திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு 

அடியார்க்கு  உணவூட்டும்  அரிய செயலை  தாயனார் வறுமையுற்ற  காலத்திலும் , அச்செயலை  நீக்காத மனவுறுதி யுடையவர் என்பதை உலகோர் அறிய அவர்பால்  வந்த செல்வத்தை  அவரறியாமல்  மாற்றினார். தம்  செல்வம் வேழமுண்ட விளங்கனிபோல் உள்ளீடற்று அழிந்தமையால், சற்றும் தளராத தாயனார், சிவபிரானுக்கே உணவளிக்கும் சிவத்தொண்டி லிருந்து விலகாது வாழ்ந்தார். அவ்வகையில் வறுமை வந்த போதிலும் தாம் கூலிக்கு நெல்லறுத்து வரும் ஊதியத்தால் பெருமானுக்கு  அமுதூட்டினார். அந்த நிலையில்  அடியாரின் புண்ணியத்தால் வயல்களில் எல்லாமே இறைவன் அமுதுக்கு உரிய செஞ்சாலி நெல்லாக விளைந்தன! இது தாம் செய்த புண்ணியத்தால் வந்த பயன் என்று  அந்தக் கூலியைக் கொண்டு சிவனாருக்கு அமுதூட்டினார். இறையமுதுக்கு  உரிய நெல்லைக் கூலியாகப் பெற்றவர்தம் இல்லத்துணைவி, வீட்டுக்கொல்லையில் தாமாக வளர்ந்த இலைக்கறியினை உணவாக்கி அளித்து இறைப்பணிக்கு உதவினார்.

அந்நிலையில் இல்லத்தின் பின் வளர்ந்த இலைக்கறி அற்றுப்போக, அப்போதும் மனம் வாடாமல் பருகும் நீரையே உண்ணும் உணவாகக் கணவனுக்கு இட்டார். அதனை உண்டு தம் சிவத்தொண்டைத் தொடர்ந்து செய்தார். அப்போது ஒருநாள் அடியார், மிகமுயன்று சேர்த்த செந்நெல், மாவடு, கீரை ஆகியவற்றைச் சுமந்து சென்றார். அவர் பின் அவர் மனைவியாரும் ஆனைந்தாகிய  பஞ்ச கவ்யத்தை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி புரிந்தார்.

அப்போது தாயனார்  தரையில் தடுக்கி விழப்போனார். அவர் மனைவியார் தாம் ஏந்திவந்த  ஆனைந்தை மூடிய கையால்  கணவரை விழாமல் பற்றினார். உடனே அடியார் ஏந்தி வந்த கூடையும், மனைவியார் ஏந்தி வந்த மட்கலமும் தரைவெடிப்பினுள் கவிழ்ந்து விட்டன!  அதனால் அடியார் திருக்கோயிலுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார். அப்பித்து அவர் செய்த அரிய செயலைச் சேக்கிழார் பாடுகிறார்.

பாடல்

‘’நல்ல செங்   கீரை  தூய   மாவடு   அரிசி சிந்த
`அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு
எல்லை இல் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன்’ என்று
ஒல்லை இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்.

பொருள்

தூய்மையான செங்கீரை, செந்நெல், மாவடு ஆகியவை தரைக்குள் மறைந்தமையால் ‘’எல்லையற்ற தீமை யாகிய பாவம் புரிந்தேன்; அதனால்  துன்பம் தீர்த்து உதவ வல்ல இறைவனுக்கு அமுது செய்யும் நற்பேற்றை இழந்தேன்“ என்று மனம் வருந்தித் தம்  கழுத்தை வாளால் அரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

விளக்கம்

இப்பாடலில் நல்ல  என்ற சொல் – புழுக்கடி, வாடல், முற்றல், பழுப்புமுதலிய கேடு இன்றி என்பதை குறித்தது . மென்கீரை  என்றது காண்க. நல்ல – நன்மை செய்யும் என்று இயற்கை யடைமொழியாகக்கொண் டுரைப்பினும்  ஆகும்.

தூய, என்ற சொல்  மேல், கீரைக்கு நல்ல என்றதற் குரைத்தவாறே, மாவடுவுக்கும் பொருந்த உரைத்துக்கொள்க. ‘மன்னு பைந்துணர் மாவடு’ என இதன் இயற்கையினை முன்னர் உணர்த்தியதனால் இங்கு அதன் தன்மைகள் பொருந்தக் கொள்க.

அரிசி  என்ற சொல், செந்நெல் இன்னமுது, தூய செந்நெல் அரிசி என இதன் இயல்பும் தன்மையும் முன்னரே கூறினாராதலின், முதன்மையாயின.  அதனால் இதனை இங்கு அடைமொழியின்றி அரிசி என வாளா கூறினார்.

அல்லல்தீர்த்து ஆளவல்லார் என்ற தொடர், அல்லல் – பிறவித் துன்பமும் அதற்கேதுவாகிய இருவினைகளும். தீர்த்தல் – நுகர்வித்துக் கழிப்பித்தல். அல்லல் தீர்த்து என்றதனாற் பாசநீக்கமும், ஆள என்றதனாற் சிவப்பேறும் ஆகிய இருபயனும் குறித்தார். வல்லார் என்றது அவ்வன்மை இவர்க்கே எளிதின் அமைவதென்றும் வேறெவர்க்கும் இன்றென்றும் குறித்தபடியாம்.

“தீரா நோய் தீர்த்தருள வல்லான் றன்னை” என்ற புள்ளிருக்கு வேளூர்த்  திருத்தாண்டகமும், இவ்வாறு வரும் திருவாக்குக்களும் காண்க. திருத்தொண்டாற் பெறும்பேறு நிறைவுறும் இடமாதலின் இங்கு இவ்வாறு கூறினார்.

அமுதுசெய்து (அதற்கு) அருளும் என்க. அமுதுசெய்து என்பது நியதியாகிய திருத்தொண்டினை ஏற்றுக்கொள்ளுதலையும், அருளும் அப்பேறு என்றது அதற்கு இறைவன் அருள் புரிதலினையும் குறிப்பன. அருளும் அப்பேறு – அருள்செய்யும் அந்த – அருளினைப் பெறுகின்ற அந்தப்பேறு.

எல்லையில் தீமையேன் ஆதலின் பெற்றிலேன் என்று, பெற்றிலாமைக்குக் காரணம் கூறியவாறு.

இங்கு – இவ்விடத்தே. இந்தவெடிப்பினுள். “போவது அங்கு இனியேன்?” என்ற முன்பாட்டுக் காண்க. இன்று என்ற பொருளில் வந்ததென்றலுமாம்.

ஊட்டி – மிடறு. கழுத்தின் முன்பாகம். அரியலுற்றாராய் – அரியா நின்றார்!

இப்பாடலால்  இறைத்தொண்டுக்குச் சிறிய ஊறு நேர்ந்தபோதும், அதனைத் தாங்க மாட்டாத அடியார் மனமும், உடனே அதற்குரிய தண்டனையைத் தமக்குத் தாமே  அளித்துக்கொண்ட  செயலும் விளங்குகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.