திருச்சி புலவர் இராமமூர்த்தி

‘குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
பிழை படின் அன்றிக் கொல்லார்; பிழைத்தது உண்டு’ என்று உட்கொண்டு
மழை மத யானை சேனை வரவினை மாற்றி, மற்ற
உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன்; உலக மன்னன்’’

வரலாறு

தாம் ஏந்தி வந்த பூக்கூடையைப்  பட்டத்து யானை தட்டிச்  சிதைத்தது கண்ட சிவகாமியாண்டார், அந்த  யானையைத் தொடர்ந்து ஓட  இயலாமல் கீழே விழுது கதறினார். இதனை எறிபத்தர் முன் பாகர்கள் கூறினார். அதுகேட்டு

‘’பெருமான் அந்தணர் அனுப்பிய யானைத்தோலை உரித்த காலம், கயமுகாசுரன் காலம்  முதலாக சிவபெருமானின் வழிப்பகை களிறே!’’ என்று கருதிய எறிபத்தர்  அதனைக் கொன்று வீழ்த்துவேன் என்று கொலைமழுவை எடுத்தார்.

சிவகாமியாண்டாரிடம் யானை செய்ததையும், அது சென்ற திசையையும் அறிந்து கொண்டு அத்திசையில் விரைந்தோடி, சிங்கம் போல் யானைமேல் பாய்ந்தார். இதனைச்  சேக்கிழார்

‘’செங் கண் வாள் அரியின் கூடிக் கிடைத்தனர்; சீற்றம் மிக்கார்.’’ என்று பாடுகிறார். (**இங்கே ஒரு குறிப்பை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ‘’கிடைத்தனர்‘’ என்ற சொல்லுக்கு எதிர்த்தனர் என்று பொருள் கொள்ள வேண்டும்; ‘கிடைக்கும்’  என்று இப்போது கடைகளில் எழுதும் சொல் பிழை பட்டது என்பதைப் புரிந்து கொள்க )

இதுவே இறைவனை  எதிர்த்த யானை என்றெண்ணி அதன்மேல் பாய்ந்தார்.பாகரால் அடக்க வியலாத யானை அடியார் இறைவன்பால் கொண்ட அன்பின்முன் நிற்கவில்லை. அதன் தும்பிக்கை வீழுமாறு விறன்மிண்டர் வெட்டினார். அந்த யானையுடன் அருகில் வந்த பாகர் மூவர், போரிட வந்த இருவர் ஆகிய  ஐவரைக் கொன்று மலை போன்ற தோளுடன் விறன்மிண்டர் நின்றார் .

இதனை அங்கிருந்தார்  விரைந்து சென்று அரண்மனைக் காவலரிடம் கூறினர். அது கேட்டு அரசனிடம் சென்ற காவலர் நம் பட்டத்துயானையை எவரோ வெட்டி விட்டார்  என்றனர். உடனே அரசன் வெகுண்டு வாயிலுக்கு வந்தான். அவருடன் அரசரின் சேனைகள் யாவும் தொடர்ந்தன. பட்டத்து யானையை வெட்டியவர் பகைவரோ என்றெண்ணிய மன்னன்,அங்கே அடியார் மட்டுமே வெட்டுண்ட யானையுடன் நிற்பதைக் கண்டான். சிவனடியாரைக் கண்ட மன்னன் இவர் கொலை செய்ய மாட்டார் என்று கருதி, அங்குள்ளோரை ‘’யார் யானையைக் கொன்றவர்?’’ என்று முழங்கினான். அப்போது அங்கிருந்தோர், ‘’மன்னனே நம் யானையைக் கொல்ல எந்தப் பகைவராலும்  முடியாதே, இதோ இங்கே மழுவேந்தி  நிற்கும் சிவனடியார் தாம் கொன்றார் ‘’   என்றனர்.

அப்போது மன்னன் இறைவனடியார்  எதோ பிழை நிகழாவிட்டால் கொல்ல மாட்டார்! யாரோ பெரும் பிழை புரிந்துள்ளார் ‘’ என்றார் மனத்துள் நினைந்து தம் படைகளைத் திரும்ப அனுப்பித் தம் குதிரைமேலிருந்து இறங்கினான்.

இப்பாடலின்பொருள்

“குழை யணிந்த காதினையுடைய சிவபெருமானுக்கு அன்பராகிய குணத்தின் மிக்க இவர், பிழைபட்டிருந்தாலல்லது கொலைசெய்யமாட்டார்; ஆதலின் பிழை நேர்ந்ததுண்டு.” என்று மனத்தினுட் கொண்டு, மழைபோலமதஞ் சொரியும் யானை, படை முதலிய சேனைகள் மேல்வராமற்றடுத்து, தாம் மேல் கொண்டுவந்த கொற்றக்குதிரையினின்றும் உலகமன்னர் (தனியிடத்து) இழிந்தனர்.

இப்பாட்டில் குழையணி காதினான் என்ற தொடர் சிவபெருமான் குழையணிந்தசேவியர் என்பதைக்குறிக்கும் இறைவனது திருவுருவத்தில் ஆண்பாகம் வலப்பாகம். வலக்காதிலணிந்த குழை வலிய வீரம்பற்றிய மறக்கருணை குறிக்கும். அவனன்பராகிய இவரும் பிழைநீக்கும் மறக்கருணையாலே இது செய்தாராதல் வேண்டும் என்பது குறிப்பு.

‘’குணத்தின் மிக்கார் பிழை படின் அன்றிக் கொல்லார்’’ என்றதொடர்  குணத்தால் மிக்காராதலின் பிழை கண்டல்லாது கொல்லுதலைச் செய்யார் என்ற நியதியை அரசர் இங்குத் தம்முள் நிச்சயித்துக் கொண்டனர். எவ்விடத்தும் கொலைதீது என்று வெறு முழக்கம் செய்து ஆரவாரிக்கும் பொய்க்கொள்கை இங்கு மறுக்கப்பட்ட நேர்மை நோக்குக. பிழைபடிற் குற்ற நீங்கத் தண்டித்தல் இறைவன் மறைவழிக் காட்டிய நீதியாம். இதனை நன்கறிந்து நீதிசெலுத்திய அரசாராதலின் இவ்வாறு துணிந்தனர். இவரது புராண சரிதத்தில், பின்னர் இவர் சேனை செய்த அபராதத்துக்குக் கழுவாயாகத் தாமே தீப்புகுந்தமையும் இங்கு வைத்துக் காண்க. பிழைபடிற் கொல்லுதல் பிறவுயிர்கள் ஈடேறவும், அவ்வுயிர்,மேலேதருமன் தண்டனைக்குத் தப்பவும் ஆம் என்பது.

‘’பிழைத்ததுண்டு’’ என்றதொடருக்குப்  பிழை நேர்ந்ததுண்டாம் என்பது பொருள்  இது கருதலளவையாற் போந்த முடிபு. அனுமானம் என்பர். நெருப்பில்லாத விடத்துப் புகையில்லை. ஓரிடத்துப் புகை காணப்பட்டபோது தீ அங்குக் காணப்படாவிடினும், நெருப்புண்டு எனக் கொள்ளுதல்போல ஈண்டுக் காணப்படாத பிழையாகிய காரணத்தைக் காணப்பபட்ட தண்டமாகிய காரியத்தினின்றும், பிழைபடினன்றிக் கொல்லார் என்ற ஏதுவினைக் கொண்டு துணிந்தனர்.

படின் அன்றிக்  கொல்லார்,  படிற் கொல்வார் என்பதனை வலியுறுத்த இரண்டு எதிர்மறைகளாற் கூறினார்.

“ஞாயிறு படரி னல்லதைக் காண்டல் செல்லாக் கண்”

என்ற விடத்துப், “படரிற் காண்டல் செல்லும் கண்ணென  அதனை எதிர்மறை முகத்தாற் கூறினார் இன்றியமையாமை விளக்குதற்கு!” என்று மாதவச் சிவஞான சுவாமிகள் சிவஞான போதப் பாயிரத்துட் காட்டினமை காண்க.

‘’சேனை வரவினை மாற்றி’’   என்றதொடர்  சேனை அழிவு செய்யு முயற்சி யின்மிக்கு வேகத்தால் வருதலால் அவை, உண்மை அறியாமையாலே, மேல்வந்து  அடராதபடி சேனை வரவினை மாற்றினார். தடுத்து நிறுத்தினார்.

இனி, மேல்நின்று இழிந்தனன் என்றதொடர்  கீழே இறங்கினார் என்பதைக் குறித்தது . தான் மேற்கொண்டு வந்த அளவில் சீற்றமாகிய தலைநிமிர்ந்த நிலையினின்றும், தணிந்து இறங்கிய நிலையினையடைந்தனர் என்பதும் குறிப்பு.

இப்பாடல், அளவில் சீற்றங் கொண்டெழுந்து வந்த மன்னனுக்கு, இச்செயல் அன்பர் செய்தார் என்றறிந்தவுடனே அத்தனை சீற்றமும் மாறிச் சிவாபராதத்தில் அச்சம் மிக்கதாகி,  எஞ்ஞான்றும் பிறழாத அவரது அன்பு நெறியொழுக்கத் திண்மையினைக் காட்டுகிறது. இங்கே,

‘’எண்ணித் துணிக கருமம்  துணிந்தபின்
எண்ணுவம் என்ப  திழுக்கு!’’

என்றதிருக்குறள் எண்ணற்பாலது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *