மாவு மிஷின் (சிறுகதை)

0

பாஸ்கர்

நிஜார் போட்டிருந்த நாட்களில் நான் குந்துமணி பங்களாவில் மாடிப்படி மாது. கடைக்கு ஏதேனும் வாங்கவேண்டும் என்றால் எல்லோரும் என்னைத் தான் அழைப்பார்கள். மங்களம் மாமி பில்லை காபிபொடி கேட்பாள். ஆராவமுது அய்யங்கார் கேட்பது மைதீன் புகையிலை. அதுவும் மாமிக்கு தெரியாமல் கொடுக்க வேண்டும். பார்த்துவிட்டால் மாமி எனக்கு புரியாதபடி மாமாவை வைவாள். புகையிலை மயக்கத்தில் வாயை குதப்பிக் கொண்டு மாமா இன்றெல்லாம் உட்கார்ந்திருப்பார். வாயைத் திறக்க மாட்டார். திறந்துவிட்டு பேசினால் அந்த குதப்பலை முழுங்க வேண்டி வரும். வாந்தியும் எடுத்து பார்த்து இருக்கிறேன். மாமி பயந்து கொண்டு எண்ணண்ணா என்பாள். பித்தம்டி என்பார். எனக்கு தான் தெரியும். மாமாவை உற்றுப் பார்த்தால் படவா என்பார்.

இதில் விஷேசம் இந்திரா அக்காதான். அக்காவுக்கு வேண்டியது புஸ்தகங்கள்தான். இந்த புஸ்தகங்கள் எனக்குப் புரியாது. ஆனாலும் ஒவ்வொரு புஸ்தகத்திலும் ஒரு வாசனை உண்டு. அதனைப் பிரித்து முகர்ந்து கொண்டு நடந்து வருவது ஒரு பெரிய சந்தோஷம். எல்லோரும் வேலை முடிந்ததும் இரண்டு பைசா கொடுப்பார்கள். என்ன ஒற்றுமை? அலுமினியக் காசு. தினம் கொஞ்சம் பைசா சேரும். சாயந்தரம் பொரிகடலை பபுல்கம்முக்கு உதவும். இந்த சந்தோஷம் எல்லாம் பூமா மாமி கூப்பிட்டால் போய்விடும். காரணம் என்னை மாமி அனுப்புமிடம் – மாவு மிஷின்.

வழுமூன அரைச்சிண்டு வா என்பாள். இந்த வழுமூனன்னா என்ன என்று மிஷின் காரரைக் கேட்டேன். ஐயரம்மாவைக் கேள் என்றான். அவன் கோபக்காரன். அவனைப் பார்த்தால் மீசையைச் கண்டால் லேசாக கால்கள் நடுங்கும். இப்போது மீசை எல்லாம் ஒரே மாவு, பார்க்க இன்னும் பயங்கரமாக இருந்தான். அவன் பின்னால் உள்ள மிஷினை நோண்டிக் கொண்டிருக்க நான் முதலில் முடித்துவிட்டு ஓடி விடுவேன். அடுத்த முறை அங்கு சென்றபோது அந்த இரைச்சல் ஜிவ்வென்றிருந்தது. கால்கள் தடதடத்தன. பெரிய நடுக்கம். ஒரு அதிர்வு. எனக்கு சத்தம் என்றால் ஒத்துப் போவதில்லை. நிஜாரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மாவு பாத்திரம் கொடுத்தேன். எல்லோரும் என்னைப் போல் அரை டிராயர். உடம்பெல்லாம் ஒரே கருப்பு கீல். மாவு படாத இடமில்லை. அவன் உடம்பில் எங்கு தட்டினாலும் வெண்புகை கிளம்பும். இதில் ஒரு பெரிய மகிழ்ச்சி உண்டு. இந்த இரைச்சலான ஓட்டத்தில் இடையே சில சமயம் எல்லா இயந்திரங்களும் பட்டென நிற்கும். அந்த பேரமைதி அடடா.. என்ன எழுச்சியான மனம் அப்போது.

அவ்வயதில் பள்ளி விடுமுறை துவங்கி எல்லோரும் ஊருக்குப் போய்க் கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. இந்த விடுமுறை நாட்களில் நிறைய பேர் என்னை கடைக்கு அனுப்பி பெரிய மாதுவாக்குவார்கள். ஆனால் மாறாத அதே இரண்டு பைசா. சில சமயம் பித்தளை கருப்பு மஞ்சளில் கிடைக்கும். பைசாவைக் கொடுக்கும்போதே வேர்க்கடலை உரிக்கும் ஞாபகம் வரும்.

இந்தாடா கோதுமை டேய் பஞ்சாப் கோதுமை.. பாத்து அரை. தூக்கிக் கொண்டு போனேன். போகும் வழியில் கோதுமையை அளைந்துகொண்டு கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டேன். பபுல்கம் மாதிரி முடியாமல் போக அதற்குள் மாவு மிஷினே வந்துவிட்டது. லுங்கிக் கட்டிக் கொண்டு ஒருவர் எவ்வளவு என்றார். என் கூலியா. அவர் கூலியா தெரியவில்லை. அப்படியே பீடியோடு அவர் போய்விட்டார். கோதுமை அரைத்து கையில் வைத்துக்கொண்டு இளம்சூட்டில் இருக்க முதுகில் தட்டி பத்து பைசா என்றார்.

ஜோபியை துழவினேன். எங்கும் இல்லை. கொஞ்சம் அழுகை வந்தது.

என்ன முட்டாய் வாங்கித் தின்னியா? இல்லை தலையாட்டினேன்.

சரிசரி குந்துமணி பங்களா தானே எந்த ஐயர் வீடு எனக் கேட்டான். சொன்னேன்.

மாமியிடம் மாவு கொடுத்தாகி விட்டது. தலையைக் கோதிவிட்டாள். மோர்குடிடா கொஞ்சம்.. இந்தா அய்யா..

இந்த பேப்பரை பெரிசா விரித்து மாவெல்லாம் கொட்டு என்றாள். செய்தேன். நல்லா கையால அளைந்துவிடு என்றாள். சூடு தாங்கவில்லை. செய்தேன். வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் அளைக்கையில் ஒரு பொருள் தட்டுப்பட எடுத்துப் பார்த்தால் பித்தளை பத்து பைசா. நாலாபக்கமும் நசுங்கி உருத் தெரியாமல் எல்லாப் புறமும் கீரலாக இருந்தது.

கோதுமையுடன் கலந்து காசும் அரைபட்டு சிதிலம். அப்போது கூட அந்த காசு நசுங்கின விதம் பற்றி தான் யோசித்து கொண்டிருந்தேனே தவிர பணம் போன கவலை இல்லை .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.