திருச்சி புலவர் இராமமூர்த்தி

4. மும்மையால் உலகாண்ட சருக்கம்

18. உருத்திர பசுபதி நாயனார் புராணம்

வரலாறு :

திருத்தொண்டர் புராணத்தின்  அடுத்த அடியார் உருத்திர  பசுபதி நாயனார் ஆவார். அவர்  காவிரிக் கரையில் விளங்கிய திருத்தலையூரில் வேள்விகள் மழையையும், மலர்கள் தேனையும், மாடுகள் பஞ்சகவ்யத்தையும் அளித்தலால் அவ்வூர்   தருமமும் நீதியும்  சால்பும் பெற்று விளங்கியது.

அங்கே  மறையவர் மரபில் தோன்றிய  பசுபதியார்,  காளையையும் உமையம்மையையும்  உடைய  சிவபிரானின் தொண்டராய் விளங்கினார். இதனைச்  சேக்கிழார்,

அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி
பங்கனார் அடிமைத் திறம் புரி பசு பதியார்.

என்று பாடினார்.

பொருள்:

இடமகன்ற அந்நகரத்தில் அருமறைகளின் வாய்மையில்  நிற்கும் உயர்ந்த மறையவர் மரபில் தோன்றிய தூயவர், செங்கண்ணுடைய பெரிய இடபத்தை ஊர்ந்து வருபவரும் செழித்த இமயமலையின் மகளாராகிய கொடிபோன்ற பார்வதியம்மையாரை ஒருபங்கிற் கொண்டவரும் ஆகிய சிவபெருமானது அடிமைத்திறத்தை விரும்பும் பசுபதியாரென்ற பேருடையவர்.

அங்கண்மையாவது எவ்வுயிர்கள் மாட்டும் அருளுடைமை. இதற்கு அழகிய இடமுடைய என்றுரைப்பாருமுண்டு.

அருமறை வாய்மை  என்பதற்கு , சிவமாந் தெய்வத்தின்மேற் றெய்வமில்லை என்னும் சைவ உண்மை.என்று பொருள். துங்க வேதியர் – துங்கம் – பெருமை – உயர்வு. இது வாய்மையான் வந்த தென்பார் வாய்மைத் துங்கம் என்றார். இவர் ‘’அந்தணர்தம்  குடி முதல்வர்”   என்றும், “மரபிரண்டுஞ் சைவநெறி”  என்பவற்றால்  விளங்கும் . வைதிகத்தோடு சைவமும் உடைமையே துங்கம் என்பது “விப்போத் துங்க” என்ற சிவபூசாஸ்த்தவ வியாக்கியானத்துங் கூறப்பட்டது.

தூயோர் – புறமும் அகமும் தூயராகுதல். இவற்றுள் அகத்தூய்மையே சிறந்ததது. ஆயின்,

“புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை,
வாய்மையாற் காணப்படும்”  என்றபடி,

புறந்தூய்மை முன்வைக்கப்படும். என்னை? அகக்கரணங்கள் தூயனவாதற்குப் புறக்கரணங்களின் தூய்மையே சாதனமென்பது நூற்றுணிபு. ஆதலின் சாதனமாகியபுறத் தூய்மை முதற்கண் வேண்டப்படுவது. நீரிற் குளித்தல் முதலியவற்றாற் புறுத்தூய்மை செய்தபின் பூதசுத்தி செய்தல் மரபு. தூய்மை என்பது பற்றி

“உண்பொழுது நீராடி யுண்டலு மென்பெறினும்,
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் தோல்வற்றிச்,
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை யிம்மூன்றுந்,
தூஉயமென்பார்தொழில்”

என்ற திரிகடுகமும் காண்க. இதனால் (உடல்) மெய்யின் தூய்மை கூறப்பட்டது. ஏனை மொழி மனங்களின் தூய்மை மேல்வரும் பாட்டில் “வழுத்தும் தூய அன்பொடு” என்றமையாற் கூறுவார்.

செங்கண் மால்விடையார்- சிவந்த தாமரைக்கண்ணன் என்னும் திருமாலாகிய விடையினையுடையவர் என்றலுமாம்.

“இடபமதாய்த் தாங்கினான் றிருமால்”  என்பது திருவாசகம்)

“செங்கண்மால்விடையாய்” என்ற நம்பிகள் தேவாரமும் காண்க.

பொன்மலை வல்லி – பொன்மலை- இமயமலை;

“பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தெனப்,
பன்னு நீள்பனி மால்வரைப் பாலது”,

“பொன்மலைப் புலிவென் றோங்க” முதலியன காண்க. ஞாயிறு உதிக்கும்கால் இதன் கொடுமுடிகள் பொன்னேபோற் றோன்றுதலின் இமயமலையும் பொன்மலை எனப்படும். மலையரசன் மகளாராய் வந்தாராதலின் உமையம்மையார் மலைவல்லி எனப்படுவர். வல்லி கொடி – கொடி போன்ற அம்மையார்.

அடிமைத் திறம்புரி – புரிதல் – விரும்புதல். அடிமைத் திறம் – உயிர்கள் எஞ்ஞான்றும் இறைவனுக்கு அடிமைகள் என்பது உண்மைநூன் முடிபு. அதனை வேதம் உள்ளுறையாகக்கொண்டு நடுவில் வைத்துத் திருவுருத்திரத்தினால் அறிவிக்கும். அவ்வுருத்திர மந்திரத்தை எப்போதும் விரும்பிச் சொல்பவராதலின் அடிமைத் திறம்புரி என்றார். புரிதல் – செய்தல் என்று கொண்டு, அடிமைத் திறத்திற்சாரும் செயல்களைச் செய்கின்ற என்றுரைத்தலுமாம்.

பசுக்கள் இறைவனைப் பதியாக உடையன என்ற பொருள்கொண்ட பசுபதியார் என்ற பெயர்பூண்டமையாலும் இது விளங்கும்.

பசுபதியார் – இந்நாயனாரின் இயற்பெயர். முருகனார் என்ற பெயர்ப் பொருள் உரைக்கப்பட்டது. பசுபதியாகிய சிவபெருமானிடத்து மிக்க அன்புபூண் டொழுகும் துங்கவேதியர் குலத்தில் தோன்றினாராதலின் இவர்தம்  பெற்றோர்கள் தங்கள் வழிபடுகடவுளின் பெயரை இவருக்கு இட்டனர்போலும். ஆரூரர் என்ற பெயர் ஆளுடைய நம்பிகளுக்கு இட்டமை காண்க.  உருத்திர  பசுபதியார் என்ற பெயரின் காரணம் பின்னர்  கூறுவர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *