எளிய வாழ்க்கையின் இனிமையை உணர்த்திய அறிஞர்

1

மேகலா இராமமூர்த்தி

மாட மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்வதே வாழ்க்கை என்று எண்ணும் மானுடரே இம்மன்னுலகில் அதிகம். எளிய வாழ்க்கையை மேற்கொள்வதும் அதில் தன்னிறைவு காண்பதும் பலராலும் சிந்தித்துப் பார்க்கவும் இயலாத ஒன்று. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில், வேண்டாமை அன்ன விழுச்செல்வம் எனும் வள்ளுவத்தை நெஞ்சில் நிறுத்தி, தேவைகளைக் குறைத்து நிறைவோடும் நிம்மதியோடும் வாழும் மனிதர்களும் அத்தி பூத்தாற்போல் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களில் ஒருவர்தாம் ஹென்றி டேவிட் தொரோ (Henry David Thoreau) எனும் மேனாட்டுச் சிந்தனையாளர். அவரின் வாழ்க்கையை நாம் அறிந்துகொள்வது எளிமையிலும் இனிமையாகவும் இன்பமாகவும் வாழ்வது சாத்தியமே என்பதை நமக்கு உணர்த்துவதாய் அமையும்.

மாசசூசட்ஸ் மாகாணத்திலுள்ள கான்கார்டு (Concord, Massachusetts) என்ற ஊரில் ஜூலை 12, 1817ஆம் ஆண்டு ஜான் தொரோ (John Thoreau), சிந்தியா டன்பர் (Cynthia Dunbar) இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் ஹென்றி டேவிட் தொரோ. பென்சில்கள் செய்து அவற்றை விற்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த தொரோவின் தந்தையால் அதில் அதிக அளவில் பொருளீட்ட இயலவில்லை; அதனால் வீட்டில் வறுமையே கொலுவிருந்தது.

எனினும், ஹென்றி டேவிட் தொரோவின் பெற்றோர்கள் வளமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தமையால் பழைய செல்வ வளத்தை அவர்களால் மறக்க இயலவில்லை. எனவே நிகழ்காலக் குடும்பச் சூழ்நிலை வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தாலும் அதற்காகத் தம் பிள்ளைகள் வெறும் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆகையால் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஹென்றி தொரோ முதலாவதாகப் படித்த பள்ளிக்கூடம் பாஸ்டனில் (Boston) இருந்தது. பிறகு கான்கார்டில் உள்ள பள்ளியில் பயின்றார். அங்குதான் அவர் நடனமாடவும் குழல் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

இலத்தீன் கிரேக்கம் பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் கணிதத்திலும் நல்ல அறிவைப் பெற்றபிறகு ஏழை மாணவர்களுக்குரிய உதவிச் சம்பளத்தோடு ஹார்வார்டு பல்கலைக்கழத்தில் (Harvard University) நுழைந்தார் ஹென்றி தொரோ. அங்கே கல்லூரிப் படிப்பை முடித்து வெளியில் வந்தார். அவரைப் பொறுத்தவரை பல்கலைக்கழகம் என்பது பிற அறிஞர்களுடைய அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்குரிய வாயிலாக இருந்ததே தவிர சமுதாய நட்பைப் பெறவும் தொழில்முறையில் திறமை பெறவும் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாக அமையவில்லை. பாடத்திட்டத்தைவிடவும் கல்லூரி நூலகத்திற்குச் சென்று ஜெர்மானிய இலக்கியம், 17ஆம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியம் ஆகியவற்றைக் கற்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் தொரோ.

ஹார்வார்டு பல்கலைக்கழகம் அக்கால நடைமுறைக்கேற்ப தொரோவை ஒரு படிப்பாளியாக மட்டுமல்லாமல் அதற்கும் மேற்பட்ட ஓர் எழுத்தாளராகவும் ஆக்கியிருந்தது. நியூ இங்கிலாந்தில் தோன்றிய புதிய சிந்தனை இயக்கத்தின் தலைவராக விளங்கவிருந்த ரால்ப் வால்டோ எமர்சன் (Ralph Waldo Emerson), ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் (Oliver Wendell Holmes) போன்றவர்களின் ஆசிரியராக விளங்கியவரும் அடுக்கு மொழியில் மிடுக்காய்ப் பேசுபவருமான  எட்வர்டு டிரல் சேனிங் (Edward Tyrrel Channing) என்பவரிடம்தான் தொரோவும் கல்வி பயின்றார். இவரிடம் பயின்றதால் ஒழுங்குமுறை, தர்க்கம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டான ஒரு நடையைக் கற்றார் தொரோ.

ரால்ப் வால்டோ எமர்சன்தான் இளைஞரான ஹென்றி டேவிட் தொரோவிடம் காணப்பெற்ற மேதைமையை வெளிக்கொணர்ந்தவராவார். அத்தோடு எமர்சன் எழுதிய இயற்கை (Nature) என்ற நூலே தொரோவின் மனத்தில் இயற்கைமீது அளவிலாக் காதல் ஏற்படவும் இயற்கையோடு இயைந்தே மனிதன் வளர்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணம் வளரவும் காரணமாய் அமைந்தது.

1840ஆம் ஆண்டு ’தி டயல்’ எனும் இதழைத் தொடங்கினார் எமர்சன். அமெரிக்க இலக்கிய வரலாற்றில் அந்த நிகழ்வு இடம்பெறாவிட்டாலும், தொராவின் வாழ்க்கையில் அது முக்கியமான ஒன்றாக அமைந்தது என்றே குறிப்பிட வேண்டும். பாஸ்டன் நகரில் வெளியான அந்த இதழுக்கு முந்நூற்றுக்கும் குறைவான சந்தாதாரர்களே இருந்தபோதிலும் அறிவாளிகள் வட்டத்தில் அந்த இதழுக்கு நல்ல மதிப்பிருந்தது. தொரோவைப் போல் உலகுக்கு அறிமுகமாகாதிருந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் நற்பணியையும் அவ்விதழ் செவ்வனே செய்தது.

ஆற்றல்மிகு எழுத்தாளராகவும், புதுமைச் சிந்தனையாளராகவும் திகழ்ந்த மார்கரெட் புல்லர் (Margaret Fuller) என்ற அம்மையார் அந்த இதழின் ஆசிரியராய்ப் பணியாற்றினார். தொடக்க கால எழுத்தாளராக அப்போதிருந்த தொரோவின் ’வாச்சுசெட்டில் ஓர் நடைப்பயணம்’ (A walk to Wachusett) என்ற கட்டுரையை, ஓர் கற்றுக்குட்டியின் எழுத்து, என்று விமரிசித்து தி டயல் இதழில் வெளியிட மறுத்தார் புல்லர். தொரோவுக்கு அஃது அப்போது அவமானத்தைத் தருவதாக இருந்தாலும் அவருடைய எழுத்தைச் செம்மைப் படுத்திக்கொள்ள அப் புறக்கணிப்பு உதவிற்று எனலாம்.

1842ஆம் ஆண்டு தி டயல் இதழை எடுத்து நடத்தும் பொறுப்பை புல்லரிடமிருந்து எமர்சனே ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து தொரோவின் கட்டுரைகள் பல அவ்விதழை அணிசெய்யத் தொடங்கின. ’மசாசூசெட்சின் இயற்கை வரலாறு’ (Natural History of Massachusetts) என்ற தொரோவின் நீண்ட கட்டுரை டயல் இதழில் அப்போது வெளியாயிற்று. எதிர்காலத்தில் உயர்ந்த நடையில் எழுதக்கூடிய சிறந்த எழுத்தாளராகத் தொரோ மலரப்போகின்றார் என்பதற்குக் கட்டியம் கூறுகின்ற வகையில் அந்தக் கட்டுரை அமைந்திருந்தது.

தொடர்ந்து எழுதிவந்த போதிலும் வாழ்க்கைக்குத் தேவையான பொருளைத் தொரோவால் ஈட்டமுடியவில்லை. எமர்சனைப்போல், எழுதுவதோடு சொற்பொழிவும் நிகழ்த்தினாலொழிய வாழ்வதற்குத் தேவையான பொருளைப் பெறமுடியாது என்றுணர்ந்தார் தொரோ. ஆனாலும் பொருளுக்கு அடிமையாகாத – எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்ற வாழ்க்கையையே அவருடைய அகமனம் அவாவியது.

நவீன யுகத்தின் இயல்பாக அமைந்துள்ள ஓயாத அவசரம், ஒழியாத வேலை என்ற இரண்டையும் இயற்கை முற்றிலும் மறுப்பதாகவே தெரிகின்றது என்று கருதிய தொரோ, எப்போதெல்லாம் இயலுகின்றதோ அப்போதெல்லாம் மிக நீண்ட பயணங்களை மேற்கொண்டார். சிறுத்தைத் தவளைகளோடு தாம் நிகழ்த்திய சுவையான பன்னிரண்டு மணிநேர உரையாடல், பணம் சேகரிக்கச் செலவழிக்கும் ஒருநாளைவிட மிகவும் பயனுள்ள காலமாகும் என்று கூறியுள்ளார். அந்தி நேரத்தில் வெடிக்கும் துப்பாக்கியைப்போல் தம்முடைய மறைவான இடத்திலிருந்து பிட்டர்ன் (Bittern) பறவைகள் ஒலியெழுப்புவதைக் கேட்கக்கூடுமானால் வசதியுள்ள வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் குளிர்ந்த சதுப்பு நிலங்களில் வாழும் வாழ்க்கை மேன்மையானது என்பது அவருடைய கருத்தாய் இருந்திருக்கின்றது.

இதற்கிடையில் தம்முடைய தமையனார் வில்லியம் எமர்சனின் மகனுக்கு ஆசிரியராகப் பணிபுரியவேண்டி தொரோவை நியூ யார்க்கை அடுத்துள்ள ஸ்டேட்டன் தீவுக்கு (Staten Island) அனுப்பினார் எமர்சன். அங்குத் தொரோவுக்குச் சில நண்பர்கள் கிடைத்தார்கள். ஆனால் எழுத்தாளராக அவரால் அங்கே பிரகாசிக்க இயலவில்லை. காரணம், அங்கு(ம்) மக்களின் உணர்ச்சிகளுக்குத் தீனிபோடும் மலினமான இதழ்களுக்கு எழுதினால்தான் வயிறுவளர்க்க முடியும் என்ற நிலை இருந்ததே. அவ்வகையில் தரந்தாழ்ந்து எழுதத் தொரோவால் இயலவில்லை. ஆதலால் மீண்டும் தம் சொந்த ஊரான கான்கார்ட்டுக்கு 1844இல் திரும்பினார் தொரோ.

ஜெர்மானியத் தத்துவவியல் அறிஞரான ஜிம்மர்மேன் எழுதிய ’தனிமை நெஞ்சினிடத்துச் செலுத்தும் ஆதிக்கம்’ எனும் நூலினைக் கற்றார். எமர்சனின் ’இயற்கை’ என்ற நூல் அவர் மனத்தைவிட்டு நீங்கவே இல்லை. அதில் கூறப்பெற்ற “காடுகளில்தான் அழியா இளமை இருக்கிறது; காட்டு வாழ்க்கையில் அறிவும் நம்பிக்கையும் ஏற்படுகின்றன” என்ற சொற்கள் அவர் நெஞ்சுக்குள் சிட்டுக்குருவியாய் வட்டமிட்டுக்கொண்டே இருந்தன.

எனவே கான்கார்டுக்கு அருகிலிருந்த வால்டன் குளத்தருகே (Walden Pond) ஒரு மர வீட்டை அமைத்துக்கொள்ளும் நோக்கத்தோடு காட்டுக்குச் சென்றார் தொரோ. அந்தக் காட்டுப் பகுதி எமர்சனுக்குச் சொந்தமானது; அவர்தாம் அந்த இடத்தைத் தொரோவுக்கு இலவசமாக வழங்கினார்; இல்லையேல் ஆங்கோர் இலைக்குடில் அமைத்து வாழும் அரிய வாழ்க்கை தொரோவுக்கு வாய்த்திருக்காது.

1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொரோ அந்தப் பகுதியில் தம் குடிலை அமைக்கத் தொடங்கினார். குளங்களுக்கு அருகில் வளர்ந்திருந்த வெண் பைன் மரங்களைக் குடில் கட்டுவதற்குத் தேவையான அளவுக்கு வெட்டிக்கொண்டார். குடிலின் பின்புறம் இருந்த மணல்மேட்டைத் தோண்டி நிலவறை ஒன்றைச் செய்துகொண்டார். குளிரும் பனியும் மிகுந்திருக்கும் காலத்தில் காய்கறிகளைப் பாதுகாக்கவே அவ்வாறு ஓர் அறையை அவர் அமைத்திருந்தார். அந்தக் குடில் அழிந்துபோனாலும் மண்ணுக்குள் அமைக்கப்பட்ட வளைபோன்ற அந்த நிலவறையானது அழியாது என்பது அவரது எண்ணம். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தாம் கட்டிய நிலவறையைத் தேடிக்கொண்டு வால்டனுக்கு மக்கள் கூட்டம் செல்லும் என்பதை அப்போது தொரோ அறிந்திருக்கவில்லை.

1845ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் கூரையின் கடைசிப் பலகையைச் செருகிய பின்னர் தொரோ அக்குடிலுக்குள் வசிக்கத் தொடங்கினார். அமெரிக்கச் சுதந்தர நாளன்று அவருடைய சுதந்தரமான காட்டு வாழ்க்கையும் தொடங்கியமை தற்செயலாய் நடந்தே ஒன்றே.

அருகிலிருந்த நிலத்தில் அவர் வேளாண்மையும் செய்யத் தொடங்கினார். பீன்ஸ் செடிகளைப் பயிரிட்டார். அவற்றைப் பராமரிப்பதில் மனநிறைவுற்றார்.

தமக்குத் தேவையான எளிய உணவை அவரே தயாரித்துக்கொண்டார். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க விரும்பி தேநீர், காபி அருந்துவதையும் தவிர்த்தார். என்றேனும் ஒருநாள் வால்டன் குளத்தில் பிடித்த மீனை உண்பதைத் தவிரப் புலால் உணவுப் பழக்கத்தையும் விட்டுவிட்டார்.

மேசை, இரண்டு மூன்று நாற்காலிகள், சில சமையல் பாத்திரங்கள் தவிர அவரது குடிலில் வேறெந்தப் பொருளுமில்லை.

தனிமையைப் போன்ற உற்ற துணைவன் ஒருவருமில்லை என்ற நோக்கத்தோடு அவர் தனித்திருக்க விரும்பினாலும், அவ்வப்போது அவரைத் தேடிக்கொண்டு சிலர் அவருடைய குடிலுக்கு வந்தவண்ணந்தான் இருந்தனர். எனினும் குடிலின் அளவு மிகச் சிறிதாக இருந்ததால் வந்தவர்கள் அதிக நேரம் அங்கே தங்காமல் சென்றது அவர் விரும்பிய தனிமை இன்பத்துக்கு அதிகக் குந்தகத்தை விளைவிக்கவில்லை. சனிக்கிழமைகளில் அவரைக் காண அவருடைய சுற்றத்தார் வந்துசென்றனர்.

வால்டனில் அவர் மேற்கொண்ட இயற்கை வாழ்வின் காரணமாக உயிரியலாரும் வேட்டைக்காரர்களும் உயிருடன் வாழும் விலங்குகட்கு இழைக்கும் கொடுமையால் அவை அடையும் துன்பத்தை நேரடியாக அறிந்தார். அதுகண்டு பெரிதும் வருந்திய அவர்,

 ”மனிதன் முதலில் காட்டிற்குள் நுழையும்போது மீன் பிடிப்பவனாகவும் வேட்டைக்காரனாகவும்தான் செல்கின்றான். ஆனால் வாழ்வில் உயரக்கூடிய வாய்ப்பு ஏதேனும் இருந்தால் ஒரு கவிஞனைப் போலவோ அன்றி உயிரியல் வல்லுநனைப் போலவோ உயிர்களின் வேறுபாட்டை அறிகின்றான். அறிந்தவுடன் துப்பாக்கியையும் தூண்டிலையும் தூர விட்டுவிடுகிறான்.  ஆனால் மக்களில் பெரும்பாலோர் இத்துறையில் இன்னமும் முதிர்ச்சியற்ற இளைஞர்களாகவே இருக்கின்றனர். சில நாடுகளில் வேட்டையாடும் தொழிலை மேற்கொண்டிருக்கும் மதபோதகர்களைக்கூட அதிகம் காணலாம். அத்தகைய போதகர்கள் மேய்ப்போனிடம் உள்ள நாயாக இருக்கமுடியுமே தவிர நல்ல மேய்ப்போராய் இருக்கமுடியாது” என்றார்.

தொரோவைப் பொறுத்தவரை வேனிற் காலத்தைப் போலவே அவர் பனிக் காலத்தையும் விரும்பினார்.  பனிக்கட்டி அவரின் ஒரு கன்னத்தில் அடித்தால் தம்முடைய மறுகன்னத்தையும் அதற்குத் திருப்பிக் காட்டினார்.

தொரோ விரும்பி மேற்கொண்டிருந்த வால்டன் குளக்கரை வாழ்க்கைக்கும்  ஓர் முடிவு வந்தது. 1847ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாள் அவர் தம்முடைய குடிலைவிட்டுப் புறப்பட்டார். வால்டன் வாழ்க்கை அவர் வாழ்வின் ஒருபகுதியாக இருந்ததே தவிர அதுவே முழுமையான வாழ்க்கையாக அமைந்துவிடவில்லை. வாழ்க்கை என்பது ஒரு சோதனையிலிருந்து மற்றொரு சோதனைக்குச் செல்வது என்பதில் அவர் திண்ணமாயிருந்ததால் வால்டனிலிருந்து புறப்படுவதும் அவருக்குச் சிரமமானதாக இருக்கவில்லை. அகத்தே தோன்றும் விருப்பங்களை நோக்கித் துணிவுடன் முன்னேறுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினார் அவர்.

எழுத்தாளர் என்ற முறையில் தம்முடைய பலம், தமக்குரிய பாதை, தம் தனித்தன்மை ஆகியவற்றைக் கண்டடைவதற்கு வால்டன் வாழ்க்கை அவருக்குப் பெருந்துணை புரிந்தது.

1847இன் பிற்பகுதியில் எமர்சனுடைய வீட்டிற்குச் சென்று வசிக்கத் தொடங்கினார். அக்காலம் அவர் வாழ்வின் சிறந்த காலமாக அமைந்தது. அங்கிருந்தபோது வால்டன் பற்றியே அதிகம் எழுதினார். எதனையும் நுணுகி ஆராய்ந்து அதற்குப் பொருத்தமாகப் பெயரிடும் அறிவியலாளரின் பண்பு தொரோவிடமிருந்தது.

”ஒரு மனிதன் தன் முயற்சிகளின் விளைவாக இயற்கையிலிருந்து நேரடியாகக் கற்பதுதான் மிகச் சிறந்த கல்வி; பிறர் கற்றுக்கொடுத்தோ, தானே படித்தோ வரும் அறிவு இரண்டாந்தரமானதுதான். நேரடியாகக் கூர்ந்து கவனித்து அறிவதைக் காட்டிலும் ஏட்டுக்கல்வி உயர்ந்ததாகாது. இந்த வயல்களும் ஓடைகளும் காடுகளும் இங்கு வாழும் மக்கள் மேற்கொண்டுள்ள எளிய தொழில்களும் எனக்கு உற்சாகத்தை ஊட்டவில்லையானால் அதனால் ஏற்படும் இழப்பை எந்தப் பண்பாடும் செல்வமும் ஈடுகட்ட முடியாது” என்று கூறியுள்ளார் அவர்.

கான்கார்டிலும் மெர்ரிமாக் ஆற்றிலும் ஒரு வாரம் (A Week on the Concord and Merrimack Rivers) என்ற நூலை 1849ஆம் ஆண்டு வெளியிட்டார் தொரோ. அந்த நூல் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அச்சிட்ட 1000 படிகளில் 700 படிகள் அவரிடமே திரும்பி வந்துவிட்டன. ”என்னுடைய நூலகத்தில் தொள்ளாயிரம் நூல்கள் உண்டு; அவற்றுள் எழுநூற்றுக்கு மேல் நானே எழுதியவை” என்று தொரோவே இதுகுறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டாம்.

இந்தியாவின் தத்துவ சாத்திரங்களின்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார் தொரோ என்பதை அவருடைய கருத்துக்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மேனாட்டினர் காணமுடியாத ஆழமும் அகலமும் இந்தியத் தத்துவ சாத்திரங்களில் இருப்பதாக அவர் கருதினார்.

”அண்டங்களின் படைப்புக் குறித்துப் பகவத்கீதை கூறும் தத்துவத்துக்கு எதிரே ஷேக்ஸ்பியர்கூட மிகவும் அனுபவமில்லாதவராகவும் வெறும் உலகியல் மட்டுமே உணர்ந்தவராகவும் காணப்படுகின்றார்” என்கிறார் தொரோ.

எமர்சன் வீட்டில் தங்கி வால்டனைப் பற்றி எழுதிய அதே காலக்கட்டத்தில்தான் புரட்சிச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ’சட்ட ஒத்துழையாமை’ (Civil Disobedience) என்ற தலைப்பிலான தம் கட்டுரையையும் தொரோ எழுதினார். இக்கட்டுரை அண்ணல் காந்தியாரைப் பெரிதும் ஊக்குவித்ததாகலின் இந்தியாவில் தோன்றிய சத்தியாகிரக இயக்கத்தின் மூலகாரணங்களுள் இக்கட்டுரைக்கும் முக்கிய இடமுண்டு என்று கூறலாம்.

’அரசாங்கத்தில் தனி மனிதனின் உரிமையும் கடமையும்’ (The Rights and Duties of the Individual in relation to Government) என்ற பெயரில் இக்கட்டுரையானது கான்கார்டு சொற்பொழிவுக் கூடத்தில் தொரோவால் படிக்கப்பெற்றது. அறவழியில் போரிட விரும்பும் அனைவராலும் மேற்கோள் காட்டப்பெறும் கட்டுரையாக இப்போது அது திகழ்கின்றது.

1850ஆம் ஆண்டு பாஸ்டன் நகர இயற்கை வரலாற்றுக் குழுவிற்குத் தொரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினரானார்.

தொரோவின் நூல்களைப் படித்த பலரும் காட்டிலும் மேட்டிலும் சாகசங்கள் செய்வதில் விருப்பமுடைய அவர், வலிமையான உடலமைப்பைப் பெற்றவராக இருப்பார் என்றே கற்பனை செய்திருந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக மெலிந்த உடலமைப்புடைய அவரைக் கண்ட பலரும் ஏமாற்றமே அடைந்தனர். 

தொரோவின் காலத்தில்தான் அமெரிக்காவின் தென்பகுதிகளில் அடிமைகள் வைத்திருக்கும் பழக்கத்தை ஒழிப்பது பற்றிய இயக்கம் தீவிரமாய் நடந்தது. உள்நாட்டுப் போரின் முக்கியக் காரணங்களுள் அதுவும் ஒன்று. தென்பகுதி தோட்டங்களிலிருந்து அடிமைகள் பலர் தப்பித்து வட பகுதிகளுக்கு ஓடிவந்தனர். அவர்களை வட பகுதிகளில் குடியேற்றவும் கனடா நாட்டுக்கு அவர்கள் தப்பிச் செல்லவும் பலர் பரிவுடன் உதவினர். அந்த அடிமைகள் தப்பிச்செல்லும் வழியில் கான்கார்ட் கிராமம் இல்லாததால் எப்பொழுதாவது அரிதாகவே அந்தப் பக்கம் அடிமைகள் வருவார்கள். அவ்வாறு வந்தவர்களுக்குத் தொரோவும் அவருடைய குடும்பத்தினரும் அனைத்து உதவிகளையும் செய்தனர்.

அடிமை வணிகத்தை தொரோ வெறுத்ததுபோலவே மக்கள் எப்போதும் பணம் சேர்க்கும் முயற்சியிலேயே வாழ்நாளைக் கழிப்பதையும் வெறுத்தார். தேடித் தேடிப் பொன் சேர்க்கும் முயற்சியில் மக்கள் ஈடுபடுவதைவிடவும் தம் மனத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள பொன்னைத் தோண்டி எடுக்கும் அகமன ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டால் எத்துணைச் சிறப்பாக இருக்கும் என்று அவர் சிந்திக்கலானார்.

1854ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ஆம் நாள் ’வால்டன் அல்லது காட்டு வாழ்க்கை’ (Walden or Life in the woods) என்ற அவருடைய நூல் வெளியாயிற்று. அந்நூல் இன்றளவும் அவருடைய தலைசிறந்த நூலாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

’எழுத்துக் கலை’ பற்றித் தொரோ நிரம்பக் கூறியிருக்கின்றார். அவற்றில் சில:

  • ”என்னுடைய வாக்கியங்கள், துப்பாக்கி சுடுபவன் குறிபார்ப்பதுபோலக் கூர்மையாகவும் சாவதானமாகவும் அமைக்கப்படுகின்றன. ஒரு நல்ல வாக்கியத்தை அமைப்பதென்பது ஹெர்க்குலிஸின் முயற்சிபோல மிகக் கடினமானதாயினும் அதற்கு எடுத்துக்கொள்ளும் சிரமம் பயனுடையதாகும்.
  • ஓர் எழுத்தாளனுடைய சொற்கள் அவனுடைய நேரடி அனுபவத்திலிருந்து பிறக்கவில்லையானால் அவன் காலத்தை வீணடிக்கின்றான் என்றே பொருள். சொற்களின்பின்னே பொருள் இல்லையானால் அச்சொற்கள் பயனற்றவை. நாமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி எழுதுவது வீண். அந்த விஷயம் நம்முடைய மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற வேண்டுமானால் அதன்பின்னே அன்பின் கூட்டுமுயற்சி இருத்தல் அவசியம்.
  • எவ்வளவு சிறந்த முறையில் எழுதுகிறீர்களோ அவ்வளவு சிறந்தவர்களாக நீங்கள் இருப்பீர்கள். முதற்பக்கத்திலிருந்து இறுதிப்பக்கம் வரை ஆசிரியனுடைய பண்பாட்டையே அவனுடைய நூல் விளக்கி நிற்கின்றது.

தொரோ என்றுமே வலுவானவராக இருந்ததில்லை. ஹார்வார்டில் படிக்கின்ற காலத்திலேயேகூட அவர் பிராங்கைட்டிஸ் (Bronchitis) எனப்படும் மூச்சுக்குழல் அழற்சிநோயால் பீடிக்கப்பட்டு அல்லலுற்றார். அந்நோய் வாழ்நாள் முழுவதுமே அவ்வப்போது அவருக்குத் தொல்லைகொடுத்து வந்தது. எனினும் அவர் அந்நோயைப் பொருட்படுத்தவில்லை.

1860ஆம் ஆண்டு அதிகக் குளிரும் ஈரமும் நிறைந்த நவம்பர் மாதத்தில் மார்புச் சளியால் தொரோ மீண்டும் தாக்கப்பட்டார். அஃது அவருடைய நுரையீரலையும் தாக்கியது. இதனால் பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் 1862ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள் உயிர்நீத்தார்.

பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு மனிதர்களும் தொரோவைப் போற்றுகின்றார்கள்; எனினும், இயற்கையோடு நெருங்கிய தொடர்புகொண்டு எளிமையாக வாழவேண்டும் என்று எடுத்துக்கூறியவர் அவர் என்பதற்காகவே அவரைப் பலரும் கொண்டாடுகின்றார்கள்.

குறைவான தேவைகளோடு இயற்கையின் அரவணைப்பில் வாழ்ந்தால் நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும் என்பது தொரோ வாழ்ந்துகாட்டி உணர்த்திய வாழ்க்கை நெறியாகும். இயற்கையிடமிருந்து பெரிதும் விலகிநிற்கும் இன்றைய மக்கள் தொரோவிடமிருந்து கற்றுக் கடைப்பிடிக்கவேண்டிய உயரிய வாழ்வியல் தத்துவமும் அதுவே.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

https://en.wikipedia.org/wiki/Henry_David_Thoreau
https://en.wikipedia.org/wiki/Civil_Disobedience_(Thoreau)
தொரோ வாழ்க்கை வரலாறு – பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எளிய வாழ்க்கையின் இனிமையை உணர்த்திய அறிஞர்

  1. தொரோ – அழகான வாழ்க்கை தகவல்களை அளித்த மனிதர்.
    பதிவிட்ட ஆசிரியர்க்கு நன்றிகள் பலப்பல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *