தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 34

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

தமிழ்க்கவிதை உவமங்களில் பானையும் யானையும்

முன்னுரை

தமிழ்க்கவிதை வல்லார் தமது கவிதைகளில் அமைக்கும் உவமங்களில் அல்லது தாமாகவே அமையும் உவமங்களில் அவர்தம் பன்முக நோக்கு புலப்படுகிறது.  இயற்கையின் ஒவ்வொரு நுண்ணிய அசைவுகளையும் அவர்கள் நோக்கி வந்திருக்கிறார்கள். பல்லியின் ஒலியை அடையாக்கிக் ‘கனைகுரல் பல்லி’ என்று சொல்லுவதிலும் ‘ஆடுநடை புரவி’, ‘அசைநடை களிறு’ என்பதிலும் அவர்களுடைய நோக்கு புலப்படுகிறது. ‘குவிமுகிழ் எருக்கு’ என்பதில் அவர்களுடைய இயற்கை நாட்டம் தென்படுகிறது. தூமயிர் குறுந்தாள் நெடுஞ்செவி குறுமுயல்’ என்பதில் ஒரு சாதாரண உயிரின் உறுப்புக்களை எவ்வளவு நுட்பமாகக் கவனித்து வந்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.  அந்த வகையில் மக்களுக்கு அப்பாற்பட்ட கவிதை உவமங்களில் தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்கினம், நீர்வாழ்வன முதலியன இடம்பெற்றிருப்பதை அறியமுடிகிறது. இந்த வகையில் மண்பானையையும் மறவேழத்தையும் உவமப் பொருளாகக் கொண்டு அவர்கள் விளக்கிய கருத்துக்கள் சில இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகின்றன.

தொல்காப்பியர் கண்ட பானை

தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பானை உவமமாகக் காட்டப்பட்டுள்ளது. இதுவெறும் பானை அல்ல. நீர்ப்பானை. காய்ந்த பானை அன்று. பச்சைப் பானை. குழந்தையைப் ‘பச்சை மண்’ என்னும் வழக்கு நோக்குக. இந்தப் பச்சைப் பானையை இலக்கிய வழக்கில் ‘பசிய மட் கலம்’ அல்லது ‘பசுமட்கலம்’ என்பர்.

“தன்னுறு வேட்கையைக் கிழவற் முற்கிளத்தல்
எண்ணுங்காலை கிழத்திக்கில்லை
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” (28)

பெண்விடுதலையாளர் பலரும் எதிர்க்கின்ற நூற்பா இது. தொல்காப்பியம் ஒரு மொழியிலக்கண நூல் என்பதையும் இலக்கியத்திற்கான உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கூறுகின்ற நூல் என்பதையும் முற்றிலும் மறந்து அதனை ஒரு வரலாற்றுப் பனுவலாகக் கருதியதன் விளைவே அந்த எதிர்ப்பு. எழுவகை அகத்திணையுள் பெருந்திணை மாக்களை ஒப்பிட்டுக் கூறிய நூற்பா இது. பிற நீர் மாக்களின் என்னும் தொடருக்கு,

“வேறு வேறாகத் தம்மின் தாம் காதல் செய்து ஒழுகும் அறிவில்லாதவரைப்போலத் தலைவன் அறியும் படியாகத் தனக்குற்ற வேட்கையை அவன் முன்னர்க் கூறுதல் தலைவிக்கு இல்லை”

என்னும் நச்சினார்க்கினியர் உரைவிளக்கம் மிக ஆழமான சிந்தனையை உள்ளடக்கியது. அகன் ஐந்திணை தலைமக்களையும் பெருந்திணை மற்றும் கைக்கிளை மாந்தரையும் ஒப்பிட்டுக் கூறிய நூற்பா இது. இனிக், காதல் மலரினும் மெல்லிது என்னும் உணர்வுடையாருக்கு இந்த நூற்பாவின் மென்மை புரியும். ‘பேதையின் நகை மொக்கில்’ காதலை உணரும் மென்மையான தலைமக்களுக்கு அது மலரினும் மெல்லிது என்பது புரியக் கூடும். அரும்பிப் போதாகி மலரும் நோயாகக் காதலைக் கண்டவர்கள் அதனை ஒரு வெடிகுண்டாகக் கருதமாட்டார்கள். ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்ற பெண்மையின் தன்னிச்சையான வெளிப்பாடு, உரிமையின்பாற்பட்டதன்று. பண்பாட்டின்பாற்பட்டது. அதனால்தான் பசிய மட்கலத்துள் பெய்து வைத்த நீர் எப்படிப் புறத்தே கொஞ்சம் கொஞ்சமாகப் பொசியுமோ அது போலப் பொசியும் என்று உவமம் கூறினார் தொல்காப்பியர். காதலுக்குக் காப்பியர் சொன்ன இந்த உவமத்தைத்  திருவள்ளுவர்,

“சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்கலத்துள்
நீர் பெய்திரீஇ யற்று” (660)

என்னும் குறட்பாவில் அற வழியிலின்றி அல்வழியில் வந்த பொருளால் அரசனைக் காக்க முயல்வது நீரைச் சேமிப்பதற்காகப் பசிய மட்கலத்துள் அதனைப் பெய்தலோடு ஒக்கும் எனச் சித்திரிக்கிறார்.

பச்சைக் குழந்தையும் பசுமட் கலமும்

பாவேந்தர் எழுதிய இறவா இலக்கியமான குடும்ப விளக்கிலே ஒரு காட்சி. வேடப்பனுக்கும் நகைமுத்துக்கும் மகள் பிறக்கிறாள். மகவைக் கண்ட பேராவல் காரணமாகத் தூக்கிக் கொஞ்சுதற்காக விரைந்து செல்கிறான் வேடப்பன். அவன் விரைவைக் கண்ட நகைமுத்து அவனைத் தடுத்துக் குழந்தை எத்தகையது? அதனை எப்படித் தூக்க வேண்டும்? என்று இப்படி அறிவுறுத்துகிறாள்.

“வேடப்பன்
அடங்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை
எடுக்க விரைந்தான் “அதுதான் இயலாது
கொள் அன்று., கொத்து மல்லி அன்று.,
பிள்ளை அத்தான்”  என்றாள் பெற்றவள்
பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
வேடப்பனுக்கு விளக்குவாள் துணைவி!
ஆழியுள் உருவான அழகு மட்கலத்தை
இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்!
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
…………………………………………………………………………………………
தலை உடல் இரண்டையும் ஒருங்கு தூக்கி
உலை அமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல்போல்
தவறாது தூக்குதல் தலையாகிய கடன்”

நகைமுத்தின் இந்த அறிவுறுத்தலில் பச்சைக்குழந்தைக்குப் பசிய மட்கலம் உவமமாக்கப்பட்டுள்ளது.

சித்தர் பாட்டில்  சிதறிய  பானை

புகழ் பெற்ற சித்தர் பாடல் இப்படி அமைந்திருக்கிறது. அந்தப் பாடடில் ‘பானை’ என வெளிப்படக் கூறாவிடினும் வனைந்தவன் குயவன் என்பதால் வனையப்பட்டது பானை என்பது பெறப்படும்.

“நந்த வனத்தில் ஓர்ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

என்ற பாடல் கடுவெளி சித்தரால் பாடப்பட்டது. வாழ்க்கை நிலையாமையைக் கூறுகிற பாடல் இது. அதாவது இந்த உடல் அழியக் கூடியது என்னும் வாழ்வியல் உண்மையை உணர்த்துவது. மனிதரின் இறுதிச் சடங்கில் முச்சந்தியில் மூன்று துளைகளையிட்டுப் பானை உடைத்து நறைவுறும் சடங்கு  இன்றைக்கும் உள்ள நடப்பியல் உண்மை. ‘மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று வேண்டிப் பெற்ற மனிதப்பிறவியின் நோக்கம் நிறைவேறுவதற்கு உடல் தலையாய ஊடகம். இந்த ஊடகத்தின் சிதைவே உயிர்ச்சிதைவாகும்.

கடைச்சங்க இலக்கியத்தில் களிறு

‘யானைமறம்’, ‘களிற்றுடன் நிலை’ என்றெல்லாம் புறத்திணை இலக்கணத்தின் மையப்பொருளாகத் திகழும் யானை புலவர்கள் நாவில் உவமமாகவும் நடைபயின்றுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடுகிறார்.

“கையது வேலே! காலன புனை கழல்!
மெய்யது வியரே! மிடற்றது பசும்புண்
……………………………………………………………………………………………………
சுரி இரும் பித்தை பொலயச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே! அன்னோ!
உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே!
செறுநர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே!” (புறம். 100)

என்ற பாட்டில் ‘வரிவயம் பொருத வயக்களிறு’ போல என்ற உவமிக்கிறார். அதியமான் தனக்கு மகன் பிறந்திருக்கும் சேதியறிந்து களத்திலிருந்து அரண்மனை செல்கிறான். அந்தத் திருவோலக்கத்தில் ஔவையார் அவனைக் காண்கிறார். மழலைகளின் பிஞ்சு நெஞ்சிலும் போர்க்கோலமே நிலைபெற வேண்டும் என்னும் கருத்தான போர்க்கோலத்தில் கண்சிவக்கக் காணப்படும் அதியமானைக் கண்ட ஔவையார் “செல்லப் புதல்வனைக் காணுகிற நேரத்திலும் புலியைக் கொன்ற களிறுபோல் சிவக்கின்ற கண்களை உடையவனைப் பகைவர் கண்டால் என்ன ஆவாரோ?” என்ற கருத்தினைச் ‘சிறுவனை நோக்கியும்’ என்ற தொடரால் குறிக்கிறார். ‘மறப்போரில் சிவந்த கண் மழலை கண்டும் மாறவில்லை’ என்பது கருத்து.

சிறுவர்களுக்குக் குளிர்கிறாய்! சீறியோர்க்கு எரிகிறாய்!

‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன்’ என்றால் தன் நாட்டு மக்களுக்கு என்று பொருள். பகைவர்க்கு எந்த மன்னனும் எளியனாக மாட்டான். கூடாது. தன் நாட்டு மக்களுக்கு ‘மயங்கும் யானையாக’ இருக்கும் அதியமான் மாற்றாருக்கு மதம் பிடித்த யானையாகத் திகழ்கிறான் என்பதை விளக்க யானை பற்றிய இரண்டு  உவமங்களைக் கூறி மகிழ்கிறார் ஔவையார்.

“ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே! மற்று அதன்
துன்னரும் கடாஅம் போல
இன்னாய் பெரும! நின் ஒன்னா தோர்க்கே!” (புறம். 94)

மாற்றார் அரணைக் கிழிக்கும் தந்தத்தைச் சிறுவர் கையில் பிடித்து விளையாடும் அளவுக்கு எளியன், மதம் (கடாஅம்) பிடித்த களிறாகப் பகைக்குத் தோன்றுகிறான் அதியமான் என்பது கருத்து.

தந்தை காணட்டும் தனையன் வீரத்தை!

காட்சியளவையின் அழகியலைக் கருத்தாவாகிய படைப்பாளன் தன் மொழி கொண்டு எழுத்தில் கொண்டு வருகிற முயற்சியே கவிதை. இலக்கியச் சுவைத்திறன் என்பது கற்பார் உணர்ச்சியையும் உள்ளத்தையும் பொருத்தது. அறிவை அளவுகோலாகக் கொள்ளாது, படைப்பாளனின் உணர்வையும் அனுபவத்தையும் மொழிவழிப் பரிமாறிக் கொள்வது. தித்தன் என்பானின் மகன் போர்வை கோப்பெரு நற்கிள்ளி. தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு. அதனால் தந்தையைப் பிரிகிறான். பிரிந்தவனுக்கு ஆமூர் மல்லன் என்னும் வீரனை எதிர்க்க வேண்டிய நிலை வருகிறது. எதிர்த்துப் போரிடுகிறான். மல்லனின் அத்தனை போர்த் தந்திரங்களையும் முரியடித்து ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்’ போர்செய்து வீழத்துகிறான் நற்கிள்ளி. இந்த வீரத்தை அவன் தந்தை  காணட்டும்! என்று முழங்குகிறார் புலவர் சாத்தந்தையார்.

“பொரல் அரும் தித்தன் காண்கதில் அம்ம!
பசித்துப் பணை முயலும் யானை போல
ஒரு தலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்து அடு நிலையே!” (புறம். 80)

மல்லனின் போர்த்தந்திரங்களை முரியடிக்கும் நற்கிள்ளி செயலை உயர்ந்து வளர்ந்து காற்றில் ஆடும் மூங்கிலை வளைத்து முரிக்கும் யானையின் முயற்சிக்கு ஒப்பிடுகிறார் புலவர். இன்னும் வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானை யாத்தற்று’, ‘கழை தின் யானைக் காலகப்பட்ட வன்திணி நீள்முளை போல’ என்றெல்லாம் அதன் தன்வினைகளும் பிறவினைகளும் கூட உவமமாக வந்துள்ளதை அறியலாம்.

வள்ளுவர் கண்ட யானை

பழந்தமிழ் இலக்கியங்களில் யானை பற்றிய பதிவுகளுக்கும் திருக்குறளில் அது பற்றிய பதிவுகளுக்கும் அதாவது பிற சான்றோர்களின் நோக்கிற்கும் திருவள்ளுவர் நோக்கிற்கும் ஒத்திசைவு அவ்வளவாக இல்லை. சங்க இலக்கியத்தில் போர்க்கள நாயகனாகப் பார்க்கப்பட்ட யானை, திருவள்ளுவர் நோக்கில் அதன் உருவப் பெருமையே முன்னிறுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அரச நீதி சொல்ல வந்த வள்ளுவர் வேழத்திற்கு வேந்தனை ஒப்பிடினும் அதன்கண் உள்ள பலவீனத்தையும் கூறுதல் ஒரு நடுநிலை நோக்காகவும் இருந்திருக்கலாம். இனிப், புலிக்கணமும் சீயமும் போர்க்களிறும் போல்வார் வலிச்சினமும் மானமும் தேசும்’ (பு.வெ.மா.கர. 4) என்னும் நிரலில் யானையின் உருவத் தோற்றத்தால் அது போர்மலைதலின் இறுதியில் அமைந்திருப்பது காண்க.

“பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்” (குறள். 599)

என்னும் கருத்தும்,

“சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு” (குறள்.597)

என்னும் இருவேறு பண்புகளுக்கு யானை உவமமாகியிருப்பதை அறியலாம்.

“காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாழ் முகத்த களிறு” (குறள். 500)

என்னும் குறட்பாவிலும் எல்லாச் சூழலிலும் யானை வெல்ல முடியாது என்பதுதான் குறிப்பிடப்படுகிறது என்பதை நோக்குக.

உவமம் பொருளான கதை

யானை பற்றிய மேற்கண்ட பதிவுகளில் அது உவமமாகக் கொள்ளப்பட்டுப் பொருள் விளக்கத்திற்கு உதவியதைக் கண்டோம். காளமேகப் புலவர் யானைக்கும் வைக்கோலுக்கும், யானைக்கும் ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை பாடியிருக்கிறார்.  பிற பொருளுக்கு உவமமான யானையைக் கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் பொருளாக்கி அதற்கு மற்ற பொருட்களை உவமமாக்கிக் காட்டியிருப்பதையும் கட்டுரைப் பொருள் நிறைவு கருதிச் சுட்டப்படுகிறது.

“உடலின் மேல் பலகாயம் சொரிந்து, பின்கால்
உடன்பல தப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலம் செல்ல பின்னே செல்லும்
கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்!” (கலி.பரணி. 476)

என்னும் தாழிசையில் கலிங்கத்துக் களத்தில் குருதி, கடலாகப் பெருக அதில் நீந்தி வரும் யானைகள் கடலில் நீந்தும் கப்பல் வரிசையைப் போல் இருந்ததாக யானைகளைப் பொருளாக்கி நாவாய்களை உவமமாக்கியிருக்கிறார்.

ஆனை பாடிய வாயால் பானை பாடிய ஜீவா

பொதுநலம் நாடி வாழ்க்கையையே பொதுவாக்கிக் கொண்ட பொதுவுடைமைச் சிந்தனைவாதியும் மிகச் சிறந்த இலக்கியச் சுவைஞரும் கவிஞருமாகிய மறைந்த வணக்கத்திற்குரிய தோழர் ப.ஜீவானந்தம் என்னும் ‘ஜீவா’ அவர்கள் எழுதிய பாடல்களில் ஒரு சிறப்பான பதிவைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை’ பாடிய மணிவாசகரைப் போல யானை பாடிய வாயால் பானையையும் பாடியிருக்கிறார் ஜீவா. இவற்றைத் தனித்தனியே கண்ட நமக்கு இரண்டையும் ஒரே பாட்டில் வைத்துப் பார்ப்பதும் மகிழ்ச்சிதானே?

“யானைபோல் கொழுத்த மேனி!
இடர் செய்யும் நச்சு நெஞ்சு!
பூனைபோல் திருட்டு எண்ணம்!
பொய் புலை நிறைந்த வாழ்வு!
ஏனையோர் குடிகெடுக்கும்
எத்தனம் பொழுது போக்கு!
பானைபோல் வயிறு கொண்ட
பணத்திமிர் வீழ்க வீழ்க”

முதலாளித்துவத்திற்கு எதிராகப் போர் முரசு கொட்டிய அந்நாள் தலைவர், எழுதிய பாடல் இது. ஏகாதிபத்தியத்திற்கு யானைபோலக் கொழுத்த மேனி என்றும், ‘பானைபோல் வயிறு’ என்றும் அவர் செய்து காட்டியிருக்கும் சதுரப்பாட்டில் உவமம், உருவகம் இரண்டும் கலந்து களிநடம் புரிவதைக் காணலாம்.

நிறைவுரை

தமிழ்க் கவிதைகளில் குன்று உவமமாக்கப்பட்டுள்ளது. குன்றிமணியும் உவமமாக்கப்பட்டுள்ளது. மானையும் மயிரையும் உவமமாக்குவார்கள். இல்வளர் முல்லையைப் பாடியவரே எருக்கம்பூவையும் பாடுவார். அவர்கள் கைவண்ணத்தால் அஃறிணைக்கும் வீடுபேறு உண்டு. அதனால்தான் அவர்கள் பானையையும் பாடி ஆனையையும் உவமமாகப் பாடியிருக்கிறார்கள். எதனை உவமமாகக் கொண்டாலும் அவற்றால் அவர்கள் செய்திருக்கும் கருத்து விளக்கம் காலத்துக்கும் நிலைக்கும்!.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.