்டைக் கின்னரி (கொட்டாங்கச்சி வயலின்):
https://www.youtube.com/watch?v=BQQ2lSbdotY
https://www.youtube.com/watch?v=5Sa_SStKP40
https://www.youtube.com/watch?v=D52s7LlJwiA
https://www.youtube.com/watch?v=NOfUoSOqHnU
https://www.youtube.com/watch?v=48TR0tBPAxk
https://www.youtube.com/watch?v=zfoF_WAQEkw
https://www.youtube.com/watch?v=gJFRKZ-Q2Uc

திருக்கோவில்களில் தேவாரம் கின்னரம் கொண்டு இசைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கின்னரி என்னும் இந்த Pre-violin நரம்புக் கருவிக்குச் சங்க இலக்கியத்தில் இருந்து மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறேன். இவை இல்லாமல்தான் மேலையாசிரியர் இந்திய இசைக்கருவிகள் பற்றி இதுகாறும் ஆய்ந்துளர்.

(1) பெரும்பாணாற்றுப்படை 493-495:
இன்சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்
மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின். – பெரும்பாணாற்றுப்படை 493-495.

கின்னரம் வாசிக்கும் ஆந்தை ஜோடிகளை நிறைய அர்ஜுனன் தபசு சிற்பத்தில் மாமல்லையில் காணலாகும். பல்லவர் காலச் சிற்பங்கள். அதற்கு முன்னரே வரும் சங்கச் சான்று மேலே காணும் பெரும்பாண் வரிகள். இனிய தாளத்துடன் கின்னர மிதுனங்கள் கின்னரியாழை மீட்ட, அதற்கேற்றபற்றபடி மரங்கள் அடர்ந்த சோலையில் மயில்கள் நடமாடும். ஆங்கே அச்சுறுத்தும் அணங்கு என்னும் தெய்வங்கள் வாழும். கின்னரம் வில்லகவிரல் என்னும் நாணுடை வில்லாலோ, பாணன் கையின் விரலாலோ மீட்டலாம்.

(2) பெரும்பாணாற்றுப்படை 180-182
குமிழின் புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரிநரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும்பாண்.

மரல் கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் (நச்சினார்க்கினியர் உரை). இங்கே விரல் என்பது அதன் தொழிலால் கயிறுக்கு ஆகி வந்த உவமையாகு பெயர்.

பெரும்பாணாற்றுப் படையின் பழைய உரையில் கை விரலால் மீட்டுதற்குப் பதிலாக வில்லில் பொருத்திய மரல்கயிறு ஆகிய விரலாலே தெறித்து வாசிப்பது என்பதால் கின்னரத்தை வில்லால் மீட்டினர் என்பது அறியலாகும். கின்னரம் வயலின் போல இருப்பதும், மிகப் பழையதான ஒரு வில்லிசைக் கருவி. வில்லிசைக் கருவிகளே (Bowed Chordophones) உலகத்திற்கு  இந்தியாவின் கொடை. அதில் கின்னரம் பற்றி முவ்விடங்களில் (முத்தமிழ் போல!) சங்கப் புலவர்கள் பதிவு செய்திருப்பதும், தமிழகத்தின் சிற்பக்கலை தோன்றுகிறபோதே கின்னரம் சிவகணங்கள் கையில் காட்டுவதும் அருமையிலும் அருமை. எங்கே பார்த்தாலும், காரைக்கால் அம்மை கைத்தாளத்துடன் இருப்பார். அபூர்வமாக, திருப்புகலூரில் சிரட்டைக் கின்னரியுடன் இருப்பதை முனைவர் இரா. கலைக்கோவன் தம் ஆய்வேட்டில் எழுதியுள்ளார்.

இதனைப் பாண்டியர், பல்லவர் சிற்பங்களில், சிவகணங்களில் காட்டியுள்ளனர் என்பது வயலின் வரலாற்றின் மேலையுலக ஆய்வாளர்கள் இன்னும் அறியாத செய்தி ஆகும். இந்த இடத்தில் செங்கோட்டியாழ், கருங்கோட்டியாழ் என்பன பற்றிச் சில சொற்கள் குறிப்பிடல் பொருந்தும். செங்கோடு என்பது வளைவில்லாத வீணாதண்டம். இதனை stick zither என்பர் இசையியலார். கருங்கோடு என்பது எருமையின் கொம்பு எனச் சங்க இலக்கியம் காட்டும். எருமைக் கொம்பைப் போல் வளைந்த கோடு உடைய யாழ் என்பது கருங்கோட்டியாழ். வில் போன்று வளைந்த தண்டம் உடையது கருங்கோட்டியாழ் (வில்யாழ்). விபுலானந்தர் காட்டிய மகரயாழ், சகோட யாழ் போன்றவை காண்க. இவை harp எனப்படுபவை.

பெரும்பாணாற்றுப்படையிலே “விரல்” என்பது ஓர் இசைநுட்பக் கலைச்சொல். இதனைக் குறுந்தொகை 370 கொண்டும் வில்லகவிரல் என்பது Violin’s bow-with-cord என்பது அறியலாம்.

(3) குறுந்தொகை 370

(“பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டாள்” என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்ப, “தலைவன் ஈண்டு இருப்பின் அவனோடு பொருந்தியும் அவன் பிரியின் யாம் தனித்தும் இருப்பேம்” என்று கூறியது.)

பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை ஊரனொடு
இருப்பின் இருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
– வில்லக விரலினார்.

வில்லின் நாணினால் வாசிக்கும் கின்னரக் கருவியைப் பற்றிய அரிய பாடல் இது. முதலில் ஒன்று சொல்லவேண்டும்: அண்மைக்கால உரையாசிரியர்கள் இதனைப் பகைவனொடு உடற்றும் போரில் அம்பு எய்து கொல்லும் வில் என்று எடுத்த உரை செய்துள்ளனர். அது புறத்துறை ஆதலின், அகப்பாடலுக்கு போர்வில் உவமையாக வாராது என்பது திண்ணம்.

மிகச் சிறிய பாட்டாக தமிழிசையின் உலகப் பங்களிப்பைத் தருகிறார் இந்தச் சங்கச் சான்றோர். Red Earth and Pouring Rain என்ற ஏ. கே. ராமாநுஜனின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு வரியால் செம்புலப்பெயல் நீரார் பாடல் உலகமெல்லாம் பரவியது. வட இந்தியரான விக்ரம் சந்திரா இத்தலைப்பில் நாவல் செய்தார். தமிழில் உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் பலர். “வில்லக விரலினார்” என்பது சீகாழி ராமு போன்றோர் இசைத்த கின்னரக் கருவியின் வில்லின் நாணால் பெற்ற பெயர் ஆகும். பழைய தமிழிசைக் கருவி என்பதால் இவ்வரிய பாடலைச் சங்கத் தொகைப்பாட்டாகத் தெரிந்தெடுத்துச் சேர்த்துள்ளனர். நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்களின் உரை குறுந்தொகைக்குக் கிட்டியிருந்தால் கின்னரம் என்னும் செங்கோட்டியாழ், அதை மீட்டும் வில்லகம் என விளக்கியிருப்பர். ஆனால், குறுந்தொகைக்குப் பண்டைய உரை ஏதும் கிடைக்கவில்லை.

தமிழிசைக் கருவி உவமையாகப் பயன்படுத்துவதால், முன்னுரையே இசையின் தொடர்பாக அமைத்துள்ளார் சங்கக் கவிஞர். ஆம்பல் மலர் எங்கும் போவதில்லை. வண்டு தான் ஆம்பலைத் தேடி வருகிறது. அதுபோல், பரத்தை தன் நல்லகத்தில் தான் இருக்கிறாள். அவளைத் தேடி வந்து துய்க்கிறான் தலைவன் என்பது உள்ளுறை உவமம். ஆம்பல் என்பது மருதத் திணையின் பண். தற்காலச் சுத்த தன்யாசி ராகம். சீகாமரம் (ஸ்ரீகாமரம்) என்பது தேவார காலப் பண்ணின் பெயர். ‘காமரு தும்பி காமரம் செப்பும்’ (சிறுபாண். 77). ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி (சிலம்பு). ‘ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ’ (அகம்).

பாண்வாய் வண்டு நேர்திறம் பாடக்
காண்வரு குவளை கண்மலர் விழிப்ப (சிலம்பு)

பொய்கையிலே உள்ள ஆம்பலினது அழகிய நிறத்தையுடைய கொழுவிய அரும்பில் வண்டுகள் இதழைத் திறக்கும் தண்ணிய நீர்த்துறைகளை உடைய ஊருக்கு உரியனாகிய தலைவனோடு நாம் இருந்தால் இரண்டு உடலையுடையேம்; இது பகல் வேளையிலே எனலாம். அவரோடு துயின்றால் எம் இல்லத்தில் கின்னரத்தின் செங்கோட்டுடன் இணையும் வில்லக-விரல் ( violin’s bowstring) போல ஓர் உடலை யுடையேம்.

முடிபு: ஊரனொடு ஊரார் இருப்பின் இருமருங்கினம்; இரவில் கிடப்பின் பொருந்தி ஒரு மருங்கினம். இப்பாடலில் தமிழிசையின் மூத்த கருவிகளில் ஒன்றாகிய கின்னரம் என்னும் நரப்பிசைக்கருவி சொல்லப்பட்டுள்ளது. வில்லகவிரல் என்பது ஒரு இசைத்துறைக் கலைச்சொல் (technical vocabulary). வில்லகவிரல் = Kinnari’s bow-string. கையினால் மீட்டும்போது அது கையக விரல். இதனைப் பாரதியார் “வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு” என்று சரசுவதி வீணை வாசிப்பைப் பேசுகிறார். 2000 ஆண்டுக்கு முன் இருந்த வில்லகவிரலினார் கின்னரத்தை மீட்டும் வில்நாணை (=வில்லக விரல்) உவமையாகச் சொல்லியுள்ளார். வில்லகவிரல் என்பது உவமையாகுபெயராய் வில்நாணைக் குறிப்பது. இதனை பெரும்பாணாற்றுப்படையின் பண்டை உரையினால் அறிக. அற்புதமான தமிழிசை வரலாறு காட்டும் சங்கச் செய்யுள் இஃது. வில்லகவிரலால் கின்னரம் மீட்டும் பாணனின் 1810-ஆம் ஆண்டு ஓவியம் இணைத்துள்ளேன்.

நா. கணேசன்
[1] கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History) https://groups.google.com/d/msg/santhavasantham/aMK2Pa10Wvc/50g4ci83CQAJ

https://theekkathir.in/2018/12/03/ஒரு-கொட்டாங்கச்சி-வயலின்/
ஒரு கொட்டாங்கச்சி வயலின் கண்ணீர் வடிக்கிறது…!
===ந.காவியன்=== இசையால் புகழ்பெற்ற நகரம் சீர்காழி… இதுதான், சைவத் திருமுறை 12 ல் மூன்று திருமுறைகளைத் தன் தேவாரப் பதிகங்களால் நிறைவு செய்த திருஞான சம்பந்தரும், தமிழிசை மூவரும், இசைமாமணி சீர்காழி கோவிந்த ராஜனும் இன்னும் பல நாதஸ்வரக் கலைஞர்களும் தவில் கலைஞர்களும் இசைக் கலைஞர்களும் தோன்றிய இன்னிசை பூமி. இங்குதான் 72 ஆண்டுகளுக்கு முன்பு ராமு பிறந்தான். பின்நாளில் இவன்தான் கொட்டாங்கச்சி வயலின் சீர்காழி இ.எம்.ராமுவாகப் பரிணாமம் பெற்றவன்.

சீர்காழி நகரையொட்டிய ஊழியக்காரன் தோப்புப் பகுதியில் பூந்தோட்டம் தெருவில், ஒரு தலித்துக்குரிய வீடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட ஒரு குடிசையில் தான் ராமு பிறந்தான். கல்வி, தொடக்கப் பள்ளியைத் தாண்ட வில்லை. அப்பா கூலி வேலை செய்பவர். ராமுவும் படிப்பை விட்டுவிட்டு, அப்பாவோடு விறகு வெட்டுதல், செருப்புத் தைத்தல் போன்ற வேலைகளைச் செய்து வந்தான்…

கர்நாடகாவில் அறிமுகமான வயலின்
அப்போது, கர்நாடகா கோலார் தங்கச் சுரங்கத்திலும் மற்ற பகுதிகளிலும் தமிழகத்திலிருந்து பலர் வேலை பார்க்கச் சென்றனர். ராமுவும் அங்கு சென்று கிடைத்த வேலைகளைப் பார்த்து வந்தான். வாரத்தில் ஒருநாள் பக்கத்து ஊரில் சந்தை கூடும். அப்படி ராமு சென்றபோது, ஒருவன், கொட்டாங்கச்சி வயலின்களை வைத்துக் கொண்டு, ஒரு வயலினில் மிக இனிமையாக ஒரு ராகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். வேடிக்கை பார்த்த ராமு, அந்த இசையில் மயங்கிப் போய், காசு கொடுத்து ஒரு கொட்டாங்கச்சி வயலினை வாங்கிக் கொண்டு, தான் தங்கியிருந்த பகுதியில் ஆசையோடு அந்த வயலினை வாசிக்க ஆரம்பித்தான்.

ராகமும் வரவில்லை, எந்த சப்தமும் வரவில்லை. அடுத்த வாரம் அந்தச் சந்தைக்குச் சென்று, வயலின் விற்பவனைப் பார்த்து, ‘‘நீ மட்டும் இசை வாசிக்கிறாய், என்னுடைய வயலினில் எதுவும் வரவில்லையே’’ என்று சொன்னதற்கு, ‘‘இதில் பல வாரங்கள் பழக வேண்டும், ஒரு வித்வானிடம் போய் வாசிக்கக் கற்றுக் கொள்’’ என்றான் வயலின் விற்பவன்.

வயலின் வசப்பட்டது
எப்படியோ ஒரு வயலின் வித்வானைக் கண்டுபிடித்து, அந்தக் கொட்டாங்கச்சி வயலினக் கொடுத்து, கற்றுக் கொடுக்கச் சொன்னான் ராமு. அவருக்கோ அதை வாசிக்கத் தெரியாது. இருந்தாலும், தனது வயலின் அனுபவத்தில் நரம்பில் எப்படி விரல்களை வைப்பது, வாசிப்பது எனச் சொல்லி, சில ராகக் குறிப்புகளையும் கொடுத்தார் வித்வான். அவ்வளவுதான், எல்லாவற்றையும் மறந்து, இரவும் பகலுமாக அந்தக் கொட்டாங்கச்சி வயலினோடு போராடிக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ராகம் வாசிக்கக் கற்றுக் கொண்டான் ராமு.

அப்போது ராமுவுக்குக் கர்நாடகாவில் இருப்புக் கொள்ளவில்லை. தான் கொட்டாங்கச்சி வயலினில் பாட்டுகள் வாசிப்பதைத் தன் ஊரில், தன் நண்பர்களுக் கெல்லாம் காட்ட வேண்டும் என்று சீர்காழிக்கு வந்தான் ராமு. சில நாட்களில் தந்தையும் இறந்து விட்டார்.

சோறுபோட்ட கொட்டாங்கச்சி வயலின்
கூலி வேலை செய்வதில் அவனுக்கு நாட்டமில்லை. சாப்பாட்டுக்கு வழி? சீர்காழி சந்தைப்பேட்டையில் ஒரு முஸ்லிம் பக்கிர்சா, தப்(ஸ்) அடித்துக் கொண்டு, கெளரவமாகக் காசுகள் சேர்ப்பதைப் பார்த்து, அவரோடு ஒரு சிறுமியும் உடன் இருப்பதைக் கண்டு அவள் அவரின் மகள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவனும் தனது வயலினை எடுத்துக் கொண்டு வந்து, சீர்காழி சந்தையில் வாசித்தான். உணவுக்குக் காசுகள் சேர்ந்தன.

அவ்வளவுதான், சீர்காழி சந்தை, பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் என்று வாசிக்க ஆரம்பித்தான், அந்த பக்கிர்சா, ராமுவிடம் ஒரு யோசனை கூறினார், ‘‘இப்படி நாம் தனித் தனியாக வாசிப்பதைவிட, நீ வயலின் வாசிக்க நான் தப்ஸ் வாசித்தால் இன்னும் கூட்டம் கூடும் இல்லையா?’’ என்றார். நல்ல யோசனையாக இருக்கிறதே என்று சம்மதித்த ராமு, அதுமுதல் இருவரும் சேர்ந்து வாசிக்கத் தொடங்கினார்கள். இந்த இசைப் பயணம் பக்கத்து ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.

