-மேகலா இராமமூர்த்தி

வல்லமை வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நமைப் பீடித்திருக்கும்…
இன்னல்கள் மறைக!
இன்பங்கள் நிறைக!

*****

கம்பிகளுக்குப் பின்னே நிற்கும் இந்தத் தம்பியைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு. ஐயப்பன் கிருஷ்ணன். இந்த ஒளிப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து நமக்கு வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றிகள்!

”இரும்புக் கம்பிகள் உன்முகத்தைச் சற்றே மறைத்திடினும்
அரும்பே உன்றன் பார்வையின் கூர்மை எமை ஈர்க்கிறதே!” என்று சொல்லத் தோன்றுகின்றது இச்சிறுவனைக் காண்கையில்!

கரும்புக் கவிதைகளை இந்த அரும்புக்குப் பரிசாய்த் தரக் காத்திருக்கும் கவிஞர்களைக் கனிவோடு வரவேற்கின்றேன்!

*****

வெட்டவெளியில் விளையாடிய பிள்ளை வீட்டுக்குள் அடைந்ததன் காரணங்களைத் தம் கவிதையில் ஆராய்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

எதனால்…

வெட்ட வெளியில்
கட்டுப்பாடின்றி
ஓடி விளையாடிய பிள்ளை,
வீட்டுக்குள் அடைந்துகிடந்து
வெளியே பார்க்கிறது
பரிதாபமாய்…

நோய்த் தொற்றால்
வந்த உள்ளிருப்பு
காரணமா,
கைப்பேசி நோண்டும்
பெரியவர்கள்
கண்டுகொள்ளாமல் விட்டதாலா…

பல வீட்டுச்
சன்னல்களில்
பார்க்கிறோமே இப்படி…!

*****
”தடுப்பின் பின்னிருக்கும் சுட்டிப் பயலே! கட்டிக் கரும்பே! உன் மனவோட்டத்தைச் சொல்லடா” என்று  சிறுவனிடம் உரிமையோடு கேட்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

அழகிய முகமதில் கூரிய பார்வை
ஆழப்பதியும் எண்ணக் கோவை
வடிவழகிய உதட்டில் தடுப்புப் பாதை
வெண்பற்களின் அழகும் தெரியாவண்ணம்
மஞ்சள் வெயில் முகத்தில் விழ
கன்னமது பளப்பளக்க
உன் மனவோட்டம் யாமறியோம்
சுட்டிப் பயலே கட்டிக் கரும்பே
சொல்லடா கனிமொழியில் சொல்லடா!

”ஒளிபடைத்த கண்ணினாய்…விழிமொழியால் உலகாளலாம்;
வெளி பெரிது வெளியே வா; வழி விரியும் வாழ்வு புரியும்” என்று சின்னக் கண்ணனுக்கு நம்பிக்கை மொழி நவில்கின்றார் திரு. யாழ். பாஸ்கரன்

பட்டு விழிப் பாவைகள் வண்ணப்
பட்டாம்பூச்சியாய்ப் படபடக்க – பார்வை
பட்ட இடமெல்லாம் பட்டொளி பூக்கப்
பட்டென்று தொட்டுவிட்டாய் நெஞ்சை!

சின்ன சாளரம் வழியே விழி பாய்ச்சும்
சின்னக் கண்ணா என்ன எண்ணமடா- உன்
சிந்தை அதனுள்ளே பொங்கி எழுந்து
சிந்தனைக் கதிர்களை சீறிப்பாய்ச்சுகிறது?

ஒளிபடைத்த கண்ணினாய்
விழி மொழியால் உலகாளலாம்
வெளி பெரிது வெளியே வா
வழி விரியும் வாழ்வு புரியும்!

தலைமகனே தளையறு
தடை உனக்கு யார் இட்டாலும்
தலை வணங்கும் தரணி
தலை எடு தலைவனாக!

சிறுவனை வைத்துப் பெரிய கருத்துக்களைப் பாங்காய் உரைத்திருக்கும் கவிஞர்பெருமக்களுக்குப் பாராட்டுக்கள் பல!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

புதுப்பாதை!

துள்ளிக் குதித்து
புத்தகப் பையைத் தூக்கிப்
பள்ளிக்குச் செல்ல முடியவில்லை!
அள்ளித் தெளித்துப்
போட்டுவைத்தக் கோலம் அழித்து ஓடி
விஷமம் செய்ய முடியவில்லை!
வெயிலில் புழுதியில்
உடைகள் அழுக்காக்கி
ஆட்டம் போட முடியவில்லை!
கையில் காலில் சிறுகாயம் கொள்ளத்
தாய்தந்தை தேற்றும்
விளையாடல் இருக்கவில்லை!

முகமறியா நபர்களிடம் பழகத்
தடை விதித்தார்கள்; இப்போது
முகம் மூடா நபர்களைக் காணமுடிவதில்லை!

வீட்டை விட்டு வெளியே வந்து
ஆட்டம் போடமுடியவில்லை!
கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகள்
சிறகை விரித்து உலகம் காணவில்லை!

ஜன்னல் காட்சியே உலகம் ஆனது!
பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது!
எத்தனை காலம் சும்மா இருப்பது
புத்தாண்டே புதுப்பாதை வகுக்க வா!!

”கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகளான நாங்கள் சிறகை விரித்து உலகைக் காண இயலவில்லை; ஜன்னல் காட்சியே எங்கள் உலகம் ஆனது; பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது; புத்தாண்டே வா! புதுப்பாதை தா!” என்று ஏக்கமொழிகள் பகரும் சிறுவனை நம் கண்முன் நிறுத்தியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *