அமரர் பாரதி மணி
அண்ணாகண்ணன்
அண்மையில் காலமான பாரதி மணி அவர்களைப் பல்லாண்டுகளாக அறிவேன். சென்னையில் பல நிகழ்ச்சிகளில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். புகையிலை பிடிப்பது பற்றி, ஒரே புத்தகம்தான் எழுதுவேன் என்றது பற்றி, இன்னும் பலவற்றைக் குறித்து அவருடன் விவாதித்தது உண்டு. அனைத்தையும் சுவாரசியமாக விளக்குவார். செய்வதை ரசித்துச் செய்வார்.
அவருடைய தில்லி சாகசங்களைப் படித்துவிட்டு, சென்னையில் அவர் வீட்டுக்குச் சென்றேன். அருமையாகக் காப்பி போட்டுக் கொடுத்தார். உங்கள் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கலாமே. உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள இயக்குநர்களிடம் சொல்லுங்கள். நான் வேண்டுமானால், திரைக்கதை எழுதித் தருகிறேன் என்றேன். வேறு டைரக்டர் எதற்கு? நீங்களே டைரக்ட் செய்யலாம் என்றார். அதன் பிறகு அந்த முயற்சியை நான் தொடரவில்லை.
பெங்களூருக்கு அவர் பெயர்ந்த பிறகும் தொலைபேசியில் பேசி வந்தேன். 30.01.2018 அன்று பெங்களூர் வீட்டைக் காலி செய்துவிட்டு நான் புறப்பட்ட நாளில், ரயிலைப் பிடிப்பதற்கு முன்னால், அவசர அவசரமாக அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, போக்குவரத்து நெரிசலைக் கடந்து, கே.ஆர். புரம் ரெயில் நிலையத்தை அடைந்தபோது, நான் ஏற வேண்டிய வண்டி, நிலையத்தில் நின்றிருந்தது. நான் என் பொதிகளை எடுத்துக்கொண்டு, வியர்க்க, விறுவிறுக்க, அந்த நடைமேடையை நெருங்குவதற்குள் அது புறப்பட்டுவிட்டது. அதில் முன்பதிவு செய்திருந்தேன். அதை விட்டுவிட்டு, அடுத்து வந்த வண்டியில், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்துச் சென்னை வந்தேன். அப்போது பெரிய குழப்பம், எனக்குள் இருந்தது. பாரதி மணியைப் பார்க்காமல் நேராக ரெயில் நிலையம் வந்திருந்தால், அந்த ரெயிலைப் பிடித்திருக்கலாம் என ஒரு மனம். அப்படிப் போனால், பாரதி மணியை அதன் பிறகு பார்க்க முடியாமல் போயிருக்கும். எனவே, பார்த்து வந்தது சரிதான் என ஒரு மனம். பார்த்து வந்ததுதான் சரி என இப்போது நினைக்கிறேன்.
அவருடைய வாழ்க்கையை, அதிலும் குறிப்பாக அவரது சாகசங்களை, திரைப்படமாக எடுக்கலாம். நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.
அவர் என்றும் நம் நினைவுகளில் வாழ்வார்.