குறளின் கதிர்களாய்…(339)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(339)

உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.

– திருக்குறள் – 734 (நாடு)

புதுக் கவிதையில்...

கொடிய பசியும்
உடலில் வந்தபின்
நீங்கிடா நோய்களும்,
அழிவைத் தந்திடும்
அடுத்தவர் பகையும்
இல்லாமல் மக்கள்
இனிதே கவலையின்றி
இருப்பதுதான் நாடு…!

குறும்பாவில்...

கொடும்பசி கொல்லும் நோயுடன்
கெடுத்திடும் அடுத்த நாட்டுப் பகையிவை
இலாதே மக்கள் இனிதிருப்பதே நாடு…!

மரபுக் கவிதையில்...

வறுமையி லுளோரை வாட்டுகின்ற
வலிமை மிக்கக் கொடும்பசியும்,
பொறுக்க முடியா வலியுடனே
போக்கிட வழிய தறியாத
வெறுத்திடத் தக்தாய்த் தொடர்நோயும்
வேந்தன் ஆட்சியில் வாராதே,
சிறுமைப் பகைகளும் இலாதிருப்பதே
சிறந்த நாடெனச் செப்புவரே…!

லிமரைக்கூ..

கொடும்பசி என்னும் கேடு,
கொல்லும் நோயுடன் பிறர்பகை இவையெலாம்
இல்லா திருப்பதே நாடு…!

கிராமிய பாணியில்...

நாடு நாடு
நல்ல நாடு,
நாட்டு மக்களுக்குக்
கேடு வராமயிருந்தாத்தான்
அது
நல்ல நாடு..

வறும வந்து
மக்கள வாட்டுற
கொடிய பசியும்,
ஒடம்பு மனசு எல்லாத்தையும்
ஒண்ணாப் பாதிச்சிக்
கொணப்படாத நோயும்,
உள்ளிருந்தும் வெளியயிருந்தும்
நாட்டுக்கு வந்து மக்கள
வாட்டுற பகயும்
இல்லாம மக்கள்
மகிழ்ச்சியா
இருக்கிறதுதான் நல்ல நாடு..

அதுதான்,
நாடு நாடு
நல்ல நாடு,
நாட்டு மக்களுக்குக்
கேடு வராமயிருந்தாத்தான்
அது
நல்ல நாடு…!

About செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க