Advertisements
Featuredகட்டுரைகள்

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

பகுதி 10-இ : அதுவா? இதுவா – ஐயா? அய்யா? ஔவை? அவ்வை?

பேரா. பெஞ்சமின் லெபோ.

சில காலத்துக்கு முன், அரபு நாட்டில் இருந்து தனி மின்மடலில் தமிழ்ச் சகோதரி ஒருவர் ஓர் ஐயம் எழுப்பி இருந்தார் :’ஐயம்’, ‘அய்யம்’ ; ‘ஐயா’, ‘அய்யா’  – இவற்றுள் எது சரி? என்பது அவர் விடுத்த வினா.

உடனடியாக அவருக்குச் சுருக்கமாகப் பதில் எழுதிவிட்டேன். இது பற்றி நம் தொடரில் எழுதுவதாகச் சொல்லி இருந்தேன்.இதே கேள்வியைச் சிங்கப்பூரில் இருந்து இளங்குமரன் ஐயா 2010 -ஆம் ஆண்டிலேயே மடலாடல் குழுவில் எழுப்பி விட்டார்.அது பற்றி எழுதுவதற்கான நேரம் இதோ வந்துள்ளது.

வழக்கம் போல் நம் இணையதள பூதத்தாழ்வாரைக் கேட்டால்,780 000 பேர் ‘ஐயா’ பக்கம் ; 433 000  ‘அய்யா’ பக்கம் 112 000 பேர் ‘ஔவை’ பக்கம் ; 60 500 பேர் ‘அவ்வை’ பக்கம் – என்றது.

ஆக இக்காலத் தமிழை / தமிழர்களைப் பொருத்தவரை இருவகையாகவும் பயன்படுத்தி வருவதை அறிய முடிகிறது.’ஐ’ -உக்குப் பகரமாக ‘அய்’ பயன்படுத்தலாம், ‘ஔ’ -உக்குப் பகரமாக ‘அவ்’  பயன்படுத்தலாம் என்று பெரியார் சீர் திருத்தம் கொண்டுவந்தார் என்றுதான் பலரும் (தவறாக) எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்!

பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தார் என்றாலும் தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று வற்புறுத்தியது இல்லை. ‘1937 இல் தமிழ்நாட்டி கட்டாய இந்திக் கல்வியை புகுத்தியதிலிருந்து, நான் இந்தியெதிர்ப்புப் பற்றிப் பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப் பழகினேன் அக்காலமெல்லாம், தமிழர் விடுதலை எழுத்தை மேற்கொள்ளவேண்டுமென்று,பெரியார் ஒருகூட்டத்திலேனுஞ் சொன்னதுமில்லை; ஒர் இதழிலேனும் எழுதினதுமில்லை. எனக்கு முன்பே பெரியாரையடுத்து அவர் தன்மானக் கொள்கையைக் கடைபிடித்து அவருக்கு வலக்கை போல துணையாயிருந்து வந்தவர். கி.ஆ.பெ.விசுவநாதம் எனும் உலக நம்பியாரும், இதற்கு சான்று பகர்வர்’ என எழுதுபவர் வேறு யாரும் இல்லை, மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரேதான்.

(ஞா.தேவநேயன் 1980 இல் எழுதியது- நூல் உதவி: எழுத்துச் சீர்திருத்தமா? எழுத்து சீரழிப்பா? தொகுப்பு : இளங்குமரனார்) சுருக்கம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதுகாண்க:

http://epithamizh.org/2010/07/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/)

பெரியார் எழுத்து என்று தற்போது கூறப்படும் திருந்திய வரிவடிவத்தை 1935 குடியரசு இதழில் புகுத்தித் தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினார் அவர்..(அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ).

திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. ஈரோடு நகரில் 18_9_1978 தொடங்கி இரு நாட்கள் இவ்விழா நடைபெற்றது. அப்போது பொன்மனச் செம்மல் எம்.சி.ஆர் தமிழக முதல்வர். பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்தத்  தமிழ் எழுத்து சீர்திருத்தத்தைத் தமிழக அரசு 19_10_1978 அன்று ஏற்று, அமலுக்குக் கொண்டு வந்தது.

(http://www.maalaimalar.com/2011/08/01104239/e-v-r-periyar-order-tamil-lett.html )
‘தந்தை பெரியார். “அய்” “அவ்” என்ற “ஐ” ,”ஔ” இரண்டையும் நீக்கும் சிந்தனையில் மூழ்கினார்.’ என்பது உண்மையே.

(http://www.tamileluthu.org/tamil-valarchi/periyar-serthirutham/).

20.01.1935 – நாளிட்ட தம் ‘குடியரசு’ பத்திரிக்கையில் பெரியார் தலையங்கத்தில் எழுதுகிறார் :‘உயிரெழுத்துக்கள் என்பவைகளில் ஐ, ஒள என்கின்ற இரண்டு எழுத்துக்களும் தமிழ் பாஷைக்கு அவசியமில்லை என்பதே நமது வெகுநாளைய அபிப்பிராயமாகும். ஐ காரம் வேண்டிய எழுத்துக்களுக்கு ை, இந்த அடையாளத்தைச் சேர்ப்பதற்கு பதிலாக ய் என்ற எழுத்தை பின்னால் சேர்த்துக் கொண்டால் ஐ கார சப்தம் தானாகவே வந்து விடுகின்றது. உதாரணமாக கை என்பதற்குப் பதிலாக கய் என்று எழுதினால் சப்தம் மாறுவதில்லை என்பது விளங்கும்.

அதுபோலவே ஒள காரத்துக்கும், கௌ என்பதற்குப் பதிலாக கவ் என்றோ, கவு என்றோ எழுதினால் சப்தம் மாறுவதில்லை. கௌமதி கவ்மதி, கவுமதி என்கின்ற சப்தங்கள் ஒன்று போலவே உச்சரிப்பதைக் காணலாம்.

இந்த வகையில் ஐ, ஒள இரண்டு எழுத்து உயிரெழுத்திலேயே குறைத்து விட்டால் அதனாலும் பெரிதும் அனுகூலம் உண்டு.’

(http://periyaarr.blogspot.com/2010/12/blog-post_28.html).

இந்த ‘ஐ, ஒள ‘ -ஓடு சேர்த்து ‘ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ’ என்றுதான் பெரியார் தம் பத்திரிகைகளான ‘குடியரசு’ ‘விடுதலை’ இதழ்களில் எழுதிவந்தார். ஆனால், மேலே குறிப்பிட்டது போல 1978 – இல் பெரியார் சீர்திருத்தத்தை அமுலுக்குக் கொண்டு வந்த தமிழக அரசு  ‘ஐ, ஒள ‘  -களை ‘அய், அவ் ‘ மாற்றும் திட்டத்தைக் கைவிட நேர்ந்தது. காரணம் , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன்,  முனைவர் வ.சு.ப. மாணிக்கம், முனைவர் மு.வ…போன்ற தமிழறிஞர்களின் பலத்த எதிர்ப்பு.

இது பற்றிக் குறிப்பிடும் என் இனிய நண்பர் முனைவர் பா. இறையரசன், ‘ஐ,ஒள என்ற கூட்டெழுத்தை உயிரெழுத்து வரிசையில் வைத்தது ஏன்? உயிரும் மெய்யும் சேர்த்து உருவாக்கப்பெறும் உயிர்மெய் எழுத்துக்களில்,  ஐ ஒள புணர்ந்து வரும் உயிர்மெய் எழுத்துக்கள் முழு ஒலிப்பு (மாத்திரை அளவு) ஒலிப்பதற்கு ஏதுவாக இவ்வெழுத்துக்கள் வைக்கப் பெற்றுள்ளன. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் தமிழக அரசால் ஏற்கப்பெற்ற பொழுது,  ஐ ஒள நீக்கப்படக் கூடாது என்று   கி.ஆ.பெ.விசுவநாதம், வ.சுப.மாணிக்கம் முதலிய தமிழறிஞர்கள் எதிர்த்து ஐ ஒளஆகியவற்றை மீட்டதற்கு இதுவே கரணியம் எனத் தெளிவாக எழுதுகிறார்.

(http://groups.google.com/group/tamil_ulagam/msg/4823adfd4733a994?pli=1).

ஆகவே, ‘அய்யா’  ‘அவ்வை’ என மக்கள் எழுதுவதற்குக் காரணம் பெரியார் என்றோ தமிழ அரசின் ஆணை என்றோ கூற இடமே இல்லை. யாரையாவது  சுட்டிக் காட்டவேண்டும் என்றால் தமிழிலக்கணத்தின் தனிப் பெருந் தலைகள் இருவரைத்தான் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கும்.  வியப்பாக இருக்கிறது அல்லவா! உண்மையிலும் உண்மையாக, உண்மைகள் சுடுவது மட்டுமல்ல பெரு வியப்பாகவும் இருக்கும்.

‘ஐ’ – உக்குப் பகரமாக ‘அய்’ வரலாம் எனத் தாராள மயமாக்கியவர் தொல்காப்பியரே. :’

அகர இகரம் ஐகாரம் ஆகும்’ (தொல். எழுத்து, 54) – அதாவது, அ+இ>’ஐ’ எனக் கூறிய அவர் அத்தோடு நிற்காமல்,

‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்

ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ (தொல். எழுத்து, 56) – அதாவது அ+ய்>’அய்’ என வரலாம் என்கிறார்.

தொல்காப்பியர் காலத்தில் இருந்தே இவ்விரு வடிவங்களும் வழக்கில் இருந்திருக்கவேண்டும். இரண்டுள் எது சரி என்ற விவாதம் அப்போதே எழுந்திருக்கக் கூடும். தீராத வழக்காக இது விளங்கியதால் தொல்காப்பியர் இரண்டையும் குறிப்பிட்டு விட்டார் போலும். இதிலும் ஒரு நுட்பம் வைத்துள்ளார் : ‘ஆகும்’ என்ற சொல்லின் வாயிலாக ‘ஆகவேண்டும்’ என்ற கட்டளையை (obligation) உணர்த்துகிறார்.

56 -ஆம் நூற்பாவில், ‘தோன்றும்’ எனக் கூறுவதால் தோன்றாமலும் போகலாம் (optional) – அதாவது ‘ஐ’ -உக்குப் பகரமாக ‘அய்’ வருவது புறநடை, விதிவிலக்கு என உய்த்துணர வைக்கிறார்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ‘ஐ’ -யைப் பற்றிச் சொன்னவர், ‘ஔ’ காரம் ‘அவ்’ ஆகலாம் எனக் கூறவில்லையே.ஆனால் பின்னாடி வந்த உரையாசிரியர்கள், ‘ஐ’ காரம் பற்றிய தொல்காப்பியர் கருத்தை ஔ’ காரத்துக்கும் நீட்டிவிட்டனர்.இதனை ஆங்கிலத்தில் extrapolation’ என்பர்.
தொல்காப்பியர் தோளில் ஏறி நின்று தமிழ் இலக்கணத்தைப் பார்வை இடும் பவணந்தி முனிவர் தமக்கெதற்கு வம்பென்று இரண்டையுமே குறிப்பிட்டுத் தப்பித்துக்கொள்கிறார்.

அம்முன் இகரம் யகரம் என்றுஇவை எய்தின் ஐ ஒத்து இசைக்கும் ;

அவ்வோடு உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன’ (நன்னூல், 125).

இவ்வாறு நன்னூலார் இருவகையாகக் கூறினார் என்றாலும், அய், அவ் என்பனவற்றை முறையே அ இ (ஐ), அ உ (ஒள) என்பனவற்றிற்குப் போலி என்று கொள்கிறார். நன்னூல் நூற்பா 123 காண்க.

ஒரு சொல்லில் ஓர் எழுத்து நிற்றற்கு உரிய இடத்தே, அதற்குப் பதிலாகப் பிறிதோர் எழுத்து வந்துநின்றால், அதனால் அச்சொல்லின் பொருள் மாறவில்லை என்றால் அவ்வெழுத்து போலி எனப்படும். இங்கு அஇ, அஉ என்னும் கூட்டொலிகளில் இ, உ என்பனவற்றிற்குப் பதிலாக முறையே ய், வ் என்னும் எழுத்துகள் அவ், இவ் என்னும் சொற்களில் வந்ததால், அவ்வெழுத்துகள் போலி ஆகும்.

இவற்றைச் சுருக்கிச் சொன்னால்,தொல்காப்பியர் கருத்துப்படி, ‘ஐ’ என்பது ‘அய்’  ஆகலாம் என்று சொன்னதாலும் நன்னூலார் இதற்கு வால் பிடிப்பதாலும் ‘ஐயா’ என எழுதுவதும் சரியே ‘அய்யா என எழுதுவதும் சரியே’ என்று கூறி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம் …. என்று நான் முடிப்பேன் என நீங்கள் எண்ணினால்…. அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க