திருப்பூவணப் புராணம் – பகுதி – (3)

கி.காளைராசன்

ஆடித்தபசு மண்டபம் சிதிலமடைந்த நிலையில் ஆடித்தபசு மண்டபம் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

ஆடித்தபசு மண்டபம் சிதலமடைந்த நிலையில் இருந்தபோது. திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய இடம் புதுப்பொலிவுடன் விளங்கவேண்டும் என எந்நேரமும் நினைந்து தன்னை முழுமையாகத் திருப்பூவணநாதருடன் இணைத்து கொண்ட. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத் துணைப்பதிவாளர் திரு.காளைராசன் மற்றும் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் அடியேன் தலைமையில் இணைந்து ரூபாய். 2,50,000-00 (ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்) செலவில் மற்றபிற அன்பர்கள் உதவியுடனும் திருப்பணியை நிறைவு பெறச் செய்துள்ளோம்.  2009ம் ஆண்டு தைமாதம் குடமுழுக்குவிழா  செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.           (குறிப்பு – புனர்நிர்மாணப் பணிகள் நிறைவுற்று குடமுழுக்கு விழா சிறப்பாக ந​டை​பெற்றுள்ளது) திருப்பூவணம் “பிதுர் மோட்சத் தலமாகும்”.  தருமஞ்ஞன் என்பவருடைய தந்தையாரின் அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்பு பூவாக மாறிய திருத்தலமாகும்.  “காசிக்கு வீசம்கூட” என்பது மக்கள் வழக்கு.

திருமலை நாயக்கர் காலத்திற்குப் பின்னாள், தொடர்ந்து 300 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னதாம் நடைபெறாமல் நின்றுவிட்டது.  மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ பிரித்தியங்கிரா தேவி திருக்கோயில் ஸ்ரீலஸ்ரீ ஞானசேகர சுவாமிகளின் தலைமையில், திருப்புவனம் வழக்குறைஞர் சண்முகநாதன், காளைராசன் மற்றும் சுவாமிகளின் அன்பர்கள் பலரும் இணைந்து சித்திரை மாதம் வளர்பிறை பிரதோச நாளில் (17-4-2008) திருக்கோயிலில் மீண்டும் சிறப்பாக அன்னதானத்தை நடத்தியுள்ளனர்.  அன்று நடைபெற்ற அன்னதானத்தில் சிவபெருமானே வயோதிகனாக பழுத்த பழமாக சன்னியாசி வேடத்தில் தோன்றி அன்னம் பெற்றார் என்பது உண்மையாகும்.

 

ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரித்யங்கிரா தேவி கோயில். வேததர்ம ​​ஷேத்திர டிரஸ்ட் ஸ்ரீலஸ்ரீ ஞானசேகர சுவாமி அவர்கள்  திருப்பூவணம் திருக்கோயிலில் 17-4-2008 அன்று அன்னதானம் நடைபெறுகிறது 

இனிமேல் வருடம்தோறும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற சுவாமிகளின் ஆசியுடன், அடியேன் தலைமையில், திருப்புவனம் வழக்கறிஞர் சண்முகநாதன் அவர்களைச் செயலாளராகக் கொண்டு ஒரு அறக்கட்டளை  நிறுவப்பட்டுள்ளது.            அடியேன் திருப்பூவணத்தில் உணர்ந்ததையும், திரு.காளைராஜாவின் திருப்பூவணப்புராணம் படித்ததையும், கேள்விப்பட்ட எதையும் எழுதத் தவிர்க்க முடியாததால் அணிந்துரை நீண்டதாக அமைந்துள்ளது.

தேவகோட்டை                               இப்படிக்கு

14-9-2008                                                                  பேராசிரியர் ராம.  திண்ணப்பன்

 

 

சிவமயம்

முனைவர் நா. வள்ளி. M.A., B.Ed., Ph.D., 

P.G.Dip.in Epigraphy & Archacology

முதல்வர்.

இராமசாமி தமிழ்க் கல்லூரி.

காரைக்குடி – 3

7. லெட்சுமணன் செட்டியார் தெரு. 

காரைக்குடி – 1

 

ஆய்வுரை

18-09-2008

 

“வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்

வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்”

எனத் தாண்டக வேந்தராகிய அப்பர் பெருமானடிகள் சிவனைக் கண்ணாரக் கண்டு களித்து வழிபட்ட தலம் திருப்பூவணம்.  தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுப் பதினான்கு தலங்களுள் இத்தலத்திற்கெனத் தனிச்சிறப்புகள் உண்டு.  மதுரை உட்பட மற்றைய தலங்களுக்கு மூவர் முதலிகளில் ஓரிருவர் பாடல்களே கிடைத்திருக்க. இத்தலத்திற்குத்தான் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பதிகங்களும் கிடைத்துள்ளன.  அதுமட்டுமல்ல மணிவாசகப் பெருமானும், கருவூர் தேவரும், அருணகிரிநாதரும் பாடிப்பரவி இருக்கிறார்கள்.  பொன்னனையாள் என்ற தேவரடியாருக்காக, மதுரைச் சொக்கநாதர் இரசவாதம் செய்தருளியது இத்தலத்தில்தான்.

இத்தலத்து இறைவன் மீது கந்தசாமிப் புலவர் என்பார் திருப்பூவணப் புராணம், திருப்பூவணநாதர் உலா, புட்பவனநாதர் வண்ணம், திருப்பூவணத் தலவகுப்பு, மூர்த்தி வகுப்பு ஆகிய பல நூல்களைப் பாடியுள்ளார்.  அவற்றுள் திருப்பூவணப் புராணம், திருப்பூவணநாதர் உலா தவிர மற்றைய நூல்கள் கிடைத்தற்கு அருமையாக உள்ளன.  இந்த இரண்டு நூல்களையாவது பாதுகாக்க வேண்டும், அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, அழகப்பா பல்கலைக் கழகத்தில் உதவிப்பதிவாளராகப் பணியாற்றும் திரு.கி.காளைராசன் அவர்கள் திருப்பூவணப் புராணத்தையும், இத்தலத்தோடு தொடர்புடைய திருவிளையாடற் புராணத்தையும் உரைச் சுருக்கத்தோடும் மற்றும் இத்தலத்தோடு தொடர்படைய பிற இலக்கயப் பகுதிகளையும், புராண வரலாற்றுச் செய்திகளையும் செம்மையாகத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.

இங்கு, காளைராசனுக்கும் திருப்பூவணத்திற்குமுள்ள  தொடர்பைச் சொல்லியே ஆகவேண்டும்.  ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடைய அவர், மெய்ஞானத்தை விஞ்ஞானத்தோடு இணைத்துப் பார்ப்பதில் ஆர்வமுடையவர்.  அவரது இளமைப் பருவம் திருப்பூவணத்தில்தான் கழிந்தது.  திருப்பூவணநாதர் இளமையிலேயே அவரை ஆட்கொண்டு விட்டார்.

“பிறந்து மொழிபயின்ற பின்எல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்”

என்று காரைக்காலம்மையார் சொல்வது போல, காளைராசன் அவர்களுக்குப் பேச்சு, மூச்சு எல்லாமே திருப்பூவணம்தான்.  தான் வளர்ந்த மண்ணுக்கு, தன்னை வளர்த்த மண்ணுக்கு ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற அவரது ஆவலின் விளைவே இந்நூல்.

ஆன்மீக நூல்கள் பல வெளிவருவதற்கு உறுதுணையாக இருக்கின்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம். இந்நூல் வெளிவரவும் பொருளுதவி செய்துள்ளமை மிக்க மகிழ்ச்சிக்குரியது.

“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினார்க்கு ஓர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்ற தாயுமானவரின் வாக்குப்படி மூர்த்தி, தலம், தீர்த்தம் பற்றிய செய்திகளை முறையாகத் தொகுத்து எழுதியுள்ள திரு.கி.காளைராஜன் அவர்களது முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்.

 

காரைக்குடி சுப்பிரமணியபுரம் வடக்கு 3ஆவது வீதியில் வசித்து வரும்,  தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி இயற்பியல் இணைப் பேராசிரியர்  சைவசித்தாந்தரெத்தினம்.  முனைவர். ரெ. சந்திரமோகன்  அவர்களது பெருமுயற்சியாலும் ஒத்துழைப்பாலும் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

தமிழ் மரபு அறக்கட்டளைத்

தலைவர் முனைவர் நா.கண்ணன்,

செயலர் திருமதி. சுபாஷினி

மற்றும்

வல்லமை மின்னிதழ் ஆசிரியர் திருமதி. பவள சங்கரி திருநாவுக்கரசு

இவர்களது பெருமுயற்சியால் திருப்பூவணப் புராணம் என்ற இந்த மின்னூல் வெளியிடப்பெறுகிறது.

திருச்சிற்றம்பலம்

என் உரை

 

அழகப்பா பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட போது, பல்கலைக் கழகத்தில் முதன் முதலாகப் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன்.    பல்கலைக்கழகத்தில் 1999ம் ஆண்டு தேர்வுப் பிரிவில் பணியாற்றி வந்தபோது “திசை தெய்வங்களைத் தொழும் திருவள்ளுவர்”,  “குறலிலும் சோதிடம்” என்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினேன்.  அக்கட்டுரைகளை அப்போது காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி முதவராகப் பணியாற்றி வந்த முருகசாமி ஐயா அவர்களிடம் காண்பித்தேன்.  அவர்கள் என்னைப் பெரிதும் உற்சாகப் படுத்தி அவற்றை இதழ்களில் வெளியிடுமாறு அறிவுறுத்தினார்கள்.  இதனால்  “வள்ளுவரும் வாஸ்துவும்” என்ற எனது கட்டுரை 2000ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், முதன் முதலாகத் தினபூமி – ஞாயிறு வார இதழில் வெளியாகியது.   கல்வியாளர்கள் மத்தியில் அக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.   திருக்குறளின் அதிகார அமைப்பு முறைக்கு யாரும் மறுக்கமுடியாத அளவிற்கு விளக்கம் அளித்ததற்காக அனைவரும் என்னைப் பாராட்டினார்கள்.   அவ்வாறு பாராட்டியவர்களுள் முனைவர் இரா. பாலசுப்பிரமணியன் ஆவர்கள் குறிப்பிடத்தக்கவர்.  அவர் என்னிடம் ஒருமுறை “நீங்கள் கட்டுரைகள் எழுதினால் மட்டும் சிறப்புடையது ஆகாது, கல்வித் தகுதியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்” – என்று அறிவுரை வழங்கினார். அவரது அறிவுரையை ஏற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்முதுகலை (M.A. Tamil) பயின்றேன்.

பின்னர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil. Tamil) பயின்றேன்.  அப்பாடத்திட்டத்தின் ஒருபகுதியாகத் திருப்பூவணம் திருக்கோயில் பற்றிய ஆய்வினை மேற்கொண்டேன்.  ஆய்வு தொடர்பாகத் திருமுறைகளையும் மற்றும் பல ஆன்மிக நூல்கனையும் கற்றேன். திருப்பூவணம் தொடர்பான அனைத்து நூல்களையும் சேகரித்துப் படித்தும், திருக்கோயில் அமைப்பைப் பலவராக ஆராய்ந்தும் எனது ஆய்வினை நிறைவு செய்தேன்.

எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வு தொடர்பாகத் திருப்பூவணப் புராணப் புத்தகத்தைத் தேடி அலைந்தேன்.  எங்குதேடியும் யாரிடம் கேட்டும் கிடைக்கவில்லை.   இறுதியாகக் காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியின் அப்போதைய முதல்வர் உயர்திரு. முருகசாமி  அவர்கள் திருப்பூவணப் புராணப் புத்தகம் ஒன்றைக் கொடுத்து உதவினார்கள்.  உடனே திருப்பூவணம் சென்று திருப்பூவணநாதரின் திருக்கண் பார்வைக்குப் புத்தகத்தைக் காண்பித்து ஆசி பெற்றேன். புத்தகம் அச்சிடப் பெற்று 100 வருடங்களுக்கும் மேலானதால், தொட்டால் காகிதம் ஒடிந்து விடும் நிலையில் இருந்தது.  மிகவும் சிரமம் மேற்கொண்டு புத்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் நகல் எடுத்துக் கொண்டு மூலப்புத்தகத்தை ஐயா அவர்களிடம் நன்றியுடன் திரும்பக் கொடுத்தேன்.  ஐயா அவர்கள் செய்த உதவிக்குத் திருப்பூவண மக்கள் அனைவரும் மற்றும் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் நன்றி உடையோர்களே.   புத்தகத்தை மீண்டும் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்ற நோக்கில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணினியின் உதவி கொண்டு தட்டச்சு செய்து வந்தேன்.   தற்போது புத்தகம் முழுமையடைந்துள்ளது.    புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடத் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நிதியுதவியும் கிடைத்துள்ளது.

எனது தந்தையார் மானாமதுரைத் தாலுகா மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த நா.ரா.கிருஷ்ணன் அம்பலம் அவர்கள் காவல்துறையில் காவலராகத் (Police Constable) திருப்பூவணத்தில் 1969-74ம் ஆண்டுகளில் பணியாற்றினார்.  அப்போது நான் திருப்பூவணம் பள்ளியில் பயிலும் காலத்தில் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடும் பேறு கிடைக்கப் பெற்றுள்ளேன்.  கடைநிலையிலிருந்த என்னை, கோயில் தொடர்பான நூல்கள் எழுதும் நிலைக்கு உயர்த்திய திருப்பூவணநாதரின் திருவருளை எங்ஙனம் நான் எடுத்துரைப்பது!  திருப்பூவணநாதரின் திருவருளால் சுமார் 16 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதி வெளியிடும் பெருமை கிடைக்கப் பெற்றுள்ளேன்.

முனிவர்கள் ஓதிய புராணத்தைத் தமிழில் 388 ஆண்டுகளுக்கு முன்னர் கந்தசாமிப் புலவர் பாடியுள்ளார். இப்புராணப் பாடல்களின் ஒவ்வொரு எழுத்தையும் தட்டச்சு செய்து பிழைத்திருத்தம் பார்த்து அச்சிட்டு வெளியிடும் பெரும்பேறு கிடைக்கப் பெற்றுள்ளேன்.  இந்நூலில் பிழைகள் ஏதுமிருந்தால் அவற்றைப் பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும். அறியப்படும் குறைகளை எனக்குத் தெரிவித்துத் திருத்திக் கொள்ள உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.  (தொடர்புக்கு ​கை​​​பேசி எண். 94435 01912,  e-mail: kalairajan26@gmail.com).

இந்நூலை அகம் மகிழ்ந்து வாசிப்போர் அனைவரும், திருப்பூவணநாதரின் திருவருளால், உயர்வான வாழ்வு பெற்று வளமுடன் வாழ்ந்திட திருப்பூவணநாதரின் திருவடி அருளை நினைந்து வாழ்த்துகிறேன்.

திருச்சிற்றம்பலம்

அன்புடன்

கி. காளைராசன்

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.