திருப்பூவணப் புராணம் – பகுதி – (2)

கி.காளைராசன்

“கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த

வீடும் கொடுத்த விழுத்தெய்வம் – தேடியும்

அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்

வெள்ளி விளக்கே விளக்கு”

 

(2008 – 2009 நூற்றாண்டு விழா)

கல்விக் கொடை வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார் அவர்களின் பொற்பாதங்களை வணங்குகிறோம்.

 

– கி. காளைராசன்

– சோ. நாகலெட்சுமி

-கா. நித்யா

 

24-9-2007 திங்கள் கிழமை மாலை திருப்பூவணம் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், நூலாசிரியர் கி.காளைராசன் அவர்கள் எழுதிய திருப்பூவணக் காசி என்ற நூலைத் தவத்திரு குன்றக்குடிப்

பொன்னம்பல அடிகளார் அவர்கள் வெளியிட, அதனை மானாமதுரை

ஸ்ரீ  பிரத்தியங்கிராதேவி திருக்கோயில்

அருள்மிகு ஞானசேகர சுவாமிகளும்

அழகப்பா பல்லைக்கழகத் துணைவேந்தர் மேதகு பேராசியர். பெ.இராமசாமி அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர்.

 

உள்ளே

 

  வாழ்த்துரை 10
  அணிந்துரை 12
  அருளுரை 14
  ஆய்வுரை 17
  என் உரை 20
  Synopsis 25
1 திருப்பூவணம்  அறிமுகம் 40
2 திருப்பூவணப் புராணம் அறிமுகம் 45
3 திருப்பூவணப் புராணம் – உரைச்சுருக்கம் 49
4 திருப்பூவணம் – திருவிளையாடற் புராணம் உரைச் சுருக்கம் 70
5 திருப்பூவணப் புராணம் – பாடல்கள்  
   
  திருப்பூவணப் புராணச் சருக்கங்கள்  
  கடவுள் வாழ்த்து 80
  அவையடக்கம் 83
  நைமிசாரணியச் சருக்கம் 84
  சவுநகர் சூதரை வினவிய சருக்கம் 86
  திருக்கைலாயச் சருக்கம் 88
  ஆற்றுச் சருக்கம் 93
  திருநாட்டுச் சருக்கம் 94
  திருநகரச் சருக்கம் 101
சருக்க எண் பாயிரம் 108
  1 சூரியன் பூசனைச் சருக்கம் 109
  2 திரணாசனன் முத்தி பெற்ற சருக்கம் 119
  3 மணிகன்னிகைச் சருக்கம் 130
  4 துன்மனன் சருக்கம் 135
  5 தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கம் 145
  6 உற்பலாங்கி பதியை அடைந்த சருக்கம் 150
  7 பாற்கரபுரச் சருக்கம் 157
  8 சர்வ பாவ விமோசனச் சருக்கம் 161
  9 பிரம சாப விமோசனச் சருக்கம் 165
  10 இலக்குமி சாப விமோசனச் சருக்கம் 176
  11 உமாதேவி திருஅவதாரச் சருக்கம் 185
  12 திருக்கலியாணச் சருக்கம் 198
  13 தக்கன் வேள்ளியழித்த சருக்கம் 213
  14 உமைவரு சருக்கம் 221
  15 சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம் 224
  16 சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம் 229
  17 தீர்த்தச் சருக்கம் 234
  18 நளன் கலிமோசனச் சருக்கம் 236
  19 திருவிழாச் சருக்கம் 241
  20 சிதம்பர உபதேசச் சருக்கம் 244
6 திருமுறைகளில் திருப்பூவணப் பாடல்கள்  
  1 திருஞானசம்பந்தர் பாடல்கள்  
ஒன்றாம் திருமுறை 256
மூன்றாம் திருமுறை 257
  2 திருநாவுக்கரசர் பாடல்கள் 259
  3 சுந்தரர் பாடல்கள் 261
  4 திருவாசகத்தில் திருப்பூவணம் 262
  5 கருவூர்த் தேவர் பாடல்கள் 264
  6 அருணகிரிநாதர் பாடல்கள் 266
7 திருவிளையாடற் புராணப் பாடல்கள் 268
8 திருப்பூவணத்தைப் பற்றிய பிற பாடல்கள் 273
9 தனித் தேவாரப் பாடல்கள் 274
10 நன்றியுரை 277
11 இந்நூலாசிரியர் எழுதி வெளிவந்துள்ள நூல் மற்றும் கட்டுரைகளின் பட்டியல் 278
       

வாழ்த்துரை

 

