மல்லீ

பாஸ்கர்
அந்தப் பூ விற்கும் பெண்மணியிடம் நேற்று வழக்கம் போல் சென்றேன் .
கொஞ்சம் சாமந்தி கொடும்மா என்றேன்.
பண்டிகை நாளுப்பா, விலை ஜாஸ்தி
சரி , இருபது ரூபாய்க்கு எவ்வளவு வருமோ கொடு என்றேன்.
கொஞ்சம் எடுத்துப் பையினுள் போட்டுக் கொடுத்தாள்.
மல்லி வாங்கிக்கோ என்றார்கள் அந்த அம்மா.
இல்லை. காசு கம்மியா இருக்கு. நாளைக்குப் பார்க்கலாம் என்றேன்.
உன்னைக் காசா கேட்டேன். இந்தா எடுத்துண்டு போ என ஒரு முழம் கொடுத்தார்கள்.
எனக்கு உங்கிட்ட இலவசமா வாங்கிக்கக் கஷ்டமா இருக்கு என்று ஜோபியை துழாவி, சில்லறையைக் கொடுத்தேன்.
அவர்கள் அந்தச் சில்லறையை எண்ணிப் பார்க்க அவர்களிடம் காசு தான் வேணாம்னு சொன்னியே, இப்ப ஏன் எண்ணின்டு இருக்க எனக் கேட்டேன், தப்பாகக் கேட்டு விட்டோம் என்ற உறுத்தலை மீறி.
பத்து ரூபாய்க்கு மேல இருந்தா உங்கிட்ட கொடுத்துடலாம்னு தான் எண்ணறேன் என்றாள்.
நல்லவர்கள் ஏமாறக்கூடும். ஆனால் ஏமாற்ற மாட்டார்கள்.