தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 33

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

தமிழ்க்கவிதை உவமங்களில் தாயும் மகவும்

முன்னுரை

தமிழைப் பாடாத கவிஞர் உளர். ஆனால் தாயைப் பாடாத கவிஞர் இலர்.  தாய்மையைக் கருணையின் படிமமாக்கிப் பார்த்தது மட்டுமன்று அதனை வீரத்தின் விளைநிலமாகவும் கண்டு பாடியிருக்கின்றனர். ‘தாயுமிலி தந்தையிலியாகிய’ சிவபெருமானால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் உரிமையும் பெருமையும் பெற்றவள் தாயே’ என வள்ளுவப் பெருந்தகையால் காப்புரிமை அளிக்கப்பட்டவர் தாய். எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தடிகள் துறக்க முடியாத தூய உறவு தாயுறவு.  தமிழ்த்தென்றல் திரு.வி.க. பெண்மை நிறைவடைவது தாய்மையில் என்று கூறியிருப்பதும் ‘குடும்ப விளக்கு’ என்று பாவேந்தர் புகழ்ந்தேத்துவதும் தாய்மையின் சிறப்பினை இன்னும் விளக்கும். மகவின்றித் தாய்மை அமையாதாதலின் அச்சொல்லுக்குள்ளேயே மகவு என்பது அடங்கும். இந்தத் தாயும் மகவும் தமிழ்க்கவிதைகளில் உவமங்களாக அமைந்த பாங்கினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

இலக்கியங்களில் தாய்மையின் மறுபக்கம்

புறநானூற்றில் உள்ள பாடல்களில் தாயின் பெருமை பேசும் பாடல்கள் பல. அவற்றுள் ஒரு பாடலின் வரி இப்படி அமைந்திருக்கிறது.

“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே”

திருக்குறளில் தாயின் கடமை குறிக்கப்படவில்லை. ‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்பதால் அவள் கடமை கணவனோடும் இல்லறத்தோடும் நிறைவடைந்துவிடுவதாகத்தான் அனுமானிக்கத் தோன்றுகிறது. புறநானூற்றில் ஒரு ஆண்மகனை உருவாக்கும் சமுதாயக் கடமைகளில் தன்னுடைய கடமையைத் தலைக் கடமையாக்குகிற தாயைக் காணலாம். சாலப் பரிவது மட்டுமன்று தாய்க் குணம். ஒரு மகனாயினும் செருக்களம் நோக்கிச் செல்பவனை வழியனுப்பி வைக்கும் மாண்பும் அவளுக்கானது.

“ என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசோர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே” (புறம். 86)

என்று சுமந்த வயிற்றுக்குச் சோபனம் பாடுகிறாள் தாய். அந்தத் தாயைக் ‘கெடுக சிந்தை கடிது இவள் துணிவே’ என்று ஒக்கூர் மாசாத்தியார் பாடுகிறார். தருகின்ற மன்னனைப் பாடியே பழக்கப்பட்ட புலவர்கள் தாயைப் பாடிய காலம் அது. 

“மீன் உண் கொக்கின் தூவியன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே! கண்ணீர்
நோன்கழை துயல் வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே!” (புறம். 277)

என்று ஒரு பாடல். பேரிளம்பெண் பருவத்தில் ஒரு மகனுக்குத் தாயான ஒருத்தி அவனைக் களத்துக்கு அனுப்புகிறாள். அங்கே அவன் களிறெறிந்து பெயர்தலாகிய காளைக் கடனைச் செய்கிறான். களிற்றினால் கொல்லப்படுகிறான். சேதி பெற்றவளின் காதுக்கு வருகிறது. வந்த  சேதியால் காது மட்டுமன்று மனமும் குளிர்கிறதாம். உத்திரையார் காட்டும் காட்சி இது. இந்த விழுமியம் எதுவரைத் தொடர்கிறது என்றால் அந்தச் சாவு மானச்சாவா? ஈனச்சாவா என்று அறியும் வரையில் தொடர்கிறது.  மார்பில் விழுப்புண் பட்டே மகன் மாண்டிருக்கிறான் என்றவுடன் சோகத்திற்கு இப்படிச் சுகம் கொண்டாடுகிறாள்.

“……………. முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின்
உண்ட என் முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கைஅ காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!” (புறம். 278)

மாபெரும் சபையினில் தன் மகன் நடந்தால்தான் ஒரு தாய் பெருமைப்படுவாள் என்பதில்லை.  சாவுக்குச் சங்கடத்தைத் தராமல் ஏற்றுக் கொள்ளும் மானச் சாவுக்கும் அவள் மகிழ்வாள் என்பதுதான் தமிழ்த் தாய்மார்களின் பண்பாட்டு விழுமியம். இத்தகைய தாயையும் மகவையும் உவமங்களாகவும் பயன்படுத்தி இலக்கியம் செய்திருக்கிறார்கள்  நம் புலவர்கள்.

தோழி தாயான கதை

‘தாய்மை’ என்பது பண்பு. அது பெரும்பாலும் தாயிடத்தில் அமைந்திருப்பதால் அவளுக்கான குறியீடானது. ‘தங்கைமை’, ‘தமக்கைமை’, ‘தந்தைமை என்பதெல்லாம் இல்லை. ‘இறைவனைத் தாயுமானவன்’ என்று அழைப்பது காண்க. அன்னை தெரசா உலகிற்குத் தாய். சங்க இலக்கியங்களின் தலைமைப் பாத்திரம் தோழியே. மானுடத்தின் அத்தனை நேர்முகப் பண்புகளின் தொகுப்பாக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள்.   தலைவியைக் காணத் தலைவன் இடர்பல கடந்து வருகிறான். “கொல்லுந் தொழில் வல்லமையுடைய ஆண்முதலையானது வழியெல்லாம் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்குமாறு குறுக்கே கிடக்கும் அழகிய கடல் துறையின்கண் இனமீன்கள் நிறைந்துள்ள உப்பங்கழியை நீந்தி” அவன் வருகிறானாம்.

“கொடுங்கால் கொல்வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி”

வருகிறானாம். இவன் படும் இத்துன்பத்தால் தன் தலைவனுக்கு ஏதம் வருமோ என்று தலைவி நடுங்கித் துன்புறுகிறாளாம்.

            ‘இவள் மடன் உடைமையின் உயங்கும்’

இது தலைவனுக்காகத் தலைவி படுகிற துன்பம். தோழி இருவருடைய துன்பத்தையும் நோக்கி வேதனைப்படுகிறாளாம். யாரைப்போல? தனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளும் நஞ்சருந்திய காலத்து அப்பிள்ளைகளின் தாய் உணரும் அச்சத்தை இந்தத் தோழி உணர்ந்தாளாம்!. “நயன் உடைமையின் நீ வருகிறாய். மடன் உடைமையின் இவள் உயங்குகிறாள். நானோ நஞ்சருந்திய இரட்டைப் பிள்ளையின் தாயைப் போல அலமறுகிறேன்’ என்கிறாள் தோழி!

“நீ நின் நயனுடைமையின் வருதி! இவள் தன்
மடன் உடைமையின் உயங்கும், யான் அது
கவை மகவு நஞ்சுண்டாங்கு
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே!” (குறுந். 324)

செவிலி வேறு. நற்றாய் வேறு. தோழி வேறு. ஆனால் மகவு அதுவும் இரட்டை மகவு நஞ்சுண்ண அது கண்ட தாயின் பதைப்பைத் தோழியின் பதைப்புக்கு உவமமாக்கிய திறன் இது. இலக்கிய நோக்கில் தலைவிக்குத் தோழியாகப் பார்க்கப்பட்டுவரும் ஒருத்தி தலைமக்களுக்குத் தாயாகச் சித்திரிக்கப்பட்டுத் தலைமக்கள் அவளுக்குக் குழந்தைகளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘நஞ்சுண்டாங்கு’ என்பது உண்பதைக் குறிக்காது, நஞ்சு உண்பதால் தாய்க்கு உண்டாகும் பதற்றத்தைக் குறித்தது. இதில் நுண்ணியம் என்னவென்றால் தலைமக்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகளாக அன்பு பாராட்ட வேண்டும் என்பதே!. உவம ஆற்றல் என்பது இதுதான்.

மழலை கூவலும் மாற்றார் அலறலும்

இளஞ்சேட் சென்னி என்னும் மன்னனை வரலாற்றுப் பாவலர் பரணர் பாடுகிறார்.  சென்னியின் படைகளை வானளாவப் புகழ்கிறார். இளஞ்சேட் சென்னியின் களத்தில் “வாள் குருதிக்கறை பட்டன. களத்தில் முன்னும் பின்னும் தேய்ந்ததால் அரும்பு வேலைப்பாடு அமைந்த கழல்கள் கொல்லேற்றின் மருப்புப் போல மொக்கையாகின. மாற்றாரின் அம்பு தைத்த கேடயங்கள் அம்புகளினால் துளைக்கப்பட்ட அடையாளங்கள் ஆயின. இடவல அடையாளங்களைக் காட்டியதால் குதிரைகளின் முகம் குருதி படிந்து உதிரம் குடித்த புலி வாயை ஒத்தது. எதிரியின் வாயிற்கதவுகளை மருப்பினால் முட்டி மோதி பிளிறி வருவதால் யானையோ உயிருண்ணும் கூற்றுவனை ஒத்தது. மன்னன் தேரில் வருவது கீழ்க்கடலில் செங்கதிரோன் எழுவதுபோல் உள்ளது” என்றெல்லாம் பாராட்டிய புலவர், இதனால் எதிரியின் நிலை என்னவாயிற்று என்பதை இரண்டே வரிகளில் கூறுகின்றார்.

“தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின்உடற்றியோர் நாடே!” (புறம். 4)

‘உடற்றியோர் நாடு அதாவது பகைத்துக் களங்கண்டு பாழாயப் போன பகைவர் நாடு இனித் தாயில்லாத குழந்தை பசிக்குப் பாலில்லாமல் எப்படி அலறுமோ அப்படி அலறுமாம்!” பகைநாட்டுக்குத் தாயான மன்னன் இல்லாததால் தாயற்றும், வளங்கள் சிதைந்ததால் உணவற்றும் அவர்கள் அழிவார்கள் என்பதும் கருத்து. இந்த உவமத்தின்  சிறப்பு நோக்கிய நன்னாகனார் என்னும் புலவர் ஓய்மான் வில்லியாதனைத் “தாயில் தூவாக் குழவிபோல்” காண வந்ததாகப் பாடுகிறார் (புறம் 379). ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் தாய் மகவு பற்றிய சிந்தனை உவம அளவையால் பதிவாகியுள்ளது. மணிபல்லவத் தீவில் அமுதசுரபியின் வரலாற்றைக் கூறிய தீவதிலகையிடமிருந்து அதனைப் பெற்றுக் கொள்கிறாள் மணிமேகலை. கொண்டு, தான் அப்பாத்திரத்தைக்   கொண்டு பசிப்பிணி என்னும் நோயைப் போக்கும் எண்ணமுடையேன் என்று கூறும்போது,

“ஈன்ற குழவி முகங் கண்டு இரங்கித்
தீம்பால் சுரப்போள் தன் முலை போன்று”

அமுதசுரபியினுள் பிச்சை நிறைவதைத் தான் காணும் பேரவா உடையேன் என்றும் கூறுகிறாள். குழவியின் பசிமுகம் கண்டு தாய்முலை திரண்டு சுரப்பது இயல்பாதலின்  அமுதசுரபிக்குள் அன்னமிடுவாருக்கும் அவ்வியல்பு உண்டு என்பது கருத்து. இனி  ஆபுத்திரனின் பெயர்க்காரணத்தையும் வரலாற்றையும் சொல்லுகிற சாத்தனார் அவன்  நிலையைச் சித்திரிக்கிறபோது,

“தாயில் தூவாக் குழவித் துயர் கேட்டோர்
ஆ வந்து அணைந்தாங்கு அதன் துயர் தீர
நாவால் நக்கி நன்பால் ஊட்டி” (மணி. 1437-39)

என்னும் உவமத்தோடு பசுவின் அருட்செயலைக் காட்சிப்படுத்துவதையும்,

“தடித்தவோர் மகனை தந்தையீண் டடித்தாற்
தாய்உடன் அணைப்பள்., தாயடித்தால்
பிடித்ததொரு தந்தை அணைப்பன் இங்குஎனக்குப்
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத்தாடும்
புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மையப் பா!இனி ஆற்றேன்” (திருவருட்பா)

என்னும் வள்ளலாரின் பிள்ளைச் சிறு விண்ணப்பத்தில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவு ஆண்டவனுக்கும் அடியவனுக்கும் உள்ள உறவோடு ஒப்பிடப்பட்டிருப்பதையும்,

தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே,!
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே.!”

என்னும் பெருமாமள் திருமொழியையும் இங்கே பொருத்தம் நோக்கிச் சிந்திக்கலாம்.

குழவி பேணும் தாய் போல

குழந்தையைத் தாய் பேணுதல் என்பது மிகச் சாதாரணமான ஒன்றுதான். குடிமக்களைக் காக்கும் அரசனை இறைவனுக்கும் தாய்க்கும் ஒப்பாக்கிக் கூறுவதும் சாதாரணமான ஒன்றுதான். ஆனால் புலவர் அதனை எடுத்து மொழிகிற பாங்கில் பாட்டு சிறக்கிறது. அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உவமம் சிறக்கிறது. பொருளும் சிறக்கிறது. பெருஞ்சேரல் இரும்பொறையை நரிவெரூஉத் தலையார் பாடியது,

“எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை! நீயோ, பெரும!
நீயோ ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்,
குழவி கொள்பவரின் ஓம்புமதி!
அளிதோ தானே! அது பெறல் அருங் குரைத்தே! “(புறம். 5)

மன்னனுடைய நாட்டைச் சிறப்பிக்கும் புலவர் உவமத்திலேயே தொடங்குகிறார். “நின்  ஆளுகைக்கு உட்பட்ட மண்பரப்பு முழுமையும் எருமைகள் போலப் பாறைகள் கிடக்கின்றன. அவற்றின் இடையில் மேய்கின்ற யானைகள் பசுக்களைப் போல மிகுந்திருக்கின்றன. இத்தகைய வளப்பமுடைய நாட்டை ஆளுகிற உரிமை எவருக்கும் அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது. செருக்கால் அருளையும் அன்பையும் கைவிட்டு நரகத்திற்குச் செல்பவரைப் போல ஆளாமல் ஒரு குழந்தையைப் பெறுபவர் அதனைப் போற்றிப் பாதுகாப்பதைப் போன்ற மனநிலையுடன் நாட்டை  ஆளக்கடவாய்” என்று வாழ்த்துகிறார். அருளும் அன்பும் நீங்கிய நிலை நிரயத்திற்கு வழிகாட்டுமெனின் அவை உள்ள நிலை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்பதைக் குறிப்பால் புலப்படுத்துவது ஆதலின் நிரயத்திற்கு அடைகொடுத்த புலவர் குழவிக்குக் கூறாராயினார். ‘நிரயம் கொள்பவர் – குழவி கொள்பவர்’ என்னும் முரணால் பாட்டு சிறந்து நிற்பதைக் காணலாம்.

ஈன்றோர் நீத்த குழவி போல

அதியமான் களத்தில் படுகிறான். களத்தில் பட்ட அதியமானை அரிசில் கிழார் பாடுகிறார். அதாவது அவன் இல்லாத இரண்டு சூழலைத் தன் பாட்டில் சித்திரிக்கிறார். இந்தச் சித்திரிப்பைக் கையறுநிலைத் துறையில் வைத்துப் பாடுகிறார். அதியமான் மாண்டு போனதால் அவனால் புரக்கப்பட்டோர் நிலை, அதியமானைக் கொன்ற கூற்றுவனின் நிலை. இதனைப் புரக்கப்பட்டோர் வருத்தமும் அவன் உயிரை வாங்கிய கூற்றுவனின் வருத்தமும் என்றும் கூறலாம்.  அவனால் ஆதரிக்கப்பட்டவர் வருத்தப்படுகிறார்களாம் எப்படி?

“பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோர் நீத்த குழவி போலத்
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகம்” (புறம். 230)

இந்த வரிகளில் தாயை இழந்த குழந்தை எந்த உறவினர் வீட்டு வாசலுக்குச் சென்றாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் உள்ளமுருக்கும் சூழலைச் சித்திரிக்கிறார் புலவர். அந்தக் குழந்தையை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் நிலையைக் குழந்தைக்கு ஏற்றிச் சொல்லாமல் அதியமானால் புரக்கப்பட்டாரை அவனுக்குப் பின் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதிலிருந்து பெற வைக்கும் நுண்ணியம் உணர்க. ஆயிரம் மடிகள் இருந்தாலும் ஒரு குழந்தைக்குத் தாய் மடி ஆகாது. அதியமானை இழந்த அவனது ஆதரவாளர்கள் தாய்மடி காணாத குழவியானார்கள் என்பது கருத்து.

நிறைவுரை

மானுடத்தைப் பாடியவர்கள் சங்கச் சான்றோர்கள். தமிழிலக்கியத்தின் சில பக்கங்களைத் தவிர மற்றெல்லாமும் மானுடத்தைப் பாடியவையே. மானுட உறவுகளில் ‘அம்மா’ என்னும் உறவு தலையுறவு. உறவுகளுக்கு மூலம். உணர்வுகளுக்குத் தலைவாயில். தமிழில் உறவுச் சொற்கள் அதன் பரிமாணத்தை உணர்த்தி நிற்கும். பெண் என்பவள் பாலால் பிரிக்கப்படுபவள். ஆனால் மனவி என்பவள் கணவனை உள்ளடக்கியவள். ஆண் என்பதும் இது போன்றதே. இவற்றில் தலைசிறந்த சொல் தாய்மை. தாய் என்றாலே குழந்தையை உள்ளடக்கியதுதான். தாயையும் மகவையும் தமிழ்க்கவிதைகள் தக்க இடத்தில் உவமமாக அமைத்துக் காட்டுவதும்  ஓர் உவமக் கோட்பாடே!.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *