ஈழப் போராளிகளுக்காக நீத்தார் கடன்
மறவன்புலவு சச்சிதானந்தன்
சிவ சேனை
வைகாசி தேய்பிறை நாள்கள் இலங்கையில் சைவத் தமிழருக்குத் துன்பியல் நாள்கள்.
403 ஆண்டுகளுக்கு முன்பு, வைகாசி தேய்பிறை எட்டாம் நாளில், கத்தோலிக்கப் போத்துக்கேயர் சைவத்தமிழ் மன்னனான சங்கிலியனைப் போரில் தோற்கடித்தனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி தேய்பிறை ஆறாம் ஏழாம் எட்டாம் நாள்களில் சிவபூமியான வன்னியில் நடைபெற்ற சிங்கள – தமிழ்ப் போரில் இலட்சக்கணக்கான சைவத் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் புத்த சிங்கள அரசினர்.
சைவத் தமிழர் மரபுக்கு அமைய வைகாசி தேய்பிறை ஆறாம் ஏழாம் எட்டாம் நாள்களில் அன்றைய சங்கிலியனையும் இன்றைய போராளிகளையும் தோற்கடித்த போரில் உயிரிழந்த சைவத்தமிழர்களுக்காக
ஆண்டுதோறும் இலங்கையிலும் இந்தியாவிலும் நீத்தார் கடன் பிதிர்க் கடன் ஆற்றி வருகிறோம்.
வடக்கே காசியின் கங்கைக் கரை தொடக்கம் தெற்கே தாமிரபரணி வரை பரந்த நிலப் பகுதி எங்கும் நீர்நிலைகள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு அர்ஜுன் சம்பத் தலைமையில் நீத்தார் பிதிர்க் கடன் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சரர் கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற பிதிர்க்கடன் நிகழ்ச்சியின் படங்களை இணைத்துள்ளேன். பிதிர்க் கடனாற்றும் பேறும் நீத்தாருக்காக வழிபடும் பேறும் மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு உரியதாயிற்று.