மும்தாஜோடு பயணம்
ஒருநாள், சீர்காழி பேருந்து நிலையத்தில் அந்த பக்கிர்சா ராமுவிடம் கூறினார், ‘‘தம்பி, நான் அறிந்தவரை நீ நல்ல பையனாக இருக்கிறாய். இந்தப் பெண் மும்தாஜ் என்னுடைய மகள், தாய் இறந்துவிட்டாள். எனக்கு இப்போது இவள் கவலையாகத்தான் இருக்கிறது. நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. இதோ, என் மகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ வாழ வை’’ என்று கூறி விட்டு, ஒரு பேருந்தில் ஏறிச் சென்றவர்தான், அதற்குப் பின் அவர் வரவே இல்லை.

14 வயதுடைய பெண்னை அழைத்துக் கொண்டு, ராமு, கர்நாடகா சென்றான், பிறகு பம்பாய் சென்றான். பம்பாய் ரயில்வே ஜங்ஷன் பெஞ்சில் இருவரும் அமர்ந்திருக்கும் போது, பெஞ்சில் ரத்தச் சிவப்பைப் பார்த்து அதிர்ந்து போய்,பின்னர், மும்தாஜ் வயதுக்கு வந்து விட்டதைப் புரிந்து கொண்டு, பைப்பில் தண்ணீர் கொண்டுவந்து பெஞ்சைக் கழுவி, மும்தாஜையும் குளிப்பாட்டி வைத்துவிட்டு, வெளியே ஓடிப்போய் புதிய உடைகள் வாங்கி வந்தான்.

மும்தாஜூடன் இருப்பதைக் காலிகள் ஒரு மாதிரியாகப் பார்ப்பதை உணர்ந்து, பெண்ணுடன் ரயிலேறி தில்லிக்குச் சென்றான், ராமுவுக்கு இந்தியில் அப்போது பிரபலமான ஆராதனா, பாபி, நாகின் திரைப்படப் பாடல்களின் மெட்டுகள் நன்கு தெரியும். தில்லி மாநகரில் இந்திப் பாடல்களின் மெட்டுகளை அற்புதமாக வாசித்துக் கொஞ்ச காலம் வாழ்க்கையை ஓட்டினான். இனியும் அங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்பதால், தமிழகத்திற்கு வந்து, பின் தனது ஊரான சீர்காழிக்கு வந்தான்.

கலை இலக்கிய இரவு – கண்டெடுத்த கலைஞன்
மும்தாஜ் ‘விஜயா’ என்று மாற்றப்பட்டாள். தொடர்ந்து ராமு, சந்தைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வயலின் வாசித்துக் காசுகள் சேர்த்துத் தன் மனைவியோடு வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி வருகையில், குழந்தைகள் பிறந்தனர். ராமுவிற்கு 5 பெண்கள், 3 ஆண்கள்.
அப்பொழுது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளராக நாகைமாலி இருந்தார். 1996-ஆம் ஆண்டு, கீழ்வேளூரில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. சந்தைப் பேட்டைகளிலும், பேருந்து நிலையங்களிலும் ராமு என்ற கலைஞர்
கொட்டாங்கச்சி வயலின் வாசித்து வருகிறார். அந்த வீதிக் கலைஞனை நம் கலை இலக்கிய இரவில் அறிமுகப்படுத்தினால் என்ன? என ஒரு தோழர் சொல்ல, உடனே, நாகைமாலி ராமுவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கீழ்வேளூர் கலை இலக்கிய இரவில் மேடையில் ஏற்றினார்.

தமிழகமெங்கும்
அதன்பின், தமிழகமெங்கும் நடைபெறும் கலை இலக்கிய இரவுகளில் மேடையேறிய ராமுவிற்குப் புகழ் பெருகியது. சீர்காழி ராமு இல்லாமல் கலை இலக்கிய இரவுகள் இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. இப்படி, வீதிகளில் தன் இசையை விற்று ஒரு இரவலராக வாழ்ந்த ராமுவைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கெளரவமான ஒரு மேடைக் கலைஞராக மாற்றியது.

கலைஞனும் வறுமையும்
ஆண்டு முழுவதும் கலை இலக்கிய இரவுகளும் நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. 7 பிள்ளைகள், மனைவி… சோறு போடவேண்டும். மீண்டும் வெட்கம் பாராது, மக்கள் கூடும் இடங்களில் ராமு வயலின் வாசிக்க ஆரம்பித்தார்.
கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் பல இல்ல விழா நிகழ்ச்சிகளுக்கு ராமுவை வரவழைத்து, வாசிக்க வைத்த பின் சீர்காழிக்குப் போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து அனுப்பிய கொடுமைகளும் நடந்தன.

மனைவி விஜயாளுக்கு (மும்தாஜ்)க் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்பார்வை பறிபோனது. சிகிச்சை செய்யக்கூடப் பணம் இல்லை. ராமுவும் அடிக்கடி நோய்வாய்ப் பட்டார். பார்வை இழந்த மனைவியோடு பிற ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தார்.

கலைஞனுக்குக் கிடைத்த கைத்தட்டல்கள்
நாகைக் கலை இலக்கிய இரவில் நான் தொகுப்புரையாற்றுவேன், ராமு மேடை ஏறும்போது, பெரிய கைத்தட்டல்கள் கிடைக்கும். சில பாடல்களை மிக அற்புதமாக வாசிப்பார். அப்படிப்பட்ட பாடல்களாகக் கூறி வாசிக்கச் சொல்லுவேன். ‘‘மச்சானப் பாத்தீங்களா?’’ ‘‘கொட்டப் பாக்கும்’’, ‘‘உன் கண்ணில் நீர் வழிந்தால்…’’ ‘‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’’ போன்ற பாடல்களைத் துவக்கும் போதே, ஆர்வலர்கள் பலத்த கைத்தட்டல்களை வழங்கி உற்சாகமூட்டுவார்கள்.

ஈடில்லாக் கலைஞன்
ஈடு இணையற்ற அந்த இசைக் கலைஞனுக்கு திடீரென மூளையில் கட்டி ஏற்பட்டுப் பேசமுடியாமல் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகளாக கலை இலக்கிய இரவிற்கு ராமுவை அழைக்க முடிய வில்லை. ஆர்வலர்கள் ‘ஏன் சீர்காழி ராமு வரவில்லை?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள். அடிக்கடி, சீர்காழி தமுஎகச தோழர்கள் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவார்கள்.

அப்படி ‘நன்னானே’ சு.ரமேஷ் பார்த்துப் படுக்கையில் அவரைப் படம் பிடித்து வந்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதைப் பார்க்கச் சகிக்கவில்லை. எப்படிப் பட்ட கலைஞன்! மேடையேறி தனது கொட்டாங்கச்சி வயலினை எடுத்துக் கம்பீரமாக நின்று இசையமுதைக் கொட்டியவர்…

இறுதிப் பயணம்
உடல்நிலை மிகவும் மோசமாகி சென்னை மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். திடீரென எங்களுக்கு அதிர்ச்சியான செய்தி வந்தது. டிசம்பர்-2, ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை மருத்துவமனையிலேயே ராமு இறந்து விட்டார்.. அவரது உடல் சீர்காழிக்குக் கொண்டு வரப்படுகிறது என்று…

டிசம்பர்-3 அன்று, பிற்பகலில் சீர்காழி பூந்தோட்டம் தெருவில் உள்ள ராமுவின் இல்லத்திலிருந்து இறுதிப் பயணம் புறப்பட்டது. பிள்ளைகள், ‘‘அப்பா அப்பா’’ என்று கதறினார்கள்; ‘‘ஐயோ! ஐயோ!’’ என்று கண் இழந்த மனைவி கதறினார்; ‘‘ராமு! ராமு!’’ என்று தோழர்கள் புலம்பினார்கள்.. ஆனால், வீட்டின் உள்ளே ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டாங்கச்சி வயலின் மட்டும் மெளனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

**********************************

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *