குறளின் கதிர்களாய்…(368)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(368)
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதென்றுந்
தீமை யலாத சொலல்.
– திருக்குறள் – 291 (வாய்மை)
புதுக் கவிதையில்…
உண்மை என்று
உரைக்கப்படுவது எதுவென்றால்,
உலக மக்கள் எவருக்கும்
ஊறு விளைவிக்காத நல்ல
சொற்களைச்
சொல்வதேயாகும்…!
குறும்பாவில்…
எவர்க்கும் எத்கைய தீங்கையும்
தராத சொற்கள் பார்த்துச் சொல்வதே
மேன்மையான வாய்மை என்பது…!
மரபுக் கவிதையில்…
உண்மை யென்றே சொல்கின்ற
உயர்ந்த ஒன்று மெதுவென்றால்,
அண்மை மாந்தர் எவருக்கும்
அவதி தாரா வகையினிலே
பண்பாய்ச் சொற்கள் தேர்ந்தெடுத்தே
பார்த்தே யவர்குத் தீதின்றித்
தண்மை யாகப் பேசிடுதல்
தானே யந்த உண்மையதே…!
லிமரைக்கூ…
வாய்மை என்பது ஏது,
என்றாலிதுதான், பிறரிடம் பேசும் விதமே
அவர்க்கு வந்திடாமல் தீது…!
கிராமிய பாணியில்…
பேசு பேசு
உண்மயே பேசு,
அடுத்தவங்களுக்குக்
கெடுதல் இல்லாம
உண்மயே பேசு..
உண்மண்ணா
என்னண்ணு கேட்டா,
வேற ஒண்ணுமில்ல
இதுதான்-
அடுத்தவங்களுக்குக்
கெடுதல் குடுக்காத
நல்ல சொல்லாப்
பாத்துப் பேசுறதுதான்..
அதால,
பேசு பேசு
உண்மயே பேசு,
அடுத்தவங்களுக்குக்
கெடுதல் இல்லாம
உண்மயே பேசு…!