அழகப்பா பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் நாள், தமிழ், கணிதம், இயற்பியல், வணிகம் ஆகிய நான்கு முதுகலைத் துறைகளையும் கல்வியியல் கல்லூரி மற்றும் உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றையும் ஒன்றிணைத்துத் தோற்றுவிக்கப் பெற்றது.  1986ம் ஆண்டு தமிழ்த்துறைக்கான புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டபோது அதில், “கோயிற்கலை”யும் ஓர் பாடமாகச் சேர்க்கப்பட்டது. இதனால் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்கள், தமிழகத் திருக்கோயில்கள் பலவற்றையும் ஆய்வு செய்து பட்டங்கள் பெற்றுள்ளனர். அவ்வகையில், திரு.கி.காளைராசன் அவர்கள், திருப்பூவணத் திருக்கோயிலை ஆய்வு செய்து, ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாகத் திருப்பூவணப் புராணம்-ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தற்போது முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து வருகிறார்.

தமிழக முதல்வர், டாக்டர். கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் முயற்சியால், தமிழ்மொழி, தனிச்செம்மொழியாக அறிவிக்கப் பெற்றுள்ளது.  இத்தகைய தருணத்தில், கி.பி.1620ம் ஆண்டு, 1437 பாடல்களால் எழுதப்பெற்ற  “திருப்பூவணப் புராணத்தை” ஆய்வு செய்வது மிகவும் சிறப்பிற்கு உரியது.   முனைவர் பட்ட ஆய்வுடன் இவர் தனது பணியை நிறுத்திக் கொள்ளாமல் ஆய்விற்கான மூலநூற் பிரதி அழிந்துவரும் நிலையில்,  மக்கள் அனைவரும் பயனுறும் வகையில் திருப்பூவணப் புராணத்தை நூலாகப் பதிப்பித்து வெளியிடுவது  மிகவும் பாராட்டிற்கு உரியது.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆய்வினால் திருப்பூவணப் பகுதி மக்களும் மற்றும் ஆன்மிக அன்பர்களும் நிறைந்த பயனடைவர் என்பது திண்ணம். இவரது நூல் வெளியீடுகள் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. ஆய்வாளர் திரு.கி.காளைராசன் அவர்கள் அலுவலகப் பணியினிடையே ஆன்மிகப் பணியையும் ஆற்றிவருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.  இவர் தனது நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுத வேண்டும் என்று எனது விருப்பத்தினைத் தெரிவித்து, திரு.கி.காளைராசன் அவர்கள் மென்மேலும் பல ஆன்மிக நூல்களை எழுத எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சிற்றம்பலம்

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம்

பா. இளங்கோ. பி.காம்., பி.எல்.,

மேலாளர்.

அணிந்துரை

அன்னை பார்வதி தேவியார் பாரிசாத மரத்தை வளர்த்து அதன் நிழலிலே அமர்ந்து தவம் செய்தார்.  அங்கே ஒரு சிவலிங்கம் முளைத்தது. அதனைத் தேவியார் பூசிக்க அதிலிருந்து சிவபெருமான் காட்சியளித்து அருள் வழங்கினார்.  இவ்வாறு சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கம் உள்ள ஊர் திருப்பூவணமாகும்.  இது காசியிலும் சிறப்புடையதாகும்.

இச்சிவலிங்கத்தைச் சூரியன், பிரம்மா, மகாலெட்சுமி ஆகியோர் பூசித்து வரங்கள் பெற்றுள்ளனர்.  மாத்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் குருஉபதேசம் வழங்கிய திருத்தலம். இத்தலத்தைப் பண்டைய காலத்தில் முடிவுடைய மூவேந்தர்களும் ஒன்றாய் வந்து வணங்கி வழிபட்டுள்ளனர்.  மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பதிகம் பாடிப் பணிந்துள்ளனர்.  மாணிக்கவாசகர், கரூர் தேவர்,  அருணகிரி நாதர் முதலான அருளாளர்கள் பாடிப் பணிந்துள்ளனர்.

மதுரையிலிருந்து சிவபெருமான் சித்தராக வந்து இரசவாதம் செய்து தங்கம் தயாரித்த 36வது திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம். வடநாட்டு மன்னர்களான சுச்சோதி அரசன், நளமகாராசன் ஆகியோரும் தங்களது படை பரிவாரங்களுடன் வந்து வணங்கிப் பயனடைந்துள்ளனர்.  மன்னர்களும் மக்களும் காலங்காலமாய் வணங்கிப் போற்றும் இத்தலத்தைச் சிவகங்கை சமஸ்தான மன்னர்கள் பரம்பரை பரம்பரையாகச் சிறப்புடன் நிர்வகித்தும் நித்ய பூ​ஜைகள் சிறப்புடன் நடக்கத் தேவையான அறக்கட்டளைகளை ஏற்படுத்தியும், அறங்கள் பல செய்தும் தர்மம் காத்து வருகின்றனர்.

திருப்பூவணத்தின் அருமை பெருமைகளை அறிந்துணர்ந்த முனிவர்களும் ரிஷிகளும் அவற்றைத் தொகுத்து சமஸ்கிருத மொழியில் பிரமகைவர்த்த புராணத்தில் கூறியுள்ளனர்.  இதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கந்தசாமிப்புலவர் 388 ஆண்டுகளுக்கு முன்பு பாடியுள்ளார்.  இவ்வளவு பழமையும் பெருமையும் மிகுந்த இப்புராணத்திற்கு உரைச்சுருக்கம் எழுதி 1437  பாடல்களுடன் திருப்பூவணப் புராணம் என்ற பெயரில் கி.காளைராசன் அவர்கள் வெளியிடுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நூலாசிரியர் திரு.கி.காளைராசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

சிவமயம்

யோகிராம் சுரத்குமார்   யோகிராம் சுரத்குமார்

யோகிராம் சுரத்குமார் ஜெயகுருராய

பேராசிரியர் ராம.திண்ணப்பன்,

ஆங்கிலத்துறை முன்னாள் பேராசிரியர்,

ஸ்ரீ  சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி,

தேவகோட்டை

No. 5, P.L.S. சாலை,

தேவகோட்டை.

 

அருளுரை

நகரத்தார்கள் கோயில் திருப்பணிக்குத் தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள்.  அதிலும் தேவகோட்டை நகரத்தார்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் கோயில் திருப்பணி செய்தவர்கள்.  திருப்பூவணத்தில் நேமங் கோவிலைச் சேர்ந்த தேவகோட்டை உ.மு.வகையறாவினர் தலைமுறை தலைமுறையாகத் திருப்பணிகள் செய்து வருகின்றனர்.

திருப்பூவணம் குரு உபதேசத் தலமாகும்.  மாத்தியாந்தினி மற்றும் தியானகாட்டர் ஆகிய இரு முனிவர்களும் 100 தேவவருடம் தவம் செய்து,  சிவபெருமானின் தீட்சை பெற்ற திருத்தலமாகும்.  சுமார் 37 லட்சம் வருடத்திற்கு முன்பு, அம்பாள் தவம் செய்து அதன் பயனாகப் பாரிஜாதப் பூவால் சிவலிங்கம் தோன்றியது.  அதனால் “பூவணநாதர்” என்ற பெயர் பெற்றது.

அம்பாள் ஆடிமாதம் மட்டும் வைகை ஆற்றுக்கு வடகரையில் தவம் செய்துள்ளாள்.  அந்த இடம்தான் “ஆடித்தபசு மண்டபம்”.  அம்பாள் தவம் செய்த இடம் என்பதால் திருஞானசம்பந்தர் அந்த இடத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார். அப்போது ஆற்று மணல்களெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்துள்ளன.  எனவே அவர் ஆற்றைக் கடந்து திருக்கோயிலுக்குச் செல்லாமல் அங்கிருந்தபடியே ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வணங்கிப் பாடியுள்ளார்.   நந்தி விலகிக் காட்சி அளித்துள்ளது.

திருப்பூவணநாதரின் திருவருளைப் பெற்று மதுரை சென்று.  சமணர்களை வென்று வைசத்தைத் தழைக்கச் செய்து, அதன்பின்னர்  மீண்டும்  திருப்பூவணத்திற்கு வந்து திருக்கோயில் சென்று மீண்டும் ஒரு பதிகம் பாடி இறைவனை வணங்கியுள்ளார்.

திருப்பூவணத்தில்,  பொன்னனையாள் நடத்திய அன்னதானத்தில் மதுரை சொக்கநாதர், சித்தர் வடிவத்தில் தோன்றி இரசவாதம் செய்து, திருப்பூவண உற்சவரைப் பொன்னால் செய்வதற்கு வேண்டிய பொன்னை உறுக்கிக் கொடுத்துள்ளார்.  இதனால் மதுரை ஈசனால் திருப்பணி செய்யப் பெற்ற திருத்தலம் என்ற பெருமை திருப்பூவணத்திற்கு மட்டுமே உள்ளது.

இக்காரணங்களால் மதுரை சொக்கரை வணங்குவதற்கு முன் திருப்பூவணநாதரை வணங்கினால் மிகுந்த பலன் உண்டு.

 

 

 

